May 26, 2009

எது சினிமாவுக்கான கதை?

முதற்கண் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதே ஒரு முக்கியமான விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சினிமா என்பதற்கு கதை என்பது அத்யாவசியமானது என்பதே அது! இல்லையானால் இந்தத் தலைப்பு எது சினிமா என்பதாக இருந்துவிடும். ஆனால் சினிமாவுக்குக் கதை என்பதாக ஒன்று அவசியம் என்பதை பெரும்பாலும் எமது சினிமாக்கள் ஏற்றுக்கொள்வதேயில்லை என்பதே கொடுமை!

பெரும்பாலான எம்ஜியார் படங்கள் ஒரே கதையிலானவை. பெரும்பாலான ரஜினிகாந்த்தின் படங்கள் ஒரே கதையிலானவை. பெரும்பாலான தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர்களின் கதைகள் இவ்விதம் ஒரேவிதமானவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இயக்குனர் ஷங்கரையே எடுத்துக்கொண்டால், தவறு நிகழ்கிறது. தட்டிக்கேட்க ஒரு அவதார புருஷன் வருகிறான். அனைவரும் அவனைக்கண்டு அஞ்சி திருந்துகிறார்கள் என்பதுமாதிரியான அமைப்பில் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் கொடுத்துவிட்டார் அவர். இதைத்தான் ஒரே கதை என்று சொல்கிறேன். முதல்வன் படத்தில் முதல்வனாவது கதை, இந்தியன் படத்தில்கிழவன் நீதி வழங்குவது கதை, சிவாஜி படத்தில் 'ஆஃபீஸ் ரூமுக்கு' கூட்டிப்போய்த் திருத்துவது கதை என்று கதையைப் பார்க்கக்கூடாது. இப்படிப் பார்க்கிற பழக்கம் நமக்கு இருப்பதனால்தான் இவ்விதமாக ஒரே கதையை திரும்பத் திரும்ப நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதும், ஒரே விதமாக இயக்குனர்கள் எடுக்கத் துணிவதும் சாத்தியமாகிறது.

ஒரு சினிமா என்றால் தனியாக அதற்குக் கதை என்பதாக ஒன்று வேண்டாமா? அவ்வாறல்லாமல் வெறும் காட்சிகளின் அடுக்குதான் சினிமாவா? இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ளலாம். சாதாரணமாகவே அடிப்படையான புரிதல் ஒன்று அங்குமிங்குமாக அலைகிறது. சினிமாவுக்கு எதற்குப் போக வேண்டும்?பொழுது போவதற்கு. அப்படியானால் நல்லவிதமாகப் பொழுதைப் போக்கிக் கொடுப்பது நல்ல சினிமாதானே! -இந்தப் புரிதல்தான் சினிமா கேடுகெட்டுப் போவதற்கான அஸ்திவாரம். சினிமா என்ன டைம்பாஸ் கடலையா? வாணலியில் கொஞ்சம் மண்ணைப் போட்டு நாலுதிருப்பு திருப்பினால் சாப்பிடுகிற அளவுக்கு கரகரப்பாக ரெடியாவதற்கு? சினிமா என்பது பெரும் உழைப்பு! அதை வெறும் பொழுபோக்கு சாதனமாகப் பார்க்க நினைப்பது அதற்கு நாம் செய்யும் அப்பட்டமான துரோகம்!

மேற்கண்ட கண்ணோட்டமே சினிமா வெறும் காட்சி அடுக்குகளாக சிந்திக்கப்படுவதன் அஸ்திவாரமாக இருக்கிறது. சினிமாவில் கதையைக் காட்சியாகவே வெளிப்படுத்த முடியும் என்பதனாலேயே சினிமாவில் காட்சிகள் அமைக்கப்படவேண்டுமே தவிர, வெறும் ரஸமான காட்சிகளை அடுக்கினால் அது நல்ல சினிமாவாக மாறிவிடும் என்று கனவிலும் எண்ணுவது கயமைத்தனம்.

சரி, சினிமாவுக்கான கதை எது? இதற்கான விடை மிகவும் சுலபமானது. நான்கு சண்டைக் காட்சிகள், மூன்று சேஸிங் காட்சிகள், ஐந்து பாடல் காட்சிகள் -அதில் ஒன்று குத்தாட்டம், மற்றது ரீ மிக்ஸ் என்பதாக எது வழிவிட்டுத் தருகிறதோ அதுதான் நல்ல சினிமாவுக்கான கதை!

இன்றைக்கும் நடைமுறையில் உள்ள இந்தக் கூற்றை உங்கள் அந்தராத்மாவிலிருந்து உங்களால் ஒப்புக்கொள்ள முடியுமா?

சினிமாவுக்கான கதை என்பது இது அல்ல. ஏன், இது கதையே அல்ல. ஏனென்றால் சினிமாவுக்கான கதை என்பதாக இந்த உலகில் தனியாக எதுவும் இல்லை. எல்லாமே சினிமாவுக்கான கதைதான்! அது எவ்விதமாகத் திரைக்கதையாக்கம் பெறுகிறது என்பதே சினிமாவின் விதியை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.

பொதுவாகக் கதை என்பது இந்தப் பரந்த வெளியெங்கும் கொட்டிக் கிடக்கிறது. வெறும் எழுத்தில் அந்தக் கதையை வார்க்கும்போது அது சிறுகதையாகவோ நாவலாகவோ ஆகிறது. காட்சி ரூபமாக ஒன்றைச் செதுக்கிக் காட்டும்போது அது நாடகமாகவோ சினிமாவாகவோ மாறிவிடுகிறது. ஒரு சினிமாவின் கதை நன்றாக இருக்கிறதா மோசமாக இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனையே அல்ல. ஏனென்றால் பார்வையாளனின் பார்வையில் ஒரேவிதமான கண்ணோட்டம் ஒருபோதும் சாத்தியமே அல்ல. பார்வையாளன் ஒவ்வொருவனும், மத இன மொழி பிராந்திய தேசியப் பாகுபாடுகளோடுதான் தன் மனத்தை உருவாக்கி வைத்திருக்கிறான். அது சொல்வதே அவனுக்கு வேதம். ஒரு படத்தின் இயக்குனர் சொல்வதை அவன் பெரும்பாலும் பொருட்படுத்துவதேயில்லை.

இப்படியெல்லாம் நடக்குமா என்று கேள்வியெழுப்பப்படும் கதையொன்றும், ரொம்ப பிராக்டிகலான கதையாக இருக்கிறது என்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் கதையொன்றும் வேறு வேறு அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு கதையும் அதனளவில் ஒரு சாத்தியத்தை முன்னிறுத்துகிறது. திரைக்கதையே செய்ய முடியாத கதை என்பதாக ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை.

ஒரு நல்ல கதை என்பது, நாயகனையோ நாயகியையோ காமெடியனையோ வில்லனையோ பாட்டையோ ஆட்டத்தையோ பொருதலையோ கோருவதேயில்லை. அது ஒரு சாத்தியத்தையே கோருகிறது. அந்த சாத்தியத்தின் முனைப்பில் ஊடாடுபவையாக இவற்றில் சில இருக்கலாம், சில இல்லாமல் போகலாம்.

ஒரு தப்பெண்ணம் கூட கதையாக இருக்கலாம்; ஒரு தறுதலை மனோபாவம் கூட ஒரு கதையாக இருக்கலாம்; ஒரு விரக்தியோ ஒரு இழப்போகூட கதையாக மாறலாம். அதற்கென்று தனியாக எந்த வரையறையும் கிடையாது. ஆனால் அது நிஜமான ஒன்றாக இருந்தால்தான் அது பார்வையாளனின் நெஞ்சில்போய்த் தைக்கும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பரதன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த காற்றத்தே கிளிக்கூடு என்கிற படத்தின் கதை ஒரு தப்பெண்ணம்! சந்தோஷமான ஒரு குடும்பம். கல்லூரி ஃபுரபசரான பரத்கோபியும் ஸ்ரீவித்யாவும் தம்பதிகள். அவர்களின் சந்தோஷ வாழ்க்கைக்கு சாட்சியாக மூன்று பெண் குழந்தைகள், கடைசியாக ஓர் ஆண் குழந்தை. பக்கத்து வீட்டுக்கு ஒரு பெண் வந்து சேர்கிறாள். அது ரேவதி. அவள் பரத் கோபியின் கல்லூரியில் யூஜியில் சேர்கிறாள். பரத்கோபியிடம் ட்யூஷனிலும் சேர்கிறாள். பரத்கோபியின் வீட்டை, தன் காதலனும் அதே கல்லூரியில் ஃபிசிகல் டைரக்டராக இருப்பவனுமான மோகன்லாலை சந்திக்க உபயோகித்துக்கொள்கிறாள். அடிக்கடி ஸ்ரீவித்யாவை வந்து சந்திக்கும் மோகன்லால் மனத்தில் என்னதான் இருக்கிறது என்பதாக ஒரு தவிப்பு நமக்கு ஏற்படும்போது அவளைத் தன் இறந்துபோன அன்னையைப்போலப் பார்ப்பதாக அவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

ஆனால் அவர்களின் அன்னியோன்னியம் குறித்த எதிர்மறையான எண்ணம் ரேவதியின் மனத்தில் எழுகிறது. இதுவரைக்கும் கதை நமது பக்கத்து வீட்டுக் கதையாக இருக்கிறது. கல்லூரி வாசலில் மோகன்லாலைக் கோபத்தோடு தவிர்த்துவிட்டு பரத் கோபியின் காரில் லிஃப்ட் கேட்கிறாள் ரேவதி. வழியெல்லாம் அழுதுகொண்டே வருபவளிடம் கோபி காரணம் கேட்கிறார். அவள் கோபியிடம் மோகன்லாலுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் உள்ளதாக அவள் நம்பும் கள்ள உறவைப்பற்றி சொல்லப்போகிறாள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவள் சொல்கிறாள், கோபியோடு தான் பழகுவதும் அவன் வீட்டுக்கு டியூஷனுக்கு வருவதும் மோகன்லாலுக்குப் பிடிக்கவில்லை என்பதாக! அதைத் தொடர்ந்து அவள் சொல்கிறாள், என்னைவிட கோபி முக்கியமா என்று அவன் கேட்டபோது நான் ஆமாம் என்று சொன்னேன், ஏனென்றால் நான் உங்களைக் காதலிக்கிறேன் என்று!

முதலில் இது சிறுபிள்ளைத்தனமானது என்று நினைக்கும் பரத்கோபி கொஞ்சம் கொஞ்சமாக அவளது பேச்சை நம்பி அவளோடு பீச், ரெஸ்டாரண்ட் என்று சுற்ற ஆரம்பிக்கிறார். உண்மையில் அவள் ஒரு சிறுமி, தன் காதலனைப் பழிவாங்க நினைத்து தன்னிடம் ஆபத்தை உணராமல் இவ்விதமாகப் பழகிக்கொண்டிருக்கிறாள் என்பது கோபிக்குப் புரிவதேயில்லை. கோபியின் மாற்றம் வீட்டில் புயலை வீச வைக்கிறது. படத்தின் டைட்டில் இங்குதான் பொருந்துகிறது, காற்றில் ஒரு கிளிக்கூடு! காற்று என்பது புயலுமல்ல, தென்றலுமல்ல, சும்மா ஒரு போக்குக் காற்று!

தன் குடும்பத்தோடு பிணங்கி லாட்ஜ் அறையில் தங்கியிருக்கிறார் புரபசர் கோபி. குழந்தைகளோடு ஃபோன் செய்து பேசுகிறார். மனைவி மக்கள் என்று எல்லோரும் இருந்தும் தானோர் அனாதை போல மாறிவிட்டதை அப்போது அவர் உணர்கிறார். மனைவியின் அவசியம் அவருக்குப் புரிகிறது. இதைத் தொடர்ந்து புரபசர் மனைவியைத் தேடிப் போவார் என்பதாக நீங்கள் எதிர்பார்க்கலாம். அவரோ ரேவதியை அறைக்குக் கூட்டி வருகிறார். எனக்குத் துணை வேண்டும் என்று அவள் கையைப் பிடிக்கிறார்.

இப்போது ஆபத்தின் மெல்லிய கோடொன்று ரேவதிக்குப் புரிபடுகிறது. அவள் எதையும் செய்துவிடுமுன்பாக மோகன்லால் அங்கு வந்துவிடுகிறான். கோபியின் முன்னிலையில் அவளை அடிக்கிறான். அவள், கோபியின் மனைவிக்கும் உனக்கும் உள்ள பந்தம் மட்டும் நியாயமா என்று கேட்கிறாள். இப்போது இடி விழுவது கோபியின் தலையில். அது உண்மையல்ல என்றதும் காதலர்கள் இயல்பாகவே ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். அன்றிரவு தன் முட்டாள்தனத்தை நொந்துகொண்டு நன்றாகக் குடித்து போதையில் இருக்கும் கோபியை அவனது வீட்டில் கொண்டு சேர்க்கிறான் மோகன்லால். கிளிக்கூடு போக்குக் காற்றிலிருந்து தப்பிவிடுகிறது.

இப்படியாக ஒரு சிறுமியின் தப்பெண்ணம் இந்தக் கதையாக மாறுகிறது. இதில் கேரக்டர் என்பதன் அவசியம் பிரதான பங்கு வகிக்கிறது. கதை, பாத்திரங்கள் இவையே இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களாகக் காண்கின்றன. ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ வில்லனையோ காமெடியனையோ இந்தக் கதை கோரவில்லை. மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் இது. ஒரு நல்ல நாவலைப் படித்த உணர்வையே இந்தப் படம் பார்வையாளனின் நெஞ்சில் விதைக்கிறது. இந்த மாதிரி கதையை நேர்மையாக எடுத்துக் கொடுத்த படங்கள் தமிழ் சினிமாவில் எத்தனை காண்கின்றன என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

மகேந்திரனின் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய படங்கள் நாவலைத் திரைக்கதையாக்கம் செய்யப்பட்டவை என்பதனால் நேர்மையாகவே அவற்றில் கதை என்பதாக ஒன்று மைய இழையாக இருக்க நேர்ந்தது. அதோடு கதையோடு பாத்திரங்களின் சித்தரிப்பும் முக்கியத்துவம் பெறும்போது ஹீரோயிசம் என்பதாக ஒன்றின் அவசியம் இந்தப் படங்களில் இல்லாமல் போயிற்று. தங்கப்பதக்கம் எனும் 'சினிமா'வுக்கு வசனம் எழுதும்போது ஹீரோவுக்கான வசனங்களையே எழுத நேர்ந்த மகேந்திரன், நல்ல நாவலைத் திரைப்படமாக்கும்போது தன் நிஜமான தரத்தை நமக்குக் காட்டினார். இதற்குக் காரணம் மகேந்திரன் முதலானவர்கள் தரமான உலக சினிமா இயக்குனர்களின் பார்வையில் சினிமாவைப் பார்த்தவர்கள். சத்யஜித்ரேயின் வெற்றிக்குப் பின்னாலும் நாவல்களிலிருந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களே உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இதனால் நாவலிலிருந்துதான் சினிமா உருவாகவேண்டும் என்பதாக நான் சொல்வதாகஎடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்குக் கதைப் பஞ்சம் இருந்தால் உங்கள் மொழியில் ஏதாவது நல்ல நாவல்கள் இருக்கின்றனவா என்று வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் நான் சொல்லலாம். காப்பியடிப்பதற்கல்ல, ஒரிஜினல் ரைட்டரின் அனுமதியோடு திரையாக்கம் செய்வதற்கு. அதற்கும் உங்களுக்கு விருப்பமில்லையானாலும் பாதகமில்லை. நல்ல நாவல்களைப் படிக்கும் வகையில் நல்ல கதை என்பது எப்படியிருக்கும் என்கிற போதத்தையாவது நீங்கள் எட்ட முடியுமல்லவா, அதன் வாயிலாக நீங்களே நல்ல கதைகளை எழுத முடியாது என்பதுதான் என்ன நிச்சயம்?

திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக வந்துகொண்டிருக்கும் சினிமாக்களைப் பார்ப்பதன் வாயிலாகவும் உலக சினிமாக்களை டிவீடியில் போட்டு காட்சிகளையும் ஷாட்டுகளையும் சுடுவதன் வாயிலாகவும் நீங்கள் வாழும் துறையின் அந்தராத்மாவை நசுக்கிக்கொண்டிருக்கும் அவலத்திலிருந்தாவது உங்களுக்கு ஒரு நல்ல விடியலாவது கிடைத்துவிடாதா என்ன!

3 comments:

biskothupayal said...

நவல்களில்ருந்து காட்சி அமைப்பாக மாற்ற இங்கு இயக்குனர்களுக்கு பயிற்சி இல்லஎய ?

அப்படி அரிதாக எடுக்கப்பட்ட படங்கள் சரியான பார்வையாளர்களை சென்று செரவில்ல்யே ?

Toto - Cinema Paradiso. said...

Sir.. I just love your blogs on cinema and it makes me to think more than what I do about films. Thanks. With your writings as inspiration, I have started blogging here..

Http://Film4thwall.blogspot.com

Thanks.

Toto - Cinema Paradiso. said...

Sir.. I really love your writings on cinema. It makes me to think more than what I do about the films. With your writing as inspiration, I have started blogging here..

http://film4thwall.blogspot.com

Thanks.