பொத்தாம்பொதுவாக சினிமா என்பது கலைவடிவம் அல்ல என்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டால் உலகில் உலவும் அத்தனை மொழிகளிலிருந்தும் வசைமாரி பொழிந்துவிடுவார்கள். ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அந்த யோக்கியதை இல்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைதான் இல்லை.
நடிகன் என்பவன் நிகழ்த்துகலைஞன். ஆனால் அவன் நடிப்பைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் வாய்ப்பு என்பதாக தமிழ் சினிமா கோருவதில்லை. பொதுவாகவே தமிழ் சினிமா அது ஒரு கூட்டு முயற்சி என்றபோதும் இயக்குனரின் திறமையை சற்றே அதிகமாகவே நம்புவதாகவே இருக்கிறது. ஓர் இயக்குனர் நினைத்தால் திருவிழாவில் காருக்குள் தலையை நுழைத்து வணக்கம் போட்டவன்கூட ஹீரோவாக ஆகிவிட முடிகிறது. இந்த இடத்தில் திரும்பவும் பாரதிராஜாவை வம்புக்கிழுக்க வேண்டியிருக்கிறது. அவர் தன் படத்தின் நாயகர்களை பெரும்பாலும் இவ்விதமாகத்தான் கண்டெடுத்தார். நாட்டியமாடத் தெரியாத பெண்ணை நாயகியாக்கிவிட்டு தவித்த சுரேஷ் கிருஷ்ணாவைப்போல நடிக்கத் தெரியாத இளைஞனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து நடிகனாக்கிக் காட்டுகிறேன் என்று அவர் படுத்திய இம்சைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருவர் நல்ல இயக்குனர் என்பதற்காக நடிக்கவே தெரியாத ஒருவரை நடிகராக்கிவிடலாம் என்கிற கொடுமை உலகின் வேறு எந்தெந்த மொழிகளில் எல்லாம் நடக்கிறதோ தெரியவில்லை.
சினிமா என்பது பல கலைகளின் கூட்டுத் தயாரிப்பு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் பல கலைஞர்களும் தங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து, வியர்வையை ஆறாய் ஓடவிட்டு தயாரித்துக் கொடுக்கும் கடைசிப் பண்டமான சினிமா உண்மையில் கலைவடிவமாகத்தான் இருக்கிறதா என்பதாக நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை.
ஏதோ மகேந்திரன் ஒரு சில படங்கள் கொடுத்தார். எப்போதோ ஒரு மணிரத்னம், அமீர், கேபிடல் சசிகுமார், ராம் என்று ஒருசிலர் வருகிறார்கள் (இந்தக் கட்டுரைத் தொடரில் திரும்பத் திரும்ப இவர்களின் பெயர்களையே சொல்ல நேர்வதிலிருந்தே இங்கே காணும் வறட்சியைப் புரிந்துகொள்ளலாம். மற்றபடி இவர்கள் எனக்கு மாமன்மார்களோ மச்சான்மார்களோ இல்லை. அல்லது இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னைக் கதாநாயகனாக்கி எதிர்காலத்தில் ஆட்சிப்பொறுப்பையும் ஒப்படைக்கப்போகிறார்கள் என்பதாகவும் நான் அபத்தமாக யோசிப்பதில்லை). நான் சொல்ல வருவதை மற்றவர்கள் சரிவர உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
முன்பே சொன்னதுபோல நடிகர் நடிகை தவிர வேறு யாராவது சினிமாவில் அனுபவம் அல்லது திறமை இல்லாமல் பணியாற்றிவிட முடிகிறதா? அதோடு சினிமாவில் பணியாற்றும் அத்தனைபேரும் கலைஞர்களா? உண்மையில் பல கலைஞர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் தொழிலாளர்களும் இணைந்து உருவாக்குவதே சினிமாவாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் சினிமா கலைவடிவமாகவும் சொல்லப்படலாம், தொழில்நுட்ப சாத்தியமாகவும் அறியப்படலாம், உற்பத்தி செய்யப்பட்ட விற்பனைப் பொருளாகவும் சந்தைப்படுத்தப்படலாம் என்பதுதானே உண்மை! இங்கேதான் வம்பே இருக்கிறது!
ஒரு சினிமா எடுக்க, பல கலைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. பல மூளைகள் ஒரே இடத்தில் செயல்படும்போது எதிர்கொள்ளப்படும் அத்தனை பிரச்சினைகளும் வெல்லப்படவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொழில்நுட்ப விற்பன்னர்கள் பலரின் பின்னாலும் அலைய வேண்டியிருக்கிறது. அந்த சினிமாவுக்குத் தேவைப்படும் அத்தனை தொழில்நுட்ப வடிவங்களையும் வகுத்துத்தருவது அவர்களது கடமையாக இருந்தபோதும், ஓர் இயக்குனர் தன் மனத்தில் வரைந்துவைத்திருக்கும் சினிமாவை அதேவிதமாக வடிவமைத்துத்தர அவர்களிடம் மன்றாட வேண்டியதிருக்கிறது. அதேபோல்தான் பல தொழிலாளிகளும் ஒரே இடத்தில் கூட்டப்பட்டு அவரவர் வேலையை செவ்வனே செய்யவைக்கப்பட வேண்டியதிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் முடிந்துதான் சினிமா என்பது நமது பார்வைக்கு வந்து சேர்கிறது. ப்ரீ ப்ரொடக்ஷன், ப்ரொடக்ஷன், போஸ்ட் ப்ரொடக்ஷன், ப்ரீ ரிலீஸ், ரிலீஸ், போஸ்ட் ரிலீஸ் என்று பல கட்டங்களை சினிமா கடந்து வருகிறது. இது ஒரு தொழில்நுட்பக் கண்ணோட்டம்.
ஆனால் இந்தக் கண்ணோட்டமே கலைவடிவத்துக்கான எமனாகவும் இருந்துதொலைக்கிறது. சினிமாவின் அத்தனை விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் இயக்குனரின் தலையிலேயே விழுகிற அவலம் தமிழ் சினிமாவில் வெகுகாலமாக நிகழ்ந்துவருகிறது. கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சீயீவோ போல இயக்குனர் செயல்படவேண்டுமானால் அவர் கொடுப்பது ஒரு வெற்றிகரமான பண்டமாகத்தான் இருக்குமே தவிர எப்படி கலைவடிவமாக இருக்க முடியும்?
மற்றக் கலைகள் அனைத்திலும் கலைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஓவியன் தனியாகத்தான் ஓவியம் வரைகிறான். அவனது சுதந்திரத்தை அவன் ஒருபோதும் இழந்துபோவதில்லை. வரைந்து முடிக்கிறவரைக்கும் அவனுக்கும் கலைக்கும் ஊடாக நிகழும் புணர்ச்சியின் பூரணத்துவமே வரைந்து முடிக்கும் ஓவியமாக இருக்கிறது. கவிஞன் மற்றும் எழுத்தாளர்களின் நிலைமையும் இதேவிதமானதுதான்.
பாடகன் பக்க வாத்தியக்காரர்களோடு இணைந்துகொள்கிறான். மேடையில் ஏறுமுன்பாக எத்தனையெத்தனையோ ஒத்திகைகளை அவர்கள் கூடி நிகழ்த்திவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இயைந்து செயல்படக்கூடிய வல்லமையை அவர்கள் கற்றிருக்கும் இசையறிவு கொடுக்கிறது. ஒரே லயத்தில் ஐந்தாறு வாத்தியங்கள் இணைவதை இது சாத்தியமாக்குகிறது. இதற்கு பதிலாக எல்லா வாத்தியங்களையும் பாடகனே வாசிக்க முனைந்தால் அல்லது திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் கச்சேரி கச்சேரியாகவா இருக்கும்?
சினிமா கலைஞர்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை என்பதனாலேயே இயக்குனர் என்பவனது பார்வை 360 டிகிரி சுழலவேண்டியதாயிருக்கிறது. இது எல்லாம் போதாது என்று சினிமாவின் வெற்றி தோல்வி என்கிற இரண்டு நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவன் என்பதாகவும் இயக்குனனே அறியப்படுகிறான். ஒரு சினிமாவின் தோல்வி அல்லது வெற்றி முதலில் பாதிப்பது அவனைத்தான். அல்லது தார்மீகப் பொறுப்பேற்பவன் அவன்தான். இந்தக் கருத்தாக்கமும் திரைப்பட உருவாக்கத்தில் கலையின் போதாமையைத் திணிக்கிறது.
தமிழ் சினிமாவைப் பிடித்துள்ள இன்னொரு மிகப்பெரிய கொடுமை, கலைக்காக சினிமாவுக்கு வருபவர்கள்கூட காசுக்காகத்தான் சினிமா என்கிற நிலைப்பாட்டை மிக விரைவில் எட்டிவிடுவதுதான்! ஓர் இளம் நடிகை, தன் இளமை உள்ளவரைக்கும்தான் சினிமாவில் சம்பாதிக்க முடியும் என்கிற அவசரத்தோடு செயல்படுவதைப்போல கிட்டத்தட்ட சினிமாவின் அத்தனை கலைஞர்களும் ஒருவிதமான அவசரகதியிலேயே செயல்படக்கூடிய சூழலே இன்று உருவாகியிருப்பது! சினிமா ஒரு தொழில் எனக் கொண்டு வாழும் தொழிலாளர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும்தான் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட முடிகிறது. ஏனென்றால் அவர்களின் மீது லைம்லைட்டின் வெளிச்சம் விழாது. சினிமாவின் வெற்றி தோல்வி நேரடியாக அவர்களை பாதிக்கவும் செய்யாது. ஆனால் இயக்குனர்களின் நிலையோ பரிதாபத்துக்குரியது.
ஒரு கதை கதாசிரியரால் எழுதப்பட்ட பிறகு அந்தக் கதையின் திரை வடிவம் குறித்த விவாதம் என்பதாக ஒன்று நிகழ்ந்து அதில் இயக்குனர் தன் பங்களிப்பைச் செலுத்துவது என்பது நேர்மையான நிகழ்வு. ஆனால் இயக்குனரே கதையைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இங்கே இருக்கிறது. அதாவது கதை விவாதம் என்பது கதையைப் பண்படுத்துவதாக இல்லாமல் கதையைக் கண்டுபிடிப்பதாக இங்கே இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த படங்கள், அதில் வென்ற படங்கள், தோற்ற படங்கள், அதற்கான காரணங்கள் இவையே கதை விவாதங்களின் முக்கிய வாக்குவாதங்களாக இருக்கின்றன. இதற்குப் பிறகே கதை விவாதிக்கப்படுகிறது. இவ்விதமாக விவாதிக்கப்படும் கதை, கலை என்பதன் வாசனையைக்கூட மோந்து பார்க்கத் துப்பில்லாததாகவே இருக்க முடியும். திரைப்படத்தின் ஆதாரமாகிய கதையிலேயே கலை என்கிற வகைமை கோரப்படாதபோது திரைப்படம் ஆரம்பத்திலேயே 'கலை' இழந்து வியாபாரத்தை நோக்கியே நகர்வதாக ஆகிவிடுகிறது.
இந்தப் போக்கு மாறவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இயக்குனரை கலையைக் குறித்து மட்டும் யோசிக்க வைக்கப்பட்டால் போதும். சினிமாவின் பல்வேறு பிரிவுகளும் அதற்கதற்கான விற்பன்னர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. முக்கியமாக நிதி, லொக்கேஷன், கால்ஷீட் என்கிற இம்சைகளை எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர், ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆகியோர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த வேலைகளையும் இயக்குனர்களே செய்யவேண்டிய பல சூழல்களும் தமிழில் நிலவுகின்றன. இதனால் ஒரு படம் எடுக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் இயக்குனரே எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைமை மாறவேண்டியதே முதல் தேவை. இயக்குனர் கதையை உள்வாங்கிக்கொள்வது. அதன் திரைவடிவத்தை அனுமானிப்பது, அதற்குத் தேவையான கலைஞர்களைக் கோருவது (தீர்மானிப்பதல்ல, தீர்மானித்தால் அதில் தலையிட வேண்டியிருக்கும்) ஆகியவற்றோடு தன் முதல்கட்ட வேலையை முடித்துக்கொள்ள முடியும் என்றால் அவரது மண்டையில் கலையின் ஊற்று தவிர வேறொன்றும் பெருக வாய்ப்பில்லாது போகும். இது முதல்கட்ட தேவை. அடுத்தகட்ட தேவை அவர் கோருவதையெல்லாம் அவர் கோரியபடியே கச்சிதமாகக் கொண்டுவந்து சேர்க்கும் நகுலபாண்டியர்களின் சேவை.
அது சரியாக அமையவில்லையானால் - ஓவியன் ஓவியத்தை வரைய ஆரம்பித்த பிறகு மஞ்சள் நிறம் மட்டும் இல்லை என்றால் என்ன செய்வான்? அதுமாதிரிதான் ஆகிவிடும். சினிமா என்பது கூட்டுச் செய்கை என்பதனால் நினைத்தபடியே எல்லாம் நடந்து முடியவேண்டும் என்று ஒரு டைம்ஃப்ரேமுக்குள் வேலை செய்ய முனைவது அபத்தமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படித் தடைகள் வரும்போது காம்ப்ரமைஸ் காலத்தை நீட்டுவதாக அமையவேண்டுமே தவிர கலையை விட்டுக்கொடுப்பதாக அமையக்கூடாது. எத்தனையோ காரணங்களுக்காக வீண் செலவு செய்யப்படும் சினிமாவில் கலைக்காகக் கொஞ்சம் காசை விட்டுக்கொடுப்பதால் என்ன குறைந்துவிடப்போகிறது?
இன்று பல இயக்குனர்களும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சினிமா இயக்குகிற அவலம் வேறு நிகழ்கிறது. இந்த அடிப்படையில் உருவாகும் திரைப்படம் இயக்குனருக்கு மிகுந்த சுதந்திரத்தைத் தருவதைப்போலக் காணப்பட்டாலும், அது ஒரு நிதி நெருக்கடியையே உண்மையில் ஏற்படுத்துகிறது. இதனாலேயே இந்த வகையில் தயாரிக்கப்படும் எந்தப் படமும் கலைவடிவமாக இருக்கவே முடிவதில்லை.
சமீபத்தில் ஒரு புதிய இயக்குனரிடம் ஒரு புதிய தயாரிப்பாளர் என்னிடம் சொன்ன கதையை அப்படியே சினிமாவாக்கிக் கொடுங்கள். செலவைப்பற்றிக் கவலைப்படவேண்டியது நான்; நீங்களல்ல! என்று சொன்னதாக ஊடகச் செய்தியொன்று பார்த்திருப்பீர்கள். இந்த உத்திரவாதம்தான் ஒரு நல்ல படத்தை ஓர் இயக்குனர் கொடுப்பதற்கான அஸ்திவாரம்.
இந்தமாதிரி ப்ரொடியூசர்கள் எத்தனை இயக்குனர்களுக்கு வாய்க்கிறார்கள்? பாரதி, நான் தமிழ்க் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எப்படியாப்பட்ட மேலான காரியம் அது! இதற்கிடையில் உப்புக்கும் புளிக்கும் பருப்புக்கும் அல்லல்படவேண்டிய கவலைகளை எப்படி என் மண்டைக்குள் செலுத்தலாம் என்று தமிழன்னையைக் கடிந்துகொண்டதுதான் ஞாபகம் வருகிறது.