June 23, 2009

சினிமா செய்திகள்

பிரபாகரன் சடலம் கண்டெடுப்பு, ராஜபக்பச சடலம் சல்லடையாகத் துளைப்பு! என்பதாக ஏதேனும் அதிரடி செய்திகள் வந்தாலே தவிர, நாமெல்லாம் விரும்பிப் படிப்பவை சினிமா செய்திகளை மட்டுந்தான். இதனால்தான் செய்தித்தாள்கள்கூட சினிமாவுக்கெனப் பக்கங்கள் ஒதுக்குவதும் தவிர்க்க இயலாததாகிப் போய்விட்டது.

சலூன்களிலாகட்டும், டீக்கடைகளிலாகட்டும், பெட்டிக்கடை பெஞ்சுகளிலாகட்டும், எமது தமிழ் மறவர்கள் இனிதே கூடி விவாதிப்பது நமீதாவின் நடையழகும் நயன்தாராவின் இடையழகும் குறித்துதான் என்று நான் குற்றஞ்சாட்டினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது காலத்தின் கட்டாயம். இவர்கள் இடத்தில் வேறு சிலர் முன்பு இருந்தார்கள். வேறுசிலர் பின்பு வருவார்கள். எவ்வளவு தத்துவார்த்தமான பதில்! பகவத்கீதையை சுருக்கவுருவில் கேட்டது போல இல்லை? ஆனால் இந்தத் தத்துவ போதமெல்லாம் எமக்குக் கிடைத்தது எதனால்? சினிமாவால்! பின்னே ஆளுக்காள் குருக்ஷேத்ரத்திற்குப் போய் நின்றால் பார்த்தசாரதிதான் கடுப்பாகிவிட மாட்டானா! இப்படி சினிமா செய்திகளைப் போட்டு அலசுகிறீர்களே அவற்றை உங்களுக்கு யார் சொன்னார்கள்? அல்லது நீங்களே நேரில் போய் நடிக நடிகையரின் வீட்டுக்குள் நுழைந்து சேகரித்தவையா இவை?

ஆக, சினிமா செய்திகளை உங்கள் பின்மண்டை வரைக்கும் கொண்டு வந்து தருகிற சேவை என்பதாக ஒன்று அவசியப்படுகிறதா இல்லையா? அதற்கென ஊடகங்களின் தேவையும் உள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

இதில் பொதுவாக சினிமா செய்திகளை வெளியிடுவதற்கும் அரசியல் செய்திகளை வெளியிடுவதற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அரசியல் செய்தியில் ஓர் அரசியல்வாதியின் (அவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கட்டும்) அழகிய முகத்தைத் தவிர வேறொன்றையும் மிகைப்படுத்திக் காட்ட முடியாது என்பதனால் வேறு வழியில்லாமல் செய்தியைப் பெரியதாகவும் படத்தைச் சிறியதாகவும் போட்டுத் தொலைய வேண்டிய கட்டாயம் காண்கிறது. ஆனால் சினிமா செய்தி என்றால் அப்படியா? வளைவுகள், நெளிவுகள், பள்ளங்கள், மேடுகள், வசீகரமான புன்னகைகள், காமத்தைப் பிழியும் கரங்கள் என்று பார்ப்பவர் அல்லது படிப்பவரின் உள்ளத்தில் ஆசைத்தேனைக் குடம் குடமாக ஊற்றுவதற்குத்தான் எத்தனை வசதிகள் காண்கின்றன!

இந்த நிலைப்பாட்டை முதன் முதலில் எட்டியது தினத்தந்தி என்பதாகக் கொள்ளலாம். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்குப் பக்கத்திலேயே கவர்ச்சிப்படம் என்று டைட்டில் போட்டு நடிகைகளின் படங்களை வெளியிட்ட சாதனை தந்தியையே சாரும். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த இடத்தில் வெளிவந்த எந்த நடிகையின் படமும் கொஞ்சமும் கவர்ச்சியே இல்லாமல் இடம்பெற்றது என்பதே அவர்களின் தந்திரமும்!

சினிமா என்றால் பெண்ணுடல் மட்டும்தானா? ஆணுடலும்தான்! சினிமாவில் இருக்கும் ஆண்களும் பெண்களும் எப்போது எங்கே சவரம் செய்துகொள்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் தனிப்பட்ட தொடர்புகள் எத்தனை ஆழமானவை என்கிறவரைக்கும் நமக்குத் தெரிந்துகொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாமேகூட பூரணமாக அறிய மாட்டோம். ஏனென்றால் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே செய்திதான்!
ரஜினிகாந்த் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது! இயக்குனர் அமீர் கருத்து!

இது ஒரு செய்தி! எவ்வளவு வசீகரமான கருத்து பாருங்கள். உடனே அமீரிடம் ஒரு பத்திரிகை பேட்டி எடுக்கிறது. ரஜினிகாந்திடம் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது என்று சொன்னீர்களாமே! அது உண்மையா வதந்தியா? அதற்கு அமீர் பதில்: நீங்கள் விசாரிப்பது உண்மைதான்! அவரைப் பார்த்து இப்போது போகிறவர் வருகிறவர் எல்லாம் பஞ்ச் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் பஞ்ச் வசனத்துக்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன்.
இப்போது நீங்கள் ஒரு சினிமா செய்தியைப் படித்துவிட்டீர்கள். இதை ஏற்கனவே ஊடகங்களில் நீங்கள் படித்திருக்கவில்லையானால் இப்போது ஒரு சினிமா செய்தியை எழுதியவனாக என்னையும் ஆக்கிவிட்டீர்கள். அட அமீர் அப்படியா சொன்னார்? என்று உங்களுக்குள் ஒரு வியப்பு மேலிட்டிருக்கும். அதைத் தொடர்ந்து கொஞ்சநேரம் ஓடுகிற சிந்தனைகள் உங்களின் சொந்தப் பிரச்சினைகளிலிருந்து உங்களைச் சற்றுநேரம் சாந்தப்படுத்தியிருக்கும்.
இதேபோல்தான் நானும் இந்த செய்தியைப் படிக்கிறேன். என் புத்தி தெரிந்ததுதானே! அது வழக்கம்போல குறுக்கே ஓடுகிறது. அமீர் உண்மையில் என்னதான் சொல்கிறார்? இது கரிசனையோடு சொல்லப்படுவதுபோலத் தெரிந்தாலும் இதில் கள்ளத்தனமான எண்ணம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே! இவர் சொல்வதைக் கேட்டு ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசமாட்டேன் என்று சொன்னால் அப்புறம் அவர், பேச்சுத்திறன் இல்லாதவராக அல்லவா நடிக்க வேண்டிவரும்! ஏனென்றால் பஞ்ச் வசனம் பேசக்கூடாதென்றால் அப்புறம் ரஜினிகாந்த் வேறென்ன வசனம்தான் பேசமுடியும்?

இது ஏதோ நக்கல்மாதிரி உங்களுக்குத் தெரிகிறதா? அதெல்லாம் ஒரு கிக்கலும் இல்லை. ரஜினிகாந்த்துக்கு சில பல வருடங்களாகவே எவ்விதமான வேடங்கள் கிடைக்கின்றன என்று பாருங்கள்! சவால் விடுவது, சவால் விடப்படுவது, தூண்டப்படுவது, கொதித்தெழுவது என்று பேகிரவுண்ட் ஸ்கோருக்கும், பஞ்ச் வசனத்துக்கும் மட்டுமே வாய்ப்பளிக்கிற வேடங்களையே அவர் தொடர்ந்து தாங்கிவருகிறார். இடையீடாக ஓரிரு காமெடிச் செருகல்களும் தவிர்க்க இயலாதவையே! இப்படியொரு பாத்திரத்தில் நடிக்கிற நடிகர் குழலினிது யாழினிது என்று தொடங்கி ஐந்தரைப்பக்கக் காதல் வசனத்தையா உருப்போட்டுப் பேச முடியும்? நா ஒருதடவ சொன்னா, கொசுதா(ன்) படையா வரும்! பல்லி தனியாதா வரும்! இந்தமாதிரி ஏதாவது சொன்னால்தானே குழந்தைகள் முதல் குதூகலிக்க வாய்ப்பாக இருக்கிறது!

ரஜினிகாந்த்தும் பஞ்ச் வசனமும் இணைந்தது உண்மையில் ஒரு விபத்து என்பதாகவே தோன்றுகிறது. அவருக்கான முதல் பஞ்ச் வசனம், அதுவொரு பஞ்ச் வசனம் என்பதாக அறியப்படாமலே எழுதப்பட்டது. அது, 16 வயதினிலே படத்தில் உச்சரிக்கப்பட்ட, ''இது எப்டி இருக்கு?'' -இதன் இமாலய வெற்றிதான் இன்றைக்கு இயக்குனர் ஷங்கர் படம் பூரா பஞ்ச் வசனம்தான் என்று சொல்கிற அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது. இடையில் ஒரு நிலைப்பாடு இருந்தது. அப்போது ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது பஞ்ச் வசனம் என்பதைப் போன்ற தோற்றம் காணப்பட்டது. விடுதலை படத்தில் ஜூஜூபி என்று அர்த்தமேயில்லாமல் அவர் உச்சரித்த சொல் பஞ்ச் வசனமாகி வெகுபிரபல்யமடைந்தது. இப்போதும்கூட மாறும் சந்ததியின் மொழியைத் திருடி சிவாஜியில் கூல் என்கிறார் ரஜினி! நன்றாகத்தானே இருக்கிறது.

இதனால் நான் அமீருக்கு சொல்வது இதுதான், ''இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்.
கூல் பேபி, கூல்!''

பாருங்கள், ஒரு பத்திரிகையில் வெளிவந்த எட்டு வார்த்தைச் செய்தி எத்தனை எண்ணக் கதவுகளைத் திறந்து விடுகிறது! நான் முன்பே சொன்னமாதிரி, மூலபவுத்திரமோ, பன்றிக் காய்ச்சலோ எனக்கு இருக்குமானால் அதன் உபாதையைக் கொஞ்சநேரம் உணராமல் போகிற அளவுக்கு ஒரு செய்தி எனக்கு ஆறுதல் வழங்கியிருக்கிறது என்பதுதானே உண்மை! இந்தச் செய்திகளால்தான் எத்தனை நன்மை!

திடீரென்று இந்த வாரம் நானோ நீங்களோ லண்டனுக்கோ, பாரீசுக்கோ போய் நிற்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கேயுள்ளவர்கள் கேட்கிறார்கள். சமீபத்தில் உங்கள் நாட்டில் என்ன விசேஷம்? இதற்கு பதில் உங்களாலோ என்னாலோ சொல்லப்படுகிறது, சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய விஷயங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முதலாவது, ரஜினிகாந்த்தின் பஞ்சாயத்து தோற்றது!

இரண்டாவது நயன்தாராவின் காதல் வென்றது! அவ்வளவுதானா? வேறு செய்திகள் இல்லையா? ஏன் இல்லை? சன்டீவி சினிமா தயாரிக்கிறது! அது ஒரு நல்ல செய்தி இல்லையா?
சரி. ஏதாவது அரசியல் செய்திகள்? ஏன் இல்லாமல், தன் மகனை துணை முதல்வராக்கிய வகையில் தமிழகத்தின் பாதுகாப்பை அவர் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையோடு எங்களது முதல்வரும் மூத்த கலைஞருமானவர் அடுத்த படத்துக்கு வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார். இதனால் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதோடு புதிய கலா அனுபவங்களிலும் திளைக்கப்போகிறோம்.

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதன் வாயிலாக சோறும் போட்டு சினிமாவும் காட்டும் ஒரே அரசாங்கம் எங்களுடையதுதான்!

ஏதாவது அரசியல் கிசுகிசு? பிரஜாராஜ்யம் என்று ஒற்றை ஆளாக மேடையில் நின்று பெரும் கூட்டத்தைத் திரட்டிய சிரஞ்சீவி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்ததிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய் வரைக்கும் குலைநடுங்கிப்போய்க் கிடக்கிறார்கள். இதனால் தேர்தல் கமிஷன் மிகுந்த சந்தோஷத்தில் மிதப்பதாகத் தெரிகிறது.
வட்டாரச் செய்திகள்? ஊட்டியில் இயக்குனர் மணிரத்னத்தின் ராவணா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட மூன்று காரவன்கள் பிடிபட்டன. அவற்றில் ஒன்று ஒரே பதிவெண்ணை சென்னையிலிருந்த வேறொரு காரவனோடு பகிர்ந்துகொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு பெரிய துறைகள் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக்கொள்ளாமல் கைகோர்த்திருப்பது தேசத்தின் ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது என்பதாக ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகச் செய்திகள்? அதே மணிரத்னத்தின் திரைக்கதையில் அவருக்கே திருப்தியில்லாததால் திருத்தியமைக்கப்பட்டு படம் ரீ-ஷூட் செய்யப்படுகிற வகையில் இன்னும் ஒரு வருட தாமதம் நேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு வருடத்திற்கு டெக்னீஷியன்கள் முதல் நடிகர்கள் வரைக்கும் எக்ஸ்ட்ரா பணம் தரப்படுமா என்கிற கேள்வி எழுந்த வகையில் இது நியாயமான வர்த்தகம் அல்ல என்று ஒருசிலர் ஒதுங்கிக்கொண்டனர். தற்போதுதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தேறி வந்திருக்கிற அந்த இயக்குனர் இதனால் தளர்ந்துபோய்விடக்கூடாது என்பதாக முண்டக்கண்ணியம்மன் கோவிலில் கூழ் ஊற்றப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்? லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு எனும் சிலம்பரசன் பொதுவாக கிரிக்கெட்டைத்தான் விரும்பி வந்தார். இப்போதோ ரோமில்நடந்த ஃபுட்பால் மேட்ச்சை ஆசையோடு பார்வையிட்டு வந்திருக்கிறார் என்பதனால் அவரது ரசிகர்கள் கிரிக்கெட் விளையாடினால்கூட இனிமேல்ஃபுட்பாலைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதாகத் தெரிகிறது.

உலகச் செய்திகள்? உலக நாயகன் கமலஹாசன் அடுத்த படத்தில் களறிப்பயிற்று ஆசானாக வருவதனால் விரைவில் (அதாவது ஒரே வாரத்தில்) களரிக் கலையை முழுமையாகப் பயில உள்ளார். ஏஞ்சலினா ஜோலி வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க கேட்ட சம்பளம் படத்தை விடவும் பல மடங்கு அதிகம் என்பதனால் ஒரு ஹாலிவுட் நடிகையையே நிராகரிக்கும் அளவுக்கு தமிழ் சினிமா உயர்ந்து நிற்கிறது.

சரி, ஏதாவது சினிமா செய்திகள்? சினிமா செய்தியா? அப்படி தனியாக ஏதாவது இருக்கிறதா என்ன!

No comments: