June 27, 2009

கதை கேளு! திரைக் கதை கேளு!!

எமது சினிமாவில் சாதாரணமாகவே இந்தக் கதை கேட்டல் வைபவம் என்பது, அதன் அந்தராத்மாவை ரம்பம் கொண்டு அறுக்கிற வேலையாகவே பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

அதாகப்பட்டது, ஒரு சினிமா, ஷூட்டிங் வரைக்கும் வந்துவிட்டதென்றால் (அது ரிலீஸ் ஆகவேண்டும் என்பதாக எவ்விதமான உத்திரவாதமும் தேவையில்லை) அதற்கு முன்பாகக் கதை கேட்டல் என்கிற நிலைப்பாடு ஒன்று நிகழ்ந்தேயிருக்க வேண்டும். படத்துக்கு முதல் போடுகிறவரோ, நடிப்பவரோ, தயாரிப்பவரோ என யார் யாரோ கதையைக் கேட்கிறார்கள். நியாயப்படி தனக்கு எவ்விதமான கொள்வினையும் இல்லாத ஏரியாவாகிய கதை உருவாக்கத்தை மிகக் கஷ்டப்பட்டு அல்லது களவாடி இயக்குனர் அல்லது இயக்குனராக விரும்புபவர் செய்து வைத்திருக்கிறார். அது ஒரு ஹீரோவுக்குப் பிடித்தால் அவருக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிடுவார். தயாரிப்பாளருக்குப் பிடித்தால் ஹீரோகூட முக்கியமில்லை. படம் வெளிவந்துவிடும். இதனால் கதையைச் சுமப்பதும் அதை சரியானவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஒரு தேர்ந்த கலையைப் போல பயில வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் கலையை திரைப்படக் கல்லூரி சொல்லித் தருவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, நமது ஹீரோக்கள் எந்த அடிப்படையில் கதை கேட்கிறார்கள் என்கிற வாதத்துக்குள் நுழையலாம். ஏனெனில் அதுவே இதன் ஆதாரக் காரணமாக இருக்க முடியும். ஏனென்றால் எமது ஹீரோக்கள் கேட்பது கதையை அல்ல. தங்களின் பாத்திரம் என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள். ஹீரோவின் பாத்திரம் மையமானது அதைச் சுற்றி நிகழ்வதுவே கதை என்பதைப்போன்ற மாயத் தோற்றமே அவர்களின் மனத்தில் காண்கிறது.

இதனாலேயே சினிமாவுக்கான கதை என்பது ஹீரோவை மையப்படுத்தியே எழுதப்படுவதாக ஆகிவிடுகிறது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் அதுவும்கூட இரண்டே இரண்டு வகையில் அடங்கிவிடுகிறது என்பதாகவே தோன்றுகிறது. ஒன்று ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதை, மற்றது கமலஹாசனுக்குப் பொருந்தும் கதை!

ரஜினிகாந்த்துக்கு கதை சொல்வதற்கும் கமலஹாசனுக்குக் கதை சொல்வதற்கும் நேரெதிரான வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். முன்பொரு காலத்தில் இருவரும் ஒரேவிதமான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம். அவர்கள் தங்கள் பாதைகளைத் தீர்மானிக்கும் வரைக்கும் நிகழ்ந்து வந்த விபத்துக்களே அவை! இப்போது அப்படியா?

இதனால்தான் இன்றைக்கும் இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கக்கூடிய கதை என்பதான இரண்டே வகைப்பட்ட கதைகளில் ஒன்றையே ஒவ்வொருவரும் உருவாக்குகிற நிலைமையே காண்கிறது. அதாவது, நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகர் என்பதாகப்பெயர் வாங்கும் ஒருவருக்கு கமலஹாசனுக்குப் பொருந்தும் கதைகளையும், பெரியமாஸ் ஹீரோ அல்லது மாஸ் ஹீரோவாக ஆகக்கூடியவர் என்கிற நிலைப்பாட்டில்காணும் ஒருவருக்கு ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதைகளையும் கதாசிரியர்கள் என்கிற இயக்குனர்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இதையே செய்து வருகிறார்கள்.

இதில் கமலஹாசன் பட்டியலில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ஜீவா! சிக்கிக்கொண்டிருப்பவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அது வெற்றிக்கான உத்திரவாதமில்லாத பாதை என்பதனால்தான். சமீபத்தில் நடிகர் ஜீவாகூட ஒரு பேட்டியில் இதையேதான் சொல்லியிருக்கிறார். நாலு படங்களுக்கு ஒரு படம் பரீட்சார்த்தமாக முயல்வதாக இருக்கிறேன் என்று. கொஞ்சம் நல்ல மெமரி உள்ளவர்கள் இதையேதான் பன்னெடுங்காலமாக கமலஹாசன் செய்துவருகிறார் என்பதை நினைவுகூர்வார்கள். வெற்றிக்கு உத்திரவாதமாக கமலஹாசன் கைக்கொள்வது காமெடியை. மற்றவர்கள் அதோடு ஆக்ஷனையும் சேர்த்துக்கொள்ளும்போது அது கமலஹாசனையும்கூட பாதித்துவிடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சரி, வித்தியாசமான முயற்சிகளை விடுவோம். உத்திரவாதமாக ஜெயிக்கும் என்று மாஸ் ஹீரோக்கள் நம்புகிற கதைகள் உண்மையில் எவ்விதமாக இருக்கின்றன? அதாவது ரஜினி டைப் கதைகள் எவ்விதமாக உருவாகின்றன, அவற்றில் எந்ததெந்த அம்சங்கள் ஹீரோக்களைக் கவர்கின்றன என்கிற கேள்விக்கு பதில் சொல்வது அத்தனை கஷ்டமானதல்ல.

எடுத்த எடுப்பிலேயே ஏதாவதொரு அநியாயம் நிகழ வேண்டும். அப்போது ஹீரோ பாய்ந்து வந்து பாகம் பாகமாகக் காட்டப்பட்டு ஒரு கணத்தில் முகம் ஃப்ரீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த விசில்களுக்கு இடம்விட்டு பிறகு பிழையாளர்களைப் பின்னியெடுக்க வேண்டும். அல்லது மிகப்பெரிய சாதனையாளனாக அவன் முன்வைக்கப்பட, அவனோ தன்னடக்கத்தோடு காட்சியளிக்க வேண்டும். இல்லையா, நூறுபேர் சூழ நடுத்தெருவில் ஒரு ஃபாஸ்ட் பீட்டுக்கு நடனமாட வேண்டும். இவற்றின் வாயிலாக தலைவன் வந்துவிட்டான் என்கிற நம்பிக்கையைப் பார்வையாளனுக்கு ஊட்டவேண்டும். அந்த ஊட்டமே படத்தின் வெற்றிக்கான அஸ்திவாரமாக அமைய முடியும் என்பதே தொன்றுதொட்ட நம்பிக்கை. இதனால்தான் கதை கேட்கப்படும்போது ஹீரோ இன்ட்ரொடக்ஷன் என்பது முக்கியமான அம்சமாகக் கோரப்பட்டு வருகிறது.

வித்தியாசமாக ஹீரோவை எப்படி இன்ட்ரொட்யூஸ் செய்வது என்கிற போதமே பிற்பாடு உள்ள கதை என்கிற அம்சத்தைக் குலைக்கும் ஆதாரமாகிறது என்பதை நான் ஏற்கனவே எழுதிய ஞாபகம் இருக்கிறது. வில்லு படத்தில் ஹீரோ இன்ட்ரொடக்ஷன்
மேற்சொன்னவற்றில் முதல் விதமாக நிகழ்கிறது. எனக்கு எம்ஜியாரைத்தான் பிடிக்கும் என்று சொல்கிற ஒரு பூக்காரக் கிழவி இன்னொருத்தனையும் பிடிக்கும் என்று ஹீரோவின் சாதனையொன்றை விவரிக்கும் விதமாக (பெரிய விக்ரமாதித்யன் கதை பாருங்கள்) சொல்கிறார். பாட்டியின் பேத்தியை கயவர்கள் கற்பழிக்க விரும்பி கடத்த முயல்கிறார்கள். அந்தப் பிரதேசத்தில் நிறைய வண்ண வண்ணப் புடவைகள் கொடிகளில் காய்கின்றன. ஹீரோ சூப்பர்மேன் போல புடவைகளினூடாகப் பறந்து வருகிறார். ஓடுகிற ரயிலின் மீது பேலன்ஸ் செய்து நிற்பதுபோல ஜம்மென்று நிற்கிறார். ஆடி மாசம் போலிருக்கிறது. செம காத்து அடிக்கிறது. புடவைகள் பதாகைகள் போலப் பறக்கின்றன. உடல் முழுக்க வண்ணப் புடவைகள் சுற்றிய கோலத்தில் அவரது முகம்கூட நமக்குத் தெரியவில்லை. அடியாள் ஒருவன் அவரை சீண்ட, ஆகாயத்தில் தட்டாமாலை சுற்றி புடவை அவிழ்ந்து பூமியில் வந்து நிற்கிறார். அப்போது அடியாள் ஒருவன் கேட்கிறான், யார்ரா இவன், புரூஸ்லியா, ஜெட்லியா என்று, ஹீரோவான விஜய் சொல்கிறார், "கில்லிடா!"

எப்படி?

அதாவது இப்படி ஒரு இன்ட்ரொடக்ஷன் சொன்னால் விஜய் கால்ஷீட் கிடைத்துவிடும் போலிருக்கிறது. அடுத்த தலைமுறையின் முன்னோடியாக இவர்தான் அறியப்படுகிறார் என்பதனால் பின்னால் வருகிற அத்தனை நடிகர்களும் இதே பாணியையே பின்பற்றுவதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஏனென்றால் வில்லு என்கிற இந்தப் படத்தில் கதை என்பதாக ஒரு சுக்கும் கிடையாது. பிரபுதேவா இயக்குனர் என்பதனால் ரீலுக்கு ரீல் பாட்டு. நயன்தாராவை ஜாடியில் போட்டு குலுக்காத குலுக்காக நடனங்கள், ஓட்டங்கள். பனிமலைகள், ஹெலிகாப்டர்கள் லாஞ்ச்சுகள் என்று பிரம்மாண்டச் சூழல்கள். சரி கதை? கதை என்பதாக எதுவும் இல்லை. ஆனால் தேசபக்தி என்பதாக ஒரு ஆதாரம் கதைக்குள் இருக்கிறது. அது போதாதா?

கொலையுண்ட நிரபராதியின் மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்துகிறார்கள், மணல் புயல் வீசி புதைகிறது சடலம். அதைக் கண்டுபிடிக்கவேறு முடியவில்லை, சர்வ தேசக் குற்றவாளிகளை தான் போய் பிடிக்காமல் ஒரு சாதாரண இளைஞனின் பகை தீர்க்க உதவுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி என்று இத்தனை இத்தனை அபத்தங்களை ஒன்று சேர்த்து ஒரு கதை பண்ண முடியுமா என்று உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இது ஒரு ஹீரோவுக்கு பிடிக்கிறது என்று சொன்னால் தமிழ் சினிமாவின் விதியை எங்கே போய் நொந்துகொள்வது?

பிரபுதேவா நல்ல நாட்டியக்காரர். நல்ல நாட்டிய ஆசானும்கூட. அவருக்கு எதற்கு இந்த வீண் பழி என்றே தோன்றுகிறது. சரி, கதையை அவர் செய்யவில்லை, தெலுங்கிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கிறீர்களா? உங்கள் வாக்கிலேயே அதற்கான விடையும் இருக்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் தெலுங்குக்கு ஒருவேளை இப்போதும் சரிப்பட்டு வரலாம், அதைத் தமிழ் நாட்டுக்குப் பொருத்தமாக மாற்ற ஒரு கதையறிவு உள்ள மனிதன் வேண்டாமா? அப்படியே காப்பியடித்தால் அப்புறம் இப்படித்தானே இருக்கும்!

விஜய்யின் கில்லியும் இவ்விதமாக தெலுங்கிலிருந்தே தமிழுக்கு வந்தது. ஆனால் அந்தக் கதையில் ஒரு உயிர் இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்தைப்போய் உயிர் கியிர் என்று சொல்லலாமா என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் ஆர்த்தடாக்ஸ் அல்ல என்று நம்புகிறேன். கொடூரமான ஒரு கிராமத்து பணக்காரன், தன் முறைப்பெண்ணின் மீது உயிரையே வைத்திருக்கிறான். அவளைக் கதாநாயகன் அவனிடமிருந்து காப்பாற்றுகிறான். இது கதை. ஆனால் இந்தக் கதை மட்டும் போதுமா? அருமையான ஒரு திரைக்கதையும் இருந்தால்தானே கதை சினிமாவாக மாறும்! அந்த வித்தை அந்தப் படத்தில் மிக அருமையாக செய்யப்பட்டிருந்தது என்பதை பார்த்தவர்கள் அறிவீர்கள்.

கதை என்பது வில்லு படத்தில் போல இல்லாமல் அடிப்படை லாஜிக் உள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைவிடவும் முக்கியமானது திரைக்கதைதான். ஏனென்றால் திரைக்கதை என்பது லாஜிக் இல்லாத கதையைக்கூட ஓடவைக்கக்கூடிய வல்லமை உடையது. இரண்டு விஷயங்களிலும் ஜெயித்தது கில்லி. அப்படியொரு படத்தில் நடித்துவிட்டு வில்லு மாதிரி ஒரு படத்தின் கதையை எப்படி விஜய் தேர்ந்தெடுக்கிறார் என்பதைத்தான் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்பதாகச் சொல்கிறேன்.

இதேபோலத்தான் தமிழில் ஹரி இயக்கிய ஐயா என்கிற திரைப்படமும்! அருமையான கதை, அற்புதமான திரைக்கதை. இந்த இரண்டுமே அந்தப் படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் ஆதாரமாக அமைந்தன. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஐயா ரஜினிக்காக உருவாக்கப்பட்டு சொல்லப்பட்ட கதை என்பதாக இன்டஸ்டரியில் ஒரு பேச்சு உண்டு. அது உண்மை என்று பார்த்தால் ஒரு நல்ல படத்தை இழந்த வகையில் ரஜினி செய்த தவறு என்ன? அவருக்கு கதை பிடிக்கவில்லையா, திரைக்கதை பிடிக்கவில்லையா? அவை சிறப்பாக இருப்பதை அவர் கவனிக்காமல் போனதற்கான ஆதாரமான காரணம் என்ன? தமிழகத்தின் முதல்வராக வருவார் என எதிர்பாக்கப்படுகிற ஒருவர் வெறும் எம்மெல்லே பாத்திரத்தில் நடிப்பதா என்பதாக அவர் நினைத்தாரா? இதை ஹரிதான் சொல்ல வேண்டும்.

இதே ரஜினிகாந்த்துக்காக பாரதிராஜா ஒரு கதையை உருவாக்கினார். அது கடலோரக் கவிதை. ரஜினி மறுத்த வகையில்தான் சத்தியராஜ் உள்ளே நுழைகிறார். அவரை ஒரு ஸ்டாராக அந்தப் படமே உருவாக்குகிறது. முட்டம் சின்னப்பதாஸாக ரஜினி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை அவரது கேரியரில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழ்ந்திருக்கும். ஆனால் அவரோ அதே பாரதிராஜாவின் கொடி பறக்குது என்று லாஜிக் பறக்கிற கதையொன்றில் நடித்து தன் பட்டியலில் இன்னொரு தோல்விப்படத்தைத் தாங்குகிறார். இந்த அபத்தம் எதனால் நடிகர்களுக்கு நிகழ்கிறது என்பதைத்தான் அவர்கள் ஆராயவேண்டும் என்று சொல்கிறேன்.

அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது மிகவும் சுலபமான காரியம்தான். தாங்கள் இப்போது எந்த அடிப்படையில் கதை கேட்கிற வைபவத்தை எதிர்கொள்கிறார்களோ, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை அவர்கள் எட்ட வேண்டும். இது உண்மையிலேயே சுலபமானதுதானா என்று கேட்கிறீர்களா?

வெற்றி உத்திரவாதமென்கிற போதமிருந்தால் ஏன் இது சுலப சாத்தியமாகாது? அவர்கள் யோசிக்க வேண்டியது இதைத்தான், படத்தில் அவர்கள் எவ்விதமாக இன்ட்ரொடியூஸ் செய்யப்பட்டாலும் சரி, எத்தனை சண்டைக்காட்சிகளில் நடித்தாலும் சரி, எத்தனை கதாநாயகியை அல்லது சென்ட்டிமென்ட்டைப் பிழிந்தாலும் சரி, அவை அந்தப் படத்தின் வெற்றிக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை. படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பவை முதலில் திரைக்கதை, அடுத்தது கதை, மூன்றாவதாக மேக்கிங். இந்த மூன்று விஷயங்களில் அக்கறை செலுத்திய படங்கள் தோல்வியைத் தழுவுவது கடின சாத்தியமே!

இதனால்தான் சொல்கிறேன், நடிகர்கள் தங்கள் பாத்திரத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு பணத்தையும் புகழையும் வாரிவாரிக் கொடுக்கலாம், ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஊற்றிக்கொண்டால் அவர்கள் பெற்ற அனைத்தும் வந்த வழி தெரியாமலே ஒழுகியோடிவிடவும் செய்யும். இதை நடிகர்கள் உணர்ந்துகொண்டால், வெற்றி என்பதன் அவசியம் உணர்ந்து, ஹீரோயிசம் என்கிற அடைப்புக்குள்ளிருந்து அவர்கள் வெளிவந்துவிட வாய்ப்பாக அமையாதா?

இதை மனதில் நிறுத்தி இனிமேலாவது தன் பாத்திரம் என்ன என்று பார்ப்பதை நிறுத்தி, கதையையும் திரைக்கதையையும் அளந்துபார்க்கும் மனநிலையை எட்டுங்கள் நண்பர்களே என்று நான் சொல்லலாம், அவர்கள் கேட்க வேண்டுமே!

June 23, 2009

சினிமா செய்திகள்

பிரபாகரன் சடலம் கண்டெடுப்பு, ராஜபக்பச சடலம் சல்லடையாகத் துளைப்பு! என்பதாக ஏதேனும் அதிரடி செய்திகள் வந்தாலே தவிர, நாமெல்லாம் விரும்பிப் படிப்பவை சினிமா செய்திகளை மட்டுந்தான். இதனால்தான் செய்தித்தாள்கள்கூட சினிமாவுக்கெனப் பக்கங்கள் ஒதுக்குவதும் தவிர்க்க இயலாததாகிப் போய்விட்டது.

சலூன்களிலாகட்டும், டீக்கடைகளிலாகட்டும், பெட்டிக்கடை பெஞ்சுகளிலாகட்டும், எமது தமிழ் மறவர்கள் இனிதே கூடி விவாதிப்பது நமீதாவின் நடையழகும் நயன்தாராவின் இடையழகும் குறித்துதான் என்று நான் குற்றஞ்சாட்டினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது காலத்தின் கட்டாயம். இவர்கள் இடத்தில் வேறு சிலர் முன்பு இருந்தார்கள். வேறுசிலர் பின்பு வருவார்கள். எவ்வளவு தத்துவார்த்தமான பதில்! பகவத்கீதையை சுருக்கவுருவில் கேட்டது போல இல்லை? ஆனால் இந்தத் தத்துவ போதமெல்லாம் எமக்குக் கிடைத்தது எதனால்? சினிமாவால்! பின்னே ஆளுக்காள் குருக்ஷேத்ரத்திற்குப் போய் நின்றால் பார்த்தசாரதிதான் கடுப்பாகிவிட மாட்டானா! இப்படி சினிமா செய்திகளைப் போட்டு அலசுகிறீர்களே அவற்றை உங்களுக்கு யார் சொன்னார்கள்? அல்லது நீங்களே நேரில் போய் நடிக நடிகையரின் வீட்டுக்குள் நுழைந்து சேகரித்தவையா இவை?

ஆக, சினிமா செய்திகளை உங்கள் பின்மண்டை வரைக்கும் கொண்டு வந்து தருகிற சேவை என்பதாக ஒன்று அவசியப்படுகிறதா இல்லையா? அதற்கென ஊடகங்களின் தேவையும் உள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

இதில் பொதுவாக சினிமா செய்திகளை வெளியிடுவதற்கும் அரசியல் செய்திகளை வெளியிடுவதற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அரசியல் செய்தியில் ஓர் அரசியல்வாதியின் (அவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கட்டும்) அழகிய முகத்தைத் தவிர வேறொன்றையும் மிகைப்படுத்திக் காட்ட முடியாது என்பதனால் வேறு வழியில்லாமல் செய்தியைப் பெரியதாகவும் படத்தைச் சிறியதாகவும் போட்டுத் தொலைய வேண்டிய கட்டாயம் காண்கிறது. ஆனால் சினிமா செய்தி என்றால் அப்படியா? வளைவுகள், நெளிவுகள், பள்ளங்கள், மேடுகள், வசீகரமான புன்னகைகள், காமத்தைப் பிழியும் கரங்கள் என்று பார்ப்பவர் அல்லது படிப்பவரின் உள்ளத்தில் ஆசைத்தேனைக் குடம் குடமாக ஊற்றுவதற்குத்தான் எத்தனை வசதிகள் காண்கின்றன!

இந்த நிலைப்பாட்டை முதன் முதலில் எட்டியது தினத்தந்தி என்பதாகக் கொள்ளலாம். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்குப் பக்கத்திலேயே கவர்ச்சிப்படம் என்று டைட்டில் போட்டு நடிகைகளின் படங்களை வெளியிட்ட சாதனை தந்தியையே சாரும். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த இடத்தில் வெளிவந்த எந்த நடிகையின் படமும் கொஞ்சமும் கவர்ச்சியே இல்லாமல் இடம்பெற்றது என்பதே அவர்களின் தந்திரமும்!

சினிமா என்றால் பெண்ணுடல் மட்டும்தானா? ஆணுடலும்தான்! சினிமாவில் இருக்கும் ஆண்களும் பெண்களும் எப்போது எங்கே சவரம் செய்துகொள்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் தனிப்பட்ட தொடர்புகள் எத்தனை ஆழமானவை என்கிறவரைக்கும் நமக்குத் தெரிந்துகொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாமேகூட பூரணமாக அறிய மாட்டோம். ஏனென்றால் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே செய்திதான்!
ரஜினிகாந்த் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது! இயக்குனர் அமீர் கருத்து!

இது ஒரு செய்தி! எவ்வளவு வசீகரமான கருத்து பாருங்கள். உடனே அமீரிடம் ஒரு பத்திரிகை பேட்டி எடுக்கிறது. ரஜினிகாந்திடம் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது என்று சொன்னீர்களாமே! அது உண்மையா வதந்தியா? அதற்கு அமீர் பதில்: நீங்கள் விசாரிப்பது உண்மைதான்! அவரைப் பார்த்து இப்போது போகிறவர் வருகிறவர் எல்லாம் பஞ்ச் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் பஞ்ச் வசனத்துக்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன்.
இப்போது நீங்கள் ஒரு சினிமா செய்தியைப் படித்துவிட்டீர்கள். இதை ஏற்கனவே ஊடகங்களில் நீங்கள் படித்திருக்கவில்லையானால் இப்போது ஒரு சினிமா செய்தியை எழுதியவனாக என்னையும் ஆக்கிவிட்டீர்கள். அட அமீர் அப்படியா சொன்னார்? என்று உங்களுக்குள் ஒரு வியப்பு மேலிட்டிருக்கும். அதைத் தொடர்ந்து கொஞ்சநேரம் ஓடுகிற சிந்தனைகள் உங்களின் சொந்தப் பிரச்சினைகளிலிருந்து உங்களைச் சற்றுநேரம் சாந்தப்படுத்தியிருக்கும்.
இதேபோல்தான் நானும் இந்த செய்தியைப் படிக்கிறேன். என் புத்தி தெரிந்ததுதானே! அது வழக்கம்போல குறுக்கே ஓடுகிறது. அமீர் உண்மையில் என்னதான் சொல்கிறார்? இது கரிசனையோடு சொல்லப்படுவதுபோலத் தெரிந்தாலும் இதில் கள்ளத்தனமான எண்ணம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே! இவர் சொல்வதைக் கேட்டு ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசமாட்டேன் என்று சொன்னால் அப்புறம் அவர், பேச்சுத்திறன் இல்லாதவராக அல்லவா நடிக்க வேண்டிவரும்! ஏனென்றால் பஞ்ச் வசனம் பேசக்கூடாதென்றால் அப்புறம் ரஜினிகாந்த் வேறென்ன வசனம்தான் பேசமுடியும்?

இது ஏதோ நக்கல்மாதிரி உங்களுக்குத் தெரிகிறதா? அதெல்லாம் ஒரு கிக்கலும் இல்லை. ரஜினிகாந்த்துக்கு சில பல வருடங்களாகவே எவ்விதமான வேடங்கள் கிடைக்கின்றன என்று பாருங்கள்! சவால் விடுவது, சவால் விடப்படுவது, தூண்டப்படுவது, கொதித்தெழுவது என்று பேகிரவுண்ட் ஸ்கோருக்கும், பஞ்ச் வசனத்துக்கும் மட்டுமே வாய்ப்பளிக்கிற வேடங்களையே அவர் தொடர்ந்து தாங்கிவருகிறார். இடையீடாக ஓரிரு காமெடிச் செருகல்களும் தவிர்க்க இயலாதவையே! இப்படியொரு பாத்திரத்தில் நடிக்கிற நடிகர் குழலினிது யாழினிது என்று தொடங்கி ஐந்தரைப்பக்கக் காதல் வசனத்தையா உருப்போட்டுப் பேச முடியும்? நா ஒருதடவ சொன்னா, கொசுதா(ன்) படையா வரும்! பல்லி தனியாதா வரும்! இந்தமாதிரி ஏதாவது சொன்னால்தானே குழந்தைகள் முதல் குதூகலிக்க வாய்ப்பாக இருக்கிறது!

ரஜினிகாந்த்தும் பஞ்ச் வசனமும் இணைந்தது உண்மையில் ஒரு விபத்து என்பதாகவே தோன்றுகிறது. அவருக்கான முதல் பஞ்ச் வசனம், அதுவொரு பஞ்ச் வசனம் என்பதாக அறியப்படாமலே எழுதப்பட்டது. அது, 16 வயதினிலே படத்தில் உச்சரிக்கப்பட்ட, ''இது எப்டி இருக்கு?'' -இதன் இமாலய வெற்றிதான் இன்றைக்கு இயக்குனர் ஷங்கர் படம் பூரா பஞ்ச் வசனம்தான் என்று சொல்கிற அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது. இடையில் ஒரு நிலைப்பாடு இருந்தது. அப்போது ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது பஞ்ச் வசனம் என்பதைப் போன்ற தோற்றம் காணப்பட்டது. விடுதலை படத்தில் ஜூஜூபி என்று அர்த்தமேயில்லாமல் அவர் உச்சரித்த சொல் பஞ்ச் வசனமாகி வெகுபிரபல்யமடைந்தது. இப்போதும்கூட மாறும் சந்ததியின் மொழியைத் திருடி சிவாஜியில் கூல் என்கிறார் ரஜினி! நன்றாகத்தானே இருக்கிறது.

இதனால் நான் அமீருக்கு சொல்வது இதுதான், ''இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்.
கூல் பேபி, கூல்!''

பாருங்கள், ஒரு பத்திரிகையில் வெளிவந்த எட்டு வார்த்தைச் செய்தி எத்தனை எண்ணக் கதவுகளைத் திறந்து விடுகிறது! நான் முன்பே சொன்னமாதிரி, மூலபவுத்திரமோ, பன்றிக் காய்ச்சலோ எனக்கு இருக்குமானால் அதன் உபாதையைக் கொஞ்சநேரம் உணராமல் போகிற அளவுக்கு ஒரு செய்தி எனக்கு ஆறுதல் வழங்கியிருக்கிறது என்பதுதானே உண்மை! இந்தச் செய்திகளால்தான் எத்தனை நன்மை!

திடீரென்று இந்த வாரம் நானோ நீங்களோ லண்டனுக்கோ, பாரீசுக்கோ போய் நிற்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கேயுள்ளவர்கள் கேட்கிறார்கள். சமீபத்தில் உங்கள் நாட்டில் என்ன விசேஷம்? இதற்கு பதில் உங்களாலோ என்னாலோ சொல்லப்படுகிறது, சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய விஷயங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முதலாவது, ரஜினிகாந்த்தின் பஞ்சாயத்து தோற்றது!

இரண்டாவது நயன்தாராவின் காதல் வென்றது! அவ்வளவுதானா? வேறு செய்திகள் இல்லையா? ஏன் இல்லை? சன்டீவி சினிமா தயாரிக்கிறது! அது ஒரு நல்ல செய்தி இல்லையா?
சரி. ஏதாவது அரசியல் செய்திகள்? ஏன் இல்லாமல், தன் மகனை துணை முதல்வராக்கிய வகையில் தமிழகத்தின் பாதுகாப்பை அவர் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையோடு எங்களது முதல்வரும் மூத்த கலைஞருமானவர் அடுத்த படத்துக்கு வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார். இதனால் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதோடு புதிய கலா அனுபவங்களிலும் திளைக்கப்போகிறோம்.

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதன் வாயிலாக சோறும் போட்டு சினிமாவும் காட்டும் ஒரே அரசாங்கம் எங்களுடையதுதான்!

ஏதாவது அரசியல் கிசுகிசு? பிரஜாராஜ்யம் என்று ஒற்றை ஆளாக மேடையில் நின்று பெரும் கூட்டத்தைத் திரட்டிய சிரஞ்சீவி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்ததிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய் வரைக்கும் குலைநடுங்கிப்போய்க் கிடக்கிறார்கள். இதனால் தேர்தல் கமிஷன் மிகுந்த சந்தோஷத்தில் மிதப்பதாகத் தெரிகிறது.
வட்டாரச் செய்திகள்? ஊட்டியில் இயக்குனர் மணிரத்னத்தின் ராவணா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட மூன்று காரவன்கள் பிடிபட்டன. அவற்றில் ஒன்று ஒரே பதிவெண்ணை சென்னையிலிருந்த வேறொரு காரவனோடு பகிர்ந்துகொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு பெரிய துறைகள் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக்கொள்ளாமல் கைகோர்த்திருப்பது தேசத்தின் ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது என்பதாக ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகச் செய்திகள்? அதே மணிரத்னத்தின் திரைக்கதையில் அவருக்கே திருப்தியில்லாததால் திருத்தியமைக்கப்பட்டு படம் ரீ-ஷூட் செய்யப்படுகிற வகையில் இன்னும் ஒரு வருட தாமதம் நேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு வருடத்திற்கு டெக்னீஷியன்கள் முதல் நடிகர்கள் வரைக்கும் எக்ஸ்ட்ரா பணம் தரப்படுமா என்கிற கேள்வி எழுந்த வகையில் இது நியாயமான வர்த்தகம் அல்ல என்று ஒருசிலர் ஒதுங்கிக்கொண்டனர். தற்போதுதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தேறி வந்திருக்கிற அந்த இயக்குனர் இதனால் தளர்ந்துபோய்விடக்கூடாது என்பதாக முண்டக்கண்ணியம்மன் கோவிலில் கூழ் ஊற்றப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்? லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு எனும் சிலம்பரசன் பொதுவாக கிரிக்கெட்டைத்தான் விரும்பி வந்தார். இப்போதோ ரோமில்நடந்த ஃபுட்பால் மேட்ச்சை ஆசையோடு பார்வையிட்டு வந்திருக்கிறார் என்பதனால் அவரது ரசிகர்கள் கிரிக்கெட் விளையாடினால்கூட இனிமேல்ஃபுட்பாலைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதாகத் தெரிகிறது.

உலகச் செய்திகள்? உலக நாயகன் கமலஹாசன் அடுத்த படத்தில் களறிப்பயிற்று ஆசானாக வருவதனால் விரைவில் (அதாவது ஒரே வாரத்தில்) களரிக் கலையை முழுமையாகப் பயில உள்ளார். ஏஞ்சலினா ஜோலி வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க கேட்ட சம்பளம் படத்தை விடவும் பல மடங்கு அதிகம் என்பதனால் ஒரு ஹாலிவுட் நடிகையையே நிராகரிக்கும் அளவுக்கு தமிழ் சினிமா உயர்ந்து நிற்கிறது.

சரி, ஏதாவது சினிமா செய்திகள்? சினிமா செய்தியா? அப்படி தனியாக ஏதாவது இருக்கிறதா என்ன!

சினிமா நாகரிகம்

அடிப்படையில் நாகரிகம் என்பதே இயற்கைக்கு நேரெதிரானதுதான். மனிதனின் வளர்ச்சிநிலையில் ஓர் அங்கமாகவே நாகரிகம் என்பதும் வளர்ந்து வந்திருக்கிறது. கூச்சமும், மதமும், ஆசையும், கர்வமும், திறமையும் மனிதனை நாகரிகத்தை உற்பத்தி செய்ய வைத்திருக்கின்றன. நிகழ்த்துகலைகள் பொதுவாக நாகரிகத்தை பிரதிபலிக்கவே செய்தன. அவை நாகரிகத்தை உருவாக்கியிருக்கவில்லை. ஒரு நாவலில் எழுதப்பட்டதன் வாயிலாகவும் ஒரு நாகரிகம் உருவாகியிருக்கவில்லை. பெரும்பாலான மனங்கள் ஏற்றுக்கொள்கிற ஒரு புதுமையோ ஒரு பழமையோ நாகரிகமாக உருவாகிவிடுகிறது. அதன் சிறு பங்கு உண்மையைப் போலவே நிகழ்த்திக் காட்டப்படும் சினிமாவுக்கும் இருக்கலாம். ஆனால் நாகரிகம் என்பது ஓரளவுக்கு மனிதனுக்குத் தேவைப்படுகிற நன்மைகளை நிகழ்த்தி வந்திருக்கிறது என்றபோதும் பெரும்பாலும் அழிவை நோக்கிய பயணமாகவே இருந்துவருகிறது. இதில் சினிமாவின் பங்களிப்பும் இயல்பானதே.

சிந்து சமவெளி நாகரிகம் போன்றதல்ல சினிமா நாகரிகம். சிந்துவில் மனிதனின் புத்தியும் தேவையும் இணைந்து வீதிகள், சாக்கடைகள், சுடுமண் கலாச்சாரம் என்று ஒரு நாகரிகம் விரிந்ததைப் பாடபுத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். ஆனால் சினிமாவின் நாகரிகம் குறித்து வாசித்தறிய நாம் எங்கே போவது?

அடிப்படையில் சினிமா என்பதை இருவகைப்பட்ட நாகரிக வளர்ச்சியாகக் கருதலாம். தயாரிக்கப்படுமளவில் தனக்கேயுரித்தானதொரு நாகரிகத்தையும், பார்க்கப்படுமளவில் சமுதாயத்தின் மத்தியில் எழும் நாகரித்தையுமே சினிமா கோருகிறது. இது அடிப்படை விளக்கம்.

தயாரிக்கப்படுமளவில் சினிமா எவ்விதமான நாகரிகத்தைக் கைக்கொள்கிறது என்று பார்த்தால், ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல், அதைத் திருடுதல், உழைப்பவர்களுக்கு அன்னமிடுதல், நீதி சொல்லல், நிஜமே போல நிகழ்த்திக் காட்டுவதன் வாயிலாக சொல்ல வருவதை நிறுவுதல் என்று நீள்கிறது பட்டியல்.

பார்வையாளனின் பார்வையில் பார்க்கும்போது, பொழுதுபோக்கல், நாயக விசுவாசம் கொள்ளல், காம குரோத வடிகாலாகக் கொள்ளல், நடையுடை பாவனைகளைப் பின்தொடர்தல், சினிமாவைப் பற்றிய எவ்விதமான அக்கறையும் இல்லாமல், திரையரங்கின் இருளை நம்பி தள்ளிக்கொண்டு போதல் என்று இதற்கும் ஒரு பட்டியல் உண்டு.

முதல் பட்டியலில் உள்ள புகழைத் தொழுதல் எனும் பதமும் இரண்டாம் பட்டியலில் உள்ள நாயக விசுவாசம் எனும் பதமும் எத்தனை மோசமான நாகரிகத்தை சமூகத்தின் மத்தியில் நிகழ்த்திக் காட்டின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அடுக்குத் தமிழில் வசனம் எழுதுவதன் வாயிலாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களும், ரோஜாவண்ண புஜத்தை முறுக்கி, பிழையாளர்களை வன்மையால் திருத்தும் வேடமேற்றவர்களும் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்ற அவலம் உலகிலேயே தமிழ்நாட்டில்தானே முதலில் நிகழ்ந்தது!

கிருஷ்ணபரமாத்மாவாக நடித்தால் தேவுடு, வில்லனாக நடித்தால் கெட்டவன், சிரிப்பு நடிகராக நடித்தால் ஜோக்கர், நாயகியாக நடித்தால் மனைவி, தங்கையாக நடித்தால் சகோதரி, தாயாக நடித்தால் அம்மா என்று பாத்திரங்களை அப்படியே உள்வாங்கிக்கொள்ளவே அறிந்திருந்த இந்த சமூகத்தை சினிமா மிகப் பிழையான நாகரிகத்திற்குள்ளேயே தள்ளிய குற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. நம்பியார் இந்தப் படத்துல நல்லவனா நடிச்சிருக்கான்ப்பா என்று ஆச்சரியப்படுமளவுக்கு மனம் மயங்கிக்கிடப்பவர்களே இங்கே அனேகம். நம்பியாருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் என்று மாற்றிப் போட்டுக்கொள்வதன் வாயிலாக இந்த இயல்பின் நீட்சியைக் கடத்திக்கொண்டு வருகிறோமே தவிர வேறென்ன சாதித்துவிட்டோம்?

இதே மாதிரிதான் சினிமா, சமூகத்துக்கு நீதி சொல்ல முனைவதும். சினிமா எதைச் சொன்னாலும் ஏற்கிற நாகரிகத்தையே எட்டியிருக்கும் சமூகத்தால் சினிமா திரும்பத் திரும்ப தெரிவிக்கும் நல்லவன் வாழ்வான் தீயவன் ஒழிவான் என்கிற பதமும் உள்வாங்கப்பட்டிருக்கத்தானே வேண்டும்!

ஆனால் அப்படி நடக்கவேயில்லையே! பதினாலு கொலை செய்தவன், சினிமாவைப் பார்த்துத்தான் துணிந்தேன் என்று சொன்ன வரலாறு தமிழகத்தில் உண்டு. ஆனால் பரோபகாரம் செய்த ஒரு மனிதன் சினிமாவைப் பார்த்துத்தான் செய்தேன் என்று சொன்ன சம்பவம் இதுவரைக்கும் நிகழ்ந்திருக்கிறதா?

இது எதைக் காட்டுகிறது? சினிமாவில் நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்கிற கருத்து படம் நெடுக்க சொல்லப்படுவதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. படத்தின் க்ளைமாக்ஸில் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒரு செய்கை இது. மற்றபடி படம் பூரா வசதியாகவும், பெண்களின் அணைப்பிலும், பொதிப்பிலும் மிக சுகமாக வாழ்கிறான் வில்லன். நாயகனோ அவலங்களையே எதிர்கொள்பவனாகவும் அதையும் மீறி, கொஞ்சம் காதலையும் பெறுபவனாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறான். அவலம் என்பது பிரச்சினை என்பதாக வேண்டுமானால் சில படங்களில் திருத்தப்பட்டிருக்கலாம். படம் பார்ப்பவனுக்கோ சந்தோஷம் மட்டுமே மண்டைக்குள் நுழைகிறது. இப்படியெல்லாம் இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தையே அவனுக்குள் முகிழ்க்க வைக்கிறது சினிமா. இதனால்தான் அவன் சினிமாவிலிருந்து நீதியை எடுத்துக்கொள்வதேயில்லை. படிப்பறிவில்லாத பெண்டாட்டி புத்தி சொல்ல நேர்ந்தால் அதைத் தூக்கி வீசிவிட்டு சந்தோஷத்தை மட்டும் நீ கொடுத்தால் போதும் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுதலிக்கிற மனோபாவத்தையே பார்வையாளன் எட்டியிருக்கிறான்.

இத்தகைய சூழலில் உண்மையிலேயே வாழ்வை உரித்துக்காட்டும் ஓர் உன்னத சினிமா திடீரென்று வந்துவிட்டாலும் அதில் தான் அனுபவிக்க என்ன இருக்கிறது என்பதையே தேடக்கூடிய மனோநிலையிலேயே பார்வையாளன் இருக்கிறான். அதாவது நல்லது தீயது என்பதாகப் பகுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதுவே தேவையானது என்கிற நிலையையே அவன் எட்டியிருக்கிறான். முழுக்க முழுக்க அவலத்தை மட்டுமே காட்டும் தத்ரூப சினிமாவொன்றை அசல் கலைஞன் என்பதாக ஒருவன் வந்தாலும் எடுத்துக்கொடுக்கத்

துணியாத நிலைப்பாடே இதனால் நேர்ந்திருக்கிறது. தமிழில் நல்ல படங்கள் முனையப்படாததன் அடிப்படைக் காரணம் இதுதான்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் வந்த முதல் பட்டியலில் மிகவும் ஆச்சரியமானதாக நான் கருதுவது அன்னமிடுதல். இதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதே எனது முதல் வியப்பாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் சத்துணவு இடப்படுவதைப்போல வேறெந்தத் தொழில் துறைகளிலும் இல்லாதபடி வேலை செய்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது இங்கே மட்டும்தான். பரோபகாரியானதொரு ப்ரொடியூசர் இவ்விதமாக ஆரம்பித்து வைத்து இன்னும் தொடர்கிறதா? இல்லை, காலையிலிருந்து வேலை நடந்துகொண்டிருக்கும்போது பாதியில் உணவு இடைவேளை என்று ஒன்றை விட்டு அவனவனை வீட்டுக்கு அனுப்பினால் பெண்டாட்டி மோதியதாலோ பேருந்து மோதியதாலோ திரும்ப வராமல் போய்விட்டால் அவன் வேலையை எவன் செய்வது என்கிற கொத்தடிமை மனோபாவத்தாலா? இதைக் கூர்ந்து நோக்கினால் இன்றைக்கு பிபீவோ கலாச்சாரத்திலும் இந்த முறை பின்பற்றப்படுவதன் பின்னணியும் வெட்டென விளங்கும்.

காரணம் எதுவோ, இதன் வாயிலாக சினிமா கண்டேத்திய நாகரிகம் யாதென்றால், சோறு கிடைக்க வேண்டுமானால் ஷூட்டிங்கில் இடம்பெறவேண்டும் என்கிற கொடூரமான நிலைப்பாட்டுக்கு சினிமாவின் சில துறையாளர்கள் தள்ளப்பட்டதுதான். திருப்பதியில் ஆறு மணிநேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தால்தான் அன்னதான டோக்கன் கிடைக்கும் என்பதைப் போன்றதே இது. எவ்வளவோ விஷயம் இருக்க, இதைப்போய் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறாயே என்று நினைக்காதீர்கள். காமராஜர், பள்ளிக்குக் குழந்தைகள் வரவேண்டுமானால் இந்த ஏழைநாட்டில் சோற்றால் அடித்தால்தான் ஆகும் என்று தீர்மானித்ததைப் போலத்தான் ஒரு துறையின் பணியாளர்கள் மிகக் கேவலமாகவும் அதேநேரத்தில் நுட்பமாகவும் அவமானப்படுத்தப்படுகிற செய்கையே இது என்பதே எனது வாதம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு பத்திரிகையாளரோ, டெக்னீஷியனின் நண்பரோ போய் நின்றால் முதலில் கேட்கப்படுவது சாப்பிடுகிறீர்களா என்பதாகத்தான். இது நல்ல குணம்தானே என்று நினைக்க வேண்டாம். நிஜமான சமூகத்தில் உள்ள கரிசனை இந்த அன்னமிடலில் இருக்கிறதா? தமிழக கிராமங்களில் யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிற நாகரிகம் இன்றும் பேணப்பட்டு வருகிறது. இந்த அன்னமிடுதலைவிடவும் மிகுந்த அன்பு நிறைந்த செய்கை அது.

இதனால்தான் சோற்றால் அடிப்பது என்கிற பதத்தை உபயோகிக்கிறேன். இதனால் சினிமா எட்டியுள்ள நாகரிகம் என்ன? நக்கிப்பிழைக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதுதானோ! இதைத் தொடர்ந்துதான் கேரவனுக்கு உள்ளே உட்கார்ந்து சாப்பிடுபவன், வெளியே உட்கார்ந்து சாப்பிடுபவன் என்கிற கலாச்சாரமும் இன்று நிலவுகிறது. இதனாலேயே சினிமா என்பது புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்களைப் பகுக்கும் இனவாத குணத்தைப் பேணிக்காப்பதாகவே இருக்கிறது என்பதே எனது குற்றச்சாட்டு. பல பெரிய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் உலகில் உள்ள அத்தனை மாமிசமும் ஒவ்வொருநாளும் சமைக்கப்படுவதுண்டு. ஆனாலும் நாயகனோ, நாயகியோ தன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் உணவை மட்டுமே உண்ணுகிற சுதந்திரத்தையும் பெற்றிருக்கவே செய்கிறார்கள். ஒருபக்கம் ஆப்பிள் ஜூஸ் அத்திப்பழ ஜூஸ் என்று இம்சை தருகிறார்கள் என்பதைப்போல ரிப்போர்ட்டர்கள் செய்தி வெளியிட்டு வெளியிட்டு இம்மாதிரியானதொரு பார்வை உண்டு என்பதையும்கூட நமது போதத்தில் பொங்கிவிடாதவாறு பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தப் போக்கின் உச்சக்கட்ட ஆட்டமே சமீபத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போனவர்களுக்கு பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கப்பட்டது! சம்பந்தப்பட்டவர் வேறு எம்ப்பியாகிவிட்ட வகையில் எழுதவே பயமாக இருக்கிறது. இருந்தாலும், இவ்விதமாக சினிமா இலவசக் கலாச்சாரத்தைத் தூண்டுவதாகவும் தான் சார்ந்த மொழியினரை பிச்சை எடுக்கத் துணிபவர்களாகவும் மாற்றுகிற அவலத்தைத்தானே கோருகிறது. அரசியல் பிழைப்பார்க்கு அறம் கூற்றென்றால், திரைப்படம் பிழைப்பார்க்கு இதுதானா கூற்று?

சினிமா ஒரு தொழில் என்கிற அடிப்படையிலேயே, 'ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல்' ஆகிய பதங்களெல்லாம் காண்கின்றன என்பதனால் இதைப் பெரிதாகப் பாராட்டுவதன் வாயிலாக நம் நேரத்தை நாம் வீணடித்துக்கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது. கெட்டது நிறைய இருக்குமிடத்து நல்லதும் சில இருந்துதானே தீரும்.

பார்வையாளனைப் பொறுத்தவரைக்கும், சினிமா அவனுக்கு நன்றாக ஆடையுடுத்தக் கற்றுக்கொடுத்தால் அது நல்லதுதானே! சாலையில் எதிர்ப்படுபவர்கள் எல்லாம் நல்ல முறையில் ஆடையுடுத்தி, நவீன ரக வாகனங்களில் பயணம் செய்து, அவர்களுக்கருகாக நாம் நகரும்போது நறுமணம் வீச நடமாடினால் நமக்கும் நல்லதுதானே!

ஒரு சினிமாவைப் பார்ப்பதன் வாயிலாக ஒரு மனிதனின் காம வெறியோ, கொலை வெறியோ தணிந்துபோய் பசித்த சிங்கம் போல அரங்கினுள் நுழைந்தவன், பசுமாட்டைப்போல வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் குடும்பத்தினில் காணும் உயிர்களுக்கும் பாதுகாப்புத்தானே!

என்ன நான் சொல்வது?

June 12, 2009

சமூகத்தை சினிமா சீர்குலைக்கிறதா?

சமுதாயத்தை சீர்குலைக்கிற வேலையை சினிமா வெகுகாலமாகச் செய்து வந்தது உண்மைதான். ஆனால் இப்போதோ அந்தக் குற்றச்சாட்டு செல்லாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் காண்கின்றன. முதலாவது அந்த வேலையை இப்போது செய்துகொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டி. இரண்டாவதும் மிக முக்கியமானதுமான காரணம், சினிமா என்னதான் முனைந்து இன்றைய சமுதாயத்தை சீர்குலைக்கவோ மாற்றவோ முயன்றாலும் முடியாதவாறு சமுதாயம் அதைவிட வேகமாகமாற்றம் அல்லது சீர்குலைவை, தானே முன்வந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான்.

சும்மா திடீரென்று உனக்குத் தமிழ் சினிமா மேல் பாசம் வந்தால் இப்படி ஒரேயடியாக உளறாதே என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் இந்தக் கூற்றுகளை விளக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

பாகவதர் படக்காலங்களில் தொப்புளுக்கு ரெண்டு இன்ச் மேலே கொசுவம் வைத்த பதினாறு கஜ சேலை கட்டிக்கொண்டுதான் பெண்கள் நடித்தார்கள். அப்போது பெண்கள் நடிக்கக் கிடைப்பதே துர்லபமாக இருந்தது என்பதனால் கிடைத்த மூஞ்சிகள்தான் வெல்லம். இந்த லக்ஷணத்தில் கஜத்தையோ இன்ச்சையோ குறைப்பதெல்லாம் சாத்தியமேயில்லாமல் இருந்தது என்பதாகவெல்லாம் வாதாடக்கூடாது. அப்போதைய ஆணின் மனம் பெண்ணை அவ்வாறு பார்ப்பதையே விரும்பியது. இப்போதும் தங்கள் வீட்டுப் பெண்கள் என்றால் மட்டும் இறுக்கமான உடையணிந்து வீதியுலா வரக்கூடாது என்று கண்டிக்க முடிகிறதோ இல்லையோ, மனதிற்குள் அவாவுறும் ஆணுள்ளங்கள்தானே பெரும்பாலும்!

பாகவதர் வீதியில் பாடிக்கொண்டு போகையில் பெண்கள் தெறித்து ஓடுவதைப் பற்றிய விளக்கமொன்றை ஏற்கனவே எழுதியிருந்தேன். அதுகூட சமுதாயத்தை சீர்குலைக்கக்கூடிய வேலை என்பதாக எனக்கு இந்தக் கட்டுரை எழுதும் வேளையில் தோன்றவில்லை. பெண்களின் மனக்கிடக்கையில் சுதந்திரம் குறித்த ஆசை எத்தனை உயரத்துக்குத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதை பள்ளியறைகளிலேனும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அன்றைய ஆண் மனம் இருந்திருக்க முடியாது அல்லவா!

ஏன் இந்த உதாரணத்தில் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் சமுதாயச் சீர்குலைவு என்பது முதலில் பெண்களின் சீர்குலைவு என்பதையே வெகுகாலம் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் கண் காது மூக்கு என்று நவதுவாரமும் திறந்துகொண்டு பிள்ளைகளின் சீர்குலைவே சமுதாயத்தின் சீர்குலைவுக்கான அச்சாணி என்பதை ஆணுள்ளங்கள் கண்டு தெளிந்து வருகின்றன.சினிமா பார்த்தால் பெண்கள் கெட்டுப் போவார்கள் என்பதாக நம்பிய அந்தக்கால சமூகம், அதே சினிமாவில் பெண்களைப் பார்ப்பதையும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விரும்பியது. ஊரில் தெருவில் கரகாட்டம் என்றாலோ, ரெக்கார்ட் டான்ஸ் என்றாலோ வெட்கமில்லாமல் வெகண்டை பேசிக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் கூட்டமாகப் போய் அம்மியது.

பத்திரகாளி படத்தில் ஒரு காட்சி. பிராமணக் குடும்பம். கணவன் ரெகார்ட் டேன்ஸ் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்த மனைவி வீட்டுக் கதவை சாத்திவிட்டு மடிசார் சகிதம் ஒரு ரெகார்ட் டேன்ஸ் ஆடிக் காட்டுகிறாள். போதுமா என்று கேட்கிறாள். அவன் பரம திருப்தி என்று தெரிவிக்கிறான். தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் அவ்வளவுதான் காட்ட முடிந்தது பாவம். இப்போதானால் ஒரு மடிசார் ஸ்ட்ரிப்டீஸ் சகஜமாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் ஆளான தாமர என்று ஷோபனாவை வைத்து மிக ஆச்சாரமான உடை என்பதாக பிராமணர்கள் கருதும் மடிசாரையே கவர்ச்சியுடையாக்கிக் காட்டிய பாக்கியராஜையும் இந்த நேரத்தில் நாம் பெருமிதத்தோடு நினைவுகூரவேண்டியதுதான்.

உண்மையில் தமிழகப் பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது புடவைதான் என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்ட வகையிலேயே தமிழ் சினிமா பல உன்னதமான காட்சிகளை நாசூக்காகத் திணித்து வந்திருக்கிறது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால்கூட கேரளத்தில் முண்டும் ரவிக்கையும் அணிந்த பெண்களை வீதியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கோ, ரோசாப்பூ ரவிக்கை முழுசாகவும் பருத்த முலைகளின் பிதுங்கல் கனிசமாகவும் தெரியக்கூடிய நிலைமை வந்துவிட்டால் அத்தனை விசிலடிச்சான்குஞ்சுகளுக்கும் உறக்கம் போயே போய்விடுகிற நிலைமையே வெகுகாலம் இருந்தது (அந்தக் குஞ்சுகளுக்கு சம்சாரம் என்பதாக வேறு ஒருத்தி இருந்தால் அவளுக்கும் உறக்கம் போயிருக்கும் என்பது வெறும் செயின் ரியாக்ஷன்!).

இப்போதோ கேரளத்திலேயே அவ்விதமான உடையணிய ஒருத்தரும் தயாரில்லை. அந்த உடை சரியானதா தவறானதா என்பதைக்குறித்து ஏஷியா நெட்டில் விவாதித்து விவாதித்து முடித்தே விட்டார்கள். ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்தால் போதும், விவேகமான காமெடியன்கள் வாயிலாக மும்தாஜ் முதல், எனக்குப் பெயர் தெரியாத போலீஸ் இன்ஸ்பெக்டரை கொச்சச்சன் என்று ஆசையோடு விளிக்கிற கும்மென்ற இளம் நடிகை வரைக்கும் கேரள முண்டு கலாச்சாரத்தை தமிழ் நாட்டில் நிறுவிவருகிறார்கள். உண்மையில் அப்படியொரு கனத்த இளம்பெண் அந்த ரவிக்கை உடையோடு இன்றைய சென்னை வீதியில் நடந்துபோனால் என்ன நடக்கும்? டைட்டான ஜீன்சும் தொப்புள் தெரிய இறுக்கமான டீஷர்ட்டும் அணிந்து செல்லும் பெண்களுக்கு மத்தியில் உண்மையான கவர்ச்சியுடை எது என்பது வெட்டென விளங்கும். நானும் எவ்வளவு நேரம்தான் என் எமோஷன கன்ட்ரோல் பண்றது என்று விவேக் கேட்டதுபோலத்தான் ஆகும்!

சினிமா நிகழ்த்தும் சீர்கேடுகளில் மிகவும் நுட்பமானது இந்த வகைதான். ஆனால் இந்த சீர்கேட்டை ஸிங்கிள் விண்டோ கொண்ட சினிமா தயாரித்து, டீவியிடம் விற்றுவிடுவதனாலேயே திரும்பத் திரும்ப சிறாரிலிருந்து பெரியோர் வரைக்கும் அதைப் பார்த்துப் பார்த்து மூளையின் செதில்களைக் காமத்தின் கழிவுகளால் நிரப்பிக்கொள்கிற அவலம் நிகழ்ந்து வருகிறது.

ஒரு மோசமான காட்சியை சினிமா எடுத்துக் கொடுக்கலாம், டீவி காட்டக்கூடாதா என்று கேட்கக்கூடாது. அதனால்தான் ஸிங்கிள் விண்டோ என்கிற பதத்தை உபயோகித்தேன். சினிமாவை காசுகொடுத்து தியேட்டரில் போய்த்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தவரைக்கும்தான் சினிமாவை குற்றஞ்சாட்டலாம். ஏனென்றால் திரும்பத் திரும்ப ஒரு காட்சியைப் பார்க்க விரும்பினால் திரும்பத் திரும்ப முழுப் படத்தையும் பார்த்தாக வேண்டிய சூழல் அதில் உண்டு. முழுப்படத்துக்கான டிக்கெட் கட்டணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமும் அதில் உண்டு. இல்லையானால் ஆப்பரேட்டர் உங்கள் பிரண்டாக இருந்தால்தான் ஆகும். ஆனால் டீவிப்பெட்டி என்பதாக ஒன்றும் அதில் கேபிள் அல்லது டிஷ் இணைப்பு என்பதாக ஒன்றும் இருந்துவிட்டால் போதுமே போதும், வேண்டுமோ வேண்டாமோ, விண்டோ விண்டோவாகத் திறந்து அதே காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். டீவிடி ப்ளேயர் என்பதாக ஒன்று இருந்துவிட்டாலோ இன்னும் விசேஷம்.

இதனால்தான் பிரச்சினை பிலிம் பெட்டியில் இல்லை, டீவிப் பெட்டியில்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டி வருகிறது.

ஆங்கில அல்லது வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் பார்ட்டி உடை என்பதாக ஒரு பதம் உண்டு. சாதாரண பார்ட்டிகளுக்குக்கூட அசாதாரணமான உடையணிந்து செல்வதை ஒரு கலாச்சார நடவடிக்கையாகவே அவர்கள் பயின்று வந்திருக்கிறார்கள். முலைகள் பிதுங்க வயிற்றையும் மார்பையும் இறுக்கிக் கட்டிக்கொள்வது அங்கே மிகச் சாதாரணமான செயல்பாடு. முலைகள் கண் முன் பிதுங்கினாலும் அதைத் தொடுவது நாகரிகமற்ற செய்கை என்பதாக அங்குள்ள ஆண்களின் மனத்தில் சிறுபிராயம் முதலாகவே பதிவு நிகழ்ந்திருக்கிறது என்பதனால் அங்கே இது ஒரு பிரச்சினை இல்லை.

சில வருடங்களுக்கு முன்னால் யூட்யூப்.காமில் பிரபல நடிகை ஒருவரின் க்ளிப் ஒன்றைப் பார்த்தேன். அனேகமாக தமிழ்நாட்டிலுள்ள இணையப் பழக்கமுள்ள அத்தனைபேரும் இதைப் பார்த்திருப்பார்கள். நடிகை ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மைக்குரிய அச்சம் மடம் முதலான அத்தனை பாங்குகளோடும் வெளியேற முனைகிறார். மிகுந்த கண்ணியமான தோற்றமுள்ள; போலீஸ்காரன் போல க்ராப்வெட்டிய இளைஞனொருவன் நடிகையை முன்னாலிருந்து கடக்கிறான். அவன் நடிகையின் முகத்தைக்கூட பார்க்க விரும்பாதவன் போல வேறெங்கோ பார்த்தவனாயிருக்கிறான். ஆனால் அவனது ஒரு கரம் நடிகையின் ஒரு முலையை ஒருகணம் பிசைகிறது.

இவ்வளவு அசிங்கமான ஒரு காட்சியை நீங்கள் சினிமாவில்கூட பார்த்திருக்க முடியாது. இதனால்தான் சமுதாயம் சினிமாவைவிடவும் வேகமாகக் கெட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன்.

சாதாரணமாக கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் இந்தமாதிரி மைனர்கள் நெரிசலைப் பயன்படுத்தி பெண்களின் முலைகளையும் பின்பக்கத்தையும் பிசைவதே நமது பாரம்பரிய கர்மமாக இருந்து வருவதன் நகரமயமாக்கம்தான் பேருந்துப் பிசைவுகள். பெண்ணை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பு அனாதி காலம் தொட்டே இருந்து வருவதுதான் என்றபோதும் ஒரு அரசனுக்குள்ள தைரியம் போல பொது இடங்களில் இவ்விதமாகத் துணிகிற செயல்பாடு எமது தேசத்தின் கறுப்புப் பக்கம். என் நண்பனொருத்தன் மிக ஆகிருதியாக இருப்பான். ஒருமுறை அவனோடு ரயில் நிலையத்துக்குப் போயிருந்தேன். அப்போதுதான் வந்த ரயிலிலிருந்து இறங்கிய கூட்டம் தூக்கக் கலக்கமும் களைப்புமாக வேகவேகமாக ஒற்றை வாசலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரில் செல்கிறோம். நண்பன் இரண்டு கைகளையும் ராஜராஜசோழன் மாதிரி இடுப்பில் வைத்துக்கொண்டான். எதிர்ப்படும் பெண்களின் முலைகளில் தன் முழங்கையால் மோதிக்கொண்டே வந்தான். நான் பத்தடி பின்தங்கிவிட்டேன். அடி வாங்க தைரியம் இல்லை. ஆனால் அவனது ஆகிருதியோ அவர்களது அவசரமோ, ஒருத்தரும் சண்டைக்கு வரவில்லை. முடிவில் இது சரியா என்று நான் கேட்டபோது அவன் சொன்னதுதான் ஆச்சரியமூட்டும் பதில். அவன் சொன்னான்,

இது அவங்களுக்குப் புடிக்கும்.

அவர்கள் எப்போது இவனிடம் வந்து இப்படிச் சொன்னார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன்னொரு நண்பன் உண்டு. அவன் திரையரங்கில் திரையில் மட்டும்தான் சினிமா ஓடுகிறது என்பதில் நம்மைப்போல் நம்பிக்கை இல்லாதவன். இந்தமாதிரியான மனோபாவங்களே சமூகம் முன்னே செல்லாமல் தேங்க வைப்பவை. இந்த மனோபாவத்தை ஜீன்கள் வழங்குகின்றன அல்லது சமூக அழுத்தங்கள் நிகழ்த்துகின்றன. மற்றபடி சினிமா என்பது வெறும் நிழல்தான்.

இணையத்தின் இருட்டுப் பக்கங்கள், பப், டிஸ்கோதே, பிபீவோ கலாச்சாரம் ஆகியவையெல்லாம் சினிமாவிலிருந்து வந்தவை அல்ல. சமூகத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைபவை. எந்தக் காலத்திலும் தமிழ் சினிமாவின் பிழை மிகைப்படுத்தல்தான் என்பதுதான் அதன் தவறு. முன்பெல்லாம் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் வில்லன்களை மையமாக வைத்தே காட்டப்பட்டன. இப்போதோ தலைகீழாக மாறிவிட்டது. ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தில் ரோஜாவும் ரஜினியும் இணைந்து வெத்தலை என்று வருகிற பாடலொன்றில் அசிங்கமான அங்க அசைவுகளோடு ஆடியதைப் பார்த்து ஒருவிதமான கலாச்சாரக் கலவரத்தில் விழுந்தேன். அந்தப் படத்துக்குப் பின்தான் ரஜினி படங்களில் கதாநாயகிகளின் கவர்ச்சி என்கிற அஸ்திரம் கையாளப்பட்டது. ரஜினிகாந்த் மாதிரி ஒரு ஸ்டாருக்கு இது தேவையா என்று ஆச்சரியமாக இருந்தது. ரஜினியைக் காலத்தோடு இணைந்து செயல்பட வைக்கிறார்களா, அல்லது வெறும் நடிகனின் புகழை மட்டும் நம்பினால் படம் ஓடாது என்று நினைக்கிறார்களா? சுரேஷ்கிருஷ்ணாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சினிமாவை வெறும் வியாபாரமாகப் பார்க்கிற போக்கின் அவலம் இது. அவர்களைப் பொறுத்தவரை சினிமா ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் அதன் பின்னால் பெரும் உழைப்பும் பணமும் கொட்டிக்கிடக்கிறது.

டீவிப் பெட்டிக்கோ கிடைத்ததெல்லாம் அவல்தான். திரும்பத் திரும்ப மென்றுகொண்டே இருக்கத் தோதாக சினிமா எதைக் கொடுத்தாலும் அதை பகாசூரன் போல விழுங்கிக்கொள்ள அது தயாராக இருக்கிறது.

கள்ளத்தனமான சமூக மனமோ தமிழ் சினிமா ரொம்பவும் பரிதாபத்துக்குரியது, அதனால் இவ்வளவுதான் காட்ட முடியும் என்று உள்ளூர நகைத்துக் கொண்டேயிருக்கிறது.

எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!

சினிமா ஒரு பரிசோதனைக்கூடமா அல்லது அப்படியெந்த அவசியமும் சினிமாவுக்கு இல்லையா என்கிற கேள்வியே இதில் மிகவும் பிரதானமானது. இங்கே பரிசோதனை என்பது எது என்பதை சற்று எளிமையாக விளக்க முயன்றால், அரைத்த மாவையே அரைப்பது என்பதற்கு நேரெதிரான பதம்தான் இந்த 'பரிசோதனை முயற்சிகள்'என்கிற சொல்லாடல் என்கிற நிலையை எட்டலாம்.

தமிழில் ஏதாவது பரிசோதனை முயற்சிகள் நிகழ்ந்துள்ளனவா என்பதே இதில் ஆதாரமான கேள்வி! எஸ்ஸஸ்வாசனின் அவ்வையார் தமிழின் முதல் மிக பிரமாண்டமான படம். யானைகள் கோட்டை கொத்தளங்களை மோதி உடைக்கும் காட்சிகள் வரைக்கும் பல காட்சிகள் ஸ்டாக் காட்சிகளின் துணையில்லாமல் அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்டன. அவ்வையார் ஒரு பரிசோதனை முயற்சியா? பார்க்கலாம்.

எவ்வித முன்யோசனையும் இல்லாமல் அவ்வையார் என்கிற தமிழ்ப் பெண்கவியின் வாழ்வில் நிகழ்ந்ததாக நம்பப்பட்ட அல்லது புனையப்பட்ட காட்சிகளின் அடுக்குகளை இஷ்டத்துக்கு சுட்டுத்தள்ளிய படம். அதாவது படம் தயாரிக்கப்பட்டபோது அதற்கென்று ஸ்க்ரீன்ப்ளே என்பதாகவெல்லாம் எதுவும் இல்லை. இதில் புனையப்பட என்கிற பதம் வேறு ஏன் வருகிறது என்று கேட்டால் அவ்வையாரின் வாழ்வில் நிகழ்ந்ததாக நம் சினிமாக்கள் காட்டிய காட்சிகளின் லக்ஷணத்தைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு சாம்ப்பிள் போதும் என்று நினைக்கிறேன், பூலோகத்தில் வசித்த அவ்வையார் திடீரென்று தேவலோகத்துக்கே நாட்டாமை போல கைலாயத்துக்கே சென்று ஈசனின் இடது தொடையில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் குமரனுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்துவிடுவார் என்கிற புனைவை பின்னே வேறு என்னவென்று சொல்வது? அவ்வையார் என்ன பெண்பால் நாரதரா? திரிலோக சஞ்சாரம் செய்துகொண்டிருப்பதற்கு? அல்லது நாரதர் வைணவர்களின் ஆசாமி என்பதால் சைவர்களுக்கு இவ்விதமானதோர் அம்மையாரின் தேவை நேர்ந்தது என்பதாகக் கொள்ளலாமா? இந்த மாதிரி மீயதார்த்தக் காட்சிகளெல்லாம் நம்மாட்களின் சாதனைகள் என்பதாகத்தான் நமக்குள் நகைத்துக்கொள்ள வேண்டும்!

அவ்வையார் பிரமாண்டப் படங்களின் தோற்றுவாயாக இருந்தது உண்மைதான். பிற்பாடு சந்திரலேகா முதலான படங்கள் இதை அடியொட்டியே பிரமாண்டமாக எடுக்கப்பட்டன. ஆனால் பிரமாண்டமாக முயலப்பட்ட முதல் படங்கள் என்பதனால் இவை பரிசோதனை முயற்சிகளாக ஆகிவிடுமா?

முதற்கண் பரிசோதனை முயற்சி என்பதே சினிமா ஒரு கலை என்பதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதுதான். பரிசோதனைகள் ஆய்வுக்கூடங்களுக்கு மட்டுமல்ல கலைத்துறைக்கும் மிகவும் பொருந்துபவைதான் என்பதைத்தான் நம்மாட்கள் ஒருபோதும் மனதில் போட்டு அலட்டிக்கொள்வதேயில்லையே!

இந்த வழியில் தமிழின் இன்னொரு முக்கியமான பரிசோதனைப் படம் நவராத்திரி. சிவாஜி என்பதாக ஒரு நடிகன் எத்தனை பாத்திரம் கொடுத்தாலும் தாங்கறான்டா, ரொம்ப நல்லவன்டா என்பது மாதிரியான நம்பிக்கையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஒரே ஆள் ஒன்பது பாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்பதே இப்படத்தின் பரிசோதனை முயற்சி. மிகப்பெரிய சாதனையான இதை முறியடிக்க இரண்டு பேர் முயன்றார்கள் ஒருவர் எம்ஜியார் மற்றவர் கமலஹாசன். ஆனால் முந்தைய சாதனையை இவர்கள் இருவரும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. ஏனென்றால் எம்ஜியார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நீ ஒன்பது பாத்திரங்களில்தானே நடித்தாய், நான் ஒன்பது கதாநாயகிகளோடு நடிக்கிறேன் பார் என்று நவரத்தினம் என்று ஒரு அசத்தலான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார். கமலஹாசனோ மேக்கப் மற்றும் கிராஃபிக்ஸ் என்று பலவிதமான லேயர்களை நம்பியே பாத்திரங்களை ஏற்றார். என்னவொரு கலைநுணுக்கம் பாருங்கள்!அதேபோல் தமிழின் இன்னொரு மிக ஆச்சரியமான பரிசோதனை முயற்சி ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம். இந்தக் கதைவிவாதத்தில் அடிப்படையில் ஓர் எழுத்தாளரான சுஜாதாவும் இருந்த வகையில் அந்த விவாத லூட்டிகள் சிலவற்றை அவர் அந்தப் படம் குறித்த தொடர் ஒன்றில் எழுதினார். படம், தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம் தயாரிக்கும் முயற்சியே தவிர வேறில்லை. டிஸ்கஷன் இவ்வாறு இருக்கிறது, வறண்ட பிரதேசம். ஒரு வேலி மட்டும் முடிவில்லாமல் நீண்டு கிடக்கிறது. அதில் ஒரு இரும்பு கேட். அருகில் ஓர் அழுக்கான போர்ட். அதில் அன்னியர் உள்ளே பிரவேசிக்கக்கூடாது என்பதாக வாசகம். அந்த போர்டின் மீது ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது, என்று சுஜாதா ஸ்க்ரீன்ப்ளே எழுதுகிறார். அது எந்த வகைப் பறவையோ அதையே அங்கே உட்கார வைப்பதாக இயக்குனர் ராஜசேகர் உறுதி கூறுகிறார். அடுத்தபடியாக கமலஹாசன் சொல்கிறார், இந்தப் படத்தில் கண்டிப்பாக ஒரு கார் ஆற்றில் விழ வேண்டும் என்று! ஆமாம் ஸ்கை டைவிங்கூட வேண்டும் என்பதாக அடுத்த கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்கப்புறம்தான் சலாமியா, ஆங்கோர் இளவரசி, ஜெய்ப்பூர் எலிக்கோவிலை வேறுதேச மாளிகையாகக் காட்டலாம், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மட்டுமல்ல, ப்ரூஸ்லீ படங்களிலிருந்தும் காட்சிகள் சுடலாம் என்பதாகவெல்லாம் சுஜாதா வெளியிடாத தகவல்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

இதன் உச்சக்கட்டமாக, இந்தப் படம் ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக சுஜாதாவால் எழுதப்படுகிறது. அதில் சுஜாதா ஒரு வசனம் எழுதுகிறார். கம்ப்யூட்டர் நிபுணியான நாயகி, நாயகனிடம் ஆண்கள் செய்கிற எந்தக் காரியத்தையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பதாக சவால் விடுகிறாள். பெண்டாட்டி செத்துப்போன துக்கத்தில் விரக்தியின் விளிம்பில் காணும் ஸ்வாஸ்நெகரின் கமாண்டோ ரக நாயகன் அவளிடம் கேட்கிறான், நாங்கள் சுவரில் ஒன்னுக்கு அடிப்போம், உங்களால் முடியுமா? என்று. படத்தில் இந்த வசனம் இவ்விதமாக இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, புழுக்கமாக இருந்தால் நான் சட்டையை அவிழ்த்துவிட்டு வாக்கிங் போவேன். நீ போவாயா? என்று அது மாற்றப்படுகிறது.

தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம், போர்டில் ஒரு குறிப்பிட்ட வகைக் குருவி, ஆற்றுக்குள் வீழும் கார், ஸ்கை டைவிங், மூத்திரம், ஆத்திரம் என்று எத்தனை எத்தனை பரிசோதனைகள் இந்தப் படத்தில் முயலப்படுகின்றன பாருங்கள்! இதெல்லாம் உங்களால் ஆகுமா, என்னால் ஆகுமா? தமிழன்னைக்குத்தான் எத்தனை பூரிப்பு!

இதேமாதிரிதான் பாலச்சந்தர் ஒரு சோதனை முயற்சியில் ஈடுபடுகிறார். அதுகாறும் சீரியசான நாயகனாகவே நடித்து வந்த ரஜினிகாந்த்தை காமடி நடிகராக நடிக்க வைத்தால் என்ன என்று! அதற்கென்று சொந்தமாக ஸ்க்ரிப்ட் எதையும் முயலாமல் ஹிந்தியில் அமோல் பலேகர் நடித்து வெளியாகியிருந்த கோல்மால் என்கிற படத்தை அப்படியே தமிழில் எடுக்கிறார். இந்த சோதனை முயற்சி பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதாவது ரஜினிக்கு காமெடி பிரமாதமாக வருகிறது என்பது இதன்வாயிலாக மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. இதற்கு பல வருடங்கள் கழித்தே ராஜசேகர் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் காமெடி கலந்த பாத்திரத்தில் ரஜினியைக் கொண்டுவருகிறார். இதைத் தொடர்ந்தே ரஜினி என்றால் கண்டிப்பாக காமெடி பண்ணித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டை அவருக்கான கதாசிரியர்கள் எட்டுகிறார்கள். இந்தச் சூழலில் காமெடியே பண்ணாத ரஜினியை ஏன் திரும்பவும் முயலக்கூடாது என்று சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா என்று ஒரு பரிசோதனை முயற்சி செய்து வெற்றி காண்கிறார்.

தமிழின் இன்னொரு மிக முக்கியமான பரிசோதனை முயற்சி விஜயடீராஜேந்தர் செய்தது. ஒரே ஆள் ஒன்பது வேடத்தில் நடிக்க முடியுமானால் ஒரே ஆள் ஒரு படத்தில் ஒன்பது வேலைகளை ஏன் செய்ய முடியாது என்கிற கேள்வியை அவர் பார்வையாளனை நோக்கி வீசுகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என்று சகலவிதமான பணிகளையும் அவரே செய்து அசத்துகிறார். தாடியை எடுக்க விருப்பமில்லாததால்தான் அவரது பரிசோதனைகள் நீள்கின்றன. சோ ஒருமுறை சொன்னார். உனக்கு எது தெரியாதோ அதில்தான் நீ பெரிய ஆளாக முடியும் என்று. அது இப்போது ஞாபகம் வருவதற்கும் விடிஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவரது அடுத்த அவதாரமாக வருகிறார் எஸ்ஜேசூர்யா! ஆறு வயது பாலகன் வாலிபன் போன்ற தோற்றத்தை அடைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவர் யோசிக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒற்றுமை உண்டு. அடிப்படையில் தங்களை அவர்கள் இயக்குனர்கள் என்பதாக நம்புவதனாலோ என்னவோ, தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், கோர்ட்டில் யுவர்ஆனர் என்று அவ்வப்போது ஜட்ஜைப் பார்த்துக்கொள்ளும் வக்கீல் போல இவர்கள் தவறாமல் கேமராவைப் பார்ப்பார்கள். தங்கள் பரிசோதனை சரியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்கிற ஐயப்பாடோ ஏதோ!

தமிழில் பரிசோதனை முயற்சி என்று ஆரம்பித்துவிட்டு இந்தமாதிரி ரகளை பண்ணிக்கொண்டிருக்கிறாயே என்று உங்கள் ஆன்மா இப்போது ஒரு கேள்வி கேட்குமானால் நான் இதோடு இந்தப் பட்டியலை நிறுத்திக்கொள்கிறேன். என்ன செய்வது? எம் மொழியில் இவைதான் பரிசோதனைகள்!

பாடலே இல்லாத படம் என்பதுகூட ஆபத்தானதொரு பரிசோதனை என்பதாகவே எமது மொழியில் காண்கிறது. ஙே என்று இருக்கும் உதவி இயக்குனரை ஹீரோவாக்கலாம் என்று யோசிப்பதுகூட ஒரு பரிசோதனைதான் எமது இயக்குனர்களுக்கு! பாவாடையின் உயரத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பதாகக்கூட இங்கே பரிசோதனைகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. கவர்ச்சி நடிகையை கண்ணியமான அண்ணியாக நடிக்க வைப்பதோ மிகப்பெரிய பரிசோதனையாகப் புகழப்படுகிறது. இப்படித்தான் கமலஹாசன்கூட மைக்கேல் மதனகாமராசன் படத்தில் மலையாள ஜெயபாரதியை அம்மாவாக நடிக்க வைத்து ஒரு பரிசோதனை செய்து பார்த்தார். பயங்கரமான ஃபெய்லியராக அது முடிந்துவிட்டது. ஏனென்றால் பார்வையாளனுக்கு ஜெயபாரதியை அம்மா வேஷத்தில் பார்த்தால்கூட ஆசையாகத்தான் இருக்கிறது. அவரது வாளிப்பான உடலமைப்பு அத்தனை அலாதியானது. இதனால்தான் அவர் பிற்பாடு வந்த எந்தத் தமிழ்ப்படத்திலும் அம்மாவாக அகப்படவேயில்லை.

பரிசோதனை என்றால் உண்மையில் என்ன? இந்தத் தொடரில் முன்பே ஒருமுறை சொன்னதுபோல எம்மெஃப் உசேனின் கஜகாமினி ஒரு பரிசோதனை முயற்சி. கன்னடத்தில் கிரீஷ் கார்னாட்டின் நாகமண்டலம் ஒரு பரிசோதனை முயற்சி.

கிராமப்புற பழமரபுக்கதையிலிருந்து உருவான நாகமண்டலம் மிக ஆச்சரியமான பரிசோதனை. திருமணம் செய்து கொண்டு வந்த பெண்ணை வீட்டிலேயே அடைத்து வைக்கிறான் கணவன். அவள் நாக தெய்வத்தை வேண்டுகிறாள். நாகமோ அவளது கணவனது ரூபத்தை எடுத்து அவளை ஆட்கொள்கிறது என்று போகிறது கதை. இந்தமாதிரி நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்தனையெத்தனை கதைகள் காண்கின்றன! புதிதாக ஒன்றை யோசிக்க வேண்டாம். இருக்கிற பொக்கிஷத்திலிருந்து ஒன்றை எடுக்கக்கூடவா தெரியவில்லை உங்களுக்கு? அடப்பாவிகளா.

மலையாள இயக்குனர்களில் நான் பெரிதும் மதிக்கும் பத்மராஜனின் கடைசிப்படம் ‘ஞான் கந்தர்வன்’. நான் கந்தர்வன் என்பது அர்த்தம். கந்தர்வர்கள் குறித்த புராண நம்பிக்கையிலிருந்து இந்தப் படத்தை அவர் எழுதுகிறார். கந்தர்வர்கள் கல்யாணமாகாத கன்னிப் பெண்களை மயக்கி முயங்கிவிட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பது பாட்டிகள் பேத்திகளுக்குச் சொல்லும் பொதுவான எச்சரிக்கைக் கதை. கன்னிப்பெண்கள் தனியாக இருக்கக்கூடாது. இரவில் வெளியே போகக்கூடாது என்பதாகவெல்லாம் கந்தவர்களைக் காட்டியே எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த மாதிரி கதைகள் கேட்டு வாழும் ஒரு தற்கால இளம்பெண்ணின் வாழ்வில் கந்தர்வன் நுழைகிறான். அவளைக் காதலித்து அவளைப் புணர்ந்துவிட்டு சென்றுவிடுகிறான். இவ்வாறு நிகழ்ந்ததெல்லாம் அந்தப்பெண்களுக்கு அப்புறம் நினைவிராது என்பதே பாட்டி கதையின் சூத்திரமும்.

உண்மையில் கந்தர்வர்கள் என்றால் யார்? கந்தர்வர்கள் தேவலோகத்தின் அடிமைகள். இசை நாட்டியம் என்று தேவர்களை மகிழ்விப்பதே அவர்களின் வேலை. தேவர்களுக்கு எதிராக இவர்கள் ஏதேனும் செய்ய முற்பட்டால் இவர்கள் சபிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுவார்கள். சாபம் விமோசனமாகவேண்டுமானால் அவர்கள் ஒரு பூலோகத்துக் கன்னிப் பெண்ணை மயக்கி வசப்படுத்தவேண்டும். இது கந்தர்வனின் பிரச்சினை. இந்தப் படத்தில் கந்தர்வன் வேடத்துக்கு பத்மராஜன் தேர்ந்தெடுத்தது, தூர்தர்ஷனில் வந்த மகாபாரதத்தில் கிருஷ்ணனாக வந்த நிதீஷ் பரத்வாஜை!

நவயுகத்தில் கந்தர்வனின் விசிட் எவ்விதமாக இருக்கும் என்கிற அவரது கற்பனைமிக நுட்பமான ஒரு பரிசோதனை. அந்த மாதிரி மேதைகளை எமது மொழியில் எங்கேபோய்த் தேட?