நாடோடிகள் படத்தில் ‘நேர்மை’யான கதாபாத்திரம் ஒன்று வருகிறது. தன் சொந்த மகளை, தன் சொந்தத் தங்கையின் மகனுக்கு மணமுடித்துக்கொடுக்க அந்தக் கதாபாத்திரம் ஓர் எளிய எதிர்பார்ப்பை முன்வைக்கிறது. மாப்பிள்ளை கவர்ன்மென்ட் உத்யோகஸ்தனாக இருக்க வேண்டும் என்பதே அது! கவர்மென்ட் உத்யோகம் உறவை விடவும் பெரியதா என்று கேள்வி கேட்கக்கூடாது. அதெல்லாம் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது!
கவர்மென்ட் உத்யோகம் என்பது நிலையானது; அந்தஸ்தானது; ஓய்வு பெற்ற பிறகும் ஊதியம் தரக்கூடியது என்பதனால் தன் மகள் எவ்விதமான பொருட்குழப்பமும் இல்லாமல் வாழ்வை நிம்மதியாகக் கழிக்க இயலும் என்பதாகக் கணக்கிடும் இந்த கிராமத்து மனப்போக்கு சற்று பரிணாமமடையும்போது ஏற்கப்பட வேண்டிய வேலைகள், மறுக்கப்பட வேண்டிய வேலைகள் என்று இளைஞர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வேலைகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகின்றன.
டாக்டர், என்ஜினியர், ஸயன்டிஸ்ட், லெக்சரர் ஆகிய வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கவர்ன்மென்ட் வேலை எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் இட்டு நிரப்பப்பட்டன. இவர்களெல்லாம் நல்ல வருமானமுள்ளவர்கள் என்பதாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனத்திற்கொள்ள ஆரம்பித்தார்கள். வக்கீல்கள் இந்த விஷயத்தில் அத்துணை பேணப்படவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் மாமனாரிடமே சட்டம் பேசிவிடக்கூடும்.
ஆக, இந்த வெகு ஜாக்கிரதையான தேர்ந்தெடுப்பில் பின்னுள்ள வேலைகளெல்லாம் புறந்தள்ளப்படுகின்றன. வேண்டுமானால் குலத் தொழில் செய்கிற இளைஞர்களை குலத்தொழில் செய்கின்ற மாமனார்கள் தொழில் விருத்தி நிமித்தம் ஏற்றுக்கொண்டு வந்தார்கள் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதே என்பதனால் அதனை விட்டுத் தள்ளுங்கள்.
இப்படி ஒரு நிலைப்பாடு எழுவதற்கு முன்னும் ஒரு காலம் இருந்தது. அப்போது மணமகனின் தகுதி கவனிக்கப்படவில்லை, அவனது தகப்பனார் மற்றும் மூதாதையரின் அந்தஸ்தே பெண்ணைப் பெற்றவர்களால் கண்காணிக்கப்பட்டது. இன்னாருடைய பேரன்; இன்னாருடைய மகன்; இப்படியாப்பட்ட சொத்துடையவன்; இத்தனை பேரோடு பிறந்தவன்; உடன் பிறந்தவர்கள் இப்படியிப்படியெல்லாம் இருக்கிறார்கள்; அவர்களின் வம்சம் இப்படியிப்படியெல்லாம் பெருகிற்று என்பதெல்லாம் பெண்ணைக் கொடுப்பதற்கான உபாயமாக இருந்த காலம் அது. அதையும் விட்டுத்தள்ளுங்கள்.
நாம் வாழும் காலத்திற்கு வருவோம். இப்படி கொள்ளத் தக்கவை மற்றும் தகாதவை என்று இரண்டு தரப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகள் இந்திய தேசத்தில் விரிந்து பரந்து கிடக்கவே செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.
சரி, என்னத்துக்கு இந்த முகாந்திரம் என்று கேட்கிற நேரம் வந்துவிட்டதா? வேறு எதற்கு? சொந்தமாக லட்சக்கணக்கில் முதலீடு செய்து லேத் வொர்க் ஷாப் வைத்திருப்பவன், டூரிஸ்ட் வாகனங்கள் வைத்துக்கொண்டு தொழில் செய்பவன், டைலரிங் கடை அல்லது ரெடிமேட் ஆடைக் கடை வைத்திருப்பவன், ஏஸி மற்றும் ரெஃப்ரிஜிரேட்டர் பழுது பார்ப்பவன், டிஃபார்ம் முடித்து மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், புத்தகங்களைப் பதிப்பிப்பவன் என்று பல்லாயிரம் தொழில்கள் மற்றும் வேலைகள் கல்யாணச் சந்தையில் பின்தள்ளப்பட்டே வருகின்றன. இவர்களுக்கு சமுதாய அந்தஸ்து மற்றும் கல்வி அந்தஸ்து ஆகியவற்றில் இரண்டாந்தர மணமகள்களே வேண்டா விருப்பாக கட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதோடு காலமெல்லாம் குத்திக்காட்டவும் படுகிறார்கள்.
இவர்களுக்கே இதுதான் நிலைமை என்றால், சமுதாயத்தால் மிகுந்த ஒழுக்கக்கேடு நிறைந்த தொழில் என்பதாகக் கருதப்படும் சினிமாத் தொழிலில் இயங்கும் இளைஞர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! (எப்புடீ? சுற்றி வளைத்தாலும் சப்ஜக்ட்டுக்கு வருவதில் என்னைவிட சமர்த்தன் யாராவது இருந்தால் நீங்களே சொல்லுங்கள்!)
எமது சினிமாவில் இருக்கும் பல்வேறு இளைஞர்கள் தம் இளமையை இவ்விதமாகவே தொலைத்து வந்திருக்கிறார்கள். சினிமாவில் வேலை பார்த்துவிட்டு அது தேவையில்லை என்று சொந்தத் தொழில் அல்லது ஏதாவது வேலைக்குத் திரும்ப நேர்ந்தாலும்கூட சமுதாயம் அவர்களை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவனைப் பார்க்கிற கோணத்திலேயே பார்க்கிறது. பொதுப்புத்தி சார்ந்து சமுதாயம் நினைக்கிறது, ‘ஒருமுறை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் மீண்டும் ஜெயிலுக்குப் போகவே செய்வான்!’ ஏனென்றால் அவனது முந்தைய குற்றப் பின்னணி அவனைப் பின்தொடரும்; போலீஸ்காரர்கள் அவனைக் கண்காணித்தவாறே இருப்பார்கள்; அந்த பிராந்தியத்தில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் இவனும் விசாரிக்கப்படுவான் இந்தச் செயல்பாடுகள் அவனை மீண்டும் ஜெயிலுக்குள் செலுத்தவே முனையும் என்பதனால் அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கக்கூடாது என்பது எத்தனை நியாயமானதோ, அதே அளவுக்கு நியாயமானதுதான் சினிமாத்துறைக்குப் போய்விட்டு வந்தவன் அல்லது இப்போதும் அதில் இருப்பவனுக்கு பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதும்!
இது பெண்ணைக் கொடுப்பது என்பதில் மாத்திரம் முடிந்து போகிற விஷயமல்ல, ஒரு பாங்க் லோன் வாங்கப்போனாலும் சரி, ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு மனுப் போட்டாலும் சரி, பெரும் தடையாகவே அவனது சினிமா ஆர்வம் அவனை இம்சித்து வருகிறது. இதனாலேயே சினிமாத் துறை என்பது ஒரு இளைஞனை புலி வாலைப் பிடித்ததைப்போல வருத்தவே செய்கிறது.
உண்மையில் மற்றவர்கள் குற்றஞ்சாட்டுமளவுக்கு இந்தத் துறை அத்தனை மலிவானதா? உண்மையிலேயே ஒழுக்கக் கேடுகள் நிறைந்ததா? சம்பாத்திய நிலையின்மையை முன்வைப்பதா என்கிற கேள்விக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்றுதான், ‘இது முழுக்கவும் உண்மையுமல்ல, முழுக்கவும் பொய்யுமல்ல!’
இந்த மாதிரி ஒழுக்கக் கேடு என்பது வேறு தொழில்களில் இல்லையா? டாக்டர்கள், என்ஜினியர்கள் எல்லோருமே ரொம்பவும் ஒழுக்கசீலர்கள்தானா? நைட் டூட்டிகள், கார்ப்பரேட் அலுவலகத்தின் நான் சர்வயலன்ஸ் அறைகள் ஆகிய பொழுதுகள் மற்றும் ஸ்தலங்களில் அவர்களின் ஒழுக்கங்கள் சரியாகத்தான் பேணப்படுகின்றனவா? கலாச்சார மாற்றத்தின் முன்னால் கற்புநெறி தப்பிப் பிழைத்துதான் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கே விடைகள் தெரியும்.
நீங்கள் இருக்குமிடத்தில் உள்ள அத்தனை சாத்தியங்களையும் நீங்கள் முகர்ந்து பார்த்துவிடுகிறீர்களா? அதெல்லாம் தனி மனிதர்களின் ஆசாபாசங்கள், ஒழுக்கநெறிகள் சார்ந்த பூர்வீக மனப்பதிவுகள், நோயுறுநிலைகள் குறித்த தெளிவுகள் என்று வித்தியாசப்படத்தானே செய்கின்றன!
முதற்கண் இந்தச் சமுதாயம் சினிமாவைப் பார்க்கிற பார்வை மாற வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்! இதற்கு சினிமா என்பது கூத்தாடிகளின் வேலையல்ல என்கிற தெளிவே பிரதானமானது. சினிமா என்பது ஒரு தொழில் என்கிற போதத்தை அப்போதுதான் சமூகத்தால் எட்ட முடியும். அந்த போதமே அங்கீகாரத்தை முன்வைக்க முடியும்.
சினிமா இவ்வாறு வெறுக்கப்பட்டு வந்ததற்கான அடிப்படைக் காரணம் முந்தைய தலைமுறையில் படிப்பு வராதவர்கள் சென்னைக்கு ரயிலேறி சினிமாவில் சேர்கிறேன் என்று அடித்த கொட்டத்தால்தான்! பொதுவாகவே, கலைத்திறன் உள்ள மனத்திற்கு கணக்கு வராது என்பது விதி. இதற்கு சுஜாதா மாதிரி விலக்குகள் இருக்கலாம். ஆனால் கணக்கு வராதவர்கள் எல்லாம் தாங்கள் கலைத்திறன் உள்ளவர்கள் என்பதாக கருதிக்கொண்ட அவலமே இவ்விதமான தப்பிதமான எண்ணப் பதிவை முன்வைத்துத் தொலைத்தது.
அந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்கள்! இப்போது அப்படியா? சினிமா என்பது கல்லூரியிலேயே போதிக்கப்படும் தொழிலாக விஸ்வரூபமெடுத்துவிட்ட காலம் இது! விஷுவல் கம்யூனிகேஷன் என்பது திரைப்படக் கல்லூரிக்கு வெளியேயும் திரைப்படக் கலையை போதிக்கக்கூடிய வாய்ப்பை கல்வித்துறைக்கு நல்கியிருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல் விளம்பரத் துறை முதலான பல்வேறு கதவுகளை இந்தப் படிப்பின் வாயில் திறக்கிறது.
படித்த இளைஞர்கள் சினிமாவுக்குள் நுழைகிறார்கள். சினிமா என்கிற மகாவிருக்ஷத்தில் தங்கள் கிளை எது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். முன்னைப்போல டைரக்டராகப்போகிறேன் என்கிற ஒற்றைக் கனவோடு சினிமாவுக்குள் நுழைகிற போக்கு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. சினிமா என்பது எண்ணற்ற வேலைவாய்ப்புகளின் சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற தெளிவு இளைஞர்களின் மத்தியில் இப்போது எழுந்துவிட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சியைத் தன் இரு கைகளாலும் தழுவிக்கொண்ட துறைகளில் மிக முக்கியத்துவம் பெறுவது சினிமா என்கிற நிலைப்பாடு மிகவும் ஆரோக்கியமானது. இது படித்த இளைஞர்களின் சேவையைப் பெருமளவில் கோரவே செய்கிறது. இதனால் முன்னைப்போல திருட்டு ரயிலேறி சினிமாவுக்கு வருகிற அவசியம் ஏதும் இல்லாத நிலையே இப்போது காண்பது. ஒரு வாரம் முன்பாகவே ரிசர்வ் செய்து ஏஸி கோச்சில் சென்னைக்கு இளைஞர்கள் வரக்கூடிய காலமிது.
மற்ற சாத்தியங்கள் கிடக்கட்டும், உதவி இயக்குனர் என்கிற வேலையையே எடுத்துக்கொள்வோம், இந்த வேலை எவ்விதமான சம்பாத்திய சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற கேள்வி நியாயமானதே! உண்மையில் இன்றைய பொழுதில் திறமையுள்ள ஒரு உதவி இயக்குனர் சாதாரணமாக வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கக்கூடிய நிலைப்பாடு உண்டு என்பதே உண்மை. இன்றைய காலகட்டத்தில் கடைசி உதவி இயக்குனர் என்பவருக்கே ஆறு மாதத்திற்கு நாற்பதாயிரம் கொடுக்கப்படவேண்டும் என்பதே இயக்குனர் சங்கத்தின் முன்வைப்பு! இது சரிவரக் கிடைக்கிறதா இல்லையா என்பதை சங்கம் சரிவரக் கண்காணிக்கிறதா என்பதே கேள்வி என்றபோதும், இந்தத் துவக்கம் நல்ல எதிர்காலத்தையே முன்வைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
அதே உதவி இயக்குனர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறும்போது மிகக் குறுகிய காலத்தில் அவர் சம்பாதிக்க முடிகிற தொகை எவ்வளவு என்று பார்த்தால், அது பல லட்சங்கள் செலவு செய்து ஸாஃப்ட்வேர் இன்ஜினியரான ஒருவர் ஆயுட்காலத்தில் சம்பாதிக்க முடிகிற தொகையை விடவும் பன்மடங்கு உயர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை ஜாக்பாட் என்று நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம், ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் போவது எவ்விதத்தில் நியாயமானது என்பதே எனது கேள்வி!
சினிமாவின் போக்கில் இத்தனை மாற்றங்கள் இருந்தாலும் சமூகத்தின் போக்கில் ஏதும் மாற்றமிருக்கிறதா என்பதே எனது கேள்வி! சமூகம் சினிமாவை இன்னும் மாற்றாந்தாய்க் கண்ணோட்டத்தோடே பார்க்கிறது. ஒழுக்கக்குலைவு, நிரந்தரமில்லாப் பணிச்சூழல் ஆகிய காரணங்களை அது முன்வைக்கவே செய்கிறது.
அறை எண் 305இல் கடவுள் படத்தில் சிம்பு தேவன் நையாண்டி செய்ததைப்போல விரல்களை இழந்துவிட்டால் அப்புறம் ஒரு ஸாப்ட்வேர் இன்ஜினியர் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வியை இங்கே தாராளமாக முன்வைக்கலாம். இந்தக் கட்டுரை எழுதப்படும் காலம் ஐடி துறையில் ரெஸிஷன் உள்ள காலம் என்பதால் அந்தச் சகோதரர்களை மேலும் புண்படுத்துவதல்ல என் நோக்கம் என்பதனால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்.
ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.
இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?
சமூகம், பணம் என்கிற ஒரே சாளரத்தின் வாயிலாகவே உலகத்தைப் பார்க்கிற காலம் இது. சினிமாவில் சம்பாதித்து அந்தப் பணத்தை சரிவர வேறு இடங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் ஒருவரை சமுதாயம் விரும்பவே செய்கிறது. எது எப்படியானாலும் அவன் பணக்காரன் என்பதனால் அவனை ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான தயக்கமும் வேண்டியதில்லை என்பதே அதன் வாதமாயிருக்கக்கூடும். டாக்டர்களும் இன்ஜினியர்களும் இந்த அடிப்படையில்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதே அடிப்படை உண்மை!
ஆனால் சினிமா என்கிற தொழிலில் கிட்டத்தட்ட நிரந்தர வருமானமுள்ள எத்தனையோ பேர்கள் உண்டு என்கிற போதம் சமூகம் முழுக்கப் பரவலாக இன்னும் சில காலம் பிடிக்கக்கூடும். அதற்கு இந்தக் கட்டுரை ஒரு திறவுகோலாக இருந்தால் நான் விரும்பும் சினிமாவுக்கு என்னாலான கொடையாக அது இருந்துவிட்டுப் போகட்டும்!
7 comments:
///ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.
இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?///
நல்ல கட்டுரை சுதேசமித்திரன்.
ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.
அதான் சார் அதேதான்
நிறைய எழுதுங்கள்.
:-))
ஐயா, சினிமாக்காரர்கள் பற்றிச் சொல்வதற்கு முன் எதற்காக கவர்மெண்ட் வேலை, ஐரோப்பிய கலாசாரம் என்று இத்தனை பெரிய முன்னோட்டம்..? ரொம்பவே சுற்றி வளைத்துவிட்டீர்கள். நேரடியாகச் சொன்னால் புரிந்து கொள்வார்களா என்ற தயக்கம் என்று சொல்ல வேண்டாம்... தங்கள் தரப்பைச் சொல்வதில் சினிமாக்காரர்கள் காட்டும் தயக்கம்தான் மற்றவர்களை சந்தேகம் கொள்ள செய்கிறது. நம் கருத்தை ஊருக்கு உரக்கச் சொல்வோம்..!
உங்கள் 'காக்டெய்ல்' படித்து அதன் நுணுக்கம் வியந்தவன்; 'உயிரோசை'யில் நீங்கள் எழுதுகிற கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறவன் நான். நீங்கள் ஒரு சிந்தனாவாதி என்கிற வகையில் உங்களைப் பிடிக்கிறது.
இந்தக் கட்டுரையை 'நாடோடிகள்' நாயகியின் தந்தையார் கொண்ட நோக்கிலிருந்து தொடங்குவது நீங்கள் ஒரு வறட்டுக் கட்டுரையாளன் அல்ல, ஒரு கலைஞன் என்பதை நிறுவுகிறது.
உங்கள் முடிபு சரிதான். ஒழுக்கம் கற்பு என்பதெல்லாம் சும்மா. ஒருவர் சம்பாத்தியம் முக்கியம். அது திரைத் துறையில் அவ்வளவு தெளிவாக இல்லை. தெளிவுபடும் நாள் வரும் என்று நம்புவோமாக.
கட்டுரை ஆண்மகன் பார்வையில் இருக்கிறது. திரைத்துறைப் பெண்மக்கள் நிலைமை? திரைத்துறைப் பெண்களை மணந்து இல்லறம் பேண விழைதல் குறித்த சிக்கல்களும் பேசப் பட்டிருந்தால் சீராக இருந்திருக்கும்.
உங்கள் இணையத்துக்கு வழிகாட்டிய ராஜநாயஹத்துக்கு நன்றி.
- ராஜசுந்தரராஜன்
நல்ல கட்டுரை... இந்தத் தவற்றில் மீடியாவின் பங்கு முக்கியமானது என்று நினைக்கிறேன்...
இராம்
Post a Comment