November 01, 2004

'ஜெயமோகன் மரணம்'

திரிகூட ஞாபகம் 2


'இசக்கிப்பிடி'யில், நான்தான் இசக்கி என்று தோளைத் தொட்ட உருவம் பற்றி எழுதியிருப்பதை நண்பரொருவர், too much rum? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். குடியில் ஒருபோதும் hallucination வருவதில்லை. அதற்கு வேறு அம்சங்கள் பாரில் உண்டு (Bar அல்ல, பார்: உலகம், வையகம், பூமி). மேலும் சந்தேகம் இருப்பவர்கள் விரைவில் வெளிவரவிருக்கும் 'காக்டெய்ல்' என்று திருநாமமிடப்பட்ட எனது நாவலை அணுகுங்கள்.

தோளைத் தொட்ட அந்த உருவம் கட்டை குட்டையாக இருந்தது. அது ஒரு ஆண். குறுக்கில் ஒரு வேட்டி, எல்லா பொத்தான்களுமிட்ட சட்டை. ஆனால் கை மடிக்கப்பட்டு சற்று புஜம் வெளித்தெரியும்படியாக, சாதாரணமாக தமிழ் நடிகர் கமலஹாசன் செய்வதுபோல முகத்தைவிடவும் புஜத்தை அதிகம் காட்டிக்கொண்டு திரிபவனாக அவன் காணப்பட்டான். அதற்குக் காரணம் அவனது தொழில். அவன் என்னிடம் குறிப்பிட்டது இதைத்தான், அதன்படி இந்தப் பரந்து விரிந்த தமிழ்மண்ணில் அவன் கையால் மஸாஜ் செய்யப்படாத இரண்டே இரண்டு விஐபிக்கள்தான் உண்டு. ஒன்று எம்ஜியார். இரண்டாவது, - உங்களுக்கே தெரிந்திருக்கும் - நான்தான்.

எம்ஜியாரோ இப்போது உயிரோடு இல்லை. அவரது சமாதியைத்தான் தொட்டுப் பார்க்க முடியும். சமாதிக்கு மஸாஜ் செய்வதோ சாத்தியமில்லாத வி்ஷயம். ஆனால் நானோ இன்னும் இறந்துபோகவில்லை. 'சுதேசமித்திரன் மரணம்' என்கிற செய்தியை வெளியிட இன்னும் பிரபல பத்திரிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் எனக்கு மஸாஜ் செய்துவிட தான் விரும்புவதாகவும் இசக்கி என்று திருநாமமிடப்பட்ட அந்த மஸாஜ் கலைஞன் என்னிடம் தெரிவித்தான்.

என் தோளை அவன் அவ்வளவு அழுத்தமாக இசக்கிப்படியாகப் பிடித்ததற்கான காரணம் எனக்கு அப்போது விளங்கிவிட்டது. ஆகவே அவனிடம் நான் சொன்னேன், ''என்னதான் நான் பெரிய விஐபியாக இருந்தாலும் என்னைவிடவும் பெரிய விஐபி ஒருவர் உண்டு. அவர் இன்று காலை இங்கே வந்து சேரவிருக்கிறார். எம்ஜியாரைப்போல இல்லாமல் அவர் இன்னும் மரணம் அடையவில்லை. ஆகவே, நீ முதலில் உன் புஜபராக்கிரமத்தை அவரிடம் காட்டிவிட்டு அப்புறம் என்னிடம் வந்தால் போதுமானது''.

அவர் யார் என்று அறிய இசக்கி விரும்பியதால் நான் சொன்னேன், ''அவர் ஒரு கான்ட்ரோவர்்ஷியல் எழுத்தாளர். அவரது பெயர் ஜெயமோகன்''.

ஜெயமோகன் எங்கள் பயணத்திட்டத்தில் நேராக குற்றாலத்திற்கே வந்து சேர்ந்துகொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. ஜெயமோகனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவரும் வாசகர்களில் நானும் ஒருவன். அவரைப்பற்றிய சிற்றிதழ் மற்றும் பேரிதழ் அவதூறுகள் மற்றும் துதிபாடல்கள் அனைத்தையும் ஓரளவுக்கு நானும் அறிவேன். ஜெயமோகனைப் போலவே எழுத்தாளர் சாருநிவேதிதாவும் நான் விரும்பும் எழுத்தாளர்களில் ஒருவர் என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ளதாகக் கருதப்படும் கருத்து வேறுபாடு குறித்தெல்லாம் நான் செவ்வனே அறிந்து வந்திருக்கிறேன். சாருவோடு அதிகம் பழகிய வகையில் ஜெயமோகனைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி சாருவின் கோபத்தைச் சம்பாதித்த அனுபவமும் உண்டு. ஆனால் ஜெயமோகனோடு எனக்கு ஒரே முறைதான் நேரடிப் பரிச்சயம் இருந்தது என்பதால் சாருவைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்ல அதுவரை வாய்ப்பு இல்லாது போயிருந்தது.

ஜெயமோகனை நான் முதன்முதலில் சந்தித்தபோது அவரது 'விஷ்ணுபுரம்' அச்சில் இருந்தது. அவரது 'ரப்பர்' நான் மிகவும் நேசிக்கும் ஒரு நாவல். அது ஒரு மலையாளப்படத்தின் மறுவார்ப்பு என்பதாகப் பின்னாளில் வெளிவந்த செய்தி குறித்து எனக்கு எந்த நிச்சயமுமில்லை. ஆனால் நான் ஜெயனை (நண்பர்கள் அழைக்கும் பெயர்) முதன் முதலாக சந்தித்தபோது அந்த சர்ச்சை குறித்து அறிந்திருக்கவில்லை. அப்போது ரப்பரைத் தொடர்ந்து ஜெயனின் 'நாவல்' என்ற கையேடு ஒன்று வெளிவந்திருந்தது. அதில் அவர் தமிழில் இதுவரை எழுதப்பட்ட எதுவும் நாவலே அல்ல என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இது எல்லாம் பழைய சங்கதிகள் என்பதால் உங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் எதிர்பார்த்ததுபோலவே அது எனக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பேதுமில்லை. ரப்பருக்கு முன்னால் எழுதப்பட்ட பல நாவல்களையும் வாசித்த அனுபவமுள்ள எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் தமிழில் ஜெயமோகனுக்கு முந்தையவர்கள் யாரும் இவ்வளவு துணிச்சலாக அறிக்கை விட்டிருப்பதாய் நான் அறிந்திருக்கவில்லை. அதனால் ஜெயமோகனின் தோற்றம் குறித்த ஒருவித பிம்பம் எனக்குள் எழ ஆரம்பித்திருந்தது.

மெட்ராஸில் செந்தூரம் ஜெயதீ்ஷின் புரசைவாக்கம் கடையில் வைத்து ஜெயனை நான் முதன்முதலில் சந்தித்தேன். டெளடன் முனையில் பேப்பர் மில்ஸ்ரோடுக்குப் போகும் திருப்பத்தில் இருந்த டீக்கடை வாசலில் நின்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ''ஜேஜே சில குறிப்புகள் நாவலில்லையா?'' என்று நான் ஜெயனைக் கேட்டேன். ''இல்லை!'' என்று அவர் சொன்னார். எனக்கு ஆச்சர்யம். ''புளியமரத்தின் கதை?'' ''இல்லை!'' ''தலைமுறைகள்? பள்ளிகொண்டபுரம்? தேரோடும் வீதி?'' ''இல்லை!'' ''மோகமுள்? நளபாகம்?'' ''இல்லை!'' ''ரப்பர்?'' ''இல்லை!'' எனக்கு ஆச்சர்யம் உச்சத்திற்குப் போய்விட்டது. தான் எழுதிய நாவலான ரப்பரையே நாவலல்ல என்று குறிப்பிடும் மனிதனை வியக்காமல் இருக்க முடியுமா நீங்களே சொல்லுங்கள். நான் கேட்டேன், ''அப்ப எதுதான் நாவல்?'' ஜெயன் சென்னார், ''விஷ்ணுபுரம்!''

எனக்குள் எழுந்துகொண்டிருந்த ஜெயனைப்பற்றிய பிம்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. இந்த ஆசாமி ஒரு ஸ்டண்ட் பிரியர் என்பதாக உடனடியாக நான் முடிவு செய்துவிட்டிருந்தேன். அதோடு ஆசாமி பெரிய புத்திசாலியும்கூட என்பதையும் நான் உணராமல் இருக்கவில்லை. எதிர்காலத்தில் இதேவிதமான அனுபவம் நேர்ந்த பலரும் ஒன்றுகூடி ஜெயமோகன் ஒரு 'லாபியிஸ்ட்' என்பதாக ஒரு முத்திரை குத்தியபோது நானும் அந்தப் பட்டியலில் ஒருவனாக மனதார என்னை உணர்ந்துவைத்திருந்தேன்.

விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அதை வாங்கிப் படிக்கும் உத்வேகத்தை நான் இதன் வாயிலாகவே அடைந்தேன் என்பது உண்மைதான். திரும்பவும் வெற்றி ஜெயனுக்குத்தான். (J என்கிற எழுத்துக்கே தமிழ்நாட்டில் நல்ல உரம் இருக்கிறது கவனித்தீர்களா? நான்கூட ஜெகன்மித்திரன் அல்லது ஜெயமித்திரன் அல்லது ஜுதேசமித்திரன் என்பதாக மாற்றிக்கொண்டால் நல்ல பலன் வந்து சேராது? நான் பரிந்துரை செய்யும் வேறு பெயர்கள்: ஜுந்தர ராமசாமி, ஜாரு நிவேதிதா, ஜமேஷ்:ப்ரேம், எஸ். ஜாமகிருஷ்ணன்...) விஷ்ணுபுரம் எனது ஏற்கனவே இருந்த மனப்பாட்டில் ஒரு நல்ல மர்ம நாவலைப்போல என்னை வசீகரித்திருந்தது. இரண்டாவது பாகம் தவிர்த்து அது ஒரு நல்ல மர்ம நாவலின் தன்மையை ஒத்திருந்தது என்பதோடு 'பொன்னியின் செல்வன்' போல விறுவிறுப்பான நாவல் அது என்பதாக நான் உணர்ந்தேன்.

இரண்டாவது முறை நான் ஜெயனைப் பார்த்தது கோவையில். அதுவும் ஒரு டீக்கடை வாசல்தான். ஹோட்டல் அலங்கார் அருகில் உள்ள டீக்கடை வாசலில் நானும் நண்பனும் நின்று டீ அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டு உருவங்கள் வேகமாக நடந்து வருவதைப் பார்த்தோம். அவர்களில் ஒரு உருவம் ஜெயன். ஜெயன் என்னை அடையாளம் தெரிந்துகொள்ள நியாயமில்லை என்றபோதும் என்னைப் பார்த்துவிடக்கூடாதே என்று நான் சற்று பதற்றமடைந்தேன். நான் ஜெயனை சந்திப்பதை முற்றிலும் வெறுத்தேன். தமிழின் ஒரே நாவலை எழுதிய ஆசாமியை நடுரோட்டில் சந்திப்பது துர்பாக்கியமானது என்பதாக நான் நண்பனிடம் தெரிவித்தேன். அவர்கள் இருவரும் அலங்கார் மதில் ஓரமாகச் செல்லும் சாலையில் வேகமாக நடந்துபோவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். கோவை ஞானி அப்போது குடியிருந்த காளீஸ்வரா நகர் வீட்டுக்கு அவர்கள் போகக்கூடும் என்பதை நான் உணர்ந்தேன். ஜெயன் அந்த முனை திரும்பும்வரை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். அதன்பிறகு 'தமிழின் ஒரே நாவல்' என்பதைப் பற்றி ஒரு பரிகாசமான உரையாடல் எங்களுக்கிடையே நிகழ்ந்தது.

'பெண்குழந்தையை இப்போதே எடுத்து கொஞ்சிக்கொள், அவள் வளர்ந்துவிட்டால் தகப்பன் தொடக்கூட முடியாது' என்று ஜெயனின் 'பின்தொடரும் நிழலின் குர'லில் ஒரு வரி வருகிறது. அது என்னை மிகுந்த பரவசத்தில் ஆழ்த்தியது. ஜெயனால் வாழ்வை மிக நெருக்கமாகச் சென்று நுகர முடிகிறது என்பதோடு அதை அப்படியே எழுதிவிடவும் முடிகிறது. ஜெயனுக்கு இன்னொரு வெற்றி.

பிற்பாடு மலையாளக் கவிஞர் விஜயகுமார் குனிசேரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ரப்பருக்கு நேர்ந்த சர்ச்சையைப் போலவே, 'ஏழாம் உலக'மும் மலையாளத்தில் பிரபலமாக அறியப்பட்ட மேடை நாடகமான 'ஏழு ராத்ரிக'ளின் அப்பட்டமான காப்பி என்பதாகச் சொன்னார். எதை நம்புவது எதை விடுப்பது என்பது புரிவதில்லை. ஏழாம் உலகம் ஜெயனின் உண்மையான சொரூபம் என்பது எனது அபிப்பிராயம். இந்த மன ஏற்பாடுகளோடுதான் நான் ஜெயனை சந்திக்கத் தயாராக இருந்தேன்.

நாஞ்சில் நாடனின் மொபைலுக்கு ஜெயனிடமிருந்து ஃபோன் வந்தது. தான் குற்றாலம் பஸ் நிலையத்தில் நிற்பதாக ஜெயன் தெரிவிக்கவே, நண்பர் ரவீந்திரன், மரபின்மைந்தன், நாஞ்சில் ஆகியோர் காரை எடுத்துக்கொண்டு போனார்கள். ஜெயன் வந்து இறங்கியபோது நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயன் மனநிலை சரியில்லாத எனது உடுமலைப்பேட்டை சித்தப்பாவை நினைவுபடுத்தும் தோற்றத்தோடு இருந்தார். மனநிலை சரியில்லாத தோற்றமல்ல, சித்தப்பாவின் தோற்றம். நரை கலந்த கேசம், கண்ணாடி, அதற்குள் உருளும் கண்கள். ஜெயன் மிகவும் மெல்லிய குரலில் பேசினார். எனக்கு பழைய உருவத்தோடு பொருத்திப் பார்க்கிற வேலை முடிந்தபாடில்லை. நாம் டெளடனில் சந்தித்தோம் என்று நினைவு படுத்தினேன். ஞாபகம் வந்ததா என்பது தெரியவில்லை. விஷ்ணுபுரம் மட்டும்தான் நாவல் என்று சொன்னீர்கள் என்று தொடர்ந்து சொன்னேன். ஜெயன் புன்னகைக்காமல் அல்லது கோபப்படாமல் மிகச் சாதாரணமாகக் கேட்டார், ''அப்படியா?''

அவர் மற்றவர்களோடு பேசுவதை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். உள்ளே ஒரு வன்மம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. சமீபத்தில் யாரையோ அடித்தார் என்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்ததே, அப்படியொன்றும் கோபப்படுகிற ஆசாமியாகத் தெரியவில்லையே. நான் ஜெயனிடம் சொன்னேன், ''நீங்கள் நிறைய மாறியிருக்கிறீர்கள். இதற்கு முன்னால் நான் பார்த்த ஜெயமோகனல்ல இப்போது காண்பது. குறிப்பாக விஷ்ணுபுரத்து ஜெயமோகனிடம் ஒரு fire இருந்தது. இப்போது அது அணைந்துவிட்டதைப்போலத் தெரிகிறது. உயரத்தை அடைந்துவிட்டது அதற்கான காரணமாக இருக்கக்கூடும்''. ஜெயன் அதற்கும் சொன்ன பதில் அப்படியா என்பதுதான். இருந்தாலும் நான் தொடர்ந்து சொன்னேன், ''இப்போது நீங்கள் user friendlyயாக இருப்பதாகத் தோன்றுகிறது''.

தொடர்ந்து நாங்கள் தொழிலதிபர் பலராமராஜாவின் பங்களா ஒன்றில் தங்கினோம். கம்பியிட்ட நல்ல காற்றோட்டமான முன்னறையில் பிரம்பு நாற்காலிகள் உட்கார்ந்து பேசுவதற்கு வசதியாக இருந்தன. ஜெயன் பேசத் தொடங்குமுன், தான் மட்டுமே பேசக்கூடாது என்பதாகவும் மற்றவர்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்பதாகவும் அருண்மொழி சொல்லியனுப்பியதாகக் குறிப்பிட்டார். இந்த வி்ஷயத்தில் அருண்மொழிதான் ஜெயித்தார். யாராவது ஒரு வி்ஷயத்தைப் பேச ஆரம்பித்தால் ஜெயன் அதைச் சற்று கூர்ந்து கவனிப்பார், அதிகபட்சம் இரண்டு அல்லது ஒரு நிமிடம். அப்புறம் அவர் அந்த வி்ஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பார். (சாகித்ய விஜயகாந்த் போல என்று நான் சொன்னால் அவர் கோபித்துக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்) அந்த வி்ஷயத்தைப் பற்றிய புள்ளிவிபரங்களை அவர் அடுக்க ஆரம்பிப்பார். கேட்டுக்கொண்டிருப்பவர்கள் வாயடைத்துப் போகிற அளவுக்கு அவரிடமிருந்து அந்த குறிப்பிட்ட வி்ஷயத்தைப் பற்றிய புள்ளிவிபரங்கள் வெளிவந்துகொண்டேயிருக்கும். அப்புறம் ஒரு மாற்றத்தை அவரே ஏற்படுத்துவார், அந்த வி்ஷயத்தின் புள்ளிவிபரங்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்படும். பேச்சு அவரைத் தன்னை மறந்த நிலையில் ஆழ்த்துகிறதோ என்று எனக்குள் தோன்றிக்கொண்டேயிருந்தது. புள்ளிவிபரங்களோ ஜெயனின் மூளையை நினைத்து வருத்தமுறச் செய்தன. இந்த மாதிரி ஒரு ஆளிடம் வகை தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதே 'பாவம் மூளை'. கணிப்பொறியில்கூட ஹார்ட் டிஸ்க் ஃபுல்லாகி formate செய்ய வேண்டி வருகிறதே என்றெல்லாம் எனக்குள் வியப்பு. இருந்தாலும் முதல் நாள் பேசிய சில வி்ஷயங்களை மூன்றாவது நாள் தன்னையறியாமல் அவர் பேசியதை கவனித்தபோது ஏதோ அந்த அளவுக்கு ஆபத்தைக் கடந்த நிலையில்தான் இருக்கிறார் என்று ஒரு ஆறுதல் எழுந்தது.

உற்சாகமான சிறுவன் ஒருவன் ஜெயனுக்குள் இன்னும் உயிரோடிருப்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். தெரியாத சில வி்ஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவரது ஆர்வம் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. பிறரைத் திரும்பத் திரும்பக் கேட்டு ஒரு வி்ஷயத்தைத் தெரிந்துகொள்வதற்கு எனது இயல்பான கூச்சம் ஒருபோதும் இடம் தந்ததில்லை. ஜெயனோ அதற்கு நேர்மாறானவர். அருவியில் குளிக்கும்போது மார்பில் வெளுத்த மயிருள்ள சிறுவனையே நான் பார்த்தேன். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பதே எனது விசனம். நாஞ்சில்கூட பிற்பாடு சொன்னார், ''நீங்கள் வேண்டுமானால் ஜெயமோகனை ஜட்டியோடு பார்த்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம்'' என்று. சொந்தக் குழந்தையே ஆனாலும் பெண் குழந்தையைத் தொட்டு அணைப்பதும், சக மனிதனை ஜட்டியோடு பார்ப்பதும்கூட நம்முடைய இன்றைய சமுதாய அமைப்பில் பெரும் அவலங்களாக அறியப்படுவதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஜெயன் அந்த மூன்று நாட்கள் பேசிக்கொண்டிருந்த வி்ஷயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல என்பதால் எனக்கு எல்லாமே மறந்துபோய்விட்டது. அது என் ஞாபகத்தின் விசே்ஷம் என்பது வேறு வி்ஷயம். இருந்தாலும் அவர் சொன்ன ஒரு வி்ஷயம் மிகுந்த சுவையானதும் அதிர்ச்சியானதுமாகும். ஒரே நாளில் மூன்று நான்கு சிறுகதைகளை எழுதி முடிப்பது, ஒரே வாரத்தில் ஒரு முழு நாவலை எழுதி முடிப்பது என்று அவர் ஏற்படுத்திய பல அதிர்ச்சிகளுக்கு மத்தியில் இந்த வி்ஷயம் மிகவும் முக்கியமானது.

கேரளத்தில் ஒரு தினப்பத்திரிகையில் ஈஎம்எஸ் நம்பூதிரிப்பாடு மரணம் என்கிற செய்தி, நம்பூதிரிப்பாடின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது சாதனைகள் குறித்த கட்டுரைகள் எல்லாம் அவரது மரணத்தின்போது தயார் நிலையில் இருந்ததைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்தாக ஜெயன் தன் பேச்சின் நடுவில் குறிப்பிட்டார். தான் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தபோது அவர்கள் சொன்ன வி்ஷயத்தை அவர் தெரிவித்தார்.

''ஒருவர் இறந்தபிறகு அவரைப்பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தநாள் வந்துவிடும். செய்தித்தாள் அன்றைய செய்தியை அன்றே தரவேண்டாமா?''

''அப்படியானால் எல்லோரைப்பற்றியும் இந்தமாதிரி தயாரித்து வைத்திருக்கிறீர்களா?''

''சந்தேகமா? அப்படியானால் இந்த செய்தியைப் பாருங்கள்!'' என்று அவர்கள் கணிப்பொறியில் திறந்து காட்டிய செய்தியைக் கண்டு தான் வியப்பிலாழ்ந்ததாக ஜெயன் நயத்தோடு சொன்னார்.

அந்தச் செய்தி: 'பிரசித்தமாய தமிழ் எழுத்துகாரன் ஜெயமோகன் மரிச்சு. அயாழ்க்கு பாரியயும் ரண்டு மக்களும் உண்டு.......'