June 23, 2009

சினிமா நாகரிகம்

அடிப்படையில் நாகரிகம் என்பதே இயற்கைக்கு நேரெதிரானதுதான். மனிதனின் வளர்ச்சிநிலையில் ஓர் அங்கமாகவே நாகரிகம் என்பதும் வளர்ந்து வந்திருக்கிறது. கூச்சமும், மதமும், ஆசையும், கர்வமும், திறமையும் மனிதனை நாகரிகத்தை உற்பத்தி செய்ய வைத்திருக்கின்றன. நிகழ்த்துகலைகள் பொதுவாக நாகரிகத்தை பிரதிபலிக்கவே செய்தன. அவை நாகரிகத்தை உருவாக்கியிருக்கவில்லை. ஒரு நாவலில் எழுதப்பட்டதன் வாயிலாகவும் ஒரு நாகரிகம் உருவாகியிருக்கவில்லை. பெரும்பாலான மனங்கள் ஏற்றுக்கொள்கிற ஒரு புதுமையோ ஒரு பழமையோ நாகரிகமாக உருவாகிவிடுகிறது. அதன் சிறு பங்கு உண்மையைப் போலவே நிகழ்த்திக் காட்டப்படும் சினிமாவுக்கும் இருக்கலாம். ஆனால் நாகரிகம் என்பது ஓரளவுக்கு மனிதனுக்குத் தேவைப்படுகிற நன்மைகளை நிகழ்த்தி வந்திருக்கிறது என்றபோதும் பெரும்பாலும் அழிவை நோக்கிய பயணமாகவே இருந்துவருகிறது. இதில் சினிமாவின் பங்களிப்பும் இயல்பானதே.

சிந்து சமவெளி நாகரிகம் போன்றதல்ல சினிமா நாகரிகம். சிந்துவில் மனிதனின் புத்தியும் தேவையும் இணைந்து வீதிகள், சாக்கடைகள், சுடுமண் கலாச்சாரம் என்று ஒரு நாகரிகம் விரிந்ததைப் பாடபுத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். ஆனால் சினிமாவின் நாகரிகம் குறித்து வாசித்தறிய நாம் எங்கே போவது?

அடிப்படையில் சினிமா என்பதை இருவகைப்பட்ட நாகரிக வளர்ச்சியாகக் கருதலாம். தயாரிக்கப்படுமளவில் தனக்கேயுரித்தானதொரு நாகரிகத்தையும், பார்க்கப்படுமளவில் சமுதாயத்தின் மத்தியில் எழும் நாகரித்தையுமே சினிமா கோருகிறது. இது அடிப்படை விளக்கம்.

தயாரிக்கப்படுமளவில் சினிமா எவ்விதமான நாகரிகத்தைக் கைக்கொள்கிறது என்று பார்த்தால், ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல், அதைத் திருடுதல், உழைப்பவர்களுக்கு அன்னமிடுதல், நீதி சொல்லல், நிஜமே போல நிகழ்த்திக் காட்டுவதன் வாயிலாக சொல்ல வருவதை நிறுவுதல் என்று நீள்கிறது பட்டியல்.

பார்வையாளனின் பார்வையில் பார்க்கும்போது, பொழுதுபோக்கல், நாயக விசுவாசம் கொள்ளல், காம குரோத வடிகாலாகக் கொள்ளல், நடையுடை பாவனைகளைப் பின்தொடர்தல், சினிமாவைப் பற்றிய எவ்விதமான அக்கறையும் இல்லாமல், திரையரங்கின் இருளை நம்பி தள்ளிக்கொண்டு போதல் என்று இதற்கும் ஒரு பட்டியல் உண்டு.

முதல் பட்டியலில் உள்ள புகழைத் தொழுதல் எனும் பதமும் இரண்டாம் பட்டியலில் உள்ள நாயக விசுவாசம் எனும் பதமும் எத்தனை மோசமான நாகரிகத்தை சமூகத்தின் மத்தியில் நிகழ்த்திக் காட்டின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அடுக்குத் தமிழில் வசனம் எழுதுவதன் வாயிலாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களும், ரோஜாவண்ண புஜத்தை முறுக்கி, பிழையாளர்களை வன்மையால் திருத்தும் வேடமேற்றவர்களும் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்ற அவலம் உலகிலேயே தமிழ்நாட்டில்தானே முதலில் நிகழ்ந்தது!

கிருஷ்ணபரமாத்மாவாக நடித்தால் தேவுடு, வில்லனாக நடித்தால் கெட்டவன், சிரிப்பு நடிகராக நடித்தால் ஜோக்கர், நாயகியாக நடித்தால் மனைவி, தங்கையாக நடித்தால் சகோதரி, தாயாக நடித்தால் அம்மா என்று பாத்திரங்களை அப்படியே உள்வாங்கிக்கொள்ளவே அறிந்திருந்த இந்த சமூகத்தை சினிமா மிகப் பிழையான நாகரிகத்திற்குள்ளேயே தள்ளிய குற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. நம்பியார் இந்தப் படத்துல நல்லவனா நடிச்சிருக்கான்ப்பா என்று ஆச்சரியப்படுமளவுக்கு மனம் மயங்கிக்கிடப்பவர்களே இங்கே அனேகம். நம்பியாருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் என்று மாற்றிப் போட்டுக்கொள்வதன் வாயிலாக இந்த இயல்பின் நீட்சியைக் கடத்திக்கொண்டு வருகிறோமே தவிர வேறென்ன சாதித்துவிட்டோம்?

இதே மாதிரிதான் சினிமா, சமூகத்துக்கு நீதி சொல்ல முனைவதும். சினிமா எதைச் சொன்னாலும் ஏற்கிற நாகரிகத்தையே எட்டியிருக்கும் சமூகத்தால் சினிமா திரும்பத் திரும்ப தெரிவிக்கும் நல்லவன் வாழ்வான் தீயவன் ஒழிவான் என்கிற பதமும் உள்வாங்கப்பட்டிருக்கத்தானே வேண்டும்!

ஆனால் அப்படி நடக்கவேயில்லையே! பதினாலு கொலை செய்தவன், சினிமாவைப் பார்த்துத்தான் துணிந்தேன் என்று சொன்ன வரலாறு தமிழகத்தில் உண்டு. ஆனால் பரோபகாரம் செய்த ஒரு மனிதன் சினிமாவைப் பார்த்துத்தான் செய்தேன் என்று சொன்ன சம்பவம் இதுவரைக்கும் நிகழ்ந்திருக்கிறதா?

இது எதைக் காட்டுகிறது? சினிமாவில் நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்கிற கருத்து படம் நெடுக்க சொல்லப்படுவதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. படத்தின் க்ளைமாக்ஸில் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒரு செய்கை இது. மற்றபடி படம் பூரா வசதியாகவும், பெண்களின் அணைப்பிலும், பொதிப்பிலும் மிக சுகமாக வாழ்கிறான் வில்லன். நாயகனோ அவலங்களையே எதிர்கொள்பவனாகவும் அதையும் மீறி, கொஞ்சம் காதலையும் பெறுபவனாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறான். அவலம் என்பது பிரச்சினை என்பதாக வேண்டுமானால் சில படங்களில் திருத்தப்பட்டிருக்கலாம். படம் பார்ப்பவனுக்கோ சந்தோஷம் மட்டுமே மண்டைக்குள் நுழைகிறது. இப்படியெல்லாம் இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தையே அவனுக்குள் முகிழ்க்க வைக்கிறது சினிமா. இதனால்தான் அவன் சினிமாவிலிருந்து நீதியை எடுத்துக்கொள்வதேயில்லை. படிப்பறிவில்லாத பெண்டாட்டி புத்தி சொல்ல நேர்ந்தால் அதைத் தூக்கி வீசிவிட்டு சந்தோஷத்தை மட்டும் நீ கொடுத்தால் போதும் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுதலிக்கிற மனோபாவத்தையே பார்வையாளன் எட்டியிருக்கிறான்.

இத்தகைய சூழலில் உண்மையிலேயே வாழ்வை உரித்துக்காட்டும் ஓர் உன்னத சினிமா திடீரென்று வந்துவிட்டாலும் அதில் தான் அனுபவிக்க என்ன இருக்கிறது என்பதையே தேடக்கூடிய மனோநிலையிலேயே பார்வையாளன் இருக்கிறான். அதாவது நல்லது தீயது என்பதாகப் பகுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதுவே தேவையானது என்கிற நிலையையே அவன் எட்டியிருக்கிறான். முழுக்க முழுக்க அவலத்தை மட்டுமே காட்டும் தத்ரூப சினிமாவொன்றை அசல் கலைஞன் என்பதாக ஒருவன் வந்தாலும் எடுத்துக்கொடுக்கத்

துணியாத நிலைப்பாடே இதனால் நேர்ந்திருக்கிறது. தமிழில் நல்ல படங்கள் முனையப்படாததன் அடிப்படைக் காரணம் இதுதான்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் வந்த முதல் பட்டியலில் மிகவும் ஆச்சரியமானதாக நான் கருதுவது அன்னமிடுதல். இதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதே எனது முதல் வியப்பாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் சத்துணவு இடப்படுவதைப்போல வேறெந்தத் தொழில் துறைகளிலும் இல்லாதபடி வேலை செய்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது இங்கே மட்டும்தான். பரோபகாரியானதொரு ப்ரொடியூசர் இவ்விதமாக ஆரம்பித்து வைத்து இன்னும் தொடர்கிறதா? இல்லை, காலையிலிருந்து வேலை நடந்துகொண்டிருக்கும்போது பாதியில் உணவு இடைவேளை என்று ஒன்றை விட்டு அவனவனை வீட்டுக்கு அனுப்பினால் பெண்டாட்டி மோதியதாலோ பேருந்து மோதியதாலோ திரும்ப வராமல் போய்விட்டால் அவன் வேலையை எவன் செய்வது என்கிற கொத்தடிமை மனோபாவத்தாலா? இதைக் கூர்ந்து நோக்கினால் இன்றைக்கு பிபீவோ கலாச்சாரத்திலும் இந்த முறை பின்பற்றப்படுவதன் பின்னணியும் வெட்டென விளங்கும்.

காரணம் எதுவோ, இதன் வாயிலாக சினிமா கண்டேத்திய நாகரிகம் யாதென்றால், சோறு கிடைக்க வேண்டுமானால் ஷூட்டிங்கில் இடம்பெறவேண்டும் என்கிற கொடூரமான நிலைப்பாட்டுக்கு சினிமாவின் சில துறையாளர்கள் தள்ளப்பட்டதுதான். திருப்பதியில் ஆறு மணிநேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தால்தான் அன்னதான டோக்கன் கிடைக்கும் என்பதைப் போன்றதே இது. எவ்வளவோ விஷயம் இருக்க, இதைப்போய் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறாயே என்று நினைக்காதீர்கள். காமராஜர், பள்ளிக்குக் குழந்தைகள் வரவேண்டுமானால் இந்த ஏழைநாட்டில் சோற்றால் அடித்தால்தான் ஆகும் என்று தீர்மானித்ததைப் போலத்தான் ஒரு துறையின் பணியாளர்கள் மிகக் கேவலமாகவும் அதேநேரத்தில் நுட்பமாகவும் அவமானப்படுத்தப்படுகிற செய்கையே இது என்பதே எனது வாதம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு பத்திரிகையாளரோ, டெக்னீஷியனின் நண்பரோ போய் நின்றால் முதலில் கேட்கப்படுவது சாப்பிடுகிறீர்களா என்பதாகத்தான். இது நல்ல குணம்தானே என்று நினைக்க வேண்டாம். நிஜமான சமூகத்தில் உள்ள கரிசனை இந்த அன்னமிடலில் இருக்கிறதா? தமிழக கிராமங்களில் யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிற நாகரிகம் இன்றும் பேணப்பட்டு வருகிறது. இந்த அன்னமிடுதலைவிடவும் மிகுந்த அன்பு நிறைந்த செய்கை அது.

இதனால்தான் சோற்றால் அடிப்பது என்கிற பதத்தை உபயோகிக்கிறேன். இதனால் சினிமா எட்டியுள்ள நாகரிகம் என்ன? நக்கிப்பிழைக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதுதானோ! இதைத் தொடர்ந்துதான் கேரவனுக்கு உள்ளே உட்கார்ந்து சாப்பிடுபவன், வெளியே உட்கார்ந்து சாப்பிடுபவன் என்கிற கலாச்சாரமும் இன்று நிலவுகிறது. இதனாலேயே சினிமா என்பது புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்களைப் பகுக்கும் இனவாத குணத்தைப் பேணிக்காப்பதாகவே இருக்கிறது என்பதே எனது குற்றச்சாட்டு. பல பெரிய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் உலகில் உள்ள அத்தனை மாமிசமும் ஒவ்வொருநாளும் சமைக்கப்படுவதுண்டு. ஆனாலும் நாயகனோ, நாயகியோ தன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் உணவை மட்டுமே உண்ணுகிற சுதந்திரத்தையும் பெற்றிருக்கவே செய்கிறார்கள். ஒருபக்கம் ஆப்பிள் ஜூஸ் அத்திப்பழ ஜூஸ் என்று இம்சை தருகிறார்கள் என்பதைப்போல ரிப்போர்ட்டர்கள் செய்தி வெளியிட்டு வெளியிட்டு இம்மாதிரியானதொரு பார்வை உண்டு என்பதையும்கூட நமது போதத்தில் பொங்கிவிடாதவாறு பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தப் போக்கின் உச்சக்கட்ட ஆட்டமே சமீபத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போனவர்களுக்கு பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கப்பட்டது! சம்பந்தப்பட்டவர் வேறு எம்ப்பியாகிவிட்ட வகையில் எழுதவே பயமாக இருக்கிறது. இருந்தாலும், இவ்விதமாக சினிமா இலவசக் கலாச்சாரத்தைத் தூண்டுவதாகவும் தான் சார்ந்த மொழியினரை பிச்சை எடுக்கத் துணிபவர்களாகவும் மாற்றுகிற அவலத்தைத்தானே கோருகிறது. அரசியல் பிழைப்பார்க்கு அறம் கூற்றென்றால், திரைப்படம் பிழைப்பார்க்கு இதுதானா கூற்று?

சினிமா ஒரு தொழில் என்கிற அடிப்படையிலேயே, 'ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல்' ஆகிய பதங்களெல்லாம் காண்கின்றன என்பதனால் இதைப் பெரிதாகப் பாராட்டுவதன் வாயிலாக நம் நேரத்தை நாம் வீணடித்துக்கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது. கெட்டது நிறைய இருக்குமிடத்து நல்லதும் சில இருந்துதானே தீரும்.

பார்வையாளனைப் பொறுத்தவரைக்கும், சினிமா அவனுக்கு நன்றாக ஆடையுடுத்தக் கற்றுக்கொடுத்தால் அது நல்லதுதானே! சாலையில் எதிர்ப்படுபவர்கள் எல்லாம் நல்ல முறையில் ஆடையுடுத்தி, நவீன ரக வாகனங்களில் பயணம் செய்து, அவர்களுக்கருகாக நாம் நகரும்போது நறுமணம் வீச நடமாடினால் நமக்கும் நல்லதுதானே!

ஒரு சினிமாவைப் பார்ப்பதன் வாயிலாக ஒரு மனிதனின் காம வெறியோ, கொலை வெறியோ தணிந்துபோய் பசித்த சிங்கம் போல அரங்கினுள் நுழைந்தவன், பசுமாட்டைப்போல வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் குடும்பத்தினில் காணும் உயிர்களுக்கும் பாதுகாப்புத்தானே!

என்ன நான் சொல்வது?

No comments: