January 18, 2007

விக்ரமாதித்யனின் வேதாளங்கள்

திரிகூட ஞாபகம் - 3

1

நம்பி என்கிற நம்பிராஜன் என்கிற விக்ரமாதித்யன் நம்பி என்கிற அபராஜிதா என்கிற, சமீப காலமாய் புட்டா (கிழவன் என்பதாக விளக்கப்படுகிறது) என்கிற பெயரிலெல்லாம் எழுதிக்கொண்டேயிருக்கும் அண்ணாச்சி என்கிற விக்ரமாதித்யனை நான் முதன் முதலில் சந்தித்தபோதே அவர் தாடி வைத்திருந்தார்.

ஆரண்யம் என்கிற சிற்றிதழை நடத்தத் தீர்மானித்திருந்த காலை ஒரு காலை சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டனின் சிற்றறையில் புத்ககங்கள் அடுக்கியிருந்த ஒரு கட்டிலுக்கும் முண்டா பனியன் அணிந்திருந்தவர் படுத்திருந்த கட்டிலுக்கும் மத்தியில் காணப்பட்ட சொற்ப இடத்தில் உறங்கிக்கொண்டிருந்த பெரியவர்தான் விக்ரமாதித்யன் என்பதை அப்போதுதான் ஒருகையில் டூத்பிரஷ்ஷும் மறு கையில் பேஸ்ட்டும் வைத்துக்கொண்டு என்னை எதிர்கொண்ட ராஜமார்த்தாண்டன் தெரிவித்திருந்தார். தற்போதைக்கு உறங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கவிஞர்தான் பிற்பாடு ஆரண்யத்துக்கு எழுதும்போது கவிஞனுக்கு யோனி ஒரு பெருங்கனவு என்று பிரகடனம் செய்யப்போகிறார் என்பது விழித்திருந்த எனக்கும் தெரியாது என்றாலும் அவர் ஒருசில கவிதைகளை உடனடியாக என் கையில் கொடுத்தார். அப்படி ரெடிமேடாக கவிதைகளைக் கையில் வைத்துக்கொண்டு திரியும் ஒரு கவிஞரை அதற்கு முன்னால் நான் சந்தித்ததில்லை. அவருக்கு அது பழக்கம் என்பது பின்னாளில் தெரிந்துகொண்டது. அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். பயணங்களில் ஆங்காங்கே எழுதியதை ஆங்காங்கே கொடுத்துவிடுகிறார். பல கவிதைகள் அவரிடம் பிரதி இருப்பதில்லை.

தொடர்ந்து மிகுந்த தெளிவான முகத்துடனும் அக்கறையுடனும் மெல்லிய குரலில் அப்பா என்கிற எனது கவிதைத் தொகுப்பைப் பற்றிய அவருடைய கருத்தை வெளியிட்டார். அது என் முதல் தொகுப்பு. தமிழ்க்கவிஞனின் தலையெழுத்துப்படி நானே வெளியிட்டது. (இப்படித்தான் பிற்பாடு ஆரண்யம், சாம்பல் ஆகிய சிற்றிதழ்கள் கொண்டுவந்த தரு வெளியீடு பிறந்தது) 'அப்பா'வைக் கிட்டத்தட்ட ஒரு தனிமனிதச் சரிதை என்பதாகக் கூறலாம். அவ்விதமான முயற்சிகள் அதுவரை நிகழ்ந்ததில்லை என்பதை மட்டுமே நானறிவேன். அதை விக்ரமாதித்யனும் குறிப்பிட்டார் என்றபோதும், அந்த புத்தகத்தின் மொழி மிகவும் ஏமாற்றம் தருகிறது என்பதாக அவர் சொன்னார். அதை ஒரு வணிகப் பத்திரிகை வெளியிடும் என்பதாக நம்பி எழுதினேன் என்பதை ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து அவர் ஒரு உத்தேசத்தை ஏற்படுத்தினார். அதன்படி ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் செய்யப்படுவதுபோல படைப்பை புனர்நிர்மானம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். கவிதைக்கான சரக்கல்ல என்பதால் அதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அது என் மனதுக்குள்ளேயே கிடந்தது. என்னுடைய புதிய நாவல் ஆஸ்பத்திரி அந்த வேலையைத்தான் செய்து பார்த்திருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அது உண்மையானால் நம்பிக்கு நன்றி (இதை ஏற்கனவே 'ஆஸ்பத்திரி' எனும் பதிவில் எழுதிவிட்டேன் என்றபோதும் இங்கேயும் கொஞ்சம் தேவைப்படவே செய்கிறது).

2

நம்பியை அடுத்தமுறை நான் சந்தித்தது கோவையில். ஆரண்யம் வெளிவந்த வேகத்தில் பாலைநிலவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான கடல்முகத்தைக் கொண்டுவந்தோம். அதில் அபராஜிதாவைப்பற்றிய கவிதையொன்றும் உண்டு. அப்போது நண்பர் சித்ரன் (
http://www.chithran.blogspot.com) கோவையில் இரண்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். ஒன்று கோவையின் முக்கிய விளம்பர ஏஜென்ஸியில் டிசைனர் உத்யோகம். மற்றது, வேலை முடிந்து வீட்டுக்குப் போகிற வழியில் என்னை வந்து பார்த்து ஃபோட்டோ்ஷாப் டிப்ஸ் கொடுப்பது. அதுவரைக்கும் கோரல்டிராவை வைத்துதான் ஒப்பேற்றிக்கொண்டு அலைந்தேன் என்பதால், கடல்முகம் என்கிற தொகுப்பிற்கு புட்டாவின் முகத்தை வைத்தே கடலும் கரையுமாக ஒரு முகப்பட்டை செய்து கொடுத்தது சாக்ஷாத் சித்ரனேதான் என்கிற தேவரகசியமொன்றை இப்போது வெளியிட்டுவிட்டேன். அந்த முகப்பு இதுதான்.



அட்டையை அலங்கரிப்பவராகவே அமைந்துவிட்டதாலும் கவிஞர் பாலைநிலவனால் ஒரு தகப்பனார் ஸ்தானத்தில் நினைத்துப் பார்க்கப்படுபவராகவும் இருந்த காரணத்தால் அவரையே வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராகக் கொண்டுவருவதுதான் சரியானது என்கிற ஏகமனத் தீர்மானத்தின் பேரில் விக்ரமாதித்யன் கோவைக்கு வந்துசேர்ந்தார். Stop. இங்கேயிருந்துதான் தலைப்பில் காணப்படும் வேதாளங்கள் புறப்படுகின்றன.

விழா நடைபெற இருந்த கல்யாண மண்டபத்திற்குக் காலையே வந்து சேர்ந்துவிட்டார் என்கிற செய்தி எங்கள் அலுவலகத்தை எட்டியது. அங்கே அவரை கவனித்துக்கொள்வதற்காக பாலைநிலவன் காத்திருந்ததால் மற்றவர்கள் மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மத்தியான வாக்கில் திடீரென்று வந்து நின்ற ஆட்டோவிலிருந்து விக்ரம் வெளிப்பட்டார். அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வர கூடவே பாலைநிலவன். எல்லாம் கள்ளாமை இல்லாததால் வந்த தள்ளாமைதான். அவருக்கு இன்னொரு தோள் இருந்ததால் எழுத்தாளர் ஷாராஜ் அந்தப்பக்கமாகத் தாங்கிப் பிடித்ததோடு வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் நான்தான் ஷாராஜ் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். விக்கியிடமிருந்து ஒரு ஆஹாகாரம் எழுந்தது. தொடர்ந்து நீதானா அது? அதுசரி ஏண்டா தப்புத்தப்பா கவிதை எழுதறே? என்று ஒரு கேள்வியும் புறப்பட்டது. அதற்குப் பிறகும் ஷாராஜ் ஏகலைவனைப்போல அவரை உள்ளே வரைக்கும் அழைத்து வந்தது புட்டாவின் அதிர்ஷ்டம்தான் (அவர் அதன்பிறகும் கவிதை எழுதுவதும்கூட...).

அலுவலகத்திற்குள் சண்டமாருதம்போல நுழைந்த அவரைப்பார்த்து எனக்கானால் ஆச்சர்யமான ஆச்சர்யம். சென்னையில் தென்றல்போல் கோரைப்பாயில் தவழ்ந்த ஆத்மாவா இது? அலுவலகத்தின் அறை அறையாகப் புகுந்து மனிதர் அடித்த லூட்டிகளைக் கண்ட நாங்கள் சமூக மனிதர்களாய் இருந்ததனால் நெளிய ஆரம்பித்திருந்ததில் வியப்பென்ன இருக்கிறது. சப்தம் அடுத்த அலுவலகங்களுக்கும் எட்டும்போது கொஞ்சம் பயமாகத்தானே இருக்கிறது. அதைத் தொடர்ந்து புயல் மையம் கொண்டதைப்போல ஒரு அறையில் அங்கே கிடந்த நாற்காலிகளையெல்லாம் நிராகரித்துவிட்டு அவர் தரையில் உட்கார்ந்ததுதான் தாமதம். அடுத்த கட்டளை பிறந்தது. போயி குவாட்டர் வாங்கிட்டு வாங்கடா. அதற்கு முன்னால் சாமி வந்த கவிஞர்களைப் பார்த்தறியாத பாவங்களாய் இருந்ததால் அவரே கைவசம் கொண்டுவந்திருந்த மிச்ச சரக்கை அங்கே உட்கார்ந்து அடித்தபோது நாவிலும் கண்ணிலும் ஊறும் நீருடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக தலைவரை தாஜா செய்து திரும்பவும் மண்டபத்திற்கு அனுப்பிவிட்டு நாங்களும் புறப்பட்டு அங்கே போனபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. அங்கே பெரும் அதிர்ச்சி ஏற்படும் சம்பவமொன்றை நாங்கள் எதிர்கொண்டோம். விழாத்தலைவர் விக்ரமாதித்யன் freshஆகக் குளித்துவிட்டு பளிச்சென்ற ஆடைகள் அணிந்து மிகுந்த பணிவான மென்மையான மனிதராக அங்கே நின்றுகொண்டிருந்தார். பாலைநிவனின் புத்தகம் சிறப்பாக வந்திருப்பதாகவும் பாலைநிலவன் என்கிற கவிஞனின் மேன்மைகள் குறித்துமெல்லாம் மேடையில் பேச வேண்டியதன் முன்வெளியீட்டுத் திட்டம்போல அவர் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவரைப்பற்றி மதியானம் மரியாதைக் குறைவாக நினைத்துவிட்டோமோ என்று எங்களுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி எழுந்துவிட்டிருந்தது.

அந்த மாபெரும் விழாவிற்கு மொத்தம் பதினைந்துபேர் வந்திருந்ததனால் (அதில் ஐந்துபேர் பாலைநிலவனின் family) மேற்கொண்டு காத்திருக்க முடியாமல் இரண்டு மணிநேரம் தாமதமாக ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சரியான நேரத்திற்கு ஆரம்பிக்காதது எங்கள் தவறாயிருக்க, அதற்குள் 'ஒரு' மனிதராகக் காணாமல்போய் 'இரண்டு' மனிதராகத் திரும்பிவந்த விக்ரமாதித்யனைப் பற்றி குற்றம் கூற என்ன இருக்கிறது. அதன்படி விழா துவங்கும்போது மேடையில் உட்கார்ந்திருக்கவேண்டிய அவர் வராண்டாவில் flat ஆகி மல்லாந்து கிடந்தார். இதனால் விழாப் புகைப்படங்களில் அவர் இடம்பெற முடியாமல் போய்விட்டது. என்ன செய்வது?

விழாவின் முடிவில் நள்ளிரவில் full flat ஆக உள்ள ஒரு மனிதரைத் தூக்கிக்கொண்டு போய் லாட்ஜ் அறை எடுப்பது பெரிய சவாலாக இருந்தது. நண்பரொருவருக்குத் தெரிந்த லாட்ஜ் ஒன்றில் மூன்றாந்தர அறை ஒன்று கிடைத்தது. மிகுந்த கறைகளைக் கொண்ட ஸ்பான்ச் மெத்தையில் விக்கியைக் கிடத்திவிட்டு நல்ல படுக்கைகளை நாடி நாங்கள் புறப்பட்டோம். வென்டிலேஷன் இல்லாத அந்த அறையில் இரவைக் கழித்திருந்த விக்ரமாதித்யனையும் பாலைநிலவனையும் பார்க்க அடுத்தநாள் காலை நாங்கள் போனபோது அவர்கள் இருவரும் குடியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மற்ற நண்பர்களும் சேர்ந்து அவரோடு மதுவருந்தத் தொடங்கினோம். கவிதைகள் குறித்தும் பயணங்கள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் மிகுந்த ஆச்சர்யமளிக்கக்கூடிய உரையாடலாக ஒன்று அப்போது உருவாகியிருந்தது. நம்பி கையில் எப்போதும் சரக்கு நிறைந்த தம்ளரை வைத்துக்கொண்டிருப்பதை விரும்புபவராக அப்போது காணப்பட்டதை நான் கவனித்தேன். நாங்கள் குடித்த அளவு கூட அவர் குடிக்கவில்லை. தம்ளர் கையில் ஆடிக்கொண்டேயிருக்கிறது. எப்போதாவது வாய்வரைக்கும் போகிறது இரண்டு சொட்டு நாக்கிலும் ஒரு மடக்கு தாடியிலும் வழிகிறது. வலதுகையால் சட்டையில் படரும் ஈரத்தைத் துடைத்துக்கொள்கிறார். பேச ஆரம்பித்துவிடுகிறார். அவ்வளவுதான். ஆகாரம் ஏதேனும் உட்கொள்ளத்தான் வேண்டும் என்கிற எங்களின் விண்ணப்பத்தை அவர் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டேயிருந்தார். உணவு தருவிக்கப்பட்டபோது நாங்கள் எல்லோரும் உண்டபிறகும்கூட அவர் சாப்பிட்டா குடிக்க முடியாதுடா என்றே சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியாக நாலு மணிக்கு அவர் உட்கார்ந்த இடத்திலேயே படுத்து உறங்கிப்போனதும் அவரை ஊருக்கு அனுப்புவதற்கான பணத்தைத் தேடுவதற்காக நாங்கள் வெளியே வந்தோம். ஸ்ரீபதி எங்கோ அலைந்து முன்னூறு ரூபாய் கொண்டுவந்தான்.

மாலை ஏழுமணிக்கு அவர் விழித்ததும் கிளம்பலாமா என்று கேட்கவேண்டிய துர்பாக்கிய நிலை என் மீது சுமத்தப்பட்டது. முற்றிலும் போதை தெளிந்திருந்த புட்டா மிகுந்த பணிவுடன் நேரம் என்ன என்று கேட்டார். ஏழு என்று கேட்டதும் உடனடியாக ஒரு அவசரக் குளியல் போட்டு பளிச்சிடும் உடைகள் அணிந்து வெளியேக ஆயத்தமானார். நாங்கள் நாலைந்து பேர் இருந்தோம். அறைச் சத்தத்தைக் கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்தபோது விக்கி எங்கும் எரியும் விளக்குகளின் வினோதமான வெளிச்சத்தைப் பார்த்து வியந்தார். வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். தன் ஆச்சர்யத்தை எங்களிடம் பகிர்ந்தளித்தார். அடப்பாவிகளா, சாயந்திரமாடா? என்று அப்போது அவர் கேட்டார். அதைத் தொடர்ந்து, அப்ப குடிக்கணுமேடா என்று ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

3

இந்த விபரங்களெல்லாம் ஏன் திரிகூட ஞாபகத்தில் வந்துகொண்டிருக்கவேண்டும் என்று கேட்கிற உங்களைப்போன்ற பாமரர்களுக்காகவே எழுதப்பட்டதுதான் இந்த மூன்றாவது பாகம். எழுத்தாளர்கள் என்றால் இப்படித்தான். உங்களைப்போல சொல்ல வந்தததை நேரடியாகச் சொல்லிக்கொண்டுபோனால் எழுத்தாளன் என்று ஒருத்தன் இருப்பதாக எதைக்கொண்டு அடையாளம் காண்பீர்கள்? இந்த உத்திகள் உங்களுக்கென்ன புதுசா? கவனியுங்கள்...

நான் அடக்கம் ஐவர் குழு குற்றாலம் வந்த கதையைத்தான் நீங்கள் ஏற்கனவே அறிவீர்களே... அறியாதவர்கள் முந்தைய பத்திகளை வாசித்துத் தொலையுங்கள். அறிந்தவர்கள் என்னை மிகவும் மகிழ்விக்கிறார்கள். அவர்களுக்கு எனது சக தெய்வங்கள் எல்லா செளபாக்கியங்களையும் தருமாறு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன் (இந்த இடத்தில் நிறுத்திவிட்டு திரிகூட ஞாபகம் பழைய பத்திகளைப் படித்துவிட்டு இதைத் திரும்பவும் வந்து தொடரும் அன்பர்களுக்கும் இந்த offer செல்லுபடியாகும். இருந்தாலும் சக தெய்வங்கள் என்று குறிப்பிடப்படுவதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த ப்ளாகில் காணப்படும் 'நீர்நிலையிலிருந்து ஒரு குரல்' எனும் சிறுகதையைப் படித்தேயாகவேண்டும்). குற்றாலத்தில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த நண்பர் டிகேசி (நண்பர் என்று சொல்லக்கூடாதா என்ன)யின் பெயரர்களின் வீடுகள் தென்காசியில் இருந்ததால் நாங்கள் நேராக தென்காசியை அடைந்தோம். பின்னாளில் என் பழைய காதலி ஒருத்தியை நினைவுபடுத்தும் நயன்தாரா என்கிற ஒரு வார்த்தை பேச ஒரு வரு்ஷம் காத்திருந்த நடி(கை) தமிழில் தன் அறிமுக சினிமாவுக்காக திருவல்லாவிலிருந்து வந்து மிதிக்கப்போகிற மண் என்கிற மகத்துவம் அறியாது அந்த ஊருக்குள் நாங்கள் ஆரோகணித்திருந்த 'சாந்திரோ' என்கிற வகை வெள்ளை வாகனம் நுழைந்தது. காரில் உடன் இருந்தவர்கள் யாரார் என்பதை திரும்பவும் ஒருமுறை சொல்லித் தொலைக்கிறேன். அது இங்கே அவசியம் தேவைப்படுகிறது. காரை ஓட்டிக்கொண்டிருந்தவரும் அதன் உரிமையாளருமான கோவையைச் சார்ந்த தொழிலதிபர் ரவீந்திரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எழுத்தாளர் சூத்ரதாரி (இவர் தன் பெயரை தற்போது எம். கோபாலகிருஷ்ணன் என்பதாகவே குறிப்பிடுகிறார்) கஸ்தூரிமான் புகழ் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளனும் சுதேசமித்திரனுமான அடியேன். இதில் முன் இருக்கையில் நாஞ்சிலும், பின்னிருக்கையில் இடது பக்கம் நானும் வலது பக்கம் சூத்ரதாரியும் நடுவில் மரபின்மைந்தனும் உட்கார்ந்திருந்தோம். டிகேசியின் வீட்டிற்கு ரவீந்திரன் ஏற்கனவே போயிருக்கிறார் என்பதால் மிகச்சரியாக தவறான ஒரு தெருவுக்குள் வாகனம் நுழைந்துவிட்டிருந்தது. தென்காசிக்குள் நுழைந்தபோதே எங்களுக்குள் ஒருவிதமான சம்பாஷணை எழுந்திருந்தது. வழியில் விக்கியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் அது. அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று வினவுபவர்கள் மிகுந்த அழுத்தக்காரர்கள் என்பதாக இப்போது நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன். அவர்களிடம் நான் பரிந்துரை செய்வது இதைத்தான், தொடர்ந்து வாசியுங்கள்.

தவறான சாலைக்குள் நுழைந்துவிட்டோம் போலிருக்கிறது என்று ரவீந்திரன் ஒரு அறிவிப்பை அப்போது வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நான் ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டேன். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள், நாம் தவறுதலாக வக்கீல் அனந்தபத்மனாபபிள்ளை வளவுக்குள் நுழைந்துவிடப் போகிறோம் என்பதுதான் அது. அதைக்கேட்டு எல்லோரும் ஒருமுறை சிரித்து வைத்தார்கள். அந்த வளவில்தான் விக்ரமாதித்யனின் வீடு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்குமா தெரியாது.

ஆனால் அவர்களின் சிரிப்பு அடுத்த கணம் மறைந்து விட்டது. ஏனென்றால் நாங்கள் உண்மையாகவே வக்கீல் அனந்தபத்மனாபபிள்ளை வளவுக்குள்தான் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தோம் என்பது ஒரு பெயர்ப்பலகையிலிருந்து தெரியவந்தபோது சாந்திரோவுக்குள் பெருத்த அமைதி நிலவியது. நாங்கள் ஏதோ ஜுராசிக் பார்க்குக்குள் நுழைந்துவிட்ட ஆட்டுக்குட்டிகள் போல ஒருவித பீதியை அடைந்தோம். எதற்கும் கண்ணாடியை ஏற்றிக்கொள்ளலாமா என்று நான் அச்சத்துடன் வினவினேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை. அதற்குள் அந்த வளவு முடிந்து சாலை வந்துவிட்டிருந்தது. அதில் இடது புறமாக ரவீந்திரன் காரைத் திருப்பினார். அவ்வளவுதான், அந்தச் சாலைக்கு வரும் அடுத்த வளவில் விக்ரமாதித்யன் நடந்து வந்துகொண்டிருப்பதை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்துவிட்டோம். கதவோரம் இருந்தவர்கள் மிகுந்த அச்சத்தோடு கண்ணாடியை ஏற்றினோம். அவர் நல்லகாலமாக எங்களைப் பார்த்திருக்கவில்லை என்பது எங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அதைத் தொடர்ந்து நாஞ்சில் இது என்ன அநியாயம் என்று தன்னைத் தானே நொந்துகொண்டார். என்ன இருந்தாலும் அவர் ஒரு சக படைப்பாளி என்பதாக அப்போது அவர் சொன்னார். அதை நானும் மிகுந்த குற்ற உணர்வோடு ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் ரவீந்திரன்தான் மிகவும் அப்பாவித்தனமாக ஏன் அவரைப் பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதைத் தொடர்ந்து அவரைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்படுகிறோம் என்பதைப் பற்றிய ஒரு உரையாடல் எழுந்த வகையில் அப்போதைக்கு எங்களின் குற்ற உணர்வு மறைந்துவிட்டிருந்தது.

டிகேசி வீட்டிற்குப் போனபிறகு குற்றாலம் போய் மூன்று நாட்கள் முடிந்தன. அதுவரைக்கும் நாங்கள் விக்ரமாதித்யனை எதிர்கொள்ளாததாலும் நில்லாப் பிரசங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்ததாலும் அவரை முற்றிலும் மறந்தே போயிருந்தோம். மூன்றாம்நாள் மாலை ரசனை மாத இதழ் வெளியீட்டு விழாவும் டிகேசி பிறந்தநாள் விழாவும் தென்காசியில் ஒருங்கே நடந்தது. நாங்கள் அதற்காகத்தான் போயிருந்தோம் என்பதால் எப்படியும் விழாவுக்கு விக்ரமாதித்யன் வருவார் என்பதை எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வந்திருக்கவில்லை என்பது எங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஒரு வழியாக விழா முடிந்ததும் ஏதோ சினிமா முடிந்ததும் எல்லாம் முடிந்துவிட்டது என்று நாம் சாதாரணமாகக் கருதுவதுபோல நாங்கள் மிக நிதானத்தோடு வெளியே வந்தோம். அப்போது கோபால் வாசலைக் கடக்காமல் எதற்காக ஒரு ஓரமாக இருட்பிரதேசமாகப் பார்த்து நின்றுகொண்டிருக்கிறார் (கொஞ்சம் desentஆகச் சொல்லவேண்டுமானால் எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கிறது பாருங்கள்!) என்று எனக்குள் ஒரு வியப்பு விரிந்தது. அதைத் தொடர்ந்து நான் படிகளைக் கடக்க யத்தனித்தபோது எதிரில் ஓர் உருவம் தென்பட்டது. பழுத்த தாடியும் மெலிந்த திரேகமும் காவியேறிய வெள்ளாடையும் போதை ஏறிய தள்ளாட்டமுமாக ஓர் உருவம். சாக்ஷாத் புட்டாவேதான். நான் அப்போது ஓர் அசிங்கமான வேலை செய்தேன். அருகில் காணப்பட்ட காருக்குப் பின்னால் போய் மறைந்துகொண்டேன். அடப் படுபாவி என்று என் மனமானால் பதைக்கிறது. எனைத் தொடர்ந்து யாரெல்லாம் அப்படி வந்து ஒளிந்துகொண்டார்கள், காரில் ஏறி தப்பித்துக்கொண்டார்கள் என்பதையெல்லாம் சொல்லி அவர்களைப் போட்டுக்கொடுக்க விரும்பவில்லை (ஏனென்றால் அது உங்களுக்கே தெரியும்!). கார் நாங்கள் போக வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் போகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே அரை கிலோ மீட்டர் போக வேண்டியிருந்தது. அதற்குள் நண்பர் ரவீந்திரன் மிகவும் விசனப்பட்டு காணப்பட்டார். ஏன் ஒரு மனிதரை இப்படி அஞ்சவேண்டும் என்று அவர் வருத்தப்பட ஆரம்பிக்கவும், நாஞ்சிலும் தன் குற்ற உணர்வை வெளிப்படுத்த ஆரம்பித்தார். காரைத் திருப்பிக்கொண்டு அதே வழியாக வந்தோம். அந்த நிகழ்ச்சி நடந்த மண்டபத்தைக் கடந்துதான் டிகேசி பெயரர்களின் வீட்டுக்குப் போகவேண்டியிருந்ததால் அந்த மண்டபத்தை அச்சத்தோடு நெருங்கினோம். நல்லகாலமாக கவிஞர் வாசலில் இல்லை. உள்ளே போய்விட்டார் போலிருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். அவர் யாரையாவது கவனித்தாரா என்று வேறொருவர் கேட்டபோது, நல்ல போதையில் இருப்பதால் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு ஆறுதல் வாக்கியம் நிலவியது.

டிகேசி வீட்டிற்கு வந்து இரவு உணவு உண்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று எங்களை அன்போடு வற்புறுத்தியிருந்தார்கள். இருந்த கும்பலில் குடிப்பழக்கம் உள்ளவர்களில் ஒருவனான நான் அதை என்ன செய்து தவிர்க்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன் (விவரம் தெரியாதவர்கள் சாப்பிட்டுவிட்டால் குடிப்பது சிரமம் என்று விக்கி சொன்னதை நினைவிற்கொள்க). யோசனை ஒன்றும் ஓடுவதற்கு முன்னால் சாந்திரோ டிகேசி வீடுவரைக்கும் ஓடிவந்துவிட்டது. அருமையான உணவு அன்போடு மீண்டுமொருதரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டிகேசியின் சொந்த புத்தக அலமாரியை கொஞ்சநேரம் மேய்ந்தபிறகு (மூலதனம் அந்தக்காலத்து முதல் பதிப்பு காணக்கிடைத்தது ஓர் ஆச்சர்யம்!) வெளியே வந்தோம். வாசலில் நின்றுகொண்டிருந்தார் நம்ம அண்ணாச்சி.

அதற்குப் பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருதடவை நாய் வேஷம் போட்டதற்காக ஆயுள் முழுக்கவா குரைக்க முடியும்? ஆனது ஆகட்டும் என்று (வந்து மூன்று நாட்கள் ஆயிற்று என்ற உண்மையை மட்டும் மறைக்க முடிந்தால் தேவலை!) அவர் அருகில் போய் நின்றேன். பின்னாலேயே கோபால்! விக்ரமாதித்யன் கழனியூரனோடு பேசிக்கொண்டிருந்தார். என்னைத் திரும்பிப் பார்த்தார். வணக்கம், அடையாளம் தெரிகிறதா என்று கேட்டு புன்னகைத்தேன். அவர் என் முகத்தை ஊடுருவிப் பார்த்தார். என்னை அடையாளம் கண்டுகொண்ட சுவடே காணவில்லை. அதைத் தொடர்ந்து யார் நீங்க? என்று வினவினார். எனக்கு இப்படிக்கூட லக்கி பிரைஸ் அடிக்குமா என்று இருந்தது. இப்படியென்று தெரிந்திருந்தால் முன்னால் வந்து நின்றிருக்கவே வேண்டாமே என்று என் அவசர புத்தியை கடுமையான வசவுகளால் தாக்க ஆரம்பித்திருந்தேன். ஒருபக்கம் கோபமாகவும் இருந்தது. சரி உன் மூஞ்சி என்ன எம்ஜி ராமச்சந்திரன் மூஞ்சியா இல்லை கருணாநிதி மூஞ்சியா மக்கள் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு என்று ஓர் ஆறுதல் எழுந்தது. அதைத் தொடர்ந்து ரொம்ப சந்தோ்ஷம் என்று நான் அவரை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தேன். ஒரு பத்தடி நடந்திருப்பேன். பின்னாலிருந்து ஒரு குரல். 'டேய் சுதேசமித்திரா!'. மிகுந்த உற்சாகத்தோடு திரும்பிப் பார்த்தேன். அவர் 'உன்னை மறப்பேனாடா?' என்று கூவினார். அதற்குள் நான் அவருக்கு அருகில் போயிருந்தேன். மிகுந்த வாஞ்சையோடு அவர் என்னோடு உரையாட ஆரம்பித்தார். எனக்குள் குற்ற உணர்வு கத்தியை எடுத்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தபோது, அவரிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். அதற்கு பதிலாக ஒரு நூறு ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன். அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னடா இது? என்று கேட்டார், கையை உயர்த்திப் பார்த்தார். இவ்வளவுதானாடா நீ என்பதை வேறு வார்த்தைகளால் சொன்னார், 'இருக்கட்டும்டா!' தன் சட்டைப் பையில் அதை வைத்துக்கொண்டார்.

*

கோவையில் அவர் மாலை ஏழு மணிக்கு வெளியே வந்து சாயந்திரமாடா? என்று கேட்டபிறகு, பாலை நிலவனும் அவரும் சென்று குடித்துவிட்டு வந்தார்கள். அதைத் தொடர்ந்து அவரை பஸ்நிலையத்திற்கு நாங்கள் அழைத்துப் போனோம். ஒரு மதுரை பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. அதில் அவருக்கு முன்னதாகவே ஒருவன் ஏறி அவரது பையை வைத்துவிட்டு வந்தான். அவர் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். அவரிடம் காசில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். அவரை நாங்கள் பஸ்ஸில் ஏற்றி விடுகிறோம். அவர் ஏறுகிறார். கடைசிவரைக்கும் பணம் என்று ஒரு வார்த்தை அவர் கேட்கவில்லை என்பது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. கடைசி நேரத்தில் அவரது கையில் இதேபோலத்தான் நான் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களையும் ஒரு ஐம்பது நூறு ரூபாய்த் தாளையும் திணித்தேன். அதை என்ன என்றுகூட அவர் பார்க்கவில்லை. பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பஸ் நகர்ந்து போவதை நாங்கள் பார்த்துக்கொண்டு நின்றோம் - ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சகியாமல்!

January 12, 2007

இரண்டாவது நாவல்

2005 முடிவில் நான் எழுதி முடித்த எனது இரண்டாவது நாவல் ஆஸ்பத்திரி ஒருவழியாக 2006 முடிவில் வெளிவந்துவிட்டது. நண்பர் மனுஷ்யபுத்திரன் புண்ணியத்தில் கடந்த 30.12.2006 அன்று சென்னையில் வெளிவந்தது ஆஸ்பத்திரி. எழுதியதோடு சரி, சொந்த நாவலையே ஒரு சவலைப்பிள்ளை போல கவனிக்காமல் விட்டுவிட்டேனோ என்று இப்போது வருத்தமாக இருக்கிறது. feedbackகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பவையாக இருக்கும்போது இந்த எண்ணம் மனத்தின் மேல் மட்டத்தில் வந்து மிதக்கிறது. விழாவில் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் நாவலைப் பற்றிய நல்லதொரு உரையை வழங்கினார். அவருக்கு என் நன்றிகள். முன்னுரை வழங்கிய நாஞ்சில் நாடனுக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன (மேடையில் ஏற்புரை வழங்குவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் இங்கே அதைச் செய்துகொண்டிருக்கிறேன் போலிருக்கிறது). நான் முன்பே சொன்னதுபோல கடந்த புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இயலாமல் போன நாவல் இந்த புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட்டது ஆறுதல்தான். அதிலும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருப்பது ஒரு கூடுதல் விசேஷம்.

திடீரென்று என்ன நடந்தது என்பது தெரியவில்லை, தொலைக்காட்சியும் சம்சாரமும் சலித்துப் போனதாலோ என்னவோ நம் மகாஜனங்கள் புத்தகங்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பதிப்பகங்கள் முழுவீச்சோடு ரியல் எஸ்டேட் போல பெருக ஆரம்பித்திருக்கின்றன. புத்தகங்களைப் பதிப்பித்துத் தள்ளுகின்றன. அதிலும் நல்ல புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகிற அவலம் வேறு நிகழ்கிறது. முன்பெல்லாம் புத்தகம் என்று சொன்னால் காதல் கவிதைகளாகவும், அதன்பிறகு சுயமுன்னேற்ற நூல்களாகவும் இருந்து வந்தது. இப்போது வாசகர்களின் கவனம் திரும்பிவிட்டதா அல்லது வேறு விதமான வாசகர்கள் புதிதாக உருவாகியிருக்கிறார்களா என்பதை அறிய இயலாத வண்ணம் நல்ல புத்தகங்கள் நல்ல அச்சில் நல்ல விலையில் கிடைக்கிற சூழ்நிலையும் விற்பனையாகிற சாத்தியமும் காண்கிறது.

நல்லது.