March 18, 2009

களத்தூர் படிக்கட்டு

நான் கல்லூரியிலிருந்து வலிய வெளியே வந்தவன். அப்போது பிரின்ஸிபால் என்னிடம் படிப்பை இழந்து விட்டால் வாழ்க்கையையும் இழந்துவிடுவாய் என்று என் தகப்பனாரையும் வைத்துக்கொண்டு புத்திமதி சொன்னார். அதற்கு நான் சொன்ன பதில் இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. "நீங்கள் எல்லாம் படித்ததனால் இந்த நிலை வரைக்கும் உயர்ந்திருக்கிறீர்கள். அதனால் படிப்பு உங்களுக்கு பெரியதாகத்தான் தெரியும். ஆனால் படிக்காமலே எவ்வளவோ பேர் மிக மிக உயரங்களுக்குப் போயிருக்கிறார்கள். நான் அந்த வகையைச் சேர்ந்தவன்." உண்மையில் அவர் இதைக் கேட்டதும் ஆடிப்போய்விட்டார். கிட்டத்தட்ட அரை மணிநேரமாக நடந்துகொண்டிருந்த கவுன்சிலிங் அடுத்த கணம் முடிந்து விட்டது. எனது டீசியில் உடனடியாகக் கையெழுத்துப் போட்டுவிட்டார் அவர்.

ஆனால் அந்தத் திமிர் இன்னும் என் தலையிலிருந்து இறங்கவேயில்லை. நான் எந்த தைரியத்தில் இந்தமாதிரி பேசினேன் என்று எனக்கு சரிவரத் தெரியவில்லை. அந்த வயதிலேயே எழுத்திலும் சினிமாவிலும் எழுந்திருந்த ஆர்வம் என்னை ஒருசிலரை முன்னுதாரணமாகக் கொள்ளும்படி தூண்டியிருக்கலாம் என்பதே என்னுடைய கடைசி முடிவாக இருக்கிறது. அவர்களில் ஒருவராக ஒருவேளை கமலஹாசன் இருந்திருக்கலாம்.

படிப்பை முக்கியமானதாகக் கருதும் குடும்பத்தில் பிறந்தவர் கமலஹாசன். ஆனால் தன் குடும்பத்திலேயே குறைவாகப் படித்தவர் அவர்தான். சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை இழந்துவிட்டவர் அவர். அதற்கு பதிலாக சிறுவனாக சினிமாவில் நுழைந்து, நடனம் பயின்று, நடன உதவியாளனாக உலவி, சிறு பாத்திரங்களில் தலைகாட்டி, இரண்டு நாயகர்களில் ஒருவராக வாய்ப்புப் பிடித்து, நாயகனாகி, முதன்மை நாயக வரிசைக்குள் நுழைந்து, பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர் என்று தான் சார்ந்த துறையில் சகல பரிமாணங்களிலும் தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு போகும் கமலஹாசன் மெத்தப் படித்தவர்கள் என்பதாக அறியப்படும் அவரது குடும்பத்தில் அதிக விசாலமுள்ள அறிவுள்ளவராக இப்போது இருக்கக்கூடும். இதை அவர் நமது கல்வியமைப்பின்மீது காட்டும் எதிர்க்குரல் என்பதாகக்கூட கொள்ளலாம்.

தற்போதைய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை அல்லது
most promising veteran persololity யார் என்று கேட்டால் கமலஹாசன் என்று பெரிய குழந்தைகளும் சொல்லும் (ஏனென்றால் சின்னக் குழந்தைகள் வேறு ஒருவரைச் சொல்லும்). அவரது சமீபத்தியப் படமான தசாவதாரம் திரும்பவும் அவர்மீது லைம்லைட்டின் வெளிச்சத்தைப் படரவிட்டிருக்கிறது.

அதற்காக அவர் தனது புகழின் மதிப்பை இழந்திருந்தாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அவர் ஒருபோதும் கண்சோரா உழைப்பாளி என்பதில் எனக்கும் எவ்விதமான சந்தேகமும் இல்லை. சினிமா போன்ற பரபரப்பான மீடியாவில் எவ்விதமாக உலவ வேண்டும் என்பதை சினிமாவின் உயரத்தில் உள்ளவர்கள் மிகக் கச்சிதமாக உணர்வார்கள் என்பதாலோ, தொடர்ந்து பரபரப்பாக எதாவது ப்ராஜக்டில் வேலை செய்துகொண்டேயிருப்பதால் அதுவே பழகிப்போனதாலோ, மேலும்மேலும் பணம் வந்து கொட்டும் வாய்ப்பை எந்த ஒருவரும் தவறவிட விரும்பமாட்டார்கள் என்பதாலோ, தமிழை உலகத்தரத்துக்கு உயர்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டதனாலோ கமலஹாசனின் படங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணமே இருக்கின்றன.

1971ல் நூற்றுக்கு நூறு படத்தில் மீசை அரும்பும் இளைஞனாக அவர் தோன்றியதிலிருந்து இன்று வரைக்கும் அவரது வேகமோ ஆர்வமோ கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை. அதற்கு முன்னால் சிறுவனாக மூன்று படங்கள் நடித்திருந்த அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா உள்வாங்கிக்கொண்டு பிற சிறுவர்களிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருந்தது. இவ்விதமான பால்யம் கொண்ட முதல் தமிழ் கலைஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். அதற்கு முந்தைய காலத்து பாய்ஸ் கம்பெனி கலாச்சாரத்தை நான் தவிர்த்துவிட்டே பேசுகிறேன்.
அவரைப்போல மீசை அரும்பிய அல்லது அந்த அளவுக்குக்கூட அரும்பாத சிறுவர்களைப் புதுமுகங்களாகப் போட்டு மிகக் குறைந்த செலவில் சில நிறைவான படங்கள் வெளிவரக்கூடிய இந்தக் காலகட்டத்திலும் அவர் கொடி கொஞ்சமும் இறங்காதிருப்பது அவரது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியன்றி வேறென்ன? தன் வாரிசுகள் வளர்ந்து சினிமாவில் நுழைந்துவிட்ட காலகட்டத்திலும் காதாநாயகன் என்கிற அந்தஸ்திலேயே உலவக்கூடிய பாக்கியம் தமிழில் ஒருசிலருக்குத்தான் வாய்த்தது. அந்த வரிசையில் முதலில் சிவாஜி, அடுத்தது கமல். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கமலஹாசனுக்கு சற்று மூத்தவரான சிவக்குமார் மிக முன்னதாகவே இந்த ஹீரோ பதவியிலிருந்து ரிட்டயர் ஆகிவிட்டார். அதற்குக் காரணம் அவருக்கு கமலஹாசனைப்போல ஒரு போராளியின் மனோபாவம் இல்லாததே என்று தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் never ever give up என்பதே கமலஹாசனின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். நல்ல மந்திரம்தானே!

இத்தனைக்கும் எனது சிறு வயதில் எம்ஜியார்-சிவாஜி அல்லது ரஜினி-கமல் என்று இரண்டே பேரின் ரசிகர்களாக ஒட்டுமொத்த தமிழ்தேயமும் இருந்த காலகட்டத்தில்கூட நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன். இந்த நிலைப்பாடு மற்றவர்கள் அத்தனை பேரையும் ரசிக்கவும் பிழைகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக இருந்தது. இதனால் நான் கமலஹாசனின் ரசிகனாகவும் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அவர் நடித்த ஆகாவளிப் படங்களான சவால், ராம்லட்சுமண் முதலான படங்களைக்கூட நான் பள்ளிக் காலங்களில் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்தான். ஆனால் தமிழுக்கு அவர் கொடுத்த ஒரு வித்தியாசமான படமான ராஜபார்வை ஒருவிதமான குளிரனுபவத்தை என்னுள்ளத்தில் ஏற்படுத்தியிருந்தது. என்னதான் அது சிங்கீதம் சீனிவாசராவின் வித்தை என்றபோதும் அந்தப் படத்தின் கலர் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது என்றே நினைக்கிறேன். அஷோக்குமார், பாலுமகேந்திரா ஆகிய கேமராமேன்கள் மற்றும் மகேந்திரன் முதலான இயக்குனர்களின் வருகையைத் தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா சில்லென்று இருந்ததாகத் தோன்றுகிறது. என் வாழ்வில் அந்தத் துவக்கத்தை ஏற்படுத்தியது ராஜபார்வையாகத்தான் இருக்க முடியும்.

கமலஹாசனைப் பிடிக்காத பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். ரஜினி ரசிகர்கள் என்பதாலோ, ஒருமாதிரி நளினமாக இருக்கிறார் என்று காரணம் சொல்பவர்களாகவோ அல்லது நமது கலாச்சாரத்துக்குப் பொருந்தாத கீழ்த்திசைப் பாணி அவருடையது. அதையும் அவர் செம்மையாகச் செய்வதில்லை என்பதாகவும் ஆயிரம் காரணங்கள் அதற்கு இருக்கலாம். எல்லோரையும் திருப்திபடுத்துவது எல்லாக் கலைஞர்களாலும் ஆகிற காரியமா என்ன? ஆனாலும் அவர்களையும் அவர் நிமிர்ந்து உட்காரச் செய்தது சாகர சங்கமம் என்று தெலுங்கிலும் தமிழில் சலங்கை ஒலி என்று டப் ஆகியும் வெளிவந்த படத்தில்தான். கமலஹாசன் மிகுந்த ஆற்றல் வாய்ந்த கலைஞன் என்பதை அந்தப் படத்தைப் பார்த்து அவரைப் பிடிக்காத ஒருசில நண்பர்கள் என்னிடம் வியந்தார்கள் என்பதை இப்போதும் நான் நினைவுகூரவே செய்கிறேன். இருந்தாலும் என்னால் அவரைப் பற்றிய முழுமையான முடிவுக்கு அப்போதும் வந்திருக்க முடியவில்லை.

சிங்கீதம் சீனிவாசராவோடு அவர் இணைகிறபோது நமக்குக் கிடைக்கிற விருந்து வேறு ஒருபோதும் கிட்டுவதில்லை என்பதே எனது கருத்து. மைக்கேல் மதனகாமராஜன் வெறும் கமர்ஷியல் காமடிப் படம்தான் என்றாலும் தமிழ் சினிமா பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படவேண்டிய படங்களில் அதுவும் ஒன்று என்பதாக நான் நினைக்கிறேன். இதற்கு நேரெதிரான கருத்து தசாவதாரத்தின்மீது எனக்கு இருப்பது. இதனால்தான் சில முக்கியமான முயற்சிகளில் சிங்கீதத்துக்கு லீவு கொடுக்கக்கூடாது என்று நான் சொல்கிறேன். புஷ்பக விமானம் என்று கன்னடத்திலும் தமிழில் பேசும் படம் என்றும் வெளிவந்த படத்தையும் கமலஹாசனின் களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்ள முடிகிறது என்று சொன்னால் அதில் சிங்கீதத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

மைக்கேல் மதனகாமராஜனில் காணப்பட்ட காமேஷ்வரன் பாத்திரத்தை அனாயாசமாக செய்திருப்பார் கமல். அதைக்கூட நான் அடிப்படையில் பிராமணரான இவருக்கு பாலக்காட்டு ஐயர் பாத்திரம் என்ன கஷ்டமாக இருக்கப்போகிறது என்று சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பிற்பாடு வந்த சதிலீலாவதிதான் அவரது உண்மையான ஆற்றலை எனக்குப் புரியவைத்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தில் அவர் நாயகனல்ல, காமெடியன். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த படம் அது என்கிறபோது இரண்டு அக்கறையுள்ள கலைஞர்களின் பங்களிப்பு ஒருங்கிணையும்போது சில அற்புதங்கள் சாத்தியமாகின்றன என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!

அந்தப் பாத்திரத்தில் என்ன விசேஷம் என்று பார்த்தால், அந்தப் படத்தில் அவர் ஒரு ஆர்த்தோபிடீஷியன். டாக்டர்! ஆனால் திருப்பூர் கவுண்டர். கொங்கு மாவட்டங்களைச் சார்ந்த கவுண்டர்களில் திருப்பூர் கவுண்டர், பொள்ளாச்சிக் கவுண்டர், ஈரோடு கவுண்டர் ஆகியவர்களின் மத்தியில் (இவர்கள் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும்) நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படும். இதை அருகிலிருந்து பார்த்துதான் புரிந்தகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக திருப்பூர் கவுண்டர்களின் attitude இருக்கிறதே அது மிகவும் அலாதியானது. அது எப்படியிருக்கும் என்பதை நான் விளக்கவே வேண்டியதில்லை. சதி லீலாவதி பார்த்தீர்களேயானால் அதுவே போதும்.

இந்த மாதிரி நுணுக்கமான வேலையைச் செய்யத்தான் கலைஞர்கள் வேண்டும். எம்ஜியாரின் மேனரிசங்களை காப்பியடித்து எத்தனையோ நடிகர்கள் செய்திருந்தபோதும் மணிரத்தினத்தின் இருவர் படத்தில் மற்றவர்கள் வழக்கமாக செய்து காட்டும் சேஷ்டைகளையெல்லாம் விட்டுவிட்டு, மோகன்லால் எம்ஜியாரின் வெகுசில நுணுக்கமான மேனரிசங்களை மட்டும் செய்து காட்டியதுபோல!

மோகன்லால் என்றதும் சாணக்கியன் நினைவுக்கு வருகிறது. மலையாளத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் கமலஹாசன் ஏற்ற பாத்திரம் மிகவும் வித்தியாசமானது. தெலுங்கில் வெளிவந்த இந்தருடு சந்தருடு (தமிழில் இந்திரன் சந்திரன்) படத்தில் செய்திருந்த பாத்திரம் போல இந்தப் பாத்திரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. அதுவும் க்ளைமாக்ஸில் ஃபால்ஸ் வாய்ஸில் "சோமா!" என்று அவர் கூப்பிடும் அழகு இருக்கிறதே, அதை உணர்ந்துகொண்டால்தான் கமலஹாசனின் ஸ்டைல் என்பது என்ன என்பதை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். அந்தப் படத்தில் அவர்கள் மம்முட்டியையோ மோகன்லாலையோ போட்டிருக்கலாம், ஆனால் கமலஹாசன் கொடுத்த ஃபினிஷிங் டச் மற்றவர்கள் செய்திருந்தால் வந்திருக்குமா என்றால் கண்டிப்பாக இராது. (இத்தனைக்கும் இந்தியாவில் நான் மிக அதிகமாக மதிக்கும் கலைஞன் மோகன்லால்தான்!)

கிட்டத்தட்ட நாற்பது வருட கால திரை வரலாற்றின் அத்தனை அலைகளுக்கும் தாக்குப்பிடித்து புகழின் உச்சியில் புளங்கிக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனைப் பற்றி சிறு கட்டுரையில் முழுதும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் அவர் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டிய முக்கியமான குறையைச் சுட்டிக் காட்டாமல் இந்தக் கட்டுரை முடியக்கூடாது.
தன் நடிப்புத் திறமைக்காக மிக மிக மதிக்கப்பட்ட சிவாஜிகணேசன் ஒரு காலகட்டத்தில் லுக்குடி லுக்குடி என்று ஆட்டம் போட்டார் என்று இந்தக் கட்டுரைத் தொடரில் ஒரு இடத்தில் சொல்லியிருந்தேன். திரிசூலம், சந்திப்பு, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, எமனுக்கு எமன் என்று அவரது கேரியரில் ஒரு அசிங்கமான காலகட்டம் இருந்தது. அந்த மாதிரியான ஒரு நிலையையே கமலஹாசன் இப்போது எட்டியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இல்லையானால் ஆள்வார்பேட்டை ஆண்டவா வேட்டியைப் போட்டு தாண்டவா என்று சதைபுஜநடனம் ஏதும் ஆடவேண்டிய அவசியம் அவருக்கு வந்திராது. கலக்கப்போவது யாரு என்று அவர் கேட்டால் முப்பது பேர் (இதில் நடிகர் பிரபுவும் அடக்கம்) நீதான் என்று அவரைப் பார்த்து புகழ்வது தேவைப்பட்டிராது. இந்த உதாரணங்களின் பட்டியல் ஆழ்வார்பேட்டையிலிருந்து அமிஞ்சிக்கரை வரைக்கும் நீளக்கூடியது.

கமலஹாசன் பொறுப்பாகத் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இவைதான். இப்படியெல்லாம் சொல்வதனால்தான் அவரது புகழ் நிலைக்கும் என்று அவர் நினைக்கவேண்டியதில்லை. அவர் தன் தோற்றங்களில் காட்டும் அக்கறையை தரத்தில் காட்ட ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது என்பதே எனது கூற்று.

அவரளவு அனுபவமும் திறமையும் உள்ள இன்னொருவர் உருவாகவேண்டுமானால் அதற்குப் பல வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். இதனால் அவரது திறமை வீணடிக்கப்பட்டால் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல. நமக்கும்தான்!

March 11, 2009

ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

சரி, சினிமாத் தொழில் என்பது சூதாட்டம் போன்றது என்பது தெரிந்தும் எதற்காக சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன? நாட்டிலே உள்ளவர்களுக்கெல்லாம் ஜாலியாகப் பொழுதுபோகட்டும் என்கிற பரந்த மனப்பான்மையாலா? பக்கத்து மாநிலங்களில் எல்லாம் எடுப்பதால் நாம் எடுக்காமல் இருந்தால் நம்மைத் தொழில் தெரியாதவர்கள் அல்லது தற்குறிகள் என்று சொல்லிவிடுவார்கள் என்கிற வீராப்பாலா? சினிமா எடுப்பதைத் தவிர வேறு கூலிவேலைகள்கூட செய்யத் தெரியாத பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கலைஞர்களும் சோத்துக்கு சிங்கியடிக்கக்கூடாதே என்கிற பெருந்தன்மையாலா? பருவக்குட்டிகள் 'பப்'களில் ஆடினால்தானே அடிக்கிறார்கள், திரையில் ஆடினால் எப்படி அடிக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்கிற சமயோசிதத்தாலா?

இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் சிரமமானது. எதற்காக ரொட்டிகள் சுடப்படுகின்றன? என்கிற கேள்வி எவ்வளவு எளியதாக இருக்கிறது பாருங்கள், ரொட்டிகள் இரண்டு காரணங்களுக்காக சுடப்படுகின்றன. முதல் காரணம், விற்பதற்கு. இரண்டாவது காரணம் சாப்பிடுவதற்கு. வேண்டுமானால் மூன்றாவதாக ஒரு மறைமுகக் காரணம்கூட சொல்லலாம், உயிர் வாழ்வதற்கு! இவ்வளவுதான் பதில். ஆனால் சினிமா என்பது அப்படி ரொட்டி போல மென்மையானதுமல்ல, அடுமனை அடுப்பில் வெந்ததுமல்ல. ஒவ்வொரு சினிமாவும் எடுக்கப்படுகிற சூழல் ஒவ்வொரு விதமாகவே இருந்து வருகிறது. காலம் மாறும்போது அது ஒட்டுமொத்தமான மாற்றத்தை எதிர்கொள்கிறது என்றபோதும், எந்தக் காலத்திலும் ஒரேமாதிரியான காரணங்களுக்காக சினிமாக்கள் எடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு சினிமாத் தொழில் மீது ஒருவிதமான அக்கறையும் இல்லை என்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள், திடீரென்று ரஜினிகாந்திடமிருந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வருகிறது. நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன், நீங்கள் படம் எடுங்கள் என்று அவர் சொல்கிறார். அதற்கப்புறம் நீங்கள் படம் எடுக்காமல் எப்படி இருக்க முடியும்? எடுக்கவில்லையானால் தமிழ்நாட்டுக்கு எந்த நஷ்டமுமில்லை, ஆனால் நீங்கள்தான் வலிய வந்த சீதேவியை வாய்க்காலில் பிடித்துத் தள்ளிவிட்டு வேகுவேகென்று வெய்யிலில் நடந்து போகிறீர்கள் என்று அர்த்தம். ஆக, ரஜினிகாந்த்தின் படங்கள் எடுக்கப்படுவதற்கான காரணம், ரஜினி தருகிற கால்ஷீட்தான். குழப்பமாக இருக்கிறதா?

மிஸ்டர் ரோமியோ என்று ஒரு படம் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், அதே நேரத்தில் வெளிவந்தது லவ்டுடே! மிஸ்டர் ரோமியோவில் பிரபுதேவா ஹீரோ. லவ்டுடேயில் விஜய். அப்போது அவர் இளைய தளபதியெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சாதாரண ஹீரோ. ஆனால் பிரபுதேவா முக்கியமான ஹீரோவாக இருந்த காலம் அது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இரண்டு படங்களும் ஒரே நிறுவனத்தால் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டவை. மிஸ்டர் ரோமியோ பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. லவ்டுடே மிகக் கடுமையான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்ட ஒன்று.

லவ்டுடே படத்துக்கு இயக்குனர், நண்பர் பாலசேகரன். இவர் கேட்ட இசையமைப்பாளரைக்கூட தயாரிப்பாளர் கொடுக்கவில்லை. சிவா என்று புதிய இசையமைப்பாளர்தான் அந்தப் படத்துக்கு இசையமைத்தார். ஆனால் மிஸ்டர் ரோமியோவுக்கு ஏயார்ரகுமான் இசை! டெக்னீஷியன் வரிசையும் முதல் தரம். லவ் டுடேக்கு எந்த சலுகையும் கிடையாது. அதிக லொகேஷன் செலவுக்கு அனுமதியில்லை, பெரிய ஸ்டார்கள் இல்லை. சினிமாஸ்கோப் கூட இல்லை. ஆனால் மிஸ்டர் ரோமியோவில் காஸ்ட்யூம், லொகேஷன், ஆர்ட்டிஸ்ட் என்று ஒரே அமர்க்களம். இதில் இந்தியிலிருந்து அழைத்துவரப்பட்ட ஷில்பா ஷெட்டிவேறு ஹீரோயின்! இதெல்லாம் போதாதென்று மிஸ்டர் ரோமியோவை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இன்னும் இரண்டு பாட்டை வெளிநாட்டில் எடுங்கள் என்று வேறு சொன்னார் என்பதாக அப்போது பேசிக்கொண்டார்கள்.

பாலசேகரனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு கதை போல எதற்கு இத்தனை வெஞ்சன்ஸ் என்றுதான் பலரும் அந்த சமயத்தில் ஆச்சரியப்பட்டார்கள். பெரிய ஹீரோ படமென்றால் செலவு பெரியதாகத்தான் இருக்கும், வளர்ந்துவரும் ஹீரோவுக்கு இதுபோதும் என்று பொதுவாக ஒரு காரணத்தை பலரும் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

தயாரிப்பாளர் தன் நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்த உண்மையான காரணம் பின்னாளில் இன்டஸ்டரியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது இதுதான், லவ்டுடே எவ்வளவு மோசமாக எடுக்கப்பட்டாலும் கண்டிப்பாக ஓடும். ஏனென்றால் அதன் கதை அவ்வளவு வலிமையானது. ஆனால் மிஸ்டர் ரோமியோ ஆடம்பரத்தைக் கொண்டு ஓடவைக்கப்பட்டால்தான் உண்டு!

இந்த உதாரணத்திலிருந்து ஏன் சினிமாக்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு பதில் தெரியக் கிடைக்கிறது. அதேபோல்தான் காதலே நிம்மதி என்று ஒரு படம். புதிய இயக்குனர். அவ்வளவாக பிரலமாகியிராத சூர்யா நாயகன், இன்னொரு நாயகன் முரளி. புதுமுக ஹீரோயின். இந்தப் படம் ஒரு முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டது. அது ஃபுட்டேஜ் பற்றாக்குறை!

இயக்குனர் தெளிவாக தன் ஸ்கிரிப்டை ஷுட் செய்து எடிட் செய்து படத்தை முடித்துவிட்டார். ஆனால் படம் இரண்டு மணிநேரம்கூட வரவில்லை. அதற்காக அவர்கள் மெனக்கெடவே இல்லை. க்ளைமாக்ஸில் முன்பாதியில் வந்த சில காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகப் போட்டு படத்தை கொஞ்சம் நீட்டி ஒருவிதமாக ரிலீஸ் செய்துவிட்டார்கள். அந்தப் படத்துக்கு அதற்குமேல் செலவு செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அது அதனளவில் சுமாராக ஓடித்தான் தீரும் என்கிற தீர்மானம்!

கிட்டத்தட்ட இதே மாதிரியான பிரச்சினை இயக்குனர் மணிரத்தினத்துக்கு வந்தபோதுதான் மௌனராகம் எனும் அவரது இரண்டாவது தமிழ்ப்படம் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டது. மௌனராகம் படத்தின் ஒரிஜினல் கதை, ஜாலியாக காலேஜுக்குப் போய்க்கொண்டு, குழந்தைபோல் மழையில் நனைந்து குதூகலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை திடீரென்று சம்பந்தமேயில்லாத ஒருவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து பாஷை தெரியாத ஊருக்கு அவனோடு ரயிலிலேற்றி அனுப்பி வைத்தால் என்ன நடக்கும் என்பதுதான்! எமது பெண்களுக்கு தொன்று தொட்டு நடந்துவரும் வெங்கொடுமை இது! தாலிகட்டிய கணவனின் கரம் மேலே பட்டால் கம்பளிப் பூச்சி ஊர்வதுபோலிருப்பதாக அவள் தெரிவிக்கிறாள். கல்யாண தினப் பரிசாக கணவன் டைவர்ஸ் பத்திரத்தை அளிக்கிறான் என்பதாக ஒரு இத்தாலியப் படம்போல வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம், டிஸ்ட்ரிபியூட்டர்களால் ஆக்ஷன் இல்லை அது இல்லை இது இல்லை என்று புறக்கணிக்கப்பட்டபோதுதான் அந்தப் படத்தில் கார்த்திக் பாத்திரம் நுழைக்கப்பட்டது என்பது அப்போது யாவரும் பேசிக்கொண்டிருந்த செய்தி!

கார்த்திக் பாத்திரம் நுழைந்ததும் படம் பரபரப்பை அடைந்துவிடுகிறது. அந்தப் பாத்திரம் மற்றும் காட்சிகளுக்காக மணிரத்தினம் கொஞ்சமும் சிரமப்படவில்லை. அவரது முதல் படமான கன்னடத்தில் வெளிவந்த பல்லவி அனுபல்லவி படத்தில் அனில்கபூரை வைத்து எடுக்கப்பட்டிருந்த அதே ஸ்க்ரிப்டை சாதுர்யமாக இந்தப் படத்தில் நுழைத்து படத்துக்கு ஒரு ஆக்ஷன் சாயம் பூசி சமாளித்தார். இந்த சாதுர்யம் எல்லாம் சரிதான், ஆனால் இதனால் என்ன நிகழ்ந்தது என்பதைப் பாருங்கள், கதை தலைகீழாக மாறிவிட்டது.

சம்பந்தமில்லாத ஓர் ஆண்மகனை கணவனாக ஏற்கத் தயங்கும் இளம்பெண்ணின் உள்ளப் போராட்டத்தைப் பற்றிய உன்னதமான கதை, இறந்துபோன காதலனை நினைத்து கணவனை மறுக்கும் சாதாரண சினிமாத்தனமான மனைவியின் கதையாக உருமாறிவிடுகிறது. இது வினியோகஸ்தர்களின் கைவண்ணத்தால் நிகழ்ந்த கொடுமை. மணிரத்னம் அந்தத் தரத்தில் இதுவரைக்கும் வேறொரு படம் கொடுக்க முயலாததற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.

ஆக, தரமாகப் படமெடுக்க விரும்பும் மணிரத்தினம் தைய தைய தையா என்று ரயில் மீது குயில் ஆடுவதுபோல காட்டுவதைத் தவிர்க்கவே இயலாத நிலையிலேயே இருக்கிறார். மும்பைக் கலவரங்களைக் காட்டப் புகுந்தாலும் அந்த அரபிக் கடலோரம் என்று ஒரு பாட்டு போட்டுத் தொலைக்கிறார். இனி மணியின் படத்தில் கூத்தடிக்கிற காட்சிகள் வந்தால் அவரை வையாதீர்கள்.

ஆனால் காமடியன்களோடு கவர்ச்சி நடிகைகளைக் கட்டிப்போட்டு கசமுசா செய்ய வைத்த வகையில் அவர் அடித்த லூட்டி சகிக்க இயலாதது. படம் எடுத்த பிறகு படத்தில் காமெடியே இல்லை என்பதற்காக பல படங்களில் அவர் காமெடி ட்ராக் என்கிற ஒன்றை தனியாகச் செருகி நம்மை இம்சைக்குள்ளாகியதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுவும் இந்தப் பழம்பெரும் நடிகர் வீகேயார், ரெக்கார்ட் டான்ஸ் மேடைக்கு முன்னால் மணலில் உட்கார்ந்துகொண்டு ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு செய்த சேஷ்டைகள் இருக்கின்றனவே, அவற்றுக்காக ஒரு அஞ்சாங்கிளாஸ் வாத்தியாரை ஏவி மணியை ஒரு மணி நேரமாவது வெய்யிலில் முட்டி போட்டு நிற்கச் சொல்லலாம்.

இந்த அவசியம் எதனால் அவருக்கு வருகிறது? சினிமா என்பது மசாலாத்தனமானதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பதிவொன்று வினியோகஸ்தர்களின் நெஞ்சில் பதிந்து தொலைத்துவிட்டதனால்தான் இந்த அவலம் நேர்கிறதே தவிர, ரசனை, கலைஞன் ஆகிய ஒன்றுக்கும் இவற்றோடு எவ்விதமான தொடர்பும் இல்லை. வந்த கோபத்தில் பாலுமகேந்திரா இந்தாங்கடா என்று வைப்பதற்கு பதில் நீங்கள் கேட்டவை என்று டைட்டில் வைத்து சிலுக்கு சுமிதாவை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம் தரவில்லையா? நல்ல கலைஞனுக்கு கை நமநமவென்று அரித்துக்கொண்டேதான் இருக்கும் என்கிற வகையில்தான் அதில்கூட களரிப்பயிட்டு, இளையராஜா மற்றும் கேஜேயேசுதாசின் ஆல் டைம் டிலைட்டான கனவு காணும் காட்சி யாவும் கலைந்து போகம் கோலங்கள் எனும் தத்துவப் பாடல் என்று கலந்து கட்டி அடித்திருப்பார் அவர். அந்தப் படம் யார் கேட்டபடி வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல யாருக்கும் திராணி இராது.

ஆக, ஒட்டுமொத்தத் தேவை வெற்றி! அதாவது யார் நஷ்டப்பட்டாலும் சரி, வினியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் படம் வெற்றி தோல்வி என்பதை நிர்ணயிக்கும் புள்ளி என்பதாக ஒரு நிலைப்பாடு எழுந்துவிட்டது. ஒரு படத்தைக் கனவு கண்டு அதை அற்புதமாக உருவாக்கித் தரும் கலைஞன் வெற்றியடையவேண்டியதில்லை. உடலையும் மூளையையும் வருத்தி அதில் பணியாற்றிய நடிகர்களும் டெக்னிஷயன்களும் வெற்றி பெற வேண்டியதில்லை, முக்கியமாக தலையை அடமானம் வைத்து பணத்தை முதலீடு செய்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு ப்ரிவ்யூ ஷோ போட்டுக் காட்டும் தயாரிப்பாளன் வெற்றி பெற வேண்டியதில்லை. அந்தப் படத்தை வைத்துக்கொண்டு வியாபாரம் மட்டும் செய்யும் வினியோகஸ்தர்கள் மட்டும் தோல்வி அடைந்துவிடக்கூடாது. இதனால்தான் ரஜினிகாந்த்கூட தன் பாபா படத்துக்காக வினியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டி வந்தது. (அதற்கு பதிலாக படத்தை உருப்படியாக எடுத்திருக்கலாமே பாபா!)

ஆக, பாலசேகரன் நல்ல ஸ்க்ரிப்ட் வைத்திருந்தால் அதை மேலும் வலுவாக்கக்கூடிய அளவுக்கு செலவு செய்து அந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க இங்கே தயாரிப்பாளர் இல்லை. கதையில்லை என்பதற்காக செலவு செய்வது என்பது எந்த ஊர் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. கதையில்லாமற்போகத்தானே சிவாஜி என்று ஒரு கிரிமினல் வேஸ்ட் தயாரிக்கப்பட்டது எமது மொழியில்! முதல்வன் நன்றாகத்தானே இருந்தது! சரியான கதை, அதற்கு சரியான செலவு இந்த இரண்டும் சேர்ந்திருந்ததனால் அந்தப் படம் அதற்குத் தகுந்த வெற்றியை ஈட்டியது. ஆனால் சிவாஜி?

ஆக, ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்தாலும் நல்ல படம் எடுக்க வேண்டும் என்கிற ஆத்மார்த்தம் இல்லையானால் கிருஷ்ணபரமாத்மாக்கள்கூட குசேலர்களாக அலைய வேண்டியதுதான் என்பதுதானே நமக்கு இதிலிருந்து தெரிகிறது! ஆனால் ஒன்று மட்டும்தான் புரியவே மாட்டேனென்கிறது, 'அப்புறமும் ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன!'

March 05, 2009

திரைக்கதை விவாதமும் வசன வியாக்யானமும்

சினிமா என்பது ஒருவகையில் கூத்து என்கிற வகைமையைச் சார்ந்தது என்பது யாவருக்கும் தெரியும். ஆனால் தெருக்கூத்து, கழைக்கூத்து, கேலிக்கூத்து இந்த அத்தனை கூத்துகளையும் ஒன்றாகப் பிசைந்து உருட்டினால் அதுதான் தமிழ் சினிமாஙு இதில் கேலிக்கூத்து என்பது திரையில் மட்டும் பார்க்கிற வகையைச் சார்ந்தது அல்ல. படத்துக்கு பூஜை போடும் முன்பாகவே நடக்க ஆரம்பித்துவிடுகிற ரகளை அது.

ஆதாம் ஏவாள் காலத்தில் ஸ்டுடியோக்களின் பிடியில் சினிமா இருந்தபோது கதை இலாகா என்பதாக ஒரு துறையே இருந்தது. (ஆதாம் ஏவாள் காலம் என்றால் ஆதாமும் அவரது தாலிகட்டாத மனைவியான ஏவாளும் வாழ்ந்ததாக விவிலியம் கூறும் காலத்துக்கெல்லாம் போய்விடக்கூடாது, சினிமாவின் ஆதிகாலம் என்பதாகக் கொள்ளவேண்டும்.) இந்தக் கதை இலாகா குறித்து விகடனில் ஜோக் கூட படித்ததாக ஞாபகம் வருகிறது. கதை இலாகா என்று ஒரு போர்டு மாட்டியிருக்கிறது. வாசலில் கையில் கதையுடன் பீமன் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் நிற்கும் ஒருவர் சரி நீங்க ஒரிஜினல் பீமனாவே இருக்கலாம், ஆனா இது நீங்க சொல்ற கதை இலாகா இல்ல என்று பேய் முழி முழித்தவராக சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கதை விவாதங்களில் நடக்கிற கூத்தோடு ஒப்பிட்டால் இந்த ஜோக் மிகச் சாதாரண ரகம்தான். ஏனென்றால் ஒரு சினிமாவுக்கான கதை என்ன என்பதை ஒரு போஸ்ட் கார்டில் எழுதிவிடலாம். அதை உருட்டிப் பிரட்டி திரைக்கதையாக மாற்றுவது எல்லோருக்கும் எளிதான வேலையல்ல. இதனாலேயே இந்த விவாதம் என்கிற வம்புக்குள் வந்து விழ வேண்டியிருக்கிறது. பழைய படங்களில் இந்த விவாதக்குழுவின் பெயர்கள்கூட டைட்டிலில் இடம் பெற்றுவந்தது. அப்புறம் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டு கதை: கதை இலாகா என்று தங்கள் நிறுவனத்தின் பெயரை முன்னால் போட்டு டைட்டிலில் காட்ட ஆரம்பித்தார்கள். அதாவது கதை என்பதை ஒருவர் எழுதவில்லை. ஒரு கும்பல் சேர்ந்து எழுதியது என்பது அர்த்தம்.

இப்போது இந்தப் போக்கு வேறு விதமாக மாறியிருக்கிறது. என்னதான் கதை விவாதம் என்பது தவிர்க்கப்பட இயலாதது என்றபோதும் இப்போது கதை விவாதத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அந்தப் படத்தின் உதவி இயக்குனர்கள்தான். இவர்கள் சினிமாவின் அத்தனை வேலைகளையும் கற்றுக்கொள்ளும்பொருட்டு ஆதி முதல் அந்தம் வரை கூடவே அலைபவர்கள். கற்றுக்கொண்ட பின்னால் இயக்குனரின் வேலை பளுவைக் குறைத்துக் கொடுப்பவர்கள். இதனால் கதை விவாதத்திலும் இவர்கள் இடம் பெறுவது அவசியமானதுதான் என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் இந்தக் கதை விவாதத்தில் அமரும் அத்தனை பேரும் கதை குறித்த சரியான பார்வை கொண்டவர்கள்தானா? ஊர்கூடி தேரிழுத்துவிட்டு பயில்வான்தான் இழுத்தார் என்று சொல்வது நியாயமானதுதானா? இப்படி இஷ்டத்துக்கு ஆளுக்காள் இழுத்தால் கதை ஜவ்வு மாதிரி நீண்டுகொண்டு போகாதா என்று ஆயிரம் கேள்விகள் உதிக்கின்றன அல்லவா! சரி, பார்க்கலாம்.

சினிமாவில் சேரவேண்டும் என்கிற ஆசையில் சென்னை மண்ணை நான் தொட்டபோது ஒருசில கதைகள் வெளிவந்து கொஞ்சம் பேருக்கு என் பெயர் தெரிந்திருந்தது. அதில் முக்கியமானவர் நான் பணியாற்றிய இயக்குனர். அவருக்கு என் மீது அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. நான் இப்போது ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அதில் நீங்கள் பணி புரியலாம் என்று அவர் சொன்னார். அவர் பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதாலோ என்னவோ, என் மீது அந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார். நான் அந்த சீரியலில் உடனடியாக இணைந்துகொண்டேன்.

அன்றிலிருந்து பத்தாவது நாள் ஷøட்டிங் ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ஆர்ட்டிஸ் முதல் லொகேஷன் வரைக்கும் எதுவுமே தீர்மானிக்கப்படாத நிலையில் ஒரு சிறு அறையில் ஐந்தாறுபேருடன் நானும் அடைக்கப்பட்டு, டைரக்டர் கதையை சொன்னார். கதை இதுதான், நாயகன் ஒரு அனாதை இளைஞன்! அனாதை விடுதியில் வளர்ந்து, எம்பியே படித்து ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்திற்கே ஜெனரல் மேனேஜர் என்கிற அந்தஸ்தில் இருக்கிறான். அவனுக்கு ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு நிறைய சொந்தங்களோடு வாழவேண்டும் என்பது ஆசை. நாயகி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள். ஏகப்பட்ட சொந்தக்காரர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவள். அவளுக்கு சொந்தங்களே இல்லாமல் தனியாக வாழ்கிற ஒருவனைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்கிறது. என்னென்ன சிக்கல்கள் வருகின்றன என்பதுதான் கதை! -இவ்வளவுதான் இயக்குனர் சொன்னார். அவருக்கு ஷøட்டிங் ஏற்பாடுகள் பலவும் இருந்த வகையில் திரைக்கதை தயாராக்குங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கும் போய்விட்டார்.

இதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது கதை! அந்தக் காலகட்டத்தில் இப்போதுமாதிரி ஆயிரக்கணக்கில் எபிசோட்கள் உள்ள தொடர்கள் வந்திருக்கவில்லை. 13 எபிசோட் சீரியல்கள்தான் பாப்புலராக இருந்தன. வாரம் ஒரு எபிசோட் என்கிற வகையில் மூன்று மாதத்தில் அவை முடிந்துவிடும். எங்கள் சீரியல் 26 எபிசோட் வருகிற ஆறு மாத சீரியல். அதே காலகட்டத்தில்தான் முதல் 52 வார சீரியல் சக்தி (பானுப்பிரியா நடித்தது) வந்தது. இந்த போஸ்ட் கார்டு சைஸ் கதையை சுவாரஸ்யமான காட்சிகளாக 24 எபிசோடுகளுக்கு வளர்க்கவேண்டும். விளம்பரங்கள், டைட்டில்கார்டு, ரீகேப்ஸ் எல்லாம் போக ஒதுக்கப்படும் அரை மணிநேரத்தில் பத்து நிமிடங்கள் போக, இருபது நிமிடங்கள் தேறும். இருபதை இருபத்து நாலால் பெருக்கினால் 480நிமிடங்கள். ஒரு சினிமா அதிகபட்சம் 3 மணிநேரம் ஓடினாலும்கூட மொத்தமே 180 நிமிடங்கள்தான். ஆக இந்த சீரியல் கிட்டத்தட்ட மூன்று சினிமாக்களுக்குத் தேவையான திரைக்கதையைக் கோருகிறது. சினிமாவிலாவது பாட்டு சண்டை என்று பல விஷயங்களால் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் போக மீதமுள்ள நேரத்திற்கு மட்டும் திரைக்கதை செய்தால் போதும். நாங்களோ 480 நிமிடங்களுக்கும் திரைக்கதை செய்தாக வேண்டும். அதிலும் ஒவ்வொரு எபிசோடின் முடிவும் அடுத்த எபிசோடைப் பார்க்கத் தூண்டுகிற வகையில் ஒரு ஜெர்க்கை ஏற்ப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் பிரமாதமாக யோசித்துக்கொண்டு விவாதத்தில் கலக்க ஆரம்பித்தேன்.

ஆனால் முதல் நாளே எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்துவிட்டது. அந்த விவாதத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருத்தரோ ரெண்டுபேரோ வேண்டுமானால் தேறலாம். அனாவசியமாக நாலு பேர் உட்கார்ந்துகொண்டு கதையை வளர விடாமல் சொதப்பிக்கொண்டிருந்தார்கள். கதையின் முடிவு குறித்து முதல்நாளே விவாதம் எழுந்தது. அப்போது எனக்குத் தோன்றிய சில முடிவுகளை அவை முட்டாள்தனமானவை என்பதாக நான் ஒதுக்கிவிட்டேன். வெளியே சொல்லவில்லை. முதல் கதை விவாதம் என்பதால் மிகுந்த தயக்கத்தோடு லாஜிக் உதைக்கிற இடங்களை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள் மிகச் சாதாரணமாக சொன்னார்கள், "லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது சார்" எனக்கு அடப்பாவிகளா என்றிருந்தது. அதன்பிறகு எனக்கு வாயைத் திறக்கவே பயமாக இருந்தது. முழுக்க முழுக்க ஓட்டையாக ஒன்று உருவாகிக்கொண்டிருக்கையில் அதற்குள் எதையும் இட்டு நிரப்ப முடியாது என்பதாலும் நான் அதிகம் வாயைத் திறக்கவேயில்லை.

பத்தாம் நாள் அவர்கள் ஒரு க்ளைமாக்ûஸ கண்டுபிடித்தார்கள். இயக்குனர் அடக்கம் அத்தனை பேரும் அந்த க்ளைமாக்ûஸ கை தட்டி வரவேற்றார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த க்ளைமாக்ஸ் எனக்கு முதல்நாள் முதன்முதலில் தோன்றியது. மிகவும் அபத்தமானது என்பதால் நான் வெளியே சொல்லாமல் விட்டவற்றில் முதலாவது அது! ஆக பத்து நாள் விவாத சாதனை ஒரு அபத்தமான க்ளைமாக்ஸ் மட்டும்தான்.

அதைத் தொடர்ந்து ஷøட்டிங் தேதி மேலும் பத்து நாட்கள் தள்ளிப்போடப்பட்டது. அடுத்த கட்டமாக மதிய உணவுக்காக வந்து உட்கார்ந்துகொண்டு கதையைக் குழப்பிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்கள், வசனகர்த்தா, பல படங்களில் பணியாற்றியவர் என்கிற அந்தஸ்தோடு வந்து அமர்ந்திருந்த மூத்த இணை இயக்குனர் ஒருவர் என எல்லோரும் இயக்குனரால் வேறு வேலைகளுக்கு அனுப்பப்பட்டு, நானும் அந்த சீரியலின் இணை இயக்குனர் ரவிச்சந்திரனும் மட்டும் மிஞ்சினோம். இயக்குனர் பத்து நாட்களில் முழு ஒன்லைன் ஆர்டரையும் செய்யவேண்டியது எங்கள் பொறுப்பு என்று நம்பி விட்டுவிட்டு மற்ற வேலைகளுக்குப் போனார். அதன்பிறகுதான் எபிசோட் வாரியாக ஒழுங்காக எழுதி பத்தே நாட்களில் அந்த ஒன்லைன் ஆர்டரை எங்களால் முடிக்க முடிந்தது.

ஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் அதை வசனகர்த்தாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். அவர் வீட்டில் உட்கார்ந்து வசனம் எழுதிக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. முதல்நாள் ஷøட்டிங்கில்தான் வசனங்களை இயக்குனர் முதலில் பார்த்தார். பிரேக்டவுன் பிரகாரம் முதல் காட்சி ஷூட் செய்யப்பட்டது. பாதிகூட முடிந்திருக்கவில்லை. டைரக்டர் என்னை அழைத்தார். அடுத்த சீன் என்ன? என்று கேட்டார். ஷøட்டிங் ஸ்பாட்டில் இப்படி கேட்டால் பிரேக்டவுன் பிரகாரம் அடுத்த சீன் என்ன என்பது அர்த்தம். அந்தக் காட்சி இருபதாவது காட்சி என்றால் அடுத்தது இருபத்தொன்று என்று சொல்லக்கூடாது. பிரேக்டவுன் என்பது நட்ட நடுரோட்டில் நின்று போகிற பஸ்ஸை குறிப்பது அல்ல. எமது சினிமா பாஷையில் அன்றைக்கு எடுக்கப்போகிற காட்சிகளின் வரிசை. லொக்கேஷன், ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட், ப்ராப்பர்ட்டீஸ், எக்யூப்மென்ட்ஸ் என்று இருப்பை வைத்து அவை எந்தெந்த காட்சிகளில் ஒத்து வருகின்றன என்கிற அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான் பிரேக்டவுன் என்கிற அன்றைய ஃபுட்டேஜ். நான் அடுத்த காட்சி எது என்று கூறினேன். டைரக்டர் அடுத்த காட்சிக்கான வசனத்தை நீங்கள் எழுத முடியுமா என்று கேட்டார்.

எனக்கு இது என்னடா வம்பு என்று இருந்தது. ஏனென்றால் அந்த வசனகர்த்தா அந்தக் கூட்டுக் குடும்பத்தில் எம்மார்ராதா செய்கிற கேரக்டர் மாதிரி ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டுவேறு இருந்தார். ஆசாமி அருகில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது இல்லாப் பொல்லாப்பு அல்லவா!

ஆனால் அந்த காட்சி எடுத்து முடிக்குமுன் நான் அடுத்த காட்சியை எழுதி முடிக்க வேண்டி இருந்தது. இயக்குனர் வாங்கி ஒரு பார்வை பார்த்தார். அப்படியே ஷாட் பிரிக்க ஆரம்பித்தார். இன்னிக்கு பிரேக்டவுன் சீன்ஸ் எல்லாம் நீங்களே எழுதிடுங்க என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கும் ஷாட்டுக்குப் போய்விட்டார். இப்படி எனது முதல் சீரியல் முழுக்கவும் ஒரு அறையில் ஷூட்டிங் நடந்தால் அதற்கடுத்த அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்த முதல் பத்துநாள் விவாதக் கூத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் ஷூட்டிங் போகுமுன் இந்த வசனப் பிரச்சனை வேறு ரூபத்தில் திரும்பியிருக்கும்.

நான் முதன்முதலில் இயக்குனரை சந்தித்தபோதே அவர் என்னிடம் சொன்னது அதுதான். நீங்கள் கடைசி நேரத்தில் வந்திருக்கிறீர்கள். இல்லாவிட்டால் வேறு பொறுப்பை கொடுத்திருப்பேன் என்று! அது என்ன பொறுப்பு என்பது போகப் போகத்தான் புரிந்தது. வசனம் எழுதுகிற வேலை. இருபத்தைந்து நாட்கள் ஷூட்டிங் நடந்தது. முடிந்து பார்த்தபோது முன்னூறு பக்கங்களுக்கும் மேல் என் கைப்பிரதி இருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் காட்சிவாரியாக வசனம் எழுதவில்லை. பிரேக்டவுன் வாரியாக எழுதியிருக்கிறேன். முதல் முதலாக எழுத வருகிற ஒருவர் இவ்வளவு கச்சிதமாக எந்தக் காட்சியிலும் வசனம் பிசகாது எழுதுவது சாத்தியமேயில்லை என்று இயக்குனர் என்னிடம் வியப்பைத் தெரிவித்தார்.

நான் வசனம் எழுத ஆரம்பித்த ஒரே வாரத்தில் அந்த வசனகர்த்தாவுக்கும் எனக்கும் பிரச்சனை வந்து பிறகு நல்ல நண்பர்களாக ஆனபோது அவரும் இதே கருத்தைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் கோபித்துக்கொண்ட அவர் பிற்பாடு நல்ல நண்பராக ஆனதற்குப் பின்னணியிலும் ஒரு முக்கிய காரணம் இருந்தது.

அந்த சீரியலுக்கு வசனம் என்று வந்தது என் பெயர் அல்ல, அவரது பெயர்!