சென்னை சங்கமம் என்கிற பெயரில் முதல்வர் மகள் கனிமொழியின் கனிவால் மிக பிரம்மாண்டமான விழா ஒன்று ஓசையில்லாமல் நிகழ்ந்து முடிந்தது. ஓசையில்லாமல் என்று நான் குறிப்பிடுவதற்குக் காரணம், சென்னையைத் தவிர வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்ட கலைஞர்கள் தவிர வேறு யாரும் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதுதான். இதுவே, ஒரு சினிமா விழா என்றாலோ, ஃபிலிம் ஃபெஸ்டிவல் என்றாலோ பாமரர்களும் படித்தவர்களும் சென்னைக்கு டிக்கெட் கிடைக்குமா என்று க்யூவில் நிற்க ஆரம்பித்துவிடுவது நாம் அவ்வப்போது காணும் கூத்துதான் என்பதால், ஒரு முக்கியமான கலாச்சார விழா மாநிலத்தின் மற்ற இடங்களில் எவ்விதமான அதிர்வையும் ஏற்படுத்தாமல் போனது ஆச்சர்யமான ஒன்றுதான்.
சென்னை சங்கமம் எனும் நீண்ட விழாவின் ஒரு பகுதியாக தமிழ் சங்கமம் என்கிற தலைப்பில் பொழுதுபோக்கு வடிவங்களிலிருந்து தீவிர இலக்கியம் வரைக்கும் கடந்த பிப்ரவரி 21 முதல் 25 வரை சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் பட்டிமன்றம், வழக்காடுமன்றம், கவியரங்கம், நவீன கவிதை வாசிப்பு, கட்டுரை வாசிப்பு, கதை சொல்லல் நவீன நாடக அரங்கேற்றங்கள் என்று ஒரே கோலாகலமாக இருந்தது (மேம்பாலங்கள் மட்டுமல்ல, இந்த மாதிரி கொண்டாட்டங்கள்கூட சென்னைத் தமிழனுக்கு மட்டும்தான் என்று பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது).
இந்த விழாவின் கடைசி நாளில் நிகழ்ந்த கருத்தரங்கில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இதழியல் என்கிற தலைப்பில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். அரங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...
சலவைக்காரர்கள்
இக்கால இதழியல் கண்ணோட்டம்
ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம், அர்ச்சுனன் பெண்டாட்டிகளை எண்ண முடியாது என்று சொல்வது தமிழில் வெளிவந்த / வெளிவந்துகொண்டிருக்கும் இதழ்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஜான் கூட்டன்பெர்க் தயவால் அச்சு இயந்திரம் தோற்றுவிக்கப்பட்டபின் ஈய எழுத்துக்களைக் கையால் அச்சுக் கோர்த்து, காலால் அடித்துப் பார்த்த காலந்தொட்டே தமிழர்களுக்கு இதழ்களைத் தயாரிக்கிற ஆர்வமும் தொற்றிக்கொண்டுவிட்டது என்பதே உண்மை. அப்புறம் ஃபோட்டோ டைப் செட்டிங் வந்தபோது பத்திரிக்கைகளின் முகங்கள் மாறுகின்றன. நான்கு வண்ண இயந்திரங்களில் நெகடிவ் பிளேட்கள் கொண்டு லட்சக்கணக்கில் பத்திரிக்கைகள் அச்சடிக்கக்கூடிய சாத்தியம் இச்சமயத்தில் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நிகழும் லேசர் புரட்சியில் டிடீபி என்கிற முறை அமலுக்கு வருகிறது. இந்த வகையில் உங்கள் மேஜை மீதே உங்களுடைய இதழை நீங்களே தயாரித்துக்கொள்ள முடியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டோம். -இது இதழியலில் அச்சுத் துறையின் பங்கு. ஆனால் இதேவிதமான வளர்ச்சி இதழ்களின் உள்ளடக்கங்களிலும் இருக்கின்றதா என்று கேட்டால், ஆழ்ந்த மெளனத்தின் குழியில் நாம் விழுந்து விடுகிறோம்.
விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் நாடு முழுக்க வெளிப்படையாகவும் ரகசியமாகவும் நிகழ்ந்த பொதுக்கூட்டங்கள், தேசவிடுதலை என்கிற எண்ணத்தைப் பாமர மக்களின் மனத்தில் பதிய வைக்க எவ்வளவு உதவி செய்தனவோ, அதை விடவும் பல மடங்கு வீரியத்தோடு, படித்தவர்களின் மத்தியில் விடுதலை தாகத்தைத் தோற்றுவிக்கத் தூது சென்றன அந்நாள் பத்திரிகைகள். பத்திரிகைகள் இல்லாது போயிருந்தால் பாரதி என்ன செய்திருப்பான் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். விடுதலை விடுதலை என்று ஒரே நோக்கமாக இருந்துவிட்டு கடைசியில் விடுதலை கிடைத்தபோது வேறு வேலை வெட்டி இல்லாது முடங்கிப்போன பல துறைகளைப் போல பத்திரிக்கைத் துறை ஸ்தம்பித்து போகவில்லைதான். அது அடுத்தபடியாக கனவுகளைப் புனைகிற வேலையை எடுத்துக்கொண்டது. அது மிகவும் சுலபமானது. கனவுகளைப் புனைந்துகொண்டே போகலாம். ரீல் ரீலாகப் புனையலாம். நடப்பது நடக்கட்டும், நடக்காதது பற்றி பத்திரிக்கைக்கு எந்த அக்கறையும் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நூறு கல்லை வீசினால் ஒரு கல்தான் காயில் படும் என்பதை அது அறிந்தே இருக்கிறது.
அந்தக் காலத்தில் வாசனும் கல்கியும் போட்டுக்கொண்ட சண்டையைப் பற்றி விலாவாரியாக எழுதி முடித்துவிட்டார்கள். அதைப் பற்றி இங்கே நாம் பேச வேண்டியதில்லை. தனிமனிதர்களுக்குள் இருக்கின்ற விருப்பு வெறுப்புக்கள் பொது புத்தியாக மாற்றப்படுகிற அவலத்தை அவர்கள்தான் தமிழில் முதலில் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதாகச் சொல்லலாம். அதுதான் இப்போது மீடியாக்களின் அத்தனை வடிவங்களிலும் பரவிக்கிடக்கிறது. கட்சிக்கு ஒரு பத்திரிக்கை ஜாதிக்கு ஒரு பத்திரிக்கை கட்சிக்கு ஒரு டீவி ஜாதிக்கு ஒரு டீவி என்று பெரும் வணிக மற்றும் அதிகாரப் போட்டி இப்போது ஏற்பட்டிருப்பதற்கான ஆணிவேர் அந்தக் காலத்து விகடன் கல்கி போரில்தான் அடங்கியிருக்கிறது. பத்திரிகை அதிகார மையமாக உருவாகும்போது அது ஒரு அரசனைப் போன்ற வடிவத்தை எடுத்துவிடுகிறது. அரசனை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. அரசனை எதிர்கொள்ள இன்னொரு அரசன்தான் வரவேண்டும். புரட்சியாளர்கள் வரலாம். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது அவர்களும் அரசர்களாகிப் போய்விடுகிறார்கள். அதனால் அதிகாரம் தன் கொலைப் பற்களால் அத்தனைபேரையும் காயப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. குறுக்கீடுகளை நசுக்கிவிட யத்தனிக்கிறது.
பத்திரிகைகளின் மிகப் பெரும் ஆயுதம் பொய்கள் என்று சொன்னால் மிகையில்லை. உண்மையைத் திரிப்பதன் வாயிலாக இல்லாத ஒன்றின் பூதாகரத்தை உருவாக்கிக் காட்டும் அதிகாரம் பத்திரிகைகளை சிதைத்துப்போட்டிருக்கிறது. சிறியதாக உள்ள ஒன்றை மிகப் பெரியதாகவும், மிக உன்னதமான ஒன்றை அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதாகவும் பத்திரிகைகளால் நம்ப வைக்க முடிகிறது. ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலாதவனாகவே வாசகன் எப்போதும் இருக்கிறான். அவனைப் பொருத்தவரை அவன் எதையெல்லாம் வாசிக்கிறானோ அவையெல்லாம் உண்மைகள். எழுதப்படுகிற அத்தனை செய்தியும் உண்மையைத் தவிர வேறில்லை. வணிகப் பத்திரிகைகளில் 'கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே' என்று குறிப்பிடுவதைப்போல - ஒரு செயதித் தாளில், 'பத்திகளில் காணும் செய்திகள் யாவும் உண்மையே' என்று எந்த உத்திரவாதமும் வழங்கப்படவில்லை என்பதை அவன் ஒருபோதும் யோசித்துப் பார்த்ததுமில்லை. இதனாலேயே கதைகளில் உள்ள உண்மையையும் செய்திகளில் வரும் பொய்யையும் பிரித்தறிய இயலாதவனாக இருக்கிறான் வாசகன். இது யாருக்குத் தெரியுமோ இல்லையோ பத்திரிகைகளுக்கு நன்றாகவே தெரியும்.
வணிக சினிமாக்காரர்கள், ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப படம் எடுக்கிறோம் என்று சொல்வதன் வாயிலாக ரசிகர்களின் விருப்பம் என்பதாக ஒரு மாயையை உருவாக்குவதைப் போல, பத்திரிகைகளும் வாசகர்களின் விருப்பம் என்பதாக ஒன்றை தாமே உருவாக்கிக்கொள்வதில் கைதேர்ந்து வந்திருக்கின்றன. அனேகமாக அனைத்து வணிகப் பத்திரிகைகளுமே - அது நாளிதழாகவோ வார இதழாகவோ மாத இதழாகவோ இருக்கட்டும் -'பல்சுவை' என்கிற ஒரு வார்த்தையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. சினிமாவில் மசாலா என்றால் புரிந்துகொள்ளும் பலரும் இந்தப் பல்சுவை என்ற வார்த்தையைப் புரிந்துகொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. பல்சுவைத் திரைப்படங்களும் மசாலா பத்திரிகைகளும் என்று மாற்றிப்போட்டு அவர்களுக்கு அதை விளக்க முயலலாம் என்று தோன்றுகிறது.
அரசியல் ஆன்மீகம், செக்ஸ், வன்முறை, விளம்பரம் ஆகியவற்றை மட்டும் ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்தால் ஒரு சினிமாவையோ பத்திரிகையையோ உருவாக்கி விட முடிகிறது.
ஒரு இதழின் அடுத்த இதழ்கள் ஒரே மாதிரியான வடிவத்தையே கொண்டவையாக அமைய வேண்டும் என்பதே முக்கிய நியதி. அதுவே அதன் அடையாளம் என்பதால் அது தவிர்க்க இயலாதது. ஆனால் இந்த அமைப்பிற்குள் இயங்கும்போது நோக்கம் ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டியது முக்கியம். பத்திரிகை என்பது கடற்கரையில் கிடைக்கும் 'டைம் பாஸ்' கடலை இல்லை என்பதை வாசகன் உணர வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இது வாய்ப்பே இல்லை என்பதே வேதனையான உண்மை.
செய்தித்தாள்கள்
சமூகம் அல்லது ஒரு தேசம் நான்கு தூண்கள் நிற்கும் மண்டபம் என்று சொல்வார்கள். Judiciary, Legislation, Bureaucracy & Journalism. இதில் நான்காவது தூணாக இருப்பது பத்திரிகைகள். மற்ற மூன்று தூண்களை விடவும் நான்காவது தூண் சக்தி மிகுந்தது என்பது யாவருக்கும் நன்றாகவே தெரியும். ஏனென்றால் பேனாவின் வலிமையைப் பற்றி பாடல்கள்கூட புனைந்து முடித்துவிட்டோம். இந்த இடத்தில் மற்ற இதழ்களைக் காட்டிலும் மிகச் சரியாகப் பொருந்திப் போகக்கூடியவை நாளிதழ்களாக வெளிவரும் செய்திப் பத்திரிகைகள்தான்.
மற்ற மூன்று துறைகளும் மக்களுக்கு அன்னியப்பட்டு விலகி நிற்கின்றன. அவை வெளியிலிருந்து தம் வாழ்வில் நுழைபவை என்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அவை தங்களை ஆள விரும்புவை என்பதாகவும், தங்களை அடிபணிய வைப்பவை என்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பத்திரிகை என்பது அப்படியில்லை. அது வாசகனின் எண்ணவோட்டமாகவே இருக்கிறது. காகிதத்தில் காண்பது வாசகனின் கருத்தாக மாற்றமடைந்துவிடுகிறது. இதனால் செய்தித்தாள்களை ஒரு தேசத்தின் மக்கள் தங்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முயலுவதேயில்லை. அவர்கள் வேறு; செய்தித்தாள்கள் வேறு என்பதில்லை என்பதாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் அரசியல் வாழ்வில் உள்ளவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதரவான பத்திரிகைகளையே தங்கள் எண்ணவோட்ட ஒருங்கிணைப்புக்காகப் பயன்படுத்துகிறார்கள். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை எது ஈடு செய்கிறதோ அந்த நாளிதழை நாடுகிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களை ஊடுருவி அவர்களுக்குள் உருவாக்குவதே அந்த நாளிதழ்கள்தான் என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை.
ஒரு கோர விபத்து நிகழ்ந்தால் அது வெறும் செய்தியாக இருந்தால் தனக்குப் போதாது என்று இருபத்தொன்றாம் நூற்றாண்டு வாசகன் நினைக்கிறான். அந்த கோரத்தை அவன் பார்த்து ரசித்தாக வேண்டும். அப்போதுதான் அவனது மனம் திருப்தியடைகிறது. இந்தியா பாகிஸ்தான் பார்டரில் ஒரு ரயில் வெடித்துச் சிதறுகிறது. அது எரிந்துகொண்டிருப்பதை வாசகன் பார்த்தாகவேண்டும். அந்தத் தீயின் கொழுந்தை அவன் தீண்டிப் பார்த்தாக வேண்டும். காகிதத்தில் ஒரு பக்கம் முழுக்க எரிந்துகொண்டிருக்கிறது தீ. அதை அவன் கண்களால் பருகுகிறான். எரிந்த; சிதைந்த பிணங்களை அவன் அள்ளிப் புசிக்கிறான். உயிருக்குப் போராடும் சக மனிதனை அவன் தன் அனுதாபத்தோடு ரசிக்க வேண்டுமானால் அவனைப் பார்த்தாக வேண்டுமல்லவா? அதற்காகத்தானே - அவன் உறங்கும் வேளையில் செய்தித்தாள் சகோதரர்கள் உறக்கம் கெட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைக் கடமை என்ன? வாசகன் காலையில் எழுந்து பல் துலக்காமல் காஃபி குடிக்கும்போது கையில் முந்தைய நாள் செய்திகளைக் கொண்டுவந்து கொட்டிவிடவேண்டும். அவன் பருகும் காஃபியில் பிணங்களும், பாலியல் வன்முறைகளும் காணாமல் போன குழந்தைகளும், கள்ள உறவுகளும் கலந்து கொடுத்தாகவேண்டும்.
இந்த மாயவலைக்குள் வாசகனைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டபின்தான் பத்திரிகைகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது என்று தோன்றுகிறது. இதனால் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டே போகவேண்டிய நிர்பந்தத்தை அவை எட்டிவிட்டன.
செய்தித்தாள்கள் தாங்களே நினைத்தாலும் வாசகனின் தரத்தை மேம்படுத்திவிட முடியாது என்கிற நிலையை அடைந்துவிட்டன. ஒரு பத்திரிகை ஒரு செய்தியையோ அதற்கான புகைப்படத்தையோ கொடுக்க தவறினால், அதைத் தவறாமல் கொடுத்துவிடும் வேறொரு பத்திரிகை பெரும் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறது. இவ்வாறாகப் போட்டி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவும், மிகுந்த கொடூரம் நிறைந்த ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. இந்த வேகத்தில் இதயம் என்கிற ஒன்றைச் சுமந்துகொண்டு செய்தி சேகரிக்கப் போனால் வெறும் வெள்ளைக் காகிதத்தைத்தான் அடுத்த நாள் கொடுக்க முடியும் என்கிற நிலையைப் பத்திரிகைகள் எட்டிவிட்டன. இந்த இடத்தில் ஒரு உதாரணம் சொல்ல முடியும்.
தமிழகத்தின் முக்கிய மாலைப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் குழுவில் உள்ள என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவித்த செய்தி இது. ''தினப் பத்திரிகைகள்தான் உண்மையாகவே வார மற்றும் வார இருமுறை செய்திப் பத்திரிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றன''. தினப்பத்திரிகைகள் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் பந்தயம் மிகுந்த பயங்கரங்களை உள்ளடக்கியது. நீங்கள் நினைத்துப் பாருங்கள், யாரோ ஒரு ஆள், அவர் பிரபலமானவர் அல்ல. அவரை யாரோ எதற்காகவோ கொலை செய்துவிடுகிறார்கள். போலீஸ் கேஸ். செய்தி எங்களுக்கு எட்டுகிறது. எல்லாப் பத்திரிகைகளுக்கும்தான் எட்டுகிறது. ஆனால் புகைப்படம் வேண்டுமென்றால் என்ன செய்வர்கள். பல இதழ்களிலும் புகைப்படம் இல்லாமல் அந்தச் செய்தி வெளிவருகிறது. ஒரு பத்திரிகை மட்டும் புகைப்படம் வெளியிடுகிறது. அதற்கு அது என்ன செய்தது என்பது தெரியுமா? அந்தப் பத்திரிகையின் புகைப்படக்காரர் மரணம் நிகழ்ந்த வீட்டுக்குப் போகிறார். பிணத்தைப் போட்டுக்கொண்டு உறவினர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். அவர் யாருடைய தயவுக்காகவும் காத்திருக்கவில்லை. சுவற்றில் தொங்குகிற படங்களைப் பார்வையிடுகிறார். தானே ஒரு சேரை இழுத்துப்போட்டு இறந்து போனவரின் புகைப்படத்தை (அது குடும்பத்தோடும் இருக்கலாம்) கழற்றி தரையில் வைக்கிறா¡ர். அதை ஒரு புகைப்படம் எடுக்கிறார். திரும்பவும் சேரில் ஏறி இருந்தவிதமாகவே மாட்டுகிறார். கேமராவை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். ஒருவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. அது அவருக்குத் தேவையில்லாதது.
இந்த உதாரணத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? கடமையை செய்யும்போது மனிதாபிமானம் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிற துறைகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்தத் துறைகளில் பணியாற்ற நீங்கள் விரும்புகிறீர்களா என்று உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள்.
பல வருடங்களாகவே தமிழகத்தின் நேரடியான அரசியல் சார்பில்லாத டாப் 3 நாளிதழ்கள் என்று சொன்னால் அவை தினத்தந்தி, தினமணி மற்றும் தினமலர் ஆகியவைதான். இந்த மூன்றும் எவ்விதமான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டன? எவ்விதமான வளர்ச்சி நிலைகளை எட்டின? தற்போது எவ்விதமான போட்டியில் ஈடுபடுகின்றன?
தமிழகத்தைப் பொருத்தவரை சிவந்தி ஆதித்தனாரின் தினத்தந்தி ஏற்படுத்திய பரபரப்பு மிகவும் முக்கியமானது. சாதாரண மனிதனையும் செய்தித்தாள் படிக்கக்கூடியவனாக மாற்றிய பெருமை அவரையே சாரும் என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தைப் பாருங்கள். அந்த செய்தித்தாள் தன் அடையாளத்தைக் கொஞ்சம்கூட மாற்றிக்கொள்ளாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த கல்வி விழுக்காடு என்ன இப்போது உள்ள கல்வி விழுக்காடு என்ன என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் சாமான்ய மனிதர்களுக்கான இதழ் என்கிற தளத்திலிருந்து அது ஏன் இன்னும் கொஞ்சம் ஒருசில படிகள் முன்னேறி வரக்கூடாது என்கிற ஆதங்கம் எழவே செய்கிறது.
அதற்கு நேரெதிரான நோக்கத்தோடு துவங்கப்பட்டது தினமணி. படித்தவர்களுக்கான இதழ் என்கிற பரவலான அடையாளம் அதற்கு உண்டு. அதன் முக்கிய ஆசிரியர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு விலகும் வரைக்கும் அது எந்த இதழையும் போட்டியாக எடுத்துக்கொள்ளாமல், தன் வழியில் பயணித்துக்கொண்டிருந்தது. உதாரணமாக, அப்போது கற்பழிப்பு, பலாத்காரம் போன்ற வார்த்தைகளை அது வெளியிடாது. பாலியல் வன்முறை என்றுதான் நீங்கள் அதில் வாசிப்பீர்கள். ஆனால் இப்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. அவர்களும் கற்பழிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் மிகுந்த அவலம்.
என் வாகனத்தைப் பழுது பார்ப்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள். குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க என்ன செய்யலாம் என்று ஒருநாள் அவர் என்னிடம் கேட்டார். வீட்டில் என்ன செய்தித்தாள் வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். எதையும் வாங்குவதில்லை என்று அவர் சொன்னார். செய்தித்தாள்தான் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் முக்கிய ஊடகம் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது. செய்தித்தாள் வாங்கிப்போட்டால் பெண் குழந்தைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று அவர் சொன்னார். எனக்கு மிகுந்த அதிர்ச்சி. அவர் தொடர்ந்து சொன்னார். கற்பழிப்பு, அவனோடு இவள் ஓடினாள், இவளுக்கு அவன் கள்ளப்புரு்ஷன் என்றெல்லாம் என் குழந்தைகள் படித்தால் அவர்களை எப்படி நான் கரை சேர்ப்பேன்?
எப்படி இருக்கிறது பாருங்கள், தன் மூன்று மகள்கள் எதைப் படிக்கக்கூடாது என்று அவர் நினைக்கிறாரோ அதை அவர் மிகுந்த ஆசையோடு படிக்க முனைகிறார். செய்தித்தாள் என்று சொன்னாலே அவரைப் பொருத்தவரைக்கும் செக்ஸ் மற்றும் வன்முறைதான். இந்த நிலையில் அவருக்கு நான் பரிந்துரைத்த பத்திரிகை தினமணி. அதற்கு அவர் சொன்ன பதில் அதில் எதுவுமே விபரமாக வராதே என்பதுதான். அவர் விபரம் என்று சொல்வது எதை என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த நிலையையும் தினமணி கடந்து வந்துவிட்டது என்பதுதான் வேதனையான உண்மை.
இந்தப் போட்டியில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தன் அமைப்பிலும் செய்திகளிலும் பெரும் மாற்றங்கள் செய்து முன்னணிக்கு வந்து நிற்பது தினமலர்தான் என்று தோன்றுகிறது. நான் குறிப்பிடுவது வணிகப் போட்டியில் மட்டும்தான் என்பதை நினைவு கொள்ளுங்கள். சரியான ஒரு தருணத்தில் தினமலர் தன் போட்டியாளர்களான தினத்தந்தி மற்றும் தினமணி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தைக் கண்டுபிடித்து செயல்படுத்த ஆரம்பித்தது. அதுவே அதன் வர்த்தக ரீதியான வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
ஆனால் இந்தப் போட்டிகளால் வாசகனுக்குக் கிடைத்திருப்பது சகல அயோக்கியத்தனங்களையும் வீட்டின் வரவேற்பறையில் கொட்டிவைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு மட்டுமே. இவற்றின் வாயிலாக அவனது மனத்தில் மெல்ல மெல்லக் கலந்துவிட்டிருக்கும் விஷம் முறிய மருந்துகள் இனியும் கண்டுபிடிக்க இயலாதவை.
வணிக இதழ்கள்
செய்தித்தாள்களின் நிலை இப்படியிருந்தால் வாரப்பத்திரிகைகளான வணிக இதழ்களின் பங்களிப்போ வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. அவை எழுத்தாளர்களை பிச்சைக்காரர்களாக்கிய பெரும் கைங்கர்யத்தை நிகழ்த்திக் காட்டின.
வழவழப்பான காகிதங்கள், வண்ண வண்ண பக்கங்கள், சினிமா அழகிகளின் சிரித்த முகங்கள் கொப்பளிக்கும் முகப்புகள், முலைகள் தத்தளிக்கும் நடுப்பக்கங்கள், பக்கத்துக்குப் பக்கம் அவர்களின் அங்கலாவண்யங்கள், ஆங்காங்கே தெரியும் உள்ளாடைகளை உரசிக்கொண்டு சின்னச் சின்ன சினிமா செய்திகள், திரைப்படங்களுக்கு மேதைகள் போல மார்க் போடும் மதிப்பீடுகள், அந்தந்த மாதத்துக்கான தெய்வங்களின் அழகான ரூபங்கள், வாழ்வியலைக் கற்பிக்கும் சாமியார்களின் பெயரைப் போட்டு கோஸ்ட் ரைட்டர்கள் எழுதும் தொடர் கட்டுரைகள், ட்ராட்ஸ்கி மருது முதலான நவீன ஓவியர்களின் ஓவியங்களோடு பரபரப்பான இலக்கியவாதிகளின் தொடர்கள், ஆறெழு வித்தியாசங்கள் முதலான வாசகர்களுக்கான போட்டிகள், பணம்தான் வாழ்க்கை என்கிற அறிவிப்போடு தொடர் கட்டுரைகள், பரபரப்பான செய்திகளின் follow up-கள், இலவசங்கள், விளம்பரங்கள், விளம்பரங்கள், விளம்பரங்கள்.
-இவைதான் இன்றைய வணிகப் பத்திரிகைகளின் அடையாளங்கள். இந்தக் காலகட்டத்தில் வெளிவரும் ஒவ்வொரு இதழும் மசால்வடையை ஐஸ்க்ரீமில் போட்டுப் பிசைந்தது போன்ற வடிவத்திலேயே இருப்பது வியப்புக்குரியது. சுண்டல் மடித்துக் கொடுக்கப்படும் வணிக இதழ்களின் ஒரு காகிதத்தைப் பாருங்கள், ஒருபக்கம் ஏதாவது ஒரு தெய்வத்தின் படம் தென்பட்டால் அதன் மறுபக்கம் கண்டிப்பாக ஒரு அசின் அம்மனோ, நயன்தாரா சிம்புவுக்குக் கொடுக்கிற முத்தமோ, நமீதாவின் வளைவுகளோதான் தென்படும். என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு படங்களுமே ஆபத்தானவைதான். அது அசினாக இருந்தாலும் சரி, அம்மனாக இருந்தாலும் சரி.
வாரப் பத்திரிகைகளில் ஒரு சில அற்புதங்கள் அடிக்கடி அரங்கேறும். திடீரென்று ஒரே நடிகையின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி அத்தனை முன்னணி பத்திரிகைகளும் வெளிவரும். ஒரு சில நடிகர்கள், ஒரு சில பிரபலங்கள், ஒரு சில விளையாட்டு வீரர்கள், ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில அதிகாரிகள் மட்டும் திரும்பத் திரும்ப பத்திரிகைகளில் தென்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். நாட்டில் நாள்தோறும் எத்தனையோ பேர் போலீசின் பிடியில் மாட்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருசிலரை மட்டும் ஜாமீனில் வெளிவந்தாலும் வெளியே தலைகாட்ட இயலாத அளவுக்கு பத்திரிகைகள் துரத்தும். முந்தைய இதழில்தான் அருள்பொங்க சாத்வீகமாகப் பேட்டியளித்திருந்த மடாதிபதி அடுத்த இதழில் காமுகனாக மாறிப்போயிருப்பார். இவையெல்லாம் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன என்று சிந்திக்க இயலாத அளவுக்கு அடுத்தடுத்த பரபரப்புகளில் வாசகனின் மனத்தை செலுத்தும் வித்தையில் கைதேர்ந்துவிட்டன பத்திரிகைகள்.
வணிகப் போட்டியில் இதுவரைக்கும் இல்லாத புதுமையாக அகில உலகத்திலேயே அதிகமாக விற்பனை ஆகிற பத்திரிகை எங்களுடையதுதான் என்று அத்தனை பத்திரிகைகளும் சொல்லிக்கொள்கிற அவலம் இப்போதுதான் நிகழ்கிறது. வாசகன் எதை நம்புகிறான் என்பதுதான் தெரிவதேயில்லை.
படைப்புகளைப் பொருத்தவரைக்கும், முந்தைய தலைமுறையில் முக்கிய படைப்பாளிகள் யாவரும் பெரும் வணிகப் பத்திரிகைகளையே சார்ந்திருக்குமாறு நிகழ்ந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழின் முக்கிய படைப்பாளிகள் யார் என்பது தமிழனுக்குத் தெரியாத விதமாக ரகசியமான ஒரு இருட்டடிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வணிகப் பத்திரிகைகள் நவீன எழுத்தாளர்களை சீண்டுவதுமில்லை. அப்படியே சீந்தினாலும் அது ஒரு தீபாவளி மலராகவோ, பொங்கல் மலராகவோ மட்டுமே இருக்க முடியும். அதோடு அவர்களின் கடமைகள் முடிந்துபோய்விடுகின்றன. ஒரு நல்ல படைப்பாளி தன் அடுத்த படைப்பை அடுத்த தீபாவளிக்கு செய்தால் போதுமானது. இல்லையானால் வணிகப் பத்திரிகைகளின் படைப்புக் குவியலில் அவனுடைய படைப்புகளும் புதைந்து போய்விடும் அபாயம் நேர்ந்துவிடும்.
ஒரு இதழின் ஆதாரமாக இருப்பது அந்த இதழில் இடம்பெறும் படைப்புகள்தான் என்கிற ஞாபகம்கூட இல்லாமல் பத்திரிகைகள் செயல்படுகிற காலகட்டம் இது. படைப்பாளி பிச்சைக்காரன் போல. அவனுக்குத் தேவைப்படுவது ஒரு எலும்புத்துண்டு மாத்திரமே என்று அவர்கள் தீர்மானித்து பல வருடங்கள் ஆகிறது. எழுதுவதன் வாயிலாக வயிற்றைக் கழுவ ஒருவன் முனைந்தால் அவன் என்ன கதியை அடைவான் என்பதற்கு முந்தைய தலைமுறையிலேயே பாரதி, புதுமைப்பித்தன் என்று உதாரணங்கள் காணப்படுகின்றபோது இந்தக் காலகட்டத்தில் எதை நாம் புதிதாக எதிர்பார்க்க முடியும்?
உலகிலேயே, ''நான் ஓர் எழுத்தாளன்'' என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவனிடம் ''சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்படுவது நமது தமிழ்ச் சூழலில் மட்டுமே நடக்கும் விபரீதம். இது விளையாட்டான வி்ஷயம் என்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்த அவல நிலைக்கு அவனைத் தள்ளியது அவனது வாசகனா? அவனது வறுமையா? இல்லை. அந்தப் பாவம் பத்திரிகைகளை மட்டுமே முழுமையாகச் சாரும். பத்திரிகை வெளிவர படைப்புகள் வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமானவை விளம்பரங்கள். விளம்பரங்கள் கிடைக்க 'தாங்கள்தான் நம்பர் ஒன்' என்கிற விதத்தில் விளம்பரம் செய்துகொள்வதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். படைப்பாளிக்கு அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூடக் கண்ணில் காட்ட வேண்டியதில்லை. அவனுக்கு அதைக் கேட்கக்கூடத் தெரியாது. ஒருவேளை அவன் குரலை உயர்த்திவிடாமல் இருக்கவேண்டுமானால் அதற்கும் ஓர் உபாயம் இருக்கிறது. அந்த உபாயம் தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். அதை எந்த வார இதழ் முதலில் செய்தது என்று நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. அந்த உத்தி என்ன என்று மட்டும் சொல்கிறேன். படைப்பாளி எதிர்த்துக் குரல் எழுப்பாமல் இருப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உபாயம் இதுதான். அது வாசகனை படைப்பாளியாக்கி விடுவது. வாசகன் தன் படைப்பைப் பார்த்து பூரிக்கட்டும், அடுத்த வாசகன் அடுத்த இதழில் பூரிப்படையட்டும். சமத்துவம்தான். ஒருசிலர் மட்டும் ஆள்வதற்கானதல்ல இந்த சாம்ராஜ்யம்.
எத்தனை வியாபார தந்திரம் பாருங்கள். வெளி தேசங்களிலும் நம் நாட்டிலேயே வெளி மாநிலங்களிலும்கூட ஓர் எழுத்தாளன் மிகுந்த கர்வத்தோடு தன் படைப்புக்கான கூலியை நிர்ணயிக்க முடிகிற நிலை இருக்கும்போது, உங்கள் அன்னைத் தமிழிலோ தன் படைப்பு பரவலான வாசகர்களுக்கு மறுக்கப்படும் நிலையே ஓர் எழுத்தாளனுக்கு வரமாகக் கிடைத்திருக்கிறது.
பல்சுவை என்கிற எல்லையையும் வணிக இதழ்கள் இப்போது கடந்துவந்து கொண்டிருப்பதும் உண்மைதான். அரசியல், ஆன்மீகம், ஜோதிடம், இலக்கியம், குழந்தைகள், வாகனங்கள், விவசாயம் என்று தனிப்பட்ட வி்ஷயங்களுக்கான இதழ்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழல் இன்றைக்கு காணப்படுகிறது. பல்சுவை என்று இல்லாமல் தனித்தனி வி்ஷயங்களுக்கான இதழ்கள் வெளிவருவது ஆரோக்கியமான சூழல்தானே என்று நீங்கள் நினைக்கலாம். தனித்தனித் துறைகளுக்கான தனித்தனிப் பத்திரிகைகள் வெளிவருவது முன்னேற்றப் பாதையில் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவை ஒரு சில பத்திரிகைகளின் வியாபார வடிவங்கள் என்பதே கவனிக்க வேண்டிய வி்ஷயம். இதன் வாயிலாக பத்திரிகைத் துறை monopoly அல்லது deopoly நிலையையே எட்ட முடியும். நாட்டில் ஒருசிலர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலையையே எட்ட முடியும். நாட்டில் ஒருசிலர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலையையே எதிர்காலம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். தங்கள் பலத்தைக்கொண்டு பிறர் உள்ளே நுழையவே முடியாத துறையாக பத்திரிகைத்துறை, ஒருசில முதலாளிகளின் கைகளில் முடங்கிப்போகிற அபாயம் நிகழ்ந்துவிடும். இதுவே உண்மையான பயங்கர நிலை.
சிற்றிதழ்கள்
வணிக இதழ்களின் வண்டவாளம் இப்படி இருந்தால், தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களின் உண்மையான முகம் என்ன?
நான் ஆரம்பத்தில் சொன்னேன், ஆற்று மணலும் அர்சுனன் பெண்டாட்டிகளும் என்று. அதை ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டுமானால் இந்திய அரசின் http://rni.nic.in வெப்சைட்டுக்குள் நுழைந்து பாருங்கள். பதிவு செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ் இதழ்கள் என்கிற பட்டியலில் மட்டும் இன்றைய தேதிக்கு 3831 பத்திரிகைகள் இருக்கின்றன. பொள்ளாச்சி நசனின் வெப்சைட்டான http://www.thamizhm.net-ல் அவர் தனக்கு தற்போது வரும் இதழ்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். அதில் மட்டும் கிட்டத்தட்ட நூறு இதழ்களின் பெயர்கள் காண்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனிச்சுற்றுக்கான இதழ்கள். நசனுக்குக் கிடைக்காத இதழ்களின் பட்டியல் தனியாக ஐநூறோ ஆயிரமோ இருக்கலாம். மொத்தக் கூட்டுத் தொகையைப் பாருங்கள். இத்தனை இதழ்கள் உண்மையாகவே வருகின்றனவா, இத்தனை இதழ்களை யாரெல்லாம் நடத்துகிறார்கள், யாரெல்லாம் வாசிக்கிறார்கள், எங்கே இவை கிடைக்கின்றன, இதில் ஏதாவது வர்த்தகம் இருக்கிறதா, இந்த இதழ்களின் நோக்கம் என்ன, உள்நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆதியில் கையெழுத்துப் பத்திரிக்கை நடாத்திக்கொண்டிருந்த தமிழாசிரியர்களும், இளைஞர்களும், போராளிகளும் அச்சுத்துறையின் வளர்ச்சியால் பெரும் உற்சாகம் அடைந்தார்கள். கிட்டத்தட்ட ஆர்வக்கோளாறு என்று சொல்லப்படத் தக்க இந்த உற்சாகத்தால் அருகம்புல் போல விளைந்தவைதான் சிறு பத்திரிகைகள். இது பொதுவான கருத்தல்ல. ஏனென்றால் உண்மையாகவே தமிழுக்கும் இலக்கியத்துக்கும் கலைகளுக்கும் தொண்டு செய்த சிறு பத்திரிகைகளின் கணிசமான பட்டியல் நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான்.
இருந்தாலும் இன்றைய தமிழ்ச்சூழலில் சிற்றிதழ்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை சற்று உற்றுப் பார்க்கலாம். உண்மையான சமூக அக்கறையோடு வெளிவரும் சிற்றிதழ்கள் எவை என்ற நாம் பட்டியலைத் தயாரிக்க முற்பட்டால் அதில் எத்தனை இதழ்கள் தேறும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. அதற்கான அடிப்படைக் காரணம், சிற்றிதழ்கள் நடத்துபவர்களின் பிரக்ஞைநிலை குறித்த தெளிவு நமக்கு இல்லாது போவதுதான் என்று தோன்றுகிறது. அதோடு சிற்றிதழ்கள் அனைத்தையும் நாம் தரிசித்துவிடவும் முடிவதில்லை. மிகச் சொற்பமாக உள்ள படைப்பாளிகளுக்கு மத்தியில் அவை பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அடுத்த இதழுக்கான படைப்புகளின் தேவை முன்னிட்டும், சுயத்தம்பட்டம் பொருட்டுமே அவை பலருக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு சிற்றிதழ் மிகுந்த வீரியத்தோடு தொடங்கப்படுகிறது. பல நவீன எழுத்தாளர்களையும் அதன் ஆசிரியர் அணுகுகிறார், கடிதங்களாகப் பொழிகிறார். தொலைபேசி அழைப்புகள் பறக்கின்றன. இலக்கிய சந்திப்புகளில் நேரிலேயே வேண்டுகோள்கள் வைக்கப்படுகின்றன. ஒருசில சிற்றிதழ் ஆசிரியர்கள் படைப்பாளிகளின் ஊருக்கே வீட்டுக்கே போய், உங்களுக்கு இருக்கிறதா என்று கூட கேட்காமல் இரண்டு மூன்று வேளை உணவையும் உண்டு, உறங்கி, அவர்களின் கையைப் பிடித்தே எழுத வைத்து, ஊருக்குத் திரும்புகிற வண்டிச்சத்தத்தையும்கூட அவரிடமே வாங்கி வருகிற அற்புதத்தையும்கூட நிகழ்த்திவிடுகிறார்கள். இதழ் சிறப்பாக வரவேண்டும் என்கிற காரணத்தை முன்னிருத்தி தங்கள் வாழ்வைக்கூட இழந்து தெருத்தெருவாக அலைய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒரு இதழுக்கான படைப்புகள் சேகரிக்கப்பட்ட பிறகு அடுத்த பிரச்சனை முளைக்கிறது. அச்சக உரிமையாளர் காகிதம் வாங்கவும் அச்சடித்துத் தரவும் காசு கேட்கிறார். என்ன அநியாயம் பாருங்கள், ஒரு மனிதன் தன் வாழ்வையும் உறவுகளையும் தொலைத்து, தெருத்தெருவாக அலைந்து, ஏறாத படியெல்லாம் ஏறி ஒருசில உலக இலக்கியங்களைத் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறான், கேவலம் ஓர் அச்சக உரிமையாளன் அதை அச்சடிக்க காசு வேண்டும் என்று கேட்கிறான். இது எந்த ஊர் நியாயம்? எப்போது இந்த நாடு திருந்தும்? நீங்களே சொல்லுங்கள்.
இதற்குப் பிறகும் ஏதோவொரு அற்புதம் நிகழ்ந்து, வரவேண்டிய காலத்திற்குப் பிந்தைய ஏதோ ஒரு மாதத்தில் அந்த இதழ் வெளிவந்தே விடுகிறது. என்ன, ஆயிரம் இதழ் ஆசைப்பட்டது முன்னூறு என்று முடிந்து விட்டது. அவ்வளவுதானே? தமிழில் முன்னூறு பேருக்கு அதிகமாக ஒரே ஒரு அறிவு ஜீவியைக் காட்டுங்கள், அப்புறம் பார்க்கலாம். இதழ் வந்துவிட்டது. ஒரே கொண்டாட்டம்தான். அதை இரண்டாக மடித்து ஒரு ரூபாய் ஸ்டாம்ப்பு ஒட்டி அந்த முன்னூறு பேருக்கு அனுப்பியுமாகிவிட்டது. இனி அதன் தலையெழுத்து. ஒரு இரண்டு மாசத்துக்கு சோலியைப் பார்த்துக்கொண்டு கிடக்கலாம். அப்புறம் வீட்டில் உணவு மறுக்கப்படும்போதோ, ஏதாவது வேலைக்குப் போக நிர்பந்திக்கப்படும்போதோ படைப்புகளைக் கோரி ஒரு தேசாந்திரம் புறப்பட்டுவிட வேண்டியதுதான்.
இது ஒரு வகை. இன்னொரு வகை, மூன்று அல்லது நான்கு இதழ்கள் கொண்டுவந்து பரவலாகத் தன் பெயரைப் பதிவு செய்துகொண்ட பிறகு உடனடியாக இதழை நிறுத்திவிட்டு வணிகப்பத்திரிகைகளில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று அலைவது, அல்லது அறிவு ஜீவிகளின் வரிசையில் இடம் ஏதாவது காலியாக இருக்கிறதா என்று நோட்டம் விடுவது.
இப்படியெல்லாம் இல்லாமல் வங்கியிலோ, கல்லூரியிலோ, அரசாங்கத்திலோ வேலை பார்க்கிற தைரியத்தில் உண்மையாகவே ஏதாவது செய்ய முடிகிறதா என்று முயன்று பார்க்கிற விருப்பத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சிறு பத்திரிகைகளும் உண்டு. ஏனென்றால் சிறுபத்திரிகைகளின் முதுகுக்குப் பின்னால் கையை வைத்துத் தாங்கிக்கொள்ள பொருளாதார நம்பிக்கை ஒன்று மிகுந்த அவசியம். ஏனென்றால், அறிந்தோ அறியாமலோ ஆரம்பிக்கப்படுகிற சிற்றிதழ்கள் வர்த்தக ரீதியாக எவ்விதமான பலனையும் அடைவதேயில்லை என்பதே உண்மை. இதனாலேயே தனி மனித விருப்பத்தை முன்னிட்டே அவை வெளிவருவதும் பிறகு நின்று போய்விடுவதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
இதையும் தாண்டி வெகு சில சிற்றிதழ்கள் வெற்றி பெற்றுவிடுகின்றன. அதற்கு சமீபத்திய இரண்டு உதாரணங்கள் காலச்சுவடு மற்றும் உயிர்மை. நவீன இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் பத்திகள், சிறுகதைகள், ஆழமான கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை வெளிவருவதற்கான பீடமாக இவை உருவெடுத்திருக்கின்றன. இருந்தாலும் குழுக்களோடு இயங்குபவர்கள் என்கிற, வழக்கமாக சிற்றிதழாளர்கள் மீது எய்யப்படும் அம்பு இவர்கள் மீதும் பாயவே செய்கிறது. காலச்சுவடு மற்றும் உயிர்மை ஆகிய இன்றைய முக்கிய இலக்கிய இதழ்கள் நிற்காமல் வெளிவருவதற்கான காரணம் அவை பதிப்பகங்களாக உருவெடுத்ததுதான் என்று சொன்னால் மிகையில்லை. அவை தங்கள் வெளியீடுகளுக்கான ஊடகமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த வகையில் இவை சிற்றிதழ்கள் என்கிற எல்லையைத் தாண்டி வணிக இதழ்களின் ராஜபாட்டையில் காலை எடுத்துவைத்துவிட்டன என்பதே உண்மை.
கைப்பிரசுரங்கள்
ஒத்த கருத்துள்ள சிலரை இணைத்துக்கொண்டு சிறு பத்திரிகைகள் தங்களுக்குள் பெரும் சண்டைபோட்டுக்கொண்டிருக்கின்றன என்கிற பொதுவான கருத்து ஒருபுறம் இருக்க, ஒருசில கைப்பிரதிகள் தீவிர இலக்கியவாதிகளின் வீடுகளுக்கோ, இலக்கிய சந்திப்புகளின்போது நேரிலோ வந்து சேருகின்றன. இவை இரண்டு பக்கம், நான்கு பக்கம், ஆறு பக்கம் அல்லது எட்டுப் பக்கம் வரைக்கும் போகலாம். அவை இதழியலின் நசிவுற்ற ஒரு அச்சு நிலை எனலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கியவாதியையோ, இலக்கியப் பத்திரிகையையோ பற்றிய தன்னுடைய சொந்தக் கருத்தை ஒருவர் தன் சொந்தக் காசில் அச்சிட்டு அதை அந்த இலக்கியவாதி அல்லது பத்திரிகை பங்குபெறும் கூட்டத்தில் தானே நேரில் வந்து, பார்வையாளர்களிடம் தன் கைப்படவே கொடுத்துவிட்டு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நபரை முறைத்துக்கொண்டு முன் வரிசையில் விழா முடிகிற வரைக்கும் உட்கார்ந்திருந்துவிட்டு, எவ்விதமான எதிர்ப்புகளையும் வெளிக்காட்டாமல் விழா முடிந்ததும் கிளம்பிப் போவார்.
அரசு மற்றும் அதிகாரத்துக்கு எதிராக போராளிகள் கையாண்ட இந்த தந்திரம், தனி மனிதர்களை வசை பாடுவதற்காக வீணடிக்கப்படுவது அவலம் நிறைந்தது. தன் கருத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் உரிமையை சட்டம் எல்லாப் பிரஜைகளுக்கும் தந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்த வகையில் கைப்பிரதிகள் கொண்டு தனி நபர்கள் நிகழ்த்தும் இதழியல் புரட்சி எங்கே போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்க இயலவில்லை. தன் கருத்தை எந்த ஊடகமும் வெளியிட விரும்பாத நிலையில் ஒரு தனி மனிதன் இந்த நிலையை எட்டுகிறான். இந்த தந்திரத்தைக் கொண்டே பரபரப்பான எழுத்தாளர்களாக உருவான இலக்கியவாதிகளின் பட்டியலும் யாவரும் அறிந்ததே.
இணைய இதழ்கள்
நாளிதழ்கள், வணிக இதழ்கள், சிற்றிதழ்கள் வரிசையில் இந்த நூற்றாண்டின் இணையற்ற சாதனை இணைய இதழ்கள்தான். ஆனால் இணைய இதழ்களின் இடத்தையும் பெரும்பாலும் வணிக இதழ்களே ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் அபாயம் தமிழில் நிகழ்ந்துவிட்டது.
அடிப்படையில் இணைய இதழ்கள் வெளிதேசங்களில் வாழும் தமிழர்களை மனதிற்கொண்டே துவங்கப்பெற்றன. ஆனால் அவற்றிலும் காணப்பட்ட வணிக சாத்தியங்கள் வணிக இதழ்களின் கவனத்தைக் கவரவே, அவை தங்கள் போட்டியை அங்கேயும் ஆரம்பித்துவிட்டன. இருந்தாலும் தற்போதைக்கு மேலதிக வணிக சாத்தியம் இல்லாமையால் சுயம்புவான பல இணைய இதழ்கள் வலம் வந்துகொண்டிருப்பதைப் பொறுத்துக்கொண்டிருக்கும் தமிழ் வணிக இதழ்கள், சரியான நேரத்தில் மிகப்பெரிய பாய்ச்சலாக இணையத்தை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம் என்பது அனுமானிக்கத்தக்கது.
தற்போது இணையத்தில் ஸிஃபி தமிழ் (http://tamil.sify.com), திண்ணை (http://www.thinnai.com), ஆறாம்திணை- http://www.aaraamthinai.com), திசைகள் (http://www.thisaigal.com), தமிழோவியம்- (http://www.tamiloviam.com), பதிவுகள் (http://www.pathivukal.com), நிலாச்சாரல்- (http://www.nilacharal.com), கீற்று (http://www.keetru.com), வெப் உலகம் (http://www.webulagam.com) என்று பல்வேறு இணைய இதழ்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வாகம் செய்பவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்தே அவற்றின் தரம் இருக்கிறது. உதாரணமாக திண்ணை 'வெப் உலகின் காலச்சுவடு' என்று சொல்லப்பட்டால், தமிழோவியம் 'இணைய குமுதம்' என்று வர்ணிக்கப்படுகிறது. தமக்கென இணையப் படைப்பாளிகளின் பெரும் உலகை இணைய இதழ்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. -இது எதிர்காலத்தில் தரமான படைப்புகள் வெளிவரும் சாத்தியங்களை வெகுவேகமாகச் சுருக்கிக்கொண்டுபோகிற வேலை.
அச்சு ஊடகத்தைப் போல இல்லாமல் எழுதியதைத் திருத்தவும், மறுபதிவு செய்யவும் இணையம் மிகுந்த சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதுவே இணைய இதழ்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குகிறது. இணைய இதழ்களைப் போலவே தனிப்பட்ட முறையில் ஆளாளுக்கு ஆரம்பித்திருக்கும் ப்ளாக் எனப்படும் கலாச்சாரம் சில வேளைகளில் சில அற்புதமான பதிவுகளை வெளியிட்டுவிடுகிறது. கிட்டத்தட்ட டைரி எழுதுகிற மாதிரி வேலைதான் என்பதனால் இணைய இதழ்களின் எதிர்காலத்தில் நேரடியான போட்டியாக உருவாகியிருப்பது இந்த ப்ளாகுகள்தான். பெரும்பாலான எழுத்தாளர்கள் ப்ளாக் என்கிற அமைப்புக்குள் நுழைய இன்னும் முன்வராததால் உலகெங்கிலுமுள்ள எழுத்தறிந்த பலரும் அங்கே திண்ணை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். தேன்கூடு (http://www.thenkoodu.com), தமிழ்மணம் (http://www.thamizmanam.com) போன்ற இணைய விலாசங்கள் ப்ளாகர்களின் படைப்புகளை உடனடியாக இணைய வாசகர்களுக்கு தெரிவித்துவிடுகிற வேலையை செய்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் ப்ளாகுகளில் நல்லதைத் தேடிப்போனால் அதைக் கண்டுபிடிக்குமுன்னால் நாம் பின்தங்கிவிடும் நிலையே நிலவுகிறது.
இறுதியாக
இணைய இதழோ, சிற்றிதழோ, வணிக இதழோ, செய்தித்தாளோ அது எதுவாக இருந்தாலும் மனித மனத்தின் வக்கிரத்தைத் தூண்டிவிட்டு - அது காமம், குரோதம், மதம், வன்முறை என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும் - அதன் வாயிலாகத் தன் பிழைப்பை ஓட்ட நினைக்கும் நிலைப்பாடே இந்தக் காலகட்டத்தில் வெகுவாக விரிந்திருக்கிறது. மாயமான கற்பிதங்களால் மனங்களைச் சலவை செய்து அதன் மூலமாகக் குளிர்காய நினைப்பதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இதழியல் சாதனை என்று தோன்றுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை செய்தித்தாள்கள் மற்றும் வணிக இதழ்கள் எடுத்திருக்கும் விஸ்வரூபம், நம் யாரையும் அவற்றைக் குறித்து விமர்சனம் செய்யவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதற்குக்கூட இயலாத நிலையில் வைத்திருக்கிறது. ஒரு வணிக இதழ் அல்லது செய்தித்தாள் நினைத்தால் உங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட முடியும் என்பதே நிதர்சனம்.
போலீஸ்காரர்களையும், அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் பக்கம் பக்கமாக விமர்சிக்கும் இதழ்கள், அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை. இருந்தாலும் அதை அந்த போலீஸ்காரர்களோ, அரசியல்வாதிகளோ, சினிமாக்காரர்களோகூட வாயைத் திறந்து பேசிவிட இயலாத நிலை இன்று இருக்கிறது. அவர்களின் நிலையே அப்படியென்றால், மீடியாக்களின் தயவில்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற நிலையை யாவரும் எட்டிவிட்டிருக்கும் இன்றைய சூழலில், அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளக்கூட இயலாத தரித்திர நிலையில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் சுதந்திரம் மிகுந்த கேள்விக்குறியாகி இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? ஏதாவது ஒரு காரணத்திற்காக போலீசால் சந்தேகிக்கப்பட்டு நிரபராதியான ஓர் எளிய மனிதன் விசாரணை செய்யப்பட்டால் அதோடு அவனது வாழ்க்கை வெளிச்சத்தை இழந்து போய் விடுகிறது. இதற்குக் காரணம் காவல்துறையா இல்லை நீதித் துறையா என்று கேட்டால் இரண்டுமே இல்லை என்றுதான் நாம் பதில் சொல்ல முடியும். அந்தத் துறைகளின் பங்கு குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றது. ஆனால் அதை ஊருக்கே உலகுக்கே கொண்டு சேர்ப்பதில் நமது பத்திரிகைகள் காட்டுகிற ஆர்வம் இருக்கிறதே, அதுதான் அந்த எளிய மனிதனை மிதித்து துவம்சம் செய்கிறது.
ஒரு தேசத்தின் முதல் மூன்று தூண்களான நீதித்துறை, அரசுத்துறை, அதிகாரிகள் ஆகியோர் தங்கள் கடமையை செய்யும்போது ஏற்படும் தவறுகளினாலேயே ஒரு தனி மனிதனின் சுதந்திரம் பாதிக்கப்பட முடியும். ஆனால் அந்த மூன்று துறைகளையும் கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் உள்ள ஒரே துறையான பத்திரிகையோ தன் கடமை இன்னதென்பதையே மறந்து செயல்படுவதால்தான் தனிமனித சுதந்திரம் உடைந்து நொறுங்கிப்போகிறது. இதுவே இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதழியல் ஒரு தேசத்தின் மக்களுக்கு, கொஞ்சம்கூட வெட்கமேயில்லாமல் மனமுவந்து இழைக்கும் அநீதி.
ஒரு தனிமனிதனின் வாழ்வில் மற்ற எந்த அதிகாரம் பொருந்திய அமைப்பு குறுக்கிட்டாலும் அவனுக்கான நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தைத் துவக்கி வைப்பதும், அதை வென்று தருவதுமே பத்திரிகைகளின் உண்மையான கடமையாக இருக்கும்போது பத்திரிகைகளோ பரபரப்பு என்கிற ஒரே வாதத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சிறு குற்றங்களையும் ஊதிப் பெருக்கி, தனி மனிதனின் வாழ்வை கொஞ்சம்கூட குற்றவுணர்வே இல்லாமல் குலைத்துவிடுகின்றன. நீங்கள் ஏனென்று கேட்டால் அவை சொல்கின்றன, ''அதுதான் பத்திரிகை தர்மம்''.
இதுபோல் ஒரு தனிமனிதனை Character assacination செய்வர்களுக்கு நமது நீதித் துறையில் வழங்கப்படும் தீர்ப்பு என்ன? செக்ஸ், வக்கிரம், வன்முறை என்று ஒரு மாநிலத்து மக்களின் மூளைகளை சலவைசெய்து கொடுக்கும் இந்தக் காகித வியாபாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை என்ன?
அதைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம்கூட பத்திரிகைகளின் கைகளில்தான் இருக்கிறதா?