May 08, 2009

கிரிக்கெட்டின் குடியைக் கெடுத்த சினிமா!

இந்தக் கட்டுரையை ஒரு ரிலாக்ஸ் கட்டுரையாக எடுத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும், பார்க்கிற பார்வையே தீர்மானிக்கிறது என்கிற அடிப்படையில் எழுதிப்பார்த்த கட்டுரை இது. தலைப்பைப் பார்த்ததுமே கிரிக்கெட்டின் குடியை சினிமா எப்படிக் கெடுக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறதல்லவா? அந்த ஆர்வத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

முதற்கண் முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது என்றால் திரையரங்குகளில் கூட்டம் குறையும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அதாவது சினிமாவின் குடியைக் கெடுத்த கிரிக்கெட் என்று குற்றஞ்சாட்டுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் கிரிக்கெட்டின் குடியை சினிமா கெடுப்பது எப்படி சாத்தியம்? அதிலும் ஒரு முக்கிய கிரிக்கெட் மேட்ச் உள்ள நாளில் தமிழ் சினிமாவில் அதி உயரத்தில் இருப்பவரான ரஜினிகாந்த்தின் புதிய திரைப்படம், ஏன், எதிர்வரப்போகிற ரோபோ வெளிவருகிறது என்பதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அன்றைக்கு அவரது ரசிகர்கள் வேண்டுமானால் திரையரங்குகளில் அலைமோதுவார்களே தவிர, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு காலரியிலும் பிருஷ்டம் மோதாமல் உட்கார இடம் கிடைக்காது என்பதுதானே நிதர்சனம். அப்படியானால் எதை வைத்து இப்படி வாதாட முடிகிறது?

சரி, இரண்டொரு அத்தியாயங்களுக்கு முன்பாகச் சொன்னதுமாதிரி விளையாட்டுப் போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமாக்களை எடுத்துக்கொள்வோம். இந்தியில் லகான், தமிழில் சென்னை 600028 ஆகிய படங்கள் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தியவை. இந்தப் படங்கள் கிரிக்கெட்டைக் கொலை செய்தன என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட முயல்வதா இந்தக் கட்டுரை? லகானையும்ஆறுலட்சத்து இருபத்தெட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் லகான் ஒரு குப்பை என்பது தெரியவரும். சும்மா ரகுமான் மத்தளங்களை அடித்துக் கொடுத்தால் மட்டும் காட்டான்களுக்குக் கிரிக்கெட் வந்துவிடாது என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். அப்போதுதான் புரிந்துகொள்ளவும் முடியும். இதற்கொரு உதாரணம் காட்டலாம்.

நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒருமுறை கல்லூரி அணியைக் கண்டுபிடிக்கும்பொருட்டு இன்டர் க்ளாஸ் கிரிக்கெட் போட்டி நடந்து தொலைத்த வகையில் நானும் விளையாட நேர்ந்தது. வெகுகாலமாக டீவியில் கிரிக்கெட் பார்த்த தினவில் கிரிக்கெட் ரூல்ஸ் எல்லாம் அத்துப்படி என்கிற காரணத்தால் எனக்கும் கிரிக்கெட் தெரியும் என்பதாக எனக்கு ஒரு நினைப்பு.

வகுப்பில் மொத்தம் ஐம்பது பேர் என்றபோதும் அதில் பதினெட்டு பத்தொன்பதுபேர் பெண்கள் என்பதால் மீதமுள்ளவர்களில் கிரிக்கெட்ஆர்வமுள்ளவர்களை இணைத்து ஒரு லெவன்ஸ் அணி உருவாக்கப்பட்டது. உண்மையில் அந்த அணியில் நான் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஆர்வம் தாளாமல் மேட்ச் நடக்கும்போது நானும் போய் நின்றுகொண்டிருந்தேன். அணியின் முக்கிய வீரனான ராஜ÷ வந்து சேர்ந்திராத வகையில் வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் என்னை உள்ளே இறக்கினார்கள்.

எங்கள் அணி பௌலிங். நான் மிகப் பிரமாதமாக காட்ச்களைத் தவறவிடுவதும் கால்களுக்கிடையே பாலை நழுவி ஓட விடுவதும், நான்குக்கு ஓடும் பந்தைத் துரத்திப் பிடித்து, பத்தே அடி தூரத்திற்கு த்ரோ செய்த வகையில் அவர்கள் ஓடியே நான்கு ரன்கள் எடுக்க விடுவதுமாய் பிரமாதப்படுத்திக்கொண்டிருந்தேன். இதனால் எதிரணியில் என்னை யாரும் மறக்க முடியாத அளவுக்கு பிரபலமாகிக்கொண்டிருந்தேன். அவர்கள் எடுத்த ரன்களைவிட நான் கொடுத்த ரன்கள்தான் அதிகம்!

இதற்கிடையில் ராஜø வந்துவிட்டான். அவன் உட்பட எங்கள் வகுப்பு மாணவர்கள் வேறு சிலரும் ஃபீல்டுக்குள் நடைபோட்டுக்கொண்டிருந்த காரணத்தால் உண்மையான லெவன்ஸ் அணி இதுதான் என்று எதிரணி மனதில் பதிய வைத்துக்கொள்ள இயலாத ஒரு நிலையை எங்கள் கேப்டன் உருவாக்கி வைத்திருந்தான். இந்தக் குழப்பத்தை சாக்கிட்டு பேட்டிங்கின்போது இரண்டாவது டவுனாக ராஜøவை இறக்கியும்விட்டான். எதிரணி இதை உணராமல் தேமே என்று பால் போட்டுக்கொண்டிருந்தது. அவனும் ஒருவழியாக தன் பங்களிப்பை முடித்துவிட்டு அவுட்டாகி வந்துவிட்டான்.

ஒவ்வொரு விக்கட்டாக விழுந்துகொண்டிருந்தது. என்னை உள்ளே இறக்குவதாக கேப்டனுக்கு உத்தேசமே இல்லை. இதனால் பத்து விக்கட்டுகளும் விழுந்து எங்கள் அணி தோல்வியைத் தழுவியது. எதிரணி வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அப்போதுதான் அந்த முக்கிய திருப்பம் நிகழ்ந்தது.

கேப்டன் என் கையில் பேட்டைக் கொடுத்து உள்ளே போகச் சொன்னான். நாம் தோற்றுவிட்டோம் என்று நான் சொன்னேன். இந்த நியாயமெல்லாம் கல்லூரிக் கிரிக்கெட்டில் செல்லாது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து என்னை உள்ளே பிடித்துத் தள்ளிய வகையில் தேர்ந்த வீரன் போல பேட்டை சுழற்றிக்கொண்டு நான் களத்தில் இறங்கினேன்.

வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்தார்கள். பத்து விக்கட்டும் போய்விட்டது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியும். ஆனால் அந்த ஆட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டக்காரனான நான் இதுவரை பேட் செய்யவில்லை என்பதை கவனிக்காதது அவர்களது குற்றம்தான் என்று வாதாடப்பட்டது. ரகசியமாக உள்ளே வந்துபோனவன் ராஜøதான் என்பதைக்கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் என்னை அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து அவர்களது அணியின் கீ பௌலரும் காலேஜ் அணிக்குத் தேர்வாகி யூனிவர்சிடி அணி வரைக்கும் போனவனுமான கணேஷ், அந்த ஓவரில் மீதமிருந்த மூன்று பால்களைப் போட வந்தான்.

அந்த மேட்ச் எப்படிப்பட்டது என்று சொன்னால் பிட்ச்சுக்கு பதிலாக மேட்டை விரித்து கிரிக்கெட் பாலைக் கொண்டு விளையாடுவது. இவர்கள் எனக்குக் கொடுத்த நெருக்கடியில் காலில் பேட்சைக்கூடக் கட்டிக்கொள்ள நேரம் இருந்திருக்கவில்லை என்பதனால் ஆபத்தை அறியாது நான் அணியின் மானத்தைக் காக்கப்போகும் மாவீரனின் தீரத்தோடு மிடில் ஸ்டம்ப்புக்கு கிரீஸ் எடுத்தேன். பார்ரா என்றான் ஒருத்தன்.

கணேஷ் வேகப்பந்து வீச்சாளன் என்பதனால் தூரத்தில் அவன் ஓடிவருவதுதான் தெரிந்தது. ஆனால் பந்தோ எனக்கு முன்னால் பிட்ச்சாகிவிட்டது. நான் கோல்ஃப் பந்தை அடிப்பவன்போல பேட்டை சுழற்றினேன். பிட்ச்சான பந்து வழக்கமாக போலீஸ்காரர்கள் லத்தியால் அடிப்பார்களே அந்த இடத்தைப் பதம் பார்த்தது. காலில் முட்டிக்குக்கீழே உள்ள முன்பகுதி நேரடியாக எலும்பைக் கொண்டது என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது.

ஆனாலும் களத்தில் வீழாமல் காலை நொண்டிக்கொண்டு, போர்க்களத்தில் குதிரையில் வருபவனைத் தாக்கும் முனைப்பில் தைரியத்தோடு வாளேந்தி நிற்கும் வீரன்போல் நின்றுகொண்டிருந்தேன்.

அடுத்த பந்து வந்து சேர்ந்தது. அது எப்படி வருகிறது எப்போது வருகிறது என்பதையெல்லாம் அனுமானிக்க முடியவில்லை. அந்தப் பந்தையும் நான் அதேவிதமாகத்தான் எதிர்கொண்டேன். அதுவும் என்னை அதேவிதமாகத்தான் எதிர்கொண்டது. மிகச்சரியாக முதலில் எந்த இடத்தில் அடித்தானோ அதே இடத்தில் இன்னொரு அடி!

மூன்றாவது பந்துக்கு அவன் தயாரானபோது வலித்த வலியில் நாங்கள் எத்தனை ரன் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதுகூட எனக்கு மறந்துபோயிருந்தது. ஆக்ஷன் ரீப்ளேயை இரண்டு தடவை காட்டியது மாதிரி மூன்றாவது பாலிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் முன்னே நிகழ்ந்ததேதான் நிகழ்ந்தது.

பேட்ஸ் இல்லாமல் இப்படி தர்மஅடி வாங்கினால் என்னாகும் என்பது வெகுகாலம் எனக்கு மறக்கவேயில்லை. ஏனென்றால் இரண்டு வருடங்களுக்குப் பிறகுகூட அந்த இடத்தைத் தொட்டுப்பார்த்தால் கொஞ்சம் வலி மிச்சமிருந்தது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மூன்று பால்களுக்குமே யெல்பிடபிள்யூ கோரப்பட்டது. அம்பயர் என் ஃபிரெண்ட் என்பதால் அவன் அவுட் கொடுக்கவில்லை. சனியன் நட்புக்கு இலக்கணம் தெரியாமல் நடந்துகொண்டானே என்று பின்னால்தான் நான் நொந்துகொண்டேன். முதல் பந்திலேயே ஒழுங்காக அவுட் கொடுத்திருந்தால் ஒரே அடியோடு தப்பித்துக்கொண்டிருக்கலாமே என்கிற ஆதங்கம்!

அதோடு அந்த ஓவர் முடிந்துவிட்ட வகையில் எனக்கு முன்பாகக் களமிறங்கியிருந்த மணிவண்ணன் பாட்டிங் முனைக்கு வந்தான். நான்நொண்டிக்கொண்டு எதிரில் போய் நின்றேன். ரன்னெடுக்கக்கூட ஓட முடியுமா என்பது தெரிந்திருக்கவில்லை.

ஆனால் அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. முதல் பந்திலேயே மணிவண்ணன் அவுட்டானான். இதனால் நான் நாட்டௌட் பேட்ஸ்மேன் என்கிற பெருமையோடு பேட்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு வெளியே வந்தேன். இதற்குப் பிறகு நான் கிரிக்கெட்டில் அம்ப்பயராக மட்டுமே பணியாற்றினேன் என்கிற வகையில் ஒருத்தராலும் அவுட் செய்ய முடியாத ஒரே பேட்ஸ்மேன் இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் என்கிற பெருமையையும் அடைந்தேன்.

இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் டீவியில் பார்க்கிற கிரிக்கெட்டும் களத்தில் எதிர்கொள்கிற கிரிக்கெட்டும் வேறு வேறு என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என் மாமா ஒருத்தர் பயங்கர கிரிக்கெட் அபிமானி. அதாவது டீவி கிரிக்கெட் பார்ட்டி. காமிரா ஆங்கிளில் பால் ஃபீல்டருக்கு மிக அருகில் போவதுபோல் தெரியும்போதெல்லாம் இதைக்கூட பிடிக்கத் துப்பில்லாதவர்கள் என்பதாக அவர் இந்திய அணியை சபிப்பார். டாப் ஆங்கிளில் பார்த்தால்தானே அவனிருக்கும் இடத்திலிருந்து பதினைந்தடி தூரத்தில் அது கடக்கிறது என்பது தெரியும்!

இந்தமாதிரிதான் லகான் என்பதாக ஒரு படம் ஹிந்தியில் வந்தது. சரியான குப்பைப் படம். அதைப்போய் ஆஸ்காருக்கு அனுப்பினார்கள். ஆனால் சென்னை ஆறுலட்சத்துஇருபத்தெட்டு அப்படியாப்பட்ட படமல்ல. சுஜாதாவின் நிலாநிழல் என்கிற நாவலில் வருவதைப் போல லோக்கல் கிரிக்கெட் சம்பந்தப்பட்டது. அது மிகத் தெளிவாகவும் அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இந்த இரண்டு படங்களைவிடவும் மிகச் சிறப்பாக கிரிக்கெட்டைக் காட்டியது வேறொன்று. அது, ப்ராட்மேனின் வாழ்க்கையைச் சொன்ன பாடிலைன்என்கிற தொலைக்காட்சித் தொடர். அதன் கச்சிதம் இந்த இரண்டு படங்களிலும் கண்டிப்பாக இல்லை என்பதை, பார்த்தவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே பெரும் வசூல் செய்த வகையிலும் கிரிக்கெட்டின் குடியை வாழ வைத்தவை என்பதையும் மறுப்பதற்கில்லை. கிரிக்கெட்தான் இந்தப் படங்களின் மையம் என்பதால் உண்மையில் கிரிக்கெட்தான் சினிமாவின் குடியை வாழவைத்தது என்பதும் சரியான பார்வைதான்.

அப்படியிருக்க, கிரிக்கெட்டின் குடியைக் கெடுத்த சினிமா என்கிற தலைப்பு ஏன் வருகிறது என்று கேட்டால், அது வேறென்றுமில்லை.

உண்மையில் கிரிக்கெட் என்பது என்ன? ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் மேட்ச். அதுதான் நிஜ கிரிக்கெட் என்பதை உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் நன்றாகவே அறிவார்கள். அது ஒருநாள் பந்தயமாக ஐம்பது ஓவர்களுக்குச் சுருங்கியபோது பெரும் எதிர்ப்பு கிளம்பி அப்புறம் அடங்கிப் போனது. இப்போது டீடொன்டி வந்துவிட்டது.

உலக அளவில் இந்த மாதிரி ஒரு ஐடியா வந்தது ஓர் இந்தியனுக்குத்தான் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். இது லலித் மோடியின் மண்டையில்தான் தோன்றியதா இல்லை வேறு ஏதாவது மதராஸியின் மண்டையில் தோன்றியதா என்பது தெரியவில்லை. ஆனால் கிரிக்கெட்டை வெறும் பொழுதுபோக்காக மாற்றிவிட்ட விஷயமே அன்றி இது வேறெதுவும் இல்லை.

என் குற்றச்சாட்டு இதுதான், உலக அளவில் ஒன்றரை மணிநேரம்தான் ஒரு சினிமாவுக்கான கால அளவு! இந்தியாவிலோ இரண்டேகால் முதல் மூன்று மணிநேர அளவு தேவைப்படுகிறது. அதாவது இந்தியன் அல்லது தமிழனுக்கு மூன்று மணிநேரத்தில் எது முடிகிறதோ அதுதான் நல்ல பொழுதுபோக்கு!

இந்தக் காரணத்தால்தான் டீடொன்டி என்கிற கபடம் அகில உலகிலேயே ஓர் இந்திய மண்டையில்தான் உதித்தது என்பதாக நான் குற்றம் சாட்டுகிறேன். இப்படித்தான் சினிமா கிரிக்கெட்டின் குடியையும் கெடுத்துவிட்டது.

உங்களுக்கும் தெரிந்த ஒரு பழைய ஜோக் உண்டு. ஒரு மாணவன், தென்னை மரம் தன் வரலாறு கூறுதல் என்கிற கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டு போனான். பரீட்சையில் பசுமாடு தன் வரலாறு கூறுதல் என்று கேள்வி வந்துவிட்டது. பையன் பார்த்தான். தான் மனப்பாடம் செய்துகொண்டு வந்த கட்டுரையை அப்படியே எழுதினான். அதன் முடிவில் ஒரு புதிய வரியைச் சேர்த்தான்.

’இப்படியாப்பட்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கட்டுவார்கள்!’

இந்தக் கதைக்கும் நீங்கள் வாசித்து முடிக்கும் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

3 comments:

Cable சங்கர் said...

அருமை

ஸ்வர்ணரேக்கா said...

//லகானையும்ஆறுலட்சத்து இருபத்தெட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் லகான் ஒரு குப்பை என்பது தெரியவரும். சும்மா ரகுமான் மத்தளங்களை அடித்துக் கொடுத்தால் மட்டும் காட்டான்களுக்குக் கிரிக்கெட் வந்துவிடாது என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும்.//

லகான் கிரிக்கெட்டின் மேண்மைஐ உணர்த்தும் படம் அல்லவே... காட்டான்களுக்குக் கிரிக்கெட் வராது. ஆனாலும் எப்படி ஜெயிக்கிறார்கள் என்று தானே சொல்கிறார்கள்....

Rajan said...

i was really surprised to realise that u can write humorously too. 3 paragraphs were superb, especially the 3 deliveries u faced and about the friendly umpire!I had tears in my eyes while reading those paragraphs and was laughing loudly.try more satire and humour.