August 04, 2009

சினிமா எனும் சில்லரை வியாபாரம்!


சினிமா என்பதொரு தொழிலாகவும் இருப்பதனால் அதில் வியாபார நுணுக்கங்களைப் புகுத்துவதும் அவசியமாகவே ஆகிறது. ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு விளம்பரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அலிபாபா திரைப்படத்தைக் குறிப்பிட்டு ஏற்கனவே எழுதியிருந்தேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் விளம்பரம் இல்லாமல் கன்ஸ்யூம் செய்யப்படுவது தாய்ப்பால் மட்டும்தான்!


ஒருகாலத்தில் மாட்டுவண்டிகளில் அல்லது குதிரை வண்டிகளில் மைக்செட் கட்டி கிராமம் கிராமமாக சினிமாவுக்கு விளம்பரம் செய்துகொண்டு போனார்கள். துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்குவதற்கென்றே குழந்தைகள் வண்டியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி பெரும்பாலும் இப்போது அழிந்தேவிட்டது. அதனிடத்தில் போஸ்டர்கள் பெருமிதத்தோடு வந்தமர்ந்துகொண்டன. இதனால் கழுதைகளுக்கும் மாடுகளுக்கும் பூதாகரமாக்கப்பட்ட முலைகள் உணவாயின. இப்போது வந்துவிட்ட ப்ளெக்ஸ் டெக்னாலஜியோ அவற்றைப் பட்டினி போடுவதாக இருக்கிறது. கடவுளுக்கு பயந்த ஒருவன் போகிற பாதையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் சலாம் போட்டுக்கொண்டு போவதுபோல சினிமா பேனர்களுக்கு சலாம் போடுகிற ஒருவனை ஒரு டிடீயெச் டீவி விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள் மயம்தான்.

இது இல்லாமல் பத்திரிகைகள் வாயிலாக செய்யப்படும் மறைமுக விளம்பரங்களோ அதைவிடவும் முக்கியமானவை. ஒரு படத்திற்கு டைரக்டர் அவசியமோ இல்லையோ, பீயாரோ அவசியம் என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. சரியான ஆள் கையில்தான் அந்த வேலையைக் கொடுக்கவேண்டும். எந்த பத்திரிகைக்கு எந்த ஸ்டில்லை கொடுக்கலாம், அதை எப்போது கொடுக்கலாம்; ஒவ்வொரு பத்திரிகையிலும் யாரை கவனித்தால் படமும் செய்தியும் வருகிற சைஸில் வரும்? படத்தைப் பற்றி கவர்ஸ்டோரிகள் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? டைரக்டரின் பேட்டி வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒருவர்தான் அந்த வேலையைச் சரியாக செய்ய முடியும்.

படங்களின் ஸ்டில்கள் பத்திரிகைகளில் வெளிவருவதால் பத்திரிகை விற்கிறதா அல்லது படம் ஓடுகிறதா என்கிற கேள்வி கோழி-முட்டை கதை மாதிரி பதிலே இல்லாதது. இதன் அடுத்த கட்டமாகத்தான் படத்தின் ஸ்டில்கள் என்பதற்கு முந்தியே, பூஜை போடும்போதே அல்லது அதற்கு முன்பாகவே ஸ்டில் செஷன்கள் நடந்தேறுகின்றன. படத்தில் சம்பந்தப்பட்ட நாயகன் மற்றும் நாயகி ஆகியோரை ஒருநாள் முன்கூட்டியே கால்ஷீட் பெற்று வித விதமான காஸ்ட்யூம்களில் சுட்டுத் தள்ளுவது என்பதாக ஆரம்பித்த இந்த ஸ்டில் செஷன்கள் இப்போது முக்கிய ஆர்ட்டிஸ்டுகளையும்கூட சேர்த்துக்கொண்டுவிட்டது. இதனால் படம் எடுக்கப்படுகிறதோ இல்லையோ, பப்ளிசிடி உறுதியாகிவிடுகிறது.

ஒரு பத்திரிகையில் ஒரு பக்கம் விளம்பரம் தரவேண்டுமானால் சில லட்சங்கள் செலவாகும், அதே பத்திரிகையில் படத்தைப் பற்றிய செய்தி வரவேண்டுமானால் சில ஆயிரங்கள் செலவு செய்தால் போதும் என்கிற நிலைப்பாடு எப்போதுமே சிறப்பானதுதானே! சமீபத்தில் தினமணிக் கதிரில் மூன்று பக்கங்கள் சினிமா செய்திகளைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. சினிமா என்கிற பூதம் அவ்வளவு பெரியது.

பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கொள்கிற இந்த யுக்தி பிழையானதல்ல. இரண்டு பக்கமும் பிழைப்பு ஓடத்தானே வேண்டியிருக்கிறது. அதிலும் திடீர் திடீரென்று சுவரொட்டி ஒட்டுவதற்குத் தடை, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பதற்குத் தடை என்று அரசாங்கம் அதன் இஷ்டப்படி சில ரகளைகள் செய்வதும் பிற்பாடு தளர்த்துவதுமாக விளையாடிக்கொண்டிருக்கையில் கிரகண காலங்களில் வெளிவரும் படங்கள் வம்பில் மாட்டிக்கொள்வது தவிர்க்க இயலாததுதானே, இந்த நேரத்தில் அவர்களுக்குக் கை கொடுப்பது பத்திரிகை வாயிலான செய்திகளைத் தவிர வேறென்ன!

அடுத்த கட்ட விளம்பர யுக்தி டீவியோடு தொடர்புள்ளது. டீவிக்கு காட்சிகளைக் கொடுப்பது என்பதில் தொடங்கி, டீவியில் விளம்பரம் கொடுப்பது என்று விரிவடைந்து, இப்போது படம் வெளி வந்த முதல் வாரமே சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள் மற்றும் நடிக நடிகைகள் கூட்டாக பேட்டி கொடுப்பது, படத்தைப் பற்றி உரையாடுவது என்பதாக வந்து நிற்கிறது. இதனால் கதை தெரியாமல் படம் பார்க்க விரும்புபவர்கள், முதல் நாள் முதல் ஷோவிலேயே க்யூவில் நின்றோ, ஃபோனில் புக் செய்தோ, திருட்டு டிவிடி வாங்கியோ படத்தைப் பார்த்துவிடுவதே சாலச் சிறந்தது என்கிற நிலைப்பாடே இன்று எழுந்திருப்பது.

அப்படிப் பார்க்கவில்லையானால் சம்பந்தப்பட்ட நடிகையை டீவியில் பார்த்ததும் சித்தம் இழந்து வாயைப் பிளந்துகொண்டு பார்க்க ஆரம்பிக்கிற வகையில் அந்த நடிகையின் வாய் வாயிலாகவே கடைசிக் காட்சியில் நான் செத்துப்போகும்போது என்கிற வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போவது தவிர்க்க இயலாததாகும். இப்படியாக படத்தின் முக்கிய திருப்பங்கள், கதை முதலான எதுவும் ரகசியமில்லாமல் போகும்.

மணிரத்னம், ஷங்கர், என்று ஏதோ ஒரு சில டைரக்டர்கள்தான் இப்போதும் தங்கள் பாப்புலாரிடி கொடுக்கிற தைரியத்தில் இவற்றை ரகசியமாக வைத்துக்கொள்ள சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர், சிவாஜி வெளிவருவதற்கு முன் என்னிடம் ஒரு செய்தியை சொன்னார். இந்தப் படத்தில் ஒரு பாடலை ஸ்டன்ட் காட்சியாகப் படமாக்குகிறார்கள் என்று. இந்த செய்தியை அவர் பத்திரிகையில் எழுதியபோது ஷங்கரே ஆச்சர்யப்பட்டார் என்பதும் பின்னால் நிகழ்ந்த சம்பவம். அவர் எப்படி இதை அறிந்தார் என்று கேட்டால், அவர் ரொம்ப 'கூலாக' சொன்னார், ஏவியெம்மில் செட் போட்டு உள்ளே யாரையும் விடாமல் ரகசியமாக ஷூட் செய்துகொண்டிருந்தார்கள். உள்ளேயிருந்து பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அதனால் பாடல்காட்சி பதிவாவது தெரிந்தது. ஆனால் ஸ்டன்ட் நடிகர்கள் வெளியே வந்து தம்மடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் ஒட்டுவது என்ன சிரமமா?

இப்படியெல்லாம் ரகசியமாக ஷூட் செய்தாலும் இந்தச் செய்திக் கசிவுகளை விரும்பாத சினிமாக்காரர் ஒருவர் இருக்க முடியுமா என்ன? மணிரத்னம் ஊட்டி மலைக் காட்டில் ஆதிவாசிகளின் குடியிருப்பை அமைத்திருக்கிறார். ராவணா படத்துக்காக பலநாட்கள் அங்கும் சாலக்குடியிலும் ஷூட்டிங் நடக்கிறது என்று சொன்னால், ராமாயணத்தில் வரும் போர்க்காட்சிகளுக்கு பதிலாக வனத்தில் நீண்ட சேஸிங் காட்சிகள் இருக்கப் போகின்றன என்று அனுமானிப்பது பிழையாகப்போவதில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த எத்தனையோ வன விரட்டல் காட்சிகள் நம் மனத்தின் மேல்மட்டத்தில் மிதக்க ஆரம்பிப்பதிலும் வியப்பில்லை.

வீட்டில் உலை கொதிக்கிறதோ - ரைஸ்குக்கர் விசிலடிக்கிறதோ – இல்லையோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் யாரும் உண்டா? அதே ஆவல்தானே சினிமாவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதிலும் இருந்து தொலைக்கிறது. இந்த ஆர்வத்துக்கான தீனி என்கிற பெயரில் மறைமுகமான இவ்விதமான கிசுகிசுக்களும், செய்திகளும் எல்லோருக்கும் ஏதாவதொரு பலனை அளிப்பதாக இருக்கத்தானே செய்கின்றன!

சரி, படத்துக்கு பூஜை போட்டாயிற்று, போஸ்டர் ஒட்டியாயிற்று, விளம்பரங்கள் கொடுத்தாயிற்று, பத்திரிகைகளுக்கு செய்திகள் கசியவிட்டாயிற்று. ஸ்டில்கள் வழங்கப்பட்டாயிற்று. படம் ரிலீஸ் ஆகப்போகிறது. படம் வேறு சுமாராகத்தான் வந்திருக்கிறது. ஓடவேண்டுமானால் இவை மாத்திரம் போதாது. என்ன செய்யலாம்?

இப்படியொரு குழப்பம் வந்தபோது சமீபத்தில் நம்மாட்கள் ஒரு மிகப்பெரிய லூட்டியை அடித்தார்கள். கலா மாஸ்ட்டர் தயவால் கெமிஸ்டரி என்கிற வார்த்தை இந்த நேரத்தில்தான் டீவியில் வாயிலாக பிராபல்யமடைந்திருக்கிறது. இதை ஏன் நாம் உபயோகித்துக்கொள்ளக்கூடாது? இந்த யோசனையின் பலன்தான் இப்போது நாம் படிக்கும் ஒருசில செய்திகள்.

நகுலுக்கும் சுனைனாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த படத்திலும் அவர்களே ஜோடியாக நடிப்பதற்கான காரணம் அவர்களுக்டையே பூத்துள்ள காதல்தான்! ஸ்நேகாவுக்கும் ப்ரசன்னாவுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அடுத்தது கல்யாணம்தான்!

இந்த மாதிரி செய்திகள் முன்பெல்லாம் பத்திரிகையாளர்களால்தான் புனையப்பட்டு வந்தன. ஆனால் இன்றைக்கோ சம்பந்தப்பட்ட படத்தின் டீமே இதை தீர்மானித்துவிடுகிறது. படம் நன்றாக ஓட இதுவொரு விளம்பர யுக்தியாகக் கையாளப்படுகிறது. எல்லோரும் சேர்ந்தே செய்கிற இந்தக் கூட்டுக் களவாணித்தனத்துக்கு பத்திரிகைகளும் துணைபோவதே இப்போது நடப்பது. அதாவது, அதைப் படிப்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே தெரியும், அது பொய் என்பது!

நம்ம விசிலடிச்சான் குஞ்சுகள், அடடா ஸ்நேகா கல்யாணம் செய்துகொண்டால் அப்புறம் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லையே, இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைத்துவிடுவதுதான் சரியாக இருக்கும்போல இருக்கிறதே என்று அஞ்சி அஞ்சி குறிப்பிட்ட சினிமாவைப் போய் பார்த்துவிடுவார்கள் என்பதே அவர்கள் போடும் கணக்கு!

காதல் என்பதும் கல்யாணம் என்பதும் அவரவர் சொந்த விவகாரங்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பிரபலங்களின் அசைவுகள் அனைத்துமே கண்காணிக்கப்படுவனவாக இருப்பதனால் அவர்கள் எங்கே போகிறார்கள், யாரோடு உறங்குகிறார்கள், யாருடைய வலையில் விழுகிறார்கள், யாரை வலையில் வீழ்த்துகிறார்கள் என்பன யாவுமே செய்திகளாகிவிடுகின்றன.

இப்படியொரு செய்தியுருவாக்கத்தை சாதிப்பதன் வாயிலாக பத்திரிகைகள் சம்பாதிக்க முடியுமானால் அதே உத்தியை உபயோகித்து படமுதலாளிகள் ஏன் சம்பாதிக்கக்கூடாது என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

எம்ஜியார் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னதுபோல பரபரப்பான செய்தியொன்று எப்போதும் தேவைப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை யார் எதற்காக உற்பத்தி செய்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை? சம்பந்தப்பட்ட நடிகரும் நடிகையும் அல்லது இயக்குனரும் நடிகையும் உள்ளூர புன்னகைத்துக்கொள்வார்கள். நடிகர் அல்லது இயக்குனர் வீட்டில் பார்க்கும் பணக்காரப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார், நடிகை மார்க்கெட் சரியும் நேரத்தில் வலையில் விழும் என்னாரையை மணந்துகொண்டு தேசத்தைப் பார்த்துப் போய்விடுவார். அதையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு அப்போதுதான் புதிதாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆன புதிய நடிகர்களைப் பற்றி படித்து முதுகைச் சொறிந்துகொண்டிருப்பார்கள் ரசிகமஹாஜனங்கள்.

சினிமா ஒரு சில்லரை வியாபாரம் என்று சொல்வது இதனால்தான். ஒரு படம் ஜெயிக்க வேண்டுமானால் எந்தவிதமான சில்லரைத்தனமான காரியத்தையும் செய்யத் துணியவேண்டும் என்பதே பாலபாடமாக இருக்கும்போது இந்த வாக்கியம் பொருந்தவே செய்கிறது.

சரி விளம்பர யுக்தி என்பது இவ்வளவு தூரம் வந்துவிட்டது. அடுத்து வேறென்னவெல்லால் செய்யலாம்?

சம்பந்தப்பட்ட நடிகரையும் நடிகையையும் உல்லாசமாக இருக்க வைத்து அந்தப் பொழுதுகளை ரகசியமாகப் படம் பிடித்து இன்டெர்நெட்டில் போடலாம். அது நாங்கள் இல்லை என்று மிகச் சாதாரணமாக அவர்கள் மறுத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்பதனால் ஒரு வம்பும் வரப்போவதில்லை.

அல்லது, ரகசியம்கூட வேண்டாம், கான்ட்ராக்டில் விளம்பரம் வரைக்கும் எழுதும்போது இதையும் எழுதி வாங்கிக்கொள்வது உசிதமாக இருக்கும். ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இரட்டை லாபமாகத்தானே போகும்!

சம்பந்தப்பட்ட நடிகர் கல்யாணமானவராக இருந்தால் அவரது மனைவியையும் ஒரு ஒப்பந்தத்துக்குள் கொண்டு வரலாம். அதாவது இவ்விதமாக ஒரு வதந்தி பரப்பப்படும். அதைப் பார்த்து மனைவியானவர் நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். படம் ஓட ஆரம்பித்து வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கை வரும்போது சமாதானமாகிவிட்டதாக கூட்டாக காஃபி வித் ஹாசனில் நடிகை சகிதம் காட்சி தந்துவிடவேண்டும். இதைவிட வேறென்ன பப்ளிசிடி வேண்டும்?

தன் மனைவியை மீடியாக்களுக்குக் காட்ட விரும்பாதவர்கள், மாமனாரின் கையில் ஒரு அரிவாளைத் தரலாம். கொஞ்சம் படித்தவராக இருந்தால் துப்பாக்கியைக்கூட கொடுக்கலாம். ஏனென்றால் மகள் விதவையாவதை எந்தத் தகப்பனும் விரும்புவதேயில்லை!

இந்த மாதிரி உங்களுக்குத் தோன்றும் ஐடியாக்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி நீங்களே கிழித்துப் போட்டுவிடுங்கள், அவர்களின் கண்களில் கிண்களில் தென்பட்டுத் தொலைக்கப்போகிறது!

2 comments:

ஜோ/Joe said...

கலக்கல்!

butterfly Surya said...

கதையை நம்பாமல் சதையை நம்பினால் இப்படிதான் எல்லாவிதமான உட்டாலக்கடி வேலையெல்லாம் பண்ண வேண்டியுள்ளது.


சில்லரை வியாபாரம் = நிஜமான சத்தம்.