தீர்த்தவாரி
காக்டெய்ல் என்கிற தமிழின் அதி உன்னதக் குடிகார நாவல் சமீபத்தில் வெளிவந்தது. அதை உங்களுக்காக ஆக்கி அளித்திருப்போனின் திருநாமம் சுதேசமித்திரன் என்பது. ஆசாமி சாதாரணமான ஆளில்லை. நண்பர்களைக் குடிகாரர்களாக மாற்றிய சகவாசங்கள் குறித்துதான் நாம் பெரிதும் அறிந்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு நாவலையே குடிகார நாவலாகக் கெடுத்துக் குடிச்சுவராக அடித்திருப்பது மேற்கண்ட திருமேனிதான். பொல்லாத ஆசாமி ஸ்வாமி... பொல்லாத ஆசாமி.
இந்தக் குடிகார நாவலை இதுவரை படித்த குடிகாரர்களெல்லாம் மதுப்புட்டிக்குக் கோவில் எழுப்ப முயன்று வருவதாகவும், மதுப்புட்டிகள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுவதால் புதுப் புதுக் கடவுள் அவதாரங்களும், புதுப் புதுக் கடவுளர்களும், புதுப்புது மதங்களும் தோன்றக்கூடிய அபாயம் தமிழகத்தில் உண்டாகியிருப்பதாகவும் அறிய வருகிறது. (உதாரணமாக விஸ்கேஸ்வரன், பிராந்திமா, ரம்பெருமாள் ஆகிய அதி தெய்வங்களும், மண்டேஸ்வரி, எம்சிகணபதி, வைனாம்பிகை, 'பார்'வதி, பீர்முருகன் ஆகிய துணை தெய்வங்களும், கள்மாடன், வாற்றுமுனி ஆகிய வட்டார தெய்வங்களும், விஸ்கித்துவம், பிராந்தித்துவம், ரம்லாம், ஜின்னம் ஆகிய புது மதங்களுமாக நாம் கருத ஞாயமுண்டூ...)
மேற்கண்ட அதியற்புத நாவலை வாசிக்க நேர்ந்த, குடிப்பழக்கம் இல்லாத அன்பர்களும்கூட ஆஹா ஓஹோ என்று சப்புக்கொட்டிக்கொண்டு அலைவதாகவும் ஒரு ஏஜென்சி செய்தி தெரிவிக்கிறது.
மேலும் இந்த நாவலை வெளியிட்டிருப்பது யுனைட்டட் ரைட்டர்ஸ் என்கிற தமிழ்நாட்டின் முக்கியமான பதிப்பகம் என்பதாகத் தெரியவருகிறது. கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி கோவையில் நடந்த ஒரு விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டதாகவும், வெளியீட்டு விழாவில் மேற்படி சுதேசமித்திரன் குடியின் பெருமைகளைச் சிறப்புற உரையாற்றியதாகவும், குழுமியிருந்த முன்னூற்றி சொச்ச பார்வையாளர்களும் மெய்மறந்து போனதாகவும், விழாவின் முடிவில் அந்த ஏரியாவில் இருந்த பார்களும் வைன்்ஷாப்களும் நிரம்பி வழிந்ததற்கும் தனது உரைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதாக மானசீகப் பத்திரிகை ஒன்றுக்கு மேற்படி எழுத்தாளர் பேட்டியளித்ததாகவும் மேற்கொண்டு அந்த ஏஜென்சி செய்தியிலிருந்து தெரியவருகிறது. புத்கத்தின் முகப்பு மற்றும் விலை குறித்த விலாசங்களைப் பெட்டிச் செய்தியில் காண்க.
No comments:
Post a Comment