சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும் என்கிற தலைப்பு இரண்டு மூன்று விதங்களாகப் பொருள்கொள்ளப்படலாம். சாதாரண மனிதர்கள் விரும்பும் சினிமா, சீமான்கள் விரும்பும் சினிமா; சாதாரண மனிதர்களுக்காக எடுக்கப்படும் சினிமா, சீமான்களுக்காக எடுக்கப்படும் சினிமா; சாமான்யர்கள் எடுக்கும் சினிமா, சீமான்கள் எடுக்கும் சினிமா! (நான்காவதாக இயக்குனர் தோழர் சீமான் எடுக்கும் சினிமா என்பதாக ஏதும் தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம்!)
இந்தத் தலைப்பில் விட்டுப்போன இன்னொரு சங்கதி உண்டு. அது அறிவுஜீவிகளின் சினிமா. தமிழகத்தில் யாருக்குமே அறிவு என்பதாக ஒன்று இல்லாத காரணத்தால் அது இங்கே ஒரு பாடுபொருளாக இல்லாமற்போவதில் வியப்பில்லை. இப்படிச் சொல்வதற்காக அறிவு ஜீவிகளின் வாயிலிருந்தும் விரல்களிலிருந்தும் மட்டுமே வசைகள் வரும் என்பதனால் தேகத்தில் கீறல் விழாமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் நான் இதை எழுதவில்லை. ஏனென்றால் அறிவு ஜீவிகள் சினிமாக்காரர்களால் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். அதனால் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற போதமே இங்கே ஒரு பண்ணாடைக்கும் இல்லை. இந்த லக்ஷணத்தில் சினிமா எதைக் காட்டுகிறதோ அது மட்டுமே நிஜம் என்பதாகவே தமிழ் மனங்கள்வேறு நம்பித் தொலைக்கின்றன. அதனால் அவர்களை விட்டுத்தள்ளுங்கள்.
சாமான்யர்கள் விரும்பும் சினிமா சீமான்கள் விரும்பும் சினிமா அல்லது சாமான்யர்களுக்காக எடுக்கப்படும் சினிமா சீமான்களுக்காக எடுக்கப்படும் சினிமா ஆகியவை வேறு வேறு அல்ல என்பதே உண்மை. சாமான்யன், தன்னால் முடியாததைச் செய்கிற ஒருவனைத் தலைவனாகக் கொண்டாடுகிறான். சினிமாவில் ஒரு கதாநாயகன் அதைச் செய்யும்போது அவனை இயல்பாகவே தன் தலைவனாக ஏற்றுக்கொள்வதற்கே இது வித்திடுகிறது. இதனால் அவ்விதமான சினிமாக்களை அவன் கொண்டாடுகிறான். சீமான் என்கிற வசதி படைத்த ஒருவன் தான் நினைத்தால் செய்துவிடக்கூடிய சாகசங்கள் என்பதனாலேயே அவற்றை ரசிக்கிறான். செலவில்லாமல், உடல்வதையுமில்லாமல் பார்த்து ரசிக்க முடிகிறதே, அது நல்லதுதானே! இதனால்தான், தான் வாழும் சூழலான ஏழ்மையைப் பிழியும் சினிமாவை சாமான்யனும் விரும்புவதில்லை, தான் பார்க்க விரும்பாத பக்கங்களை சீமானும் விரும்புவதில்லை. இதனால் இவர்கள் இருவரும் விரும்பும் சினிமா ஒரே வகைப்பட்டதுதான் என்பதனால் இந்த விஷயங்களைத் தள்ளிவிடலாம்.
நான் சொல்ல வருவது, சாமான்யர்கள் எடுக்கும் சினிமா மற்றும் சீமான்கள் எடுக்கும் சினிமா என்கிற இரண்டே பதங்களைப் பற்றித்தான். இன்னும் சொல்லப்போனால் சீமான்களால் நல்ல சினிமா கொடுக்க முடிகிறதா என்கிற கேள்வியே இக்கட்டுரையைப் பிணைத்திருக்கும் சங்கிலி.
தமிழ் சினிமாவின் நெடும் வரலாற்றில் ஸ்டுடியோக்களின் கைகளில் சினிமா இருந்த காலத்தில் சீமான்களே படங்களை எடுக்கும் நிலைப்பாடு நிலவியது. அதாவது தயாரிப்பாளர் தீர்மானிக்கும் சினிமாவே எடுக்கப்படும். அவர் விரும்பும் சினிமாவை மற்ற டெக்னீஷியன்கள் எல்லோரும் முனைந்து செய்து தரவேண்டும். இதனால்கூட ஆரம்பக்காலப் படங்கள் ராஜாகாலத்துப் படங்களாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஒரு சீமான் மற்றவனை மகிழ்விக்க விரும்பினால் ஆடம்பரத்தைக்கொண்டே அதைச் செய்வான். ஒரு சீமானுக்கு மற்றவனிடம் ஒரு காரியம் ஆகவேண்டுமானாலும் அவன் அதே உத்தியையே கையாள்வான். இதனாலேயே கோட்டைகள், கொத்தளங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் (எவ்வளவு அழகாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள் பாருங்கள், மாட மாளிகை என்று வந்தால் கூடவே ஒரு கூட கோபுரம். கூடம் என்றால் ஹால். கோபுரம் என்றால் உயரமான கட்டடம் அல்லது மேல்மாடி. எனவே முதல் தளம் அல்லது இரண்டாவது தளத்தில் உள்ள பெரிய ஹால் என்பதே கூட கோபுரம். கான்க்ரீட் இல்லாத காலத்தில் பல மாடிகளில் கட்டப்பட்டவை அரண்மனைகளல்லாமல் வேறு எவையாக இருக்கக்கூடும்?) என்று பார்வையாளனை வசப்படுத்தி அவன் கையில் அல்லது வேட்டி மடிப்பில் உள்ள காசை உருவியெடுத்துவிடுவதே ஆரம்பக்கால சினிமாகர்த்தாக்களின் சூத்திரமாக இருந்தது. (அதன் இன்றைய பரிணாமம்தான் கிராஃபிக்ஸ் முதலான பிரம்மாண்டங்கள்!)
எல்லிஸ் ஆர் டங்கன் முதலாக ஏ.பி. நாகராஜன், பீயார் பந்துலு, பீம்சிங் என்று கேயெஸ் கோபாலகிருஷ்ணன் வரைக்கும் இவ்விதமாக ஸ்டுடியோக்களுக்குக் கட்டுப்பட்டு உழைத்தவர்கள்தான். இதற்குப் பின்னால்தான் ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டிலில்லாத இயக்குனர்களின் காலம் தொடங்குகிறது.
இந்தக் காலத்தில் இயக்குனர்கள் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. தயாரிப்பாளரின் வருமானத்தைத் தீர்மானிப்பவர்களாக மாறிப்போகிறார்கள். ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் முதலானவர்களின் தோற்றம் இந்தக் காலத்தில்தான் நிகழ்கிறது. இவர்களில் ஸ்டுடியோவில் தொடங்கி வெளியே வந்தவர்கள் முதல் இருவரும். பின்னவர்கள் முற்றிலும் சுதந்திரமானவர்கள். இவர்கள் உள்ளே நுழையும்போதுதான் சாமான்யர்களின் சினிமா உருவாக்கப்படுகிறது.
பாலச்சந்தர் ஒரு நடுத்தரவர்க்கத்து அரசு அலுவலர், பாரதிராஜா ஒரு சாதாரண கிராமத்துக் குடும்பத்திலிருந்து வந்த மலேரியா இன்ஸ்பெக்டர், மகேந்திரனும் நடுத்தர வர்கத்தைச் சார்ந்தவர்தான். அவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இவர்களின் வரவே நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை சினிமாவாகப் பார்க்க நமக்கு வகை செய்கிறது. அதுவரைக்கும் எடுக்கப்பட்ட கிராமத்து சினிமாக்களைப் பார்த்தால் அந்த வித்தியாசம் நன்றாகவே உணரப்படும். வீடு என்றால் முற்றம் வைத்த தொட்டிக் கட்டு வீடு செட் போடப்பட்டிருக்கும். அதுவும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பார்த்த காரைக்குடி வீடு அளவு இல்லாவிட்டாலும் சற்று அதிக விசாலமாகவே விரிந்திருக்கும். ஆனால் வறுமையோ மின்னிக்கொண்டிருக்கும். சிவாஜி கணேசன் மட்டும் பிராந்திய மொழியைப் பேச முயல்வார், மற்றவர்கள் எல்லாம் அவரவர் தமிழில் பிளந்துகட்டிக்கொண்டிருப்பார்கள்.
இந்த அபத்தங்களையெல்லாம் தாண்டி வரக்கூடிய சாத்தியம் பாரதிராஜா முதலானவர்களுக்கு நேர்ந்தது அவர்கள் கடந்து வந்திருந்த பின்னணியால்தான். பாரதிராஜாவின் ஆரம்பக்காலப் படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் முதலானவை அவரது கிராமத்துப் பின்னணியிலிருந்தும் அடுத்து வந்த நிழல்கள் அவரது ஆரம்பக்கால சென்னை வாழ்க்கைச் சூழலிலிருந்தும் சிகப்பு ரோஜாக்கள் அவரது குற்றப் பின்னணியிலிருந்தும்... பாரதிராஜா மன்னிக்க! சும்மா ஒரு ப்ளோவில் வந்துவிட்டது. சிகப்பு ரோஜாக்கள் அவர் பார்த்த ஹாலிவுட் படங்களின் பாதிப்பிலிருந்தும் வெளிப்படுகின்றன.
அவரது முதல் ஐந்து படங்களில் அவர் ஒருவிதமான வெரைட்டி தர முயன்றார் என்றாலும் பிற்பாடு வெகுகாலம் அவர் அழுத்தமான கிராமிய மணம் வீசும் காதல் படங்களுக்காகவே அறியப்பட்டார். அவரது கருத்தம்மா வரைக்கும் இதன் நீட்சி தொடர்கிறது. ஆனால் இப்போது அவரால் அப்படியொரு படம் கொடுக்க முடியுமா என்று கேட்டால் இந்தக் கட்டுரைக்கான விளக்கம் தனியாக எழுதப்படவேண்டியதில்லை. சாமான்யன் என்கிற வார்த்தையை இங்கிருந்துதான் அர்த்தப்படுத்துகிறேன். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பாளி, தான் சார்ந்துள்ள நிலையைப் பொறுத்தே தனது படைப்புகளை வெளிப்படுத்துகிறான். இது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.
இதனால்தான் மணிரத்னம் சேரியைக் காட்ட முயன்றாலும் அதில் கொஞ்சம் கற்பூர வாசனை வந்துவிடுகிறது. தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தில்தான் முதன்முதலில் தனிநபர் விசாரணைக் கமிஷன் என்பது அழுத்தமாக உபயோகிக்கப்பட்டது. அதற்கு முன்னால் ஆர்கே செல்வமணி முதலான இயக்குனர்கள் ஒருவேளை இதனைக் கையாண்டிருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் ஒரு அரிஸ்ட்ரோக்ராட் அல்லது வசதியான பீரோக்ரட் ஆகியவர்களோடு சிறுவயது முதலே பரிச்சயம் உள்ள ஒருவர்தான் அவர்களைத் தங்கள் கதாபாத்திரங்களாக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிகிறது. இதுவே சீமான்களின் சினிமா என்று நான் சொல்லவருவது.
ருஷ்ய இலக்கியமேதை லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போல ஒரு இலக்கியத்தைப் படைக்க தமிழில் நாதியில்லை என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு. அரசர்களின் அந்தரங்க வாழ்வும் அரசியல் வாழ்வும் குறித்த மிகத் தடிமனான புத்தகம் அது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது அழுத்தமான இலக்கியமாக ஆகவேண்டுமானால் நீங்கள் அவர்களோடு நெருங்கிப்பழகியிருக்கவேண்டும். அவர்களது வழித்தோன்றல்களோடாவது தோழமை பாராட்டியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது எப்படி சாத்தியமாகும்?
தமிழ்தேயத்திலோ எழுத்தாளன் ஏழை. கண்ணதாசன் விருது பெற்றுக்கொண்ட மேடையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோல எழுத்தாளன் என்பவன் பிச்சைக்காரனுக்கு சற்று மேல் தளத்தில் உள்ளவன். அவன் எங்கே அரசபோகம் குறித்து எழுத?
இதே நிலைதான் இயக்குனர்கள் என்பதாக தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பவர்களுக்கும் உள்ளது. இதனால்தான் ஏழைகளின் அல்லது நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை மிகத் துல்லியமாகக் காட்ட முடிகிற அவர்களால் பணக்காரர்களின் உண்மையான வாழ்வை மிகச்சரியாகக் காட்ட முடிவதில்லை.
இதில் ஒரு கேள்வி எழலாம். ஒரு சினிமாக்காரன், சினிமாவுக்கு வரும்போது ஏழையாக இருக்கலாம், பிற்பாடு அவனே ஒரு பெரும் பணக்காரனாக சினிமாவாலேயே உருவாகும்போது அவன் பணக்காரர்களின் வாழ்வை அறிய மாட்டானா என்று! இதற்கு வாய்ப்பே இல்லை என்பதே எனது பதில். புதுப்பணக்காரனின் கண்ணோட்டத்திற்கும் பரம்பரைப் பணக்காரனின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் காலுக்கும் தலைக்குமானது.
நான் பேசிக்கொண்டிருப்பது வர்க்க வாதமல்ல, வர்க்க வழக்கு.
மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்று ஒரு படம் வெளிவந்தது. மோகன்லால் ஹீரோ. இப்சன் எழுதிய மாஸ்டர் பில்டரின் அடாப்டேஷன் என்பதாக பறைசாற்றிக்கொண்ட அந்தப் படம் மோகன்லால் கேரியரிலேயே மிக மோசமான கரும்புள்ளி. தமிழில்கூட அவ்வளவு மோசமான படமொன்று இதுவரை எடுக்கப்பட்டதில்லை. சர்ரியலிசப் படமொன்றை எடுத்துக்கொண்டிருப்பதாக இயக்குனர் நினைத்தால் மட்டும் போதாது. அது உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மோகன்லால் இந்தமாதிரி ஒரு படத்துக்கு எப்படி கால்ஷீட் கொடுத்தார் என்று மலையாள நண்பர்களிடம் வினவியபோது உண்மை வெளியே வந்தது. படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் வெளிதேசத்தில் வாழும் மலையாளி. அவர் மோகன்லால் அதுவரை வாங்கியிராத பெருந்தொகையை முழுவதும் அட்வான்ஸாகக் கொடுத்து அவரை புக் செய்தார் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
பணக்காரர்கள் நினைத்தால் இந்தமாதிரிதான் கலை சேவை செய்ய முடியும். இருந்தாலும் சீமான்களின் சினிமா இந்த லக்ஷணத்தில்தான் இருக்கும் என்று நான் பொத்தாம்பொதுவாகச் சொல்ல வரவில்லை. ஒருவன் சீமானாக இருந்தாலும் அவனுக்குள் கலையார்வமும் திறமையும் இருந்தால் மட்டுமே அவனால் தமிழ் இதுவரை பார்த்திராத புதிய தளங்களில் சினிமாக்களை உருவாக்கித் தர முடியும் என்றே நான் சொல்கிறேன்.
கேயெஸ் ரவிக்குமார் வசதியான வீட்டிலிருந்து வந்தவர் என்பதாகச் சொல்வார்கள். ஆனால் அவர் செய்வதெல்லாம் வெறும் ரகளைகள்தான். சுப்ரமணியபுரம் சசிகுமாரை வேண்டுமானால் சொல்லலாம், மதுரையைச் சார்ந்த வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர் இவர். இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சென்னையைத் தவிர வேறு முக்கிய நகரங்கள் எல்லாம் கிராமங்களின் மீது போர்த்தப்பட்ட மஸ்லின் துணியைப் போலவே காண்பதால் இவரும் தான் சார்ந்த உலகத்தை மட்டுமே நமக்குக் கொடுக்க இயலக்கூடும்.
தமிழைப் பொறுத்தவரைக்கும் சீமான்களின் சினிமாவான அப்பர் கிளாஸ் சினிமாவைக் கொடுப்பதற்கு திரும்பவும் மணிரத்னம் முன்னால்தான் மண்டியிட வேண்டியதிருக்கிறது. அடுத்த தளத்தில் ராஜீவ்மேனனோ கௌதம் மேனனோ விஷ்ணுவர்தனோ வரக்கூடும். அவர்கள் செய்தால்தான் உண்டு. ஆனால் பிரதாப் போத்தன் நினைத்திருந்தால் செய்திருக்கலாம். அவரும் செய்யவில்லை. அது தமிழின் தலையெழுத்தே தவிர வேறில்லை.
பொதுவாகவே பணக்காரர்களுக்குக் கலைத்திறன் குறைவு என்பதையே இது காட்டுகிறது.
அவர்கள் தங்கள் பெண்களுக்கு பரதநாட்டியம் பயிற்றுவிப்பதோடு தங்கள் கலையார்வத்தைத் தணித்துக்கொள்கிறார்கள் போலும்.
இப்போது சினிமாக்காரர்களின் அடுத்த தலைமுறைகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மேல்தட்டு நுணுக்கங்களை நுகர்ந்துபார்க்கக்கூட அவர்களின் ஒருதலைமுறை டாம்பீகம் போதாது என்றபோதும், அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை நம் கண்முன் கொடுக்க வல்லவர்களாக இருந்தால் ஒருசில படங்கள் கிடைக்கலாம்.
மற்றபடி தமிழில் வெளிவரும் சினிமாக்கள் எல்லாமே சாமான்யர்களின் சினிமாக்களாகவே இருப்பதை வியப்பதற்கு என்ன இருக்கிறது!
No comments:
Post a Comment