July 27, 2009

நான் சினிமா பார்ப்பதில்லை

என்னிடம் ஒருசிலர் இந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்கள்: நான் சினிமாபார்ப்பதில்லை!

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமா என்று உங்களில் ஒருசிலர் கருதலாம். ஆனால் இது உண்மைதான். அதெப்படி? வீட்டுக்குள்ளேயே டீவியை வைத்துக்கொண்டு ஒருவர் சினிமாவையே பார்ப்பதில்லை என்று சொன்னால், குடும்பஸ்தன் கலவியிலேயே ஈடுபட்டதில்லை என்று சொல்வதைப் போல அபத்தம் அல்லவா என்றும் நீங்கள் கேட்கலாம்! ஆனால் இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

சினிமா பார்க்காமல் இருப்பதே ஒரு சமூக அந்தஸ்து என்று கருதுபவர்கள் அவர்கள். அவர்களில் ஒரு சினிமாகூட பார்த்தேயிராதவர்கள், சில சினிமாக்களைப் பார்த்து பின் ஒதுங்கிவிட்டவர்கள், சினிமா பார்க்க வகையில்லாதவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என்று பல பிரிவுகள் இருக்கலாம்.

பொழுதுபோக்கு கலை என்று எவ்விதமான ஆர்வமும் இல்லாமல் தொழில் ஒன்றே குறியாய் வாழ்கிறவர்களில் பலரும், சம்பாதிக்கும் காசு கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலைமையில் சினிமா டிக்கெட் விற்கிற விலையில் மனைவியின் உடலே சினிமாதான் என்று நொந்து கிடப்பவர்களில் பலரும் சினிமா பார்ப்பதில்லை; தாங்கள் சார்ந்த மதம் ஆபாசம் என்பதாக அறிவுறுத்துவதால் பலர் சினிமா பார்ப்பதில்லை. சினிமா என்பது வீணர்களின் வேலை என்று கருதும் பல புத்திஜீவிகள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் சினிமா பார்ப்பதில்லை.

இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இதனால் சினிமாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை சகோதரர்களே! இழப்பு உங்களுக்குத்தான்!

லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் சலனப் படத்தைத் திரையிட்டபோது திரையில் ரயிலைப் பார்த்ததும் பார்வையாளர்கள் பயந்து வெளியே ஓடினார்கள் என்பதுதான் சினிமா மனித உள்ளங்களில் நிகழ்த்திய முதல் அனுபவம். அதன் மிச்ச சொச்ச டியென்னேக்கள்தான் இவர்களுக்குள் இருக்கிறதோ என்பதாகவே தோன்றுகிறது.

உண்மையில் இப்போதும் ரயிலைப் பார்த்திராதவர்கள் நம் தமிழகத்தில் பலரும் உண்டு. கடலைப் பார்த்திராதவர்கள் அதனினும் ஏராளம் உண்டு. ஆனால் அவர்களும் அவற்றை சினிமாவில் பார்த்துவிட்டவர்கள்தான். தண்டவாளம் போட முடியாத ஊர்களுக்கெல்லாம் ரயிலைக் கொண்டுபோகிற சாதனையை சினிமாவைத் தவிர வேறு எதுசெய்ய இயலும்?

சினிமா அறிமுகமான புதிதில், பெண்ணடிமைத்தனம், சமூக கட்டுத்திட்டங்கள் என்று மிகவும் உள்ளொடுங்கியிருந்த நம் மனங்கள் சினிமாவைப் பார்ப்பதை ஒரு பாவமாகவே கருதிய காலம் இருந்தது. சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்றும் நடிகை என்றால் வேசி என்றும் வர்ணிக்கப்பட்ட அந்தக் காலத்தில் சினிமா மைனர்களின் கேளிக்கைகளில் ஒன்றாகவே கருதப்பட்டுவந்தது நியாயமானதுதான். ஆனால் இப்போது எத்தனையோ தொழில்நுட்ப சாத்தியங்களை உள்வாங்கிக்கொண்டு இவ்வுலகில் உலவும் எத்தனையோ தொழில்களோடு நெஞ்சு நிமிர்த்தி சவால்விடும் சினிமா எனும் பேரியக்கத்தை உங்களால் எப்படி வெறுக்க முடியும்?

நடிகர் சிவாஜிகணேசன் ஒருமுறை விமானத்தில் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சுக் கொடுத்த கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னைக் கண்டுகொள்ளாத சக பயணியிடம் நான்தான் சிவாஜி கணேசன் என்று அவர் சொன்னார்.

அதற்கு அவர் அப்படியா என்ன பண்றீங்க என்று கேட்டார் என்பது அந்தச் சம்பவம். இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் சினிமா பார்க்காதவராகவே இருக்கட்டும். சாலையில்தானே அவர் பயணிக்கும் கார் ஓடுகிறது! சுவர்களெங்கும் ப்ளோஅப்களாக இந்த சகபயணியின் முகத்தை ஒருமுறைகூட அவர் கண்டதேயில்லையா? இதற்கான பதில் மிகவும் எளிமையானது. கண்டிப்பாகப் பார்த்திருப்பார். நாட்டமில்லாத ஒன்று மனத்தில் பதிவதில்லை என்பதனால் நேரில் பார்க்கும்போது அடையாளம் தெரிய இயலாமல் போவது இயல்பானதே!

இந்த நாட்டம் என்கிற வார்த்தைதான் மிகவும் முக்கியமானது. ஊரில் எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன. எல்லோருமா கோவில்களுக்குப் போகிறார்கள்? வருஷாவருஷம் உங்கள் ஊரில் சர்க்கஸ் நடக்கிறது, ஒவ்வொரு வருஷமுமா நீங்கள் போய்ப் பார்க்கிறீர்கள்? எத்தனையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன. அதற்காக எல்லோருமா குடிக்கிறார்கள்? எதிலும் ஒரு நாட்டம் வேண்டும். நீங்கள் பழகாத ஒன்றை நீங்கள் எப்படி விரும்ப முடியும்?

என்னுடைய இரண்டு நண்பர்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம், ஒருவர் கிறிஸ்துவத்தைச் சார்ந்தவர். அவர் உறவுக்காரப் பெண்கள் மற்றும் அறிமுகமாகும் பெண்கள் பலரோடும் கலவியில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர்களை வசீகரிக்க அவர் பல தந்திரங்களை உபயோகிப்பார். அவற்றில் முதலாவது சினிமா. அவர் புதிதாக அறிமுகமாகும் பெண்ணிடம் சொல்வார், நான் சினிமா பார்ப்பதில்லை. அவளுக்குள் ஏற்படும் மெல்லிய வியப்பு அவருக்கு போதுமானது. அதைத் தொடர்ந்து ஏன் பார்ப்பதில்லை என்கிற விவாதமொன்று அங்கே எழுந்தே தீரும் என்பதனால் மீதியெல்லாம் நடக்க வேண்டிய விதத்தில் நடந்தே தீரும். அவர் உண்மையிலேயே சினிமா பார்க்க விரும்பாதவர்தான். அவருக்கு சினிமா ரத்தமும் சதையுமாக வேண்டும். திரையில் எல்லாம் போட்டுக் காட்டினால் போதாது. தற்போது அவர் ஒரு மதபோதகராக சிறப்பாக இயங்கி வருகிறார். வீடு வீடாகச் சென்று மதப் பிரசங்கங்கள் செய்கிற வேலை. எதன்இடத்தை எது பிடித்துக்கொண்டது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

இன்னொரு நண்பர், மிக முக்கியமான ஒரு நடிகையை ஒரு கெஸ்ட் ஹவுசில் பார்த்த கதையை நெடுங்காலமாக சிலாகித்து வருபவர். அவள் இறுக்கமான அரைக்கால் சட்டைஅணிந்து (அதைக் கால்கால் சட்டை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்) கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். அந்த மாதிரி தொடைகளை நான் என் ஆயுட்காலத்தில் பார்த்ததில்லை என்று அவர் மருகுவார். தொடையைப் பார்த்ததற்கே இத்தனை மருகினால் உடையை நீக்கியிருந்தால் எத்தனை பதற்றம் ஆகியிருப்பார். அவர் தானாக ஒருபோதும் சினிமாவுக்குப் போக மாட்டார். எப்போதாவது நான் வலியுறுத்தினால் வருவார். அப்படி அவர் பார்த்த படங்கள் குணா மற்றும் மகாநதி. அந்தப் படங்களின் சோகமான முடிவு அவருக்குள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடையும் உடையும் தருகிற பதற்றத்தைவிடவும் சோகம் தரும் பதற்றம் மிகப் பெரியது என்பது அப்போது தெரிந்தது. ஏனென்றால் அதன்பிறகு அவர் எந்தப் படத்துக்கும் வரத் தயாராக இல்லை.

இப்படியொருவர் சினிமா பார்த்து மனநடுக்கம் கொள்ள முடியுமா? ஏன் முடியாது? ஒவ்வொருவர் மனத்தின் சுமை தாங்கும் அளவும் ஒவ்வொருவிதமானதுதானே! என் உறவுக்கார மூதாட்டி ஒருவர். பெரும்பாலும் சினிமாவுக்கே போகாத அவரை வெள்ளை ரோஜா என்கிற சிவாஜி கணேசன் நடித்த படத்துக்குக் குடும்பத்தோடு கூட்டிப்போனார்கள். மொழுமொழுவென்று க்ஷவரம் செய்த முகத்தோடு வெள்ளங்கி புனைந்து அடர்த்தியான கறுப்பு ப்ரேம் கண்ணாடியோடு சிவாஜிகணேசன் ஒரு பாதிரியார் பாத்திரத்தில் அந்தப் படத்தில் நடித்திருப்பார். அந்த ஊரில் ஒரு பெண் கொலை செய்யப்படுவாள். போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் உடலைப் புதைத்துவிடுவார்கள். பாதிரியார் தன் சகோதரரான டியெஸ்பி (மற்றொரு சிவாஜி)யிடம் புதைத்த உடலைத் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.

மறுநாள் டியெஸ்பி ஊர்க்காரர்கள் முன்னிலையில் சவப்பெட்டியைத் தோண்டியெடுத்து திறந்து பார்த்தால் உள்ளே பாதிரியாரின் சவம் இருக்கும். இது அந்த சமயத்தில் சாதாரணமாக எல்லா பார்வையாளர்களையுமே சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்த காட்சி.

இந்தப் படம் துவங்கியதிலிருந்தே நான் சொல்லும் மூதாட்டி, இந்த கெட்டப்பில் சிவாஜி தன் இறந்துபோன சகோதரனைப் போலவே இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். இந்தக் காட்சியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பில் திரையரங்கிலேயே அவர் இறந்துவிட்டார். இது கோவையில் நடந்த சம்பவம்.

சினிமாவின் தத்ரூபம் ஏற்படுத்துகிற மாயையின் வினை இது. அவர் சினிமா பார்க்காமலே இருந்திருந்தால் இருந்திருக்கலாம்!

இந்த மாதிரி உதாரணங்கள் இருந்தாலும் சினிமா என்பது எவ்வளவு உன்னதமான கலைவடிவம் என்பதை பார்வையாளர்கள் உணரவேண்டும் என்பதே முக்கியமானது. சினிமா பார்க்க விரும்பாதவர்கள் பலரும் எப்படி சினிமாவைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்களோ, அதேமாதிரிதான் சினிமா பார்க்க விரும்புபவர்களில் பலரும்கூட சினிமாவைப் பற்றிய அபத்தமான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

நான் சினிமா பார்க்க விரும்புகிறேன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒருவருக்கும் நான் சினிமா பார்ப்பதில்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒருவருக்கும் இந்த இடத்தில்தான் எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் போகிறது.

நான் சினிமா பார்க்க விரும்புகிறேன் என்று சொல்பவர் பார்க்க விரும்புகிற சினிமா எது என்று கேட்டுப் பாருங்கள், அதற்கு பதிலாக அவர் சினிமா பார்க்காமலே இருந்துவிடுவதுதான் பெட்டர் என்பதுதான் தெரியவரும். சினிமா என்றால் ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டும்; குத்தாட்டம், கும்மாளம் என்று ஜங்கு ஜங்கென்று குதிப்பதாக இருக்க வேண்டும்; ஒற்றை ஆள் ஐம்பதுபேரை அடி பின்னுவதாக இருக்க வேண்டும்; சீறிப் பாய்கிற கார்கள் ஒன்றோடொன்று மோதி ஆகாயத்தில் பறக்க வேண்டும்; உலகில் உள்ள அழகான லொக்கேஷன்களிலும் ஸ்டுடியோவில் கோடிக்கணக்கான செலவில் போடப்பட்ட செட்டுகளிலும் நாயகனும் நாயகியும் தறிகெட்டு நாட்டியமாடவேண்டும்; நகைச்சுவை என்கிற பெயரில் காமெடியன்கள் வந்து கூத்தடிக்கவேண்டும், கதாநாயகி அல்லது கவர்ச்சி நடிகை (எவ்வளவு அபத்தமான பிரயோகம் இது!) ஆகக் குறைந்த ஆடையில் வந்து மனசை அள்ளவேண்டும். இப்படியெல்லாம் எந்த சினிமா இருக்கிறதோ அந்த சினிமாவை நான் பார்க்க விரும்புகிறேன் என்று ஒருவர் சொன்னால், அந்த சினிமா வரவும் வேண்டாம், அதை அவர் பார்க்கவும் வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இம்மாதிரி படம் எடுப்பது தவறு என்று மற்ற விமர்சகர்கள்போல நான் சொல்ல வரவில்லை. வரட்டும், சினிமாவின் தவிர்க்க இயலாத ஒரு வடிவமாக இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும், பெரும் பணம் முதலீடு செய்யப்படும் ஒரு சினிமா வடிவம் தவறுதலாக பூதத்தைக் கிளப்பியதுபோல கிளம்பிவிட்டது. அதை அடக்குவது இயலாதுதான். ஆனால் இந்தக் காரணத்தால்கூட பலரும் சினிமாவைப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம் அல்லவா! அவர்கள் அளவில் குறைந்தவர்கள் என்பதனால்தானே கருத்தில் கொள்ளப்படுவதேயில்லை!

நல்ல சினிமா வரட்டும் பார்க்கிறேன் என்று ஒருசிலர் என்னிடம் சொன்னதுண்டு. அவர்களில் எவ்வளவு நல்ல சினிமாவைக் கொடுத்தாலும் நொட்டை நொள்ளை சொல்லும்ஆசாமிகளைத் தள்ளிவிடலாம், சினிமா என்பது அபத்தங்களும் ஆபாசங்களும் நிறைந்ததல்ல என்கிற உத்திரவாதத்தைத் தருகிற சினிமாக்களை மட்டுமாவது நம்மால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்தால் அதுவே பெரிய வெற்றிதானே!

4 comments:

பாலா said...

அய்யா
இந்த நிமிஷத்தில் நான் சிலவற்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
நான் சிங்கையில் இருந்த சமயத்தில் பொது நூலகம் செல்வது வழக்கம்
அப்போது தங்களின் புத்தகங்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன் ஒருமுறை கூட எடுத்து படித்ததில்லை
அந்த சமயம் எனக்குள் "பாலக்குமாரன் ,வைரமுத்துவை தவிர எவரையும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாத தன்மை என்றே சொல்ல வேண்டும் .
இப்போது என் முட்டாள் தனத்தை எண்ணி வெட்குகிறேன்

எனக்கு சொல்ல தகுதி இல்லை
இருந்தாலும் சொல்கிறேன்
கட்டிபோடும் எழுத்துநடை அய்யா

நன்றி

பாலா

butterfly Surya said...

நல்ல பதிவு.

நான் ஒரு சினிமா விரும்பி..

Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு. அப்ப‌டி த‌ப்பி த‌வ‌றி ப‌ட‌ம் பார்க்க‌ப் போய் ஒரு குப்பையான‌ ப‌ட‌த்தைப் பார்த்து விட்ட‌வ‌ருக்கு, ம‌றுப‌டி சினிமா பார்க்கும் எண்ண‌மே வ‌ராது. இவ்வ‌ள‌வையும் மீறி அடுத்த முறை டிக்கெட் வாங்க‌ வ‌ரிசையில் நிற்க‌ த‌னி தைரிய‌ம் வேண்டும்.

Film4thwall.blogspot.com

Naga Chokkanathan said...

இங்கே பின்னூட்டம் இடுவதற்காக என்னை மன்னிக்கவேண்டும். காரணம் நானும் சினிமா பார்க்காத கோஷ்டிதான்.

ஆனால் ஒருகாலத்தில் வெளியாகும் அத்தனைப் படங்களையும் முதல் வாரத்திலேயே பார்த்துத் தீர்த்துக்கொண்டிருந்த நான், இப்போது சினிமாவே பார்க்காமல் இருக்க நீங்கள் சொல்லும் காரணங்கள் எவையும் இல்லை. எனக்கு அதுபற்றிய தவறான முன்முடிவுகள் / அபிப்ராயங்கள் எவையும் இல்லை - அந்த நேரத்தை நான் வேறு விஷயங்களில் செலவிட்டுக்கொள்கிறேன். Just a matter of prioratization. அவ்வளவுதான். இதனால் எனக்கு என்ன இழப்பு என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை :)

- என். சொக்கன்,
பெங்களூர்.