February 27, 2009

பத்திரிகையாளர்களின் பிடியில் சினிமா


பேசாப் பொருளைப் பேசுவது என்பதாக ஒரு phrase உண்டு! நான் இப்போது பேசப்போகிற பொருள் பேசக்கூடாதது. அப்படியென்ன பெரிய National Secret என்று கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

சினிமா நாளுக்கு நாள் நலிவடைந்துகொண்டே போவதற்கான முக்கிய காரணங்களில் பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் போக்கும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அறுபதுகளிலோ எழுபதுகளிலோ இந்தப் பத்திரிகைகளை நம்பி சினிமா இருந்திருக்கவில்லை. சினிமாவை நம்பித்தான் சினிமா பத்திரிகைகள் என்று சில வந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது விஷயம் அப்படியே தலைகீழ்!

இன்றைக்கு ஒரு சினிமா வெற்றிபெறவேண்டுமானால் அதற்கு மிக முக்கிய தேவை பப்ளிசிடி என்று சொல்லப்படுகிற பரவலாக அறிவிக்கப்படல். அது போஸ்டர்கள், பத்திரிகை விளம்பரங்கள், டீவி ட்ரெய்லர்கள் என்பனவற்றோடு அடங்கியிருந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. ஒரு படம் பூஜை போடப்படும்போதே போஸ்டர்கள் ஒட்டப்படுகிற அவசியம் இப்போது நேர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தேயாக வேண்டிய கட்டாயத்துக்குள் தமிழ் சினிமா தன்னைத்தானே வலுக்கட்டாயமாக செலுத்திக்கொண்டும் விட்டது.

படம் கொஞ்சம் கொஞ்சமாக வளரும்போதும் -அது ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நடக்கும் வெளிப்புறப் படப்பிடிப்பாக இருந்தாலும் சரி - பத்திரிகையாளர்களை செலவு செய்து வரவழைத்து, 'கவனித்து', புகைப்படங்களையும் செய்திகளையும் கொடுத்து, படப்பிடிப்புக்கு இடையூறாக இருந்தாலும் நடிக நடிகைகளை கேரவனுக்குள் வைத்தாவது பேட்டி கொடுக்க வைத்து - இந்தக் கைங்கர்யங்களால் தின, வார, மாதப் பத்திரிகைகளில் செய்திகளாகப் பொங்கிப் பிரவகித்துதான் ஒரு சினிமா வெற்றி பெற வேண்டிய சூழல் இன்றைக்கு இருக்கிறது.

நாம் அன்றாடம் பத்திரிகைகளில் வாசிக்கும் நடிக நடிகையரின் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமானால் இந்த உண்மை எளிதில் விளங்கும். குலுமனாலியில் ஷுட்டிங் ஸ்பாட்டில் குளிருக்கு இதமாக பச்சைக் கலர் கோட்டு அணிந்துகொண்டு சூடாக காஃபி பருகிக்கொண்டிருந்த படத்தின் நாயகன் வினோத் வியாஸிடம் படத்தின் கதை என்ன என்று நாம் கேட்டபோது... என்று ஒரேவிதமான ரிப்போர்ட்டிங்கை நாம் திரும்பத் திரும்ப்ப் படித்து சலித்துக்கொண்டுதானே இருக்கிறோம். முன்பெல்லாம் இந்த shooting spot visit என்பது பத்திரிகைகளைப் பொறுத்தவரை desk workகாக இருந்தது. இப்போது அப்படியில்லை. நாயகனாக மட்டுமல்ல, சினிமா பத்திரிகையாளராக இருந்தாலும் உங்களுக்கு இந்த லொகேஷன் லொகேஷனாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது.

ஒரு சினிமாவுக்கு இயக்குனர் என்பதாக ஒருவர் தேவையோ இல்லையோ, 'பீயாரோ' என்பதாக ஒருவர் கண்டிப்பாகத் தேவை என்கிற நிலைப்பாடு இன்று வலிதே உலவுகிறது. பொருள் ஏதாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் என்பது தேவைதான் என்கிற அவசர யுகத்தில்தான் நாம் வசிக்கிறோம். ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி வருவதைப்போல இப்போது இளநீரிலும்கூட ப்ராண்டட் ஸ்டிக்கர்கள் காணப்படத் தொலைத்திருக்கின்றன. நாளைக்கு டீவிக்களில் மயில் மார்க் இளநீர்களையே வாங்குங்கள் என்று விளம்பரங்கள் வரக்கூடும்.

விஷயம் இப்படியிருக்க இந்த பீயாரோக்களின் அவசியம் இல்லாமல் எப்படி? இவர்கள் விளம்பரங்கள் மீடியாக்கள் பத்திரிகைகள் ஆகியவற்றின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்கள். இதனால் ப்ரஸ் மீட்கள் முதல் பர்ஸனல் மீட் வரைக்கும் அரேய்ன்ஞ் செய்து ஒரு படம் ஆகாவளிப்படமாக இருந்தாலும் அதை உயரங்களுக்குக் கொண்டு செல்ல தங்களால் ஆன உதவிகளைச் செய்கிறார்கள். அவர்களின் சேவையைக் குற்றம் கூறவில்லை. முதல் போட்ட முதலாளிக்கு அதைவிட வேறு என்ன ஆறுதல் இருக்க முடியும்?

இந்தப் பதவி வேறு தொழில்களில் இல்லையா? எல்லா தொழில்களிலும் உண்டு. பஞ்சாலைக்கும், இரும்பு உருக்குபவர்களுக்கும், பெட்ரோலியக் கனிமங்களைப் பகுப்பவர்களுக்கும் யாவருக்கும் பப்ளிசிடிக்கான பணியைச் செய்வதற்கென்று கண்டிப்பாக ஒருவர் உண்டு.

மேற்கத்திய புராணக் கதைகளில் மோஸஸ், எகிப்திலிருந்து அடிமைகளை மீட்டுக்கொண்டுவந்து ஒரு கேம்ப் அடித்துக்கொடுத்துவிட்டு மலையேறிப்போய் பத்து கட்டளைகளுடன் திரும்பி வந்தபோது, தங்களுக்குள் எந்தவிதமான ஒழுக்கங்களும் இல்லாமல் அந்த மனிதக்கூட்டம் மிருகங்கள் போல கட்டுப்பாடிழந்து காணப்பட்டது என்கிற பிரபல்யமான கதை, கிருத்துவர்களல்லாதவர்களுக்கும் சினிமாக்களின் வாயிலாகத் தெரிந்திருக்கும். மனித இனம் கட்டுப்படுவதற்கு மதம் என்கிற ஒரு மாயப் போர்வை அப்போது தேவைப்பட்டது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இப்போது மதமே கட்டுப்பாடுகளை இழக்க வைத்துக்கொண்டிருக்கிற காலத்தில் நாம் உண்மையில் செய்ய வேண்டியது என்ன?

அப்படித்தான் ஒன்று சினிமாவுக்கும் தேவைப்படுகிறது. ஒரு படத்தை ஒரு கோடியில் எடுக்க முடிகிறது என்று சொன்னால் அரைக்கோடியாவது விளம்பரத்துக்காகச் செலவு செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து சேர்ந்திருப்பது எப்படி ஆரோக்கியமான சூழலாக இருக்க முடியும்?

அலிபாபா என்றொரு படம் சமீபத்தில் வெளிவந்தது. அது வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. வந்தது தெரியாமல் டீவிப்பெட்டிக்குள் சரணடைந்துவிட்டது. அதை நானும் டீவியில்தான் பார்த்தேன். தற்போது வருகிற சாதாரணப் படங்களுக்கு மத்தியில் அது அசாதாரணமாக ஸ்க்ரிப்ட் கொண்ட படம். நேர்த்தியான படத்தொகுப்பு, கச்சிதமான இயக்கம், ஹாலிவுட் படங்களை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்தப் படம் ஏன் ஓடவில்லை? பப்ளிசிடி இல்லை. இந்தப் படத்தின் ஸ்டில்களை படம் வளரும் காலத்தில் நான் ஒரு பத்திரிகையிலும் பார்த்ததாக நினைவில்லை. திடீரென்று ஒருநாள் எங்கே பார்த்தாலும் போஸ்டர்கள். படம் ரிலீஸ். ஒரு உத்திரவாதமுமில்லாததால் தியேட்டர்களுக்குக் கூட்டம் போகவில்லை. படம் ஓடவில்லை.

திரும்பத் திரும்ப நினைவு படுத்தப்பட வேண்டிய சூழலை பத்திரிகைகள் வாயிலாக சினிமா உருவாக்கியிராமல் இருந்திருந்தால் இந்தப் படம் கண்டிப்பாக ஓடியிருக்கும்.

இயக்குனரோ, தயாரிப்பாளரோ, முக்கிய நடிகரோ கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறாரோ இல்லையோ, படம் என்று ஒன்று தொடங்கப்படவேண்டுமானால் பூஜை என்பதாக ஒன்று போடப்பட்டே ஆகவேண்டும். இந்த பூஜை தெய்வங்களுக்காகப் போடப்படுவது என்பதாகப் பலரும் தப்பிதமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை பத்திரிகைகளுக்காகப் போடப்படுபவை. அதேபோல்தான் ஆடியோ ரிலீசும்!

ஆடியோ ரிலீஸ் என்கிற புதிய கலாச்சாரமும் பாடல்களை ரிலீஸ் செய்வதற்கானதல்ல, அதன் வாயிலாக பத்திரிகைகள், டீவிக்கள் முதலான மீடியாக்களை எட்டுவதற்காக! பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மீடியாக்களின் வாயிலாக தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய சூழலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஆடியோ ரிலீஸ்! உண்மையில் படம் ரிலீஸ் செய்வதற்கு யாராவது விழா எடுத்து பார்த்திருக்கிறோமா? படம் திடீரென்று ஒருநாள் ரிலீஸ் ஆகிவிடும். விழாக் கொண்டாடுவதெல்லாம் அது ஓடுவதைப் பொறுத்தே!

இந்த ஆடியோ ரிலீஸ் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் ப்ரிவ்யூ ஷோ என்கிற சடங்கோ மிகப் புராதனமானது. இதை ஒரு சடங்கு என்று சொல்வது மிகவும் பொருத்தமானது. சடங்கு என்பது கட்டாயத்தின் காரணமாக நிகழ்த்தப்படுவது. ஒருவரைக் குளிர்வித்துவிட்டால் அதன்பிறகு அவருக்கு நகத்தை வெளியே பிதுக்க மனம் வராது என்பதை மையமாகக் கொண்டே இந்தச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

ஒரு ப்ரிவ்யூ ஷோ சரியாக ஆறு மணிக்குத் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், மீடியாக்காரர்கள், படக்குழுவினர், அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்பதாக ஒரு கும்பல் வந்து படத்தைப் பார்க்கிறது. இன்டர்வெல்லில் எல்லோருக்கும் இலவசமாக காஃபி வழங்கப்படுகிறது. படம் ஒன்பது மணிக்கு முடிகிறது. தயாரிப்பாளர் எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டு வழியனுப்பி வைக்கிறார்.

பிறகு தன் காரில் ஏறப்போகும்போது அவர் பார்க்கிறார். இன்னும்கூட சிலர் எதற்காகவோ காத்திருக்கிறார்கள். அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் கிளம்பிவிடுகிறார். அந்தப் படத்துக்கு பீயாரோ என்பதாகவும் ஒருவர் கிடையாது.

இப்படி ஒரு சம்பவம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போலீஸ்காரர்கள் தாராளமாக அந்த ப்ரொட்யூசரைக் கைது செய்யலாம். ஏனென்றால் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம்.

சினிமாவிலும் சரி, பத்திரிகைத் துறையிலும் சரி, எனக்கு நண்பர்கள் உண்டு. பத்திரிகையாளர்கள் வாயிலாகவும் சில நேரங்களில் சினிமாக்காரர்கள் வாயிலாகவும் நான் ப்ரிவ்யூ படங்களைப் பார்த்திருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் அப்பட்டமாகக் கண்ட உண்மை என்னை வியக்க வைத்தது. இப்போது வளர்ந்துவிட்ட; அப்போது வளர்ந்துகொண்டிருந்த நகைச்சுவை நடிகர் ஒருவர் பத்திரிகையாளர்கள் சிலரோடு நின்று தம்மடித்துக்கொண்டிருந்தார். அவர் வாதத் திறமை கொண்டவர் என்பதால் (கிசுகிசுவெல்லாம் எழுதவேண்டியிருக்கிறது பாருங்கள்!) அவர்கள் அறியாத வண்ணம் அவர்களை சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டே கேலி செய்துகொண்டிருந்தார். கூட நின்ற எனக்கு அப்பட்டமாகப் புரிகிறது. அவர்கள் முகத்திலோ எவ்விதமான மாறுதலுமில்லை. அவர் சொல்லும் ஜோக்குகளுக்கு வாயைப் பிளந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கானால் வியப்பு! இங்கே யார் புத்திசாலி? உங்களுக்கெல்லாம் இந்த மரியாதை போதும் என்று தன் புத்திசாலித்தனத்தால் அவர்களை - அவர்களே அறியாமல் கேலி செய்துகொண்டிருக்கும் நடிகர் புத்திசாலியா? இல்லை புரிந்துதான் புரியாததுபோல் இவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்கள் புத்திசாலிகளா?

எனக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது, அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு முட்டாள் அபத்தமாக நின்று கொண்டிருந்தான். அது நான்தான்!

அந்த நடிகரின் ஸ்டைல் அப்படியென்றால் நடிகர் கவுண்டமணி ஒருபோதும் தன்னிடம் பத்திரிகையாளர்களை அண்ட விட்டதில்லை என்பது சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த விவகாரம். அவர் திரைப்படங்களில் நடிகர் செந்திலை நடத்துவதுபோலவே பத்திரிகையாளர்களை நிஜ வாழ்வில் நடத்தினார் என்பது யாவரும் அறிந்த உண்மை. சினிமாக்காரர்களில் இவர் மட்டுமே விதிவிலக்கு என்பதாக நான் நினைக்கிறேன். கவுண்டமணியின் பேட்டி என்பதாக பத்திரிகைகளில் படித்த ஞாபகம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் இராது. அவர் ஒருவர்தான் திரைத்துறையாகட்டும் பத்திரிகைத்துறையாகட்டும் இரண்டுபேரையுமே அச்சுறுத்தி வைத்திருந்தவர் என்பதாகச் சொல்வார்கள். ஹீரோக்களுக்குக்கூட இந்தத் துணிச்சல் வந்ததேயில்லை.

சினிமாக்காரர்களைப் பற்றிப் பொதுவாகவே ஒருவிதமான கற்பிதம் உண்டு. முகத்துக்கு நேராக சிரிப்பார்கள், முதுகுக்கு நேராக கதைப்பார்கள் என்று. அது சரியோ தவறோ, பெரும்பாலான சினிமாக்காரர்கள் பத்திரிகையாளர்களிடம் கொண்டுள்ள மரியாதை போலித்தனமானது என்பதை நேரில் பார்த்தால் சின்னக் குழந்தையும் சொல்லும்.

படிப்பு வராத குழந்தை வாத்தியாரிடம் கொண்டுள்ள பயம்கலந்த வெறுப்புதான் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கொண்டுள்ளது. ஏற்கனவே, ஹீரோ பிரச்சினை, ஹீரோயின் பிரச்சினை, லொக்கேஷன் பிரச்சினை, டெக்னீஷியன் பிரச்சினை, தொழில்நுட்பப் பிரச்சினை என்று ஆயிரம் பிரச்சினைகளை சமாளித்து ஒரு படம் எடுக்க வேண்டிய சூழலில் உள்ள ஒரு முதலாளி, இந்த பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும்போது மனதளவில் எவ்வளவு எரிச்சலடைவார் என்பதை பத்திரிகையாளர்களும் மீடியாக்களும் கண்டிப்பாக உணர்ந்தே இருப்பார்கள். ஆனால் இதெல்லாம் பேசாப் பொருளாக தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையே அவர்கள் அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுவதால் எனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து யானையை அனுப்பி மாலையும் போடப் போவதில்லை, ப்ரஸ் க்ளப்பிலிருந்து கொலை மிரட்டலும் வரப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அத்தனை தூரம் ஸ்மரணை கெட்டுப் போய்விட்ட விவகாரம் இது.

February 21, 2009

சினிமாவில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால், கூட இருப்பவர்களின் கால்களை வாரி விடவேண்டும் என்பதாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு உபாயம்தான். ஆனால் இன்றைக்கு சினிமாவில் ஜெயித்தவர்கள் எல்லாம் அந்த உபாயத்தின் வாயிலாகத்தான் தங்கள் உயரங்களை எட்டியிருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக எதையும் கற்பிதம் செய்து கொள்வது கூடாது.

இருந்தாலும் பன்னெடுங்காலமாக இவ்விதமான ஒரு மனோபாவம் எமது சினிமா உலகில் நிலவியே வருகிறது. காலை வாரி விடுவது என்பதன் அடிப்படை செயல்பாடு எதிலிருப்பவரை வானளாவப் புகழ்வதுதான். இதை ஒரு நற்குணம் என்பதாகவே மனோசாஸ்திரம்கூட சொல்கிறது. ஆனால் நோக்கம் கேடு விளைவிப்பதாக இருக்க, நாக்கில் சர்க்கரை தடவிக்கொள்வது சரியானது என்று மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு வேண்டுமானால் எமது பல்கலைக்கழகங்கள் போதனை செய்யலாமே தவிர, அது உண்மையாக ஆகவே ஆகாது.

தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் தென் மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என்று திசைக்கொரு குணாதிசயம் உண்டு. இதற்கும் சினிமாப்பாடல்களின் உதவியையே நாடலாம். கோயமுத்தூர் குசும்பு, கோவில்பட்டி திமிரு, தென்மதுரை பாசம் கொண்ட பெண்களை நாம் சினிமாவில் பார்க்கவில்லையா? சுப்ரமணியபுரத்தில்கூட நண்பர் சசிகுமார் பழக்கத்துக்காக கொலை செய்வதெல்லாம் நம்ம பசங்கதான் என்று எழுதவில்லையா? கோயமுத்தூரில் பழக்கத்துக்காக ஒரு ரோமத்தைக்கூட யாரும் கொடுக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெயும். ஆனால் வீம்புக்காக தலையைக்கூட கொடுத்துவிடத் தயாராக இருப்பார்கள். கவனியுங்கள், தலையை எடுக்க அல்ல!

இப்படி ஊருக்கொரு குணாதிசயம் இருக்கிறது என்று சொன்னால் சென்னைக்கும் ஒரு குணாதிசயம் உண்டல்லவா? - இந்தக் கட்டுரை பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்குப் படையெடுக்கும் சினிமாக் கனவு கொண்ட இளைஞர்களுக்காக எழுதப்படுவதாக யாரும் தப்பிதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தப்பிதமாக எடுத்துக்கொண்டாலும் தப்பில்லை.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஒரு ரகசியம் தெரியாது. தமிழகத்தின் வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து இறங்குபவர்கள்தான் அதை கால்வைத்த மாத்திரத்திலேயே உணர்வார்கள். தமிழகத்திலேயே மிகவும் வேகமான நகரம் சென்னைதான். நெரிசல், மக்கள் தொகை, வெய்யில் என்று அதை வர்ணித்துக்கொண்டு போக வேண்டியதில்லை. மும்பையோடு ஒப்பிடும்போது சென்னை நிதானமான நகரமாகவும், நியூயார்க்கோடு ஒப்பிடும்போது மும்பை நிதானமான நகரமாகவும் தோன்றுவதில் எப்படி வியப்பில்லையோ அப்படித்தான் இதுவும்.

அந்த வேகத்துக்கேயான அத்தனை அவசரங்களும் கொண்ட துறை எமது சினிமாத் துறை. ஒவ்வொரு மணித்துளியும் காசாக மாறுவதும், ஒவ்வொரு மணித்துளியிலும் முதலீடு கரைந்து ஒழுகிவிடுவதும் சினிமாவில் சகஜம். ஒருவகையில் பார்த்தால் இந்த வேகம், ஒருவிதமான ஒழுங்கையும் கட்டுத்திட்டங்களையும் கறார்த்தனத்தையும் சட்டதிட்டங்களையும்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, வருமானமும் புகழும் பெருகியோடும் வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் பகிரங்கமாக உலவ ஆரம்பிப்பது பாசாங்கு மாத்திரமே! அது எமது சினிமாவுக்கும் விலக்கல்ல.

அரசியலுக்குப் பிறகு சினிமாவில்தான் வாரிசு, காலில் விழும் வைபவம், வகைதொகையில்லாமல் புகழ்ந்து தள்ளும் கபடம் எல்லாம் மலிந்து கிடக்கிறது. சாதாரணமாக தமிழகத்தின் மற்ற ஊர்களில் இந்தமாதிரி ஒருத்தர் காலில் மற்றவர் விழுவது, போலியாகப் புகழ்ந்து தள்ளுவது என்பதையெல்லாம் பார்க்கவே முடியாது. திண்ணையைத் தேய்த்துக்கொண்டு ஊர்வம்பு பேசுபவர்கள்கூட இந்தக் காரியத்தில் ஈடுபடுவதில்லை.

நான் கோவையிலிருந்து தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றும் பொருட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தபோது கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் வீதியில் நான் பணியாற்றப்போகும் சீயலில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ஓர் உதவி இயக்குனரைப் பார்க்கப் போயிருந்தேன். அவரும் நானும் அந்தத் தெருவில் செராமிக் டைல்ஸ்களில் விளம்பரங்கள் பதித்த ஒரு சிறு டீக்கடையில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்தோம். இந்த சடுதியில் திடீரென்று அந்த நண்பர் ஒரு காரியம் செய்தார். சென்னைக்கு நல்வரவு, நீங்கள் பெரிய டைரக்டர் ஆக உங்களை வாழ்த்துகிறேன் என்பதை அவரது ஸ்லாங்கில் திடீரென்று சொன்னார். நான் இந்தமாதிரி வாழ்த்துக்களையெல்லாம் அதுவரைக்கும் எதிர்கொண்டதேயில்லை. தானே உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் புதிதாக வந்த இன்னொருவரை இவ்விதமாக வாழ்த்துவது கோயமுத்தூர் பக்கமெல்லாம் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் காண இயலாதது. மீறிப்போனால் "அப்புறம்? பெய டைரக்க்டர் ஆகப்போறிங்க! அப்டித்தான?" என்று நக்கலாகத்தான் அங்கே ஆரம்பிப்பார்கள்.

அதே நண்பர் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றுங்காலத்தில் பலமுறை என்னிடம் குறிப்பிட்டுச் சொல்வார், உங்களுக்கென்ன சார், நீங்க பெரிய ரைட்டர். எங்க நிலைமை அப்படியா? என்று. உண்மையில் நான் அப்போது போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருந்திருந்தாலாவது நாலு எஃப்பையாராவது எழுதி காசு பார்த்திருக்கலாம் என்பதை என் தன்மானத்தை விட்டுக்கொடுத்து அவரிடம் ஒருபோதும் சொன்னதேயில்லை. எல்லாம் புகழப்படுவதில் உள்ள அற்ப சுகத்தை அனுபவிக்கிற ஆசைதான்.

இந்த ஆசையை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் சினிமாவில் அழிந்துபோவதையே நாம் இதுவரைக்கும் பார்த்து வருகிறோம்.

இப்படி சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் புகழாரம் சூட்டிக்கொண்டிருந்த அந்த நண்பர் ஒருமுறை ஒரு காரியம் செய்தார். இயக்குனர் என்னை ஷூட் செய்யச் சொன்ன காட்சியை கூடவே அவரும் ஸ்டார்ட் கட் சொல்லி இயக்கிக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை என் முதல் நாவலான காக்டெய்லில் விளக்கியிருக்கிறேன் என்பதனால் இங்கே இது போதும். நான் மிகுந்த கோபத்தோடு, இயங்கிக்கொண்டிருக்கும் கேமராவுக்குக் குறுக்கே நடந்து அந்த இடத்திலிருந்து வெளியேறினேன்.

அதன்பிறகு நான் நெடுங்காலம் சினிமாவை விட்டு விலகியிருக்க நேர்ந்தது. ஆனால் அந்த நண்பர் தற்போது இரண்டு படங்களையே இயக்கிவிட்டார். சரக்கு இல்லாததால் அத்தோடு முடிந்துபோய்விட்டது கதை. ஆக, இப்படி ஆளை வர்ணிப்பது, காலை வாரி விடுவது ஆகிய கபட நாடகங்கள் சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பை வாங்கித் தரலாமே தவிர அவை உங்களை உயரங்களுக்கு ஒருபோதும் கொண்டு செல்லாது என்பதே உண்மை.

சரி, சினிமாவில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? இந்தச் சூத்திரம் மிகவும் இலகுவானது. தனந்தரும், வாழ்க்கைக் கல்விதரும் சினிமாவில் ஜெயிக்க அத்தியாவசியத் தேவை, ஒருபோதும் தளர்வறியா மனமும் தொழிலின் மீதான மாறாத காதலும் நில்லாத உழைப்பும் தீராத தேடலும்தான்!

இவை இருந்தால் சினிமாவில் ஜெயித்துவிடலாமா? கண்டிப்பாக ஜெயித்துவிடலாம். உங்கள் நெஞ்சில் அக்னி இருந்தால் மட்டும்தான் இந்தக் கோட்பாடுகளைக் கைக்கொள்வது எளிதாகும். இந்த குணங்களைக் கொண்டவர்கள் ஒருவரும் சினிமாவில் தோற்றதாக சத்திரமேயில்லை. அதே நேரத்தில் சினிமாவில் ஜெயித்தவர்களில் ஒருவரும் இவ்விதமான குணங்கள் இல்லாதவர்களாக ஒருபோதும் இல்லை.

எங்கோ பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா சகோதரர்கள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியதெல்லாம் இந்த அடிப்படை குணங்களிலிருந்து வழுவாமல் போனதனால்தான். குறிப்பாக இளையராஜாவை எடுத்துக்கொள்ளலாம். இன்றைக்கு ஏயார்ரகுமான் ஆஸ்கார் வரைக்கும் உயர்ந்து நிற்கிறார் என்றால் இளையராஜா அந்த அளவுக்கு திறமை இல்லாதவர் என்பதாகக் கொள்ளலாமா?

நான் மேற்சொன்ன குணங்களில் ஒரே ஒரு குணத்தை மட்டும் தவற விட்ட வகையில்தான் இளையராஜா ஏயார்ரகுமானுக்கு வழிவிட வேண்டி வந்தது. சாதாரணமாகவே ஆன்மீக நாட்டம் கொண்ட மனம் இளையராஜாவுக்கு என்பதனாலேயே அவர் ஒரு முக்கியமான கோட்பாட்டிலிருந்து வழுவிவிட்டார். அதுவே அவரது பின்தங்கலுக்குக் காரணம். அது தீராத தேடல். அவரது தேடல் ஆன்மீகத்திற்குள் நுழைந்ததாகச் சொல்லப்பட்டபோது அவரது தொழிலில் அவர் கொண்டிருந்த தேடல் துவள ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சாதாரணமாக கேரளாவின் கடைக்கோடியிலிருந்து புறப்பட்டு வரும் இருபது வயதுகூட ஆகாத ஒரு சிறுமி, கேரளாவில் இரண்டொரு படங்களில் முகத்தைக் காட்டியதும் தமிழுக்குத் தாவி, தமிழர்களின் சொப்பனங்களை நனைக்க ஆரம்பித்துவிடுவதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தமிழில் ஒரு ரவுண்டு வந்துவிட்டதாகக் கருதப்படுமுன் தெலுங்கர்களின் சொப்பனங்களில் அவர்கள் புகுந்துவிடுகிறார்கள். தெலுங்கர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று தேசிய அளவில் சீறிப் பாய்ந்துவிடுகிறார்கள். அந்நாள் ஸ்ரீதேவியிலிருந்து இந்நாள் அசின்கள் வரைக்கும் இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதெல்லாம் அவர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது. அவர்களின் தேடல் நிற்காமல் போவதனால்தான். சினிமா தரும் புகழும் பணமும் மற்றவர்களைக் காட்டிலும் நடிகைகளுக்குத்தான் மிக சொற்ப காலத்தில் மட்டுமே கிட்டக்கூடியதாக இருப்பதனாலேயே அவர்களின் அவசரம் சினிமாவுக்கான அத்தனை குணங்களையும் அவர்களுக்கு வழங்கிவிடுகிறது.

என்னோடு பணியாற்றிய ஒரு குணச்சித்திர (?) நடிகர் ஒருமுறை புதிதாக நடிக்க வந்த நடிகை ஒருத்திக்கு சொன்ன அட்வைஸ் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. அந்தப் பெண் அவரிடம், நீங்கள் நடிக்கும் படங்களில் எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்டது. அப்போது அவர் அவளிடம் சொன்னார், ஆம்பளைங்களுக்குத்தான் அதெல்லாம் தேவை. உனக்கு ஈஸி, பேசாம படுத்துக்கோ! என்று.

பேசாமல் படுத்துக்கொண்டால் ஒரு சிறுமி பெரும் நடிகையாக ஆக முடியுமா? இந்த உபாயத்தால் மட்டும்தான் எமது நடிகைகள் எல்லாம் உயரங்களுக்குப் போனார்களா? அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் மூளையை ஹார்ப்பிக் போட்டு கழுவுங்கள். தன்னோடு இரவைப் பகிர்ந்துகொண்டதற்காக அடுத்தநாள் படப்பிடிப்புத் தளத்தில் நடிகைக்காக ஓர் இயக்குனர் மாலை வரை காத்திருக்க நேர்ந்தால் அவரும் அழிந்துவிடுவார் அந்த நடிகையும் அழிந்துவிடுவார் என்பதே கண்கூடான உண்மை.

வினாடிக்காலம்கூட நில்லாத வேகம்தான் சினிமாவுக்குத் தேவையான அடிப்படை குணம். அதை விடுத்து வேறு எந்த மாயத்தாலும் ஒருவர் உயரங்களைத் தக்கவைத்துக்கொள்ளவே முடியாது.

திரும்பவும் இளையராஜாவுக்கே வருவோம். இளையராஜா மட்டும் தனக்குக் கிடைத்த பாலிவுட் வாய்ப்புகளை புதிய இசையமைப்பாளரின் உத்வேகத்தோடு உபயோகித்துக்கொண்டு இந்தித் திரைப்படத் துறையில் ஒரு போராட்டத்தை நிகழ்த்தியிருந்தாரேயானால் ஹாலிவுட்டுக்குப் போவதும் அவருக்கு எளிதாகவே இருந்திருக்கும். ஆஸ்கார் நமக்கு எப்போதோ கிடைத்திருக்கும்.

ரகுமானிடம் அந்தத் தீராத வேட்கை இருக்கிறது. இளையராஜாவைவிட இவர் ஆற்றல் மிக்கவரா இல்லையா என்பதை சாலமன் பாப்பையாக்களுக்கும் விஜய்டீவி கோபிநாத்களுக்கும் விட்டுவிடலாம். ரகுமான் இரண்டாவது படத்திற்கே தேசிய விருது வாங்கினார். தேசிய விருது வாங்கிய பின்னால் வேறென்ன இருக்கிறது என்று அவர் பின்தங்கிவிடவில்லை. சினிமாவில் உயரத்தில் இருக்கும்போதே தேசிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். மா துஜே சலாம் என்று அவர் குரலில் ஒலித்ததும் மத்திய அரசு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவரைப் பாடச் சொன்னது. இந்திப் படங்கள் கதவைத் திறந்தன. திரும்பத் திரும்ப விருதுகள் குவிந்தன. ரகுமான் மலபார் ஹில்ஸில் வீடு கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிடவில்லை. அவர் லண்டனுக்குப் பறந்தார்.

ரகுமான் நம்மைப் பார்த்து இப்படிச் சொல்லக்கூடும், உங்களுக்கு ஆஸ்கார் வேண்டுமானால் அது இருக்கும் இடத்துக்கு நீங்கள் போக வேண்டும். அதுவரைக்கும் நிற்கக்கூடாது. ஏன், அதற்குப் பிறகும்கூட நிற்கக்கூடாது. அவ்வளவுதான் சூத்திரம்!

February 11, 2009

வசனம் எழுதுவது எப்படி?


வசனம் என்றால் வஸ்திரம் என்பதாகவும் ஓரர்த்தம் உண்டு. அதனால்தானோ என்னவோ எமது வசனகர்த்தாக்கள் வகை வகையாக வசனம் எழுத விரும்புகிறார்கள். ஆடை என்பது நிர்வாணத்தை மூடுவதற்காக என்பது ஒழிந்து தோற்றத்தை அழகுபடுத்த என்பதாக மாறிவிட்ட வகையில்தான் வசனமும் இஷ்டத்திற்கு எழுதப்படுகிறதோ என்று தோன்றுகிறது.

கட்டபொம்மன் கப்பத்தைத் தூக்கிக்கொண்டு தென்னாடு முழுக்க ஜாக்சனின் பின்னால் அலைந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? என்று நாடக பாணியில் நடிகர் திலகம் முழக்கமிட்டதைப் பார்க்க நேர்கையில் குமட்டிலிருந்து வருகிறது சிரிப்பு. இந்த சிரிப்பு, நடிகரைப் பார்த்து வருவதல்ல. வசனகர்த்தாவைப் பார்த்து வருவது.

சின்னதாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும், வசனகர்த்தா தன் மொழிப்புலமையை முழுக்க முழுக்க கொட்டித் தீர்த்து வந்திருக்கிறார் என்பதே நாம் காணக் கிடைப்பது.
மனோகராவில் வசந்தசேனை! வட்டமிடும் கழுகு! வாய்பிளந்து நிற்கும் ஓணாய்!! நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு!!! என்று அடுக்கடுக்காய் பொழிகிறது வசனம். சிவாஜி கணேசனின் கர்ஜனைக் குரலில் கேட்பதற்குத்தான் எத்தனை ஆசையாய் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் இம்மாதிரி பேசிக்கொண்டு அலைந்தார்களா என்று யோசிக்கப் புறப்பட்டால் முன்னால் ஒரு சுவர்தான் வந்து முட்டுகிறது.

ஒரு நடிகர், வாங்கிய காசுக்கு அதிகமாக நடித்தால் மிகை நடிகர் என்று பழிக்கப்படுகிற கலாச்சாரம் இருக்கிறதே தவிர, ஒரு வசனகர்த்தா இஷ்டத்துக்கு எழுதினால் அதை மிகையெழுத்து என்று தூற்றுகிற சமுதாயமாக ஏன் இல்லாமல் போயிற்று என்பதுதான் தெரியவில்லை.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=915

February 05, 2009

காமடியாட்டம்


சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக அறிமுகமானார் நாகேஷ். அதற்குமுன் சிலகாலம் அங்ஞாதவாசத்தில் இருந்தவர் திரும்பவும் நடிக்க வந்தபோது வில்லனாகப் போய் அறிமுகமாகிறாரே என்று பலருக்கும் ஆச்சர்யம். நாகேஷால் எப்படி வில்லனாக நடிக்க முடியும்? அதுவும் டிபிகல் தெலுங்கு வில்லன் கணக்காக ஒற்றைக் கண்ணை மறைக்கும் விக்கெல்லாம் வைத்துக்கொண்டு கூசாமல் கொலை செய்யும் கொடூரமான வில்லனாக!

காமெடி உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய ஒரு நடிகர் வில்லனாக நடிக்க நேர்ந்தபோது அந்தப் படத்தின் வாயிலாக நமக்குக் கிடைத்தது புத்தம் புதிய பரிமாணம்ஙு கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்படும் பாத்திரத்துக்கு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இருக்கக்கூடாதா என்ன? படத்தில் ஒரு பார்ட்டி நடக்கிறது. அப்போது நாகேஷுக்கு கொலை மிரட்டல் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதை வேறொருவர் எடுக்கிறார். ரிசீவரை டேபிளில் வைத்துவிட்டு வந்து நாகேஷிடம் அவர் சொல்கிறார், ''போன் வந்திருக்கு!'' அதற்கு நாகேஷ் சொல்கிறார், ''யார் வந்தா என்னப்பா, சாப்பிட்டுட்டு போகச் சொல்லு!''

அதுதான் நாகேஷ்!

இந்த அதுதான் நாகேஷ் என்கிற வசனம்கூட நாகேஷாலேயே தில்லுமுல்லு படத்தில் சொல்லப்படுகிறது. அவர் அதில் நடிகர் நாகேஷாகவே வருகிறார். படத்தில் ரஜினிகாந்த் அவரை ஒருமையில் அழைத்தபோது ஒருமாதிரி இருந்தது. நாகேஷ் நாகேஷாகவே நடிக்கும்போது அவரது வயது நமது மனத்தில் நெருடாதா? இதையெல்லாம் லாஜிக் பிழை என்று நினைத்து அலட்டிக்கொள்ளாத இயக்குனரின் உதாசீனத்தைத்தான் இது காட்டுகிறது. அதேபோலத்தான் பாமா ருக்மணி என்று பாக்கியராஜின் ஒரு படம்! நாகேஷை தவறாக உபயோகித்த படங்களில் அதுவும் ஒன்று. நம்பியாருக்கு ரீ என்ட்ரி கொடுத்த பாக்கியராஜ் நாகேஷ் விஷயத்தில் மட்டும் பிழை செய்துவிட்டார் என்பதாகவே தோன்றுகிறது.

கவுண்டமணி கூடத்தான் தள்ளாடும் வயதில் இளமை ததும்ப, நாயகனால் போ வா என்று அழைக்கப்படும் நண்பனாக பல படங்களில் நடித்தார். இருந்தாலும் நாகேஷுக்கு மட்டும் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், நாகேஷ் வெறும் காமடியனாக மட்டுமில்லாமல் மரியாதைக்குரிய ஒரு மனிதராகவும் காணப்பட்டதனால்தான்.

சாதாரணமாகவே அம்மைத் தழும்பும் அதுவுமாக அழகில்லாத முகம் கொண்டவர் என்பதாகவே நாகேஷ் திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது வழக்கம். இந்தப் போக்கின் நீட்சியாக நம்மவர் படத்தில் அசப்பில் அவரது முகச்சாயல் கொண்ட நடன இயக்குனர் பிருந்தா அவரது மகளாக வந்தபோது இந்தப் பிரச்சனை பிருந்தாவுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. நாகேஷின் அதி உன்னத பர்ஃபார்மென்ஸ் அந்தப் படத்தில் நமக்குக் காணக் கிடைத்தது. மகள் இறந்ததை அறிந்ததும் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, நாயகனில் மகன் இறந்ததை அறிந்ததும் கமலஹாசன் நடித்த காட்சியோடு நேரடியாக ஒப்பிடப்பட வேண்டியது. கமலஹாசனே கண்டிப்பாக ஒப்புக்கொள்வார் வென்றது நாகேஷ்தான் என்பதை.

வயதாக வயதாக நாகேஷ் மிகவும் அழகாக ஆகிக்கொண்டே வந்தார் என்று எனக்குத் தோன்றும். வயதான சிவாஜி கணேசனை விட வயதான நாகேஷ் மிகவும் அழகானவர் என்பதே எனது கருத்து. சுரேஷ் கிருஷ்ணாவின் ராஜா கைய வெச்சா படத்தில் கௌதமியின் அப்பாவாக வந்து அவர் அடிக்கிற லூட்டியை சொல்லி மாளாது. அவரது ஆற்றல் அப்படியேதான் இருந்தது. அதை உபயோகித்துக்கொள்ளத்தான் நமக்கு புத்தியில்லாது போய்விட்டது.

இந்த வில்லன் விஷயத்துக்கு மீண்டும் வரலாம், நாகேஷ் இதற்குமுன் வில்லனாக நடித்ததேயில்லையா? மைக்கேல் மதன காமராஜன் படத்தில்கூட நாகேஷ் ஒரு குட்டி வில்லன்தான். அவரது அபிமானியான கமலஹாசனுக்குத்தான் அவரை அப்படியெல்லாம் விதம் விதமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும். இருந்தாலும் இந்தப் படங்களில் வரும் வில்லன்கள் சினிமாத்தனமானவர்கள். ஆனால் யதார்த்தமான வில்லன் ஒருவர் தில்லானா மோகனாம்பாளில் உண்டு. அந்தப் படத்தில் அடுக்கடுக்காக வில்லன்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். நாயகிக்கு வில்லன்களால் தொல்லைகள் ஏற்படும்போதெல்லாம் அதற்குப் பின்னணியாய் செயல்பட்டுக்கொண்டேயிருப்பார் வைத்தி என்கிற பாத்திரத்தில் வரும் நாகேஷ்! வைத்தியின் நெளிவுகள், சுழிவுகள், வளைவுகள் இதுவரை வேறெந்த நடிகராலும் தீண்டிப்பார்க்க முடிந்திராத சாதனை. படம் முழுக்க அவரது காமடியாட்டம் கொடிகட்டிப் பறக்கும். ஆனால் முடிவில் நம்பியார் வரைக்கும் படத்தில் வரும் அத்தனை வில்லன்களும் திருந்திவிட, ஒரே ஒருவர்தான் போலீசுக்கு பாக்கியிருப்பார். அவர் நாகேஷ்! அப்போதுதான் பார்வையாளர்கள் யார் அந்தப் படத்தின் உண்மையான வில்லன் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.

இப்படி பாத்திரத்தை உணர்ந்து பொருந்துவதில் அவருக்கு அவர்தான் நிகர். திருவிளையாடல் தருமி என்றால் ஏழ்மையின் பிரதியாக்கம், எதிர் நீச்சல் மாது என்றால் அநாதையின் அவலம், காதலிக்க நேரமில்லை செல்லப்பா என்றால் ஆர்வக்கோளாறின் அவசரம், அன்பே வா ராமையா என்றால் துடிப்பு மிக்க காதலனின் தவிப்பு என்று பாத்திரமாகவே மாறி நம் ஞாபகத்தில் நிலைத்து நிற்கிறார் நாகேஷ்.

நாகேஷிடம் ஒற்றைப் பார்வையிலேயே தென்படுவது அவரது எனர்ஜி. சாதாரணமாக சர்க்கஸில் எல்லா வித்தைகளும் தெரிந்தவர் ஜோக்கர்தான் என்பதுபோல மிக ஆச்சர்யமான ஆற்றல் கொண்டவர் நாகேஷ். குறிப்பாக அவரது வேகம்! எம்ஜியாரும் மிகவும் துறுதுறுப்பான நடிகர். அவரோடு நாகேஷ் இணையும்போது காட்சி படு வேகமாக நகர்வது இந்த இயல்பால்தான். சிவாஜி முதலான பெரும்பாலான நடிகர்கள் மிகவும் மிதமான லயத்தில் நடிக்கக்கூடியவர்கள். பெரும்பாலும் டப்பிங் பேசும்போது உபயோகமாக இருக்கும் என்பதற்காக ஒருவிதமான தாமத லயத்தை நடிக்கும்போது மேற்கொள்வார்கள். நாகேஷ் வசம் இந்தக் கணக்கெல்லாம் கிடையாது. அவரது தனித்தன்மையே டைமிங்தான். நாய் செத்துப்போச்சுண்ணே, டாமின்னு பேருகூட வெச்சிருந்தேன் என்று சொல்லி முடிக்குமுன், பேரு வெச்சியே, சோறு வெச்சியா? என்று பதில் வந்துவிடும் அவரிடமிருந்து.

இப்போது போலல்லாமல், நாகேஷ் நடிக்க வந்தபோது எம்டன்கள் எல்லாம் உயரத்தில் இருந்தார்கள். எம்மார் ராதா, டீயெஸ் பாலையா, கேயே தங்கவேலு என்று அந்தப் பட்டியல் மிகவும் ஆணித்தரமானது. அவர்களுக்கு மத்தியில் புதிதாக ஒருவர் நுழைந்து உயரங்களை எட்டவேண்டுமானால் அது எவ்வளவு கடினமான பணியாக இருந்திருக்கும்ஙு

அந்த வகையில் பாலச்சந்தரின் துணிச்சல் அடிப்படை உதவியாக இருந்தது என்றாலும் நாகேஷின் ஆற்றல்தான் அவரை உச்சங்களுக்குக் கொண்டு சென்றது. முக்கியமாக எம்ஜியார் நாகேஷ் காம்பினேஷனைப் பொருத்தவரைக்கும் இப்போதும் கவனித்துப் பாருங்கள், நாகேஷின் பர்ஃபார்மென்ûஸ எம்ஜியார் ரசிப்பதை திரையிலேயே நாம் கண்டுபிடித்துவிடமுடியும். எம்ஜியார் என்றில்லை, மனோரமா முதலான அவருக்கு இணையான காமெடியன்கள்கூட அவரது நடிப்புத் திறமையை உள்ளூர ரசித்து, சீரியஸôன காட்சிகளில்கூட சிரிப்பை அடக்கப் படாத பாடுபடுவதை பல படங்களில் கண்டுபிடிக்கலாம்.
அவரது சேஷ்டைகள் அவ்வளவு பிரசித்தம். ஒரு காமடியன் அடிப்படையில் கொண்டிருக்க வேண்டியது அங்க சேஷ்டைகள்தான் என்பதை அவருக்கு முன்னால் நிரூபித்தவர் ஜேபி சந்திரபாபு. ஸ்ப்ரிங் மாதிரியான உடம்பை வைத்துக்கொண்டு அவர் செய்த சேஷ்டைகள் எவ்வளவு ரசிக்கப்பட்டனவோ அதே அளவுக்கு நாகேஷ் தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்துக்கொண்டு அடித்த லூட்டிகள் இருக்கிறதே! இதில் ஒரு irony பாருங்கள், அவரது ஒரிஜினல் பெயர் குண்டுராவ்!

'குண்டு'ராவ் என்கிற பெயரை உடைய ஒருவர் ஒல்லியாக இருப்பதே அடிப்படைக் காமடிதானே! இப்படி அவரது வாழ்க்கையே ஒரு காமடிச்சரமாக நீண்டுகிடந்ததோ என்னவோ!

வாழும்காலத்தில் இம்மியும் கௌரவிக்கப்படாத நடிகர்களின் நீண்ட பட்டியலில் நாகேஷும் சேர்கிறார். அவரே ஒருமுறை சிவாஜிகணேசன் வட இந்தியாவில் பிறந்திருந்திருந்தால் எப்போதோ சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருப்பார் என்று குறிப்பிடது அவருக்கும் அப்படியே பொருந்தும். அவர் கர்னாடகத்திலிருந்து இருந்திருந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்ததற்கு பதிலாக மும்பைக்குப் போகிற ரயிலைப் பிடித்திருந்தாரேயானால் உலக அளவுக்கு அவரைக் கொண்டுபோயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

கட்டிக்கரும்பே கண்ணம்மா!

அயாம் ச்செலபா! சன் ஆஃப் கண்ணபா!

ஒரு காசா ரெண்டு காசா? ஆயிரம் பொன்னாச்சே! ஆயிரம் பொன்னாச்சே!

லோகத்துல இந்த வைத்தி மட்டும் இல்லேன்னா...

எப்போதும் மனத்திரையில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வசனங்கள் நாகேஷின் உச்சரிப்பின் வாயிலாகத்தான் சாகாவரம் பெற்றனவே தவிர சும்மானாச்சுக்கும் நீங்கள் சொல்லிப்பாருங்கள் அப்போதுதான் தெரியும் அவரது அருமை!

சமீபத்தில் ஒரு திரைக்கதை விவாதத்தில் கதையின் பிரதான பாத்திரத்திற்கு நான் முன்மொழிந்தது நாகேஷைத்தான். மிகவும் அழுத்தமான அந்தப் பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்பதாக நான் உணர்திருந்தேன். அதைத் தொடர்ந்து அவர்களது ப்ரொடக்ஷன் மேனேஜர் நாகேஷைத் தொடர்பு கொள்ள முயன்ற வகையில் அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக அறிந்துகொள்ள நேர்ந்தது. அப்போதே மனதிற்குள் ஒரு பதைபதைப்பு எழுந்திருந்தது.

அண்மையில்தான் நம்பியார் மறைந்தார். அதற்குள் இப்போது நாகேஷ்! பிதாமகன்களைக் கொண்டுபோகிற காலமாகத்தான் விடிந்துவிட்டது போலிருக்கிறது. தொலைக்காட்சியில் அவரது கடைசிக் காட்சிகளைப் பார்த்தபோது உண்மையிலேயே என் கண்கள் பனித்தன. வேறெந்தக் கலைஞரின் மரணக்கோலமும் என் நெஞ்சை இவ்வளவு உலுக்கியதில்லை என்பதே உண்மை. அவரை ஒரே ஒரு முறைதான் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரது மகன் ஆனந்த் பாபுவோடு பணியாற்றியிருக்கிறேன். அவரது வாழ்வும் எனது வாழ்வும் வேறு வேறு திக்குகளில் இருந்துவந்தபோதும் இழப்பு என்று வரும்போதுதானே அணுக்கத்தின் பிரக்ஞை விழிக்கிறது.

பீரியட் அவஸ்தை!

பள்ளி விழாக்களுக்காகவோ, இல்லத் திருவிழாக்களுக்காகவோ குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம், விவேகானந்தர் வேஷம் என்று போட்டுவிடுவதில்தான் பீரியட் படங்களின் அவசியம் துவங்குகிறது. பிற்பாடு வந்த சினிமா மட்டும் இல்லாமல் போயிருந்தால் வரலாற்றுக்காலத்தின் மீட்டுருவாக்கம் என்பது அதிகபட்சமாக திரைச்சீலைகளின் தட்டையான நிச்சலனத்தோடு மேடைகளின் சட்டகத்துக்குள்ளேயே அடைந்துகிடந்திருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சினிமாவின் தொடக்கம் என்பதே முழுக்க முழுக்க பீரியட் படங்களாகவே இருந்தது. புராணக் கதைகள் மாத்திரமே படமாக்கப்பட்டதால் அத்தனை படங்களும் பீரியட் படங்கள் வைகையைச் சார்ந்தவைதான். ஆனால் புராணக் கதைகளின் பீரியட் எது என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் புராணங்கள் பெரும்பாலும் நிகழ்ந்தவை அல்ல. நமது இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், அவை உருவாக்கப்பட்ட காலத்தின் சாயலையே அவை கொண்டிருக்க இயலுமேயல்லாமல் அவற்றுக்கென்று சொந்தமாக காலமோ சாயலோ அறவே இருக்க முடியாது. இதனால் நம் தொடக்ககாலப் படங்கள் எதுவுமே பீரியட் படங்களாக அமைவதும் இயலாதே போயிருந்தது.

அதேபோல் இதிகாசங்களின் காலம், மன்னராட்சிக் காலம், குறுநில மன்னர்கள் அல்லது பாளையக்காரர்கள் காலம், முகலாயர் ஆட்சிக் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலம், சுதந்திரப் போராட்டக் காலம் - அதில் இரண்டாம் உலகப்போர்க் களம், சுதந்திரம் வாங்கி இருபது வருடக் காலம், அதற்குப் பிந்தைய இருபது வருடக் காலம் என்று இந்திய பீரியட் ஃபிலிம்களுக்கான களம் விரிந்து கிடக்கிறது.

இருந்தாலும் அவசியம் ஏற்பட்டாலேயொழிய யாரும் இந்த வம்பில் மாட்டிக்கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால் இதில் தொல்லைகள் அதிகம். ராஜாக்காலப் படங்களில் மார்பில் கவசம் இருக்கிறதோ இல்லையோ, காவலனிலிருந்து ஏவலன் வரைக்கும் புஜங்களில் ஒரு காப்பு காணப்படுகிறதே, அது எதற்காக என்று யாரும் கேள்வி எழுப்பினால் வெளிப்படும் பதில் இதுதான், 'அம்மைத் தளும்பை மறைக்க!'

இப்படிப் பார்த்துப் பார்த்து பீரியட் ஃபிலிம் கொடுக்க விரும்புவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், பீரியட் ஃபிலிம் என்று பம்மாத்து காட்டி அதில் கண்டதையும் கலக்கும் பல கலைஞர்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

Read more:http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=904