July 14, 2009

இடையில் எதற்கொரு வேளை?


ஒருகாலத்தில் மாருதியின் வால் போல எமது சினிமாக்கள் நீண்டு கிடந்தன. (மாருதி என்றதும் மாருதி உத்யோக் நிறுவனத்தின் படைப்புகளுக்கு ஏது வால் என்று கேட்கக்கூடாது. இது கரசேவை கால்சேவை என்று தரமிழந்து போகாத சாக்ஷாத் ராமபக்த மாருதியின் வால்) மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று இலக்கில்லாமல் சுட்டுத்தள்ளப்பட்டு எடிட் செய்யப்பட்ட அந்தப் படங்களை மகாஜனங்கள் பார்க்குங்கால் நடுவில் மூத்திரம் முட்டுவதில் நியாயம் இல்லாது போகாது.

அந்தக் காலத்தில் பாட்டு போட்டால் எழுந்து வெளியே போகிற சுதந்திரம் தங்களுக்கு உண்டு என்பதைக்கூட பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனென்றால் படமே முழுக்க பாடல்களாலேயே நிரம்பியிருந்தது. இதனால் பாட்டுக்குப் பாட்டு மூத்திரம் பெய்ய வேண்டுமானால் தண்ணீர் பாட்டிலைக் கையோடு கொண்டுவந்திருந்தால்கூட ஆகாது. ஆங்கிலப்படங்களில்கூட இம்மாதிரி நீண்ட படங்கள் நிறைந்திருந்த காலமாகவே அது இருந்தது. இதனால் ஒரு இடைவேளைக்கு பதில் இரண்டு இடைவேளை விட்ட சரித்திரம்கூட உண்டு. ஹிந்தியில் சங்கம், மேரா நாம் ஜோக்கர் ஆகிய படங்கள் இரண்டு இன்டர்வெல் விடப்பட்ட படங்கள். தமிழில் நீண்ட படங்கள் வந்திருந்தும் இரண்டு இன்டர்வெல் விட்ட வரலாறு இருப்பதாக நினைவில்லை. ஆனால் கிராமத்து டூரிங் டாக்கீஸ்கள் ஒரே ப்ரொஜக்டர் வைத்து இயக்கப்பட்டதனால் ரீல் மாற்றுவதன்பொருட்டு மூன்று இடைவேளைகள் விடும் பழக்கம் இன்னும்கூட உண்டு.

இரவெல்லாம் விழித்திருந்து கதைசொல்லிகளின் பிரசங்கங்களையும் தெருக்கூத்துகளையும் பார்த்துப் பழகிய கூட்டமாக இருந்த வகையில் சினிமாவும் அவ்விதமாக நீண்டதாகவே இருந்தது இயல்பானதே. அதற்கு இடைவேளைகள் தேவைப்படுவதும் இயல்பானதே. ஆனால் இன்றைக்கு அப்படியா?

இரண்டரை மணிநேரப் படம் என்பது எழுதப்படாத சட்டமாக ஆனபின்னால் இடைவேளை என்பதும் மறுக்கப்படாத ஏற்பாடாக ஆகிவிட்ட சூழல் இன்று. இதனால் இடைவேளை என்பது கான்டீன் என்பதாக ஒன்றையும் உற்பத்தி செய்துகொடுத்தது. பூங்காக்களுக்கோ கடற்கரைக்கோ பொழுதைப் போக்கச் செல்பவர்கள் எதையாவது வாங்கி உண்பதில்லையா, அதுபோல சினிமாத் தியேட்டர்களுக்கு கேளிக்கை நோக்கத்தில் போகிறவர்களும் எதையாவது வாங்கித் தின்ன வேண்டும் அல்லவா. இப்படி உற்பத்தியான இந்த வழக்கம் இன்றைக்கு இதற்காகவே திரைப்படங்கள் இடைவேளை விடவேண்டும் என்கிற கொடுமைக்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

இதன் உச்சபட்ச ரகளைதான் வெறும் ஒன்றரை மணிநேரமே ஓடுகிற ஆங்கிலப் படங்களுக்குக் கூட எமது தியேட்டர்களில் விடப்படும் இடைவேளை. இந்தக் கான்டீன் ஒரு பெரிய ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தையே உற்பத்தி செய்து கொடுத்த ஆச்சரியம்கூட கோவையில் நிகழ்ந்தது. கோவை சென்ட்ரல் தியேட்டரில் தாமோதரசாமி நாயுடு என்பவர் ஒரு கான்டீன் நடத்தினார். கான்டீனில் இட்லி கொடுக்கலாம் என்பதாக அவருக்குத் தோன்றியது. அவரது இட்லியும் சாம்பாரும் பருப்பு வடையும் தியேட்டரில் கூட்டத்தைச் சேர்த்தன. தியேட்டரிலிருந்து வெளியே வந்தபோது அன்னபூர்ணா என்கிற பெயரில் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகவே அது மெல்ல மெல்ல பரிணாமமடைந்தது.

இப்படி எங்காவது ஒருவருக்கு உதவியாக இருந்தபோதும் இந்த இடைவேளை என்பது சினிமாவின் கதைக்குள்ளும் தலையை நுழைத்து கதாசிரியனுக்கு அடுத்த கட்ட பிரச்சினை ஒன்றையும் கொண்டு வந்து சேர்த்தது என்பதே உண்மை. சாதாரணமாகவே கதை என்றால் அதற்கு உச்சக்கட்டம் என்கிற க்ளைமாக்ஸ் மிகவும் அவசியம். கதாசிரியன் படத்தின் க்ளைமாக்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எழுகிற அபிப்பிராயமே படத்தின் வெற்றி தோல்வி ஆகியவற்றை நேரடியாகத் தீர்மானிக்கிறது என்பதனால் இது அவசியமானதே. ஆனால் இடைவேளை?

இடைவேளை என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அதற்கும் க்ளைமாக்ஸுக்குத் தருகிற முக்கியத்துவத்தைத் தரவேண்டிய கட்டாய நிலைக்கே கதாசிரியன் தள்ளப்பட்டான். ஏனென்றால் ஒழுங்காக உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருபவர்களை நம்பி சற்று நேரம் வெளியே அனுப்புகிறோம். அவர்கள் அப்படியே ஓடிப்போய்விடக்கூடாதல்லவா!

இதனால்தான் பத்தாவது வரைக்கும் நல்லா படிச்சான், ப்ளஸ்டூலதான் மனசு கண்டபக்கமும் அலைஞ்சு கோட்டை விட்டுட்டான் என்று இளம்பிராயத்தினரை விமர்சிப்பதைப்போல இன்டர்வல் வரைக்கும் பிரமாதம், செகண்ட் ஹாஃப் குப்பை என்று சொல்கிற நிலைப்பாடு எழுந்திருக்கிறது. இந்த பர்ஸ்ட் ஹாஃப் செகண்ட் ஹாஃப் என்கிற சங்கதியெல்லாம் ஆங்கிலப் படங்களில் இல்லாத வகையில்தான் அவர்களின் படங்கள் ஒவ்வொரு காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சிக்குண்டான சிரத்தையோடு எடுக்கப்படுகின்றன.

இங்கே கதை செய்ய வேண்டுமானால் மூன்று அம்சங்களை மட்டும் பார்த்துப் பார்த்துச் செய்தால் போதும் என்கிற நிலைப்பாடே இன்று நிலவுவது. படத்தின் துவக்கம், இடைவேளை, க்ளைமாக்ஸ் ஆகியவையே அவை. இவை சிறப்பாக இருந்துவிட்டால் நடுவில் தவிட்டைக் கொட்டி நிரப்பினாலும் பார்வையாளர்கள் சப்புக்கொட்டிச் சாப்பிடுவார்கள் என்பதைப் போலவே பெரும்பாலான சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். இதனாலேயே எமது படங்கள் குப்பையாக இருக்கின்றன.

அதிலும் இன்டர்வெல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகித் தொலைத்த வகையில் ஏதாவதொரு எதிர்பார்ப்பு அல்லது திருப்பத்தை அங்கே வைக்க வேண்டிய அவலம் கதாசிரியனுக்கு இருக்கிறது. எதிர்பார்ப்பை க்ளைமாக்ஸில் வைக்க முடியாது. ஆனால் படத்தின் துவக்கத்தில் வைக்க முடியும். ஆனால் மிக முக்கியமான திருப்பமொன்றை வைக்க சரியான இடம் இடைவேளைதான் என்பதாகவே தெரிகிறது. இதைச் சாக்கிட்டே படத்தில் முக்கியமான திருப்பம் என்பதாக ஒரு அபத்தம் வேறு உற்பத்தி செய்யப்படுகிறது.

முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையைத் தாண்டி பொய் சத்தியம் செய்கிறாள் நாயகி. இனி என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதைபதைப்போடு கான்டீனில் பர்ஸ் கரைவதைக்கூட அறியாமல் அமிலம் சுரந்த வயிற்றை நிரப்பிக்கொண்டே விசனப்பட்டுக்கொண்டிருக்கிறான் தமிழன். குழந்தையைத் தாண்டிவிட்டால் என்ன ஆகும்? உம்மாச்சியா வந்து கண்ணைக் குத்திவிடும்? அதன்பிறகு அவர்கள் இருவரும் இன்னொரு குழந்தையை உற்பத்தி செய்கிற சேவையில் ஈடுபட்டார்களா இல்லையா என்பதுதானே கதையாக இருந்தது. தாண்டப்பட்ட குழந்தைக்காகவோ தாண்டிய சிறுமிக்காகவோ பதைத்த மனம் அதற்கான பதிலைப் பெற்றதா?

இதைத்தான் இடைவேளைச் சூத்திரம் என்பதாக நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இடைவேளை என்கிற பொழுதில் பார்வையாளன் படத்தைத் தவிர வேறு யோசனைகள் இல்லாமல் இருந்துவிட்டால் போதும். அதற்கு அவனது மூளையில் ஒரு துளையைப் போட்டுவிட்டால் போதும் அது திரும்பவும் உள்ளே வருகிறவரைக்கும் குடைந்துகொண்டேயிருக்கும். உள்ளே வந்ததும் கொஞ்சம் களிமண்ணை அதில் நிரப்பிவிட்டால் அவன் கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போயே போய்விடுவான்.

இப்போது வருகிற படங்களில் கதையே தக்னூண்டுதான் இருக்கிறது. இதில் ஃபர்ஸ்ட் ஹாஃப் வேறு செகண்ட் ஹாஃப் வேறு! அப்புறம் கதையில் எதைத்தான் செய்ய முடியும்? கதையின் போக்கைக் கதைதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர இடைவேளை தீர்மானிக்கக்கூடாது என்பதே எனது ஆதங்கம். கதை துவங்குகிறது, நகர்கிறது, முடிகிறது. இதுதான் சரியான செயல்பாடாக இருக்க முடியும். நடுவில் இடைவேளை எதற்கு விடப்படுகிறது? தியேட்டர் உரிமையாளன் படத்தில் சம்பாதித்தது போதாதென்று கான்டீனை ஏலம் விட்டும் சம்பாதிப்பதற்கெனப் படைப்பாளி எதற்காக மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்?

சினிமாவைப் பொறுத்தவரை படைப்பாளியின் தலையில் மிகப்பெரிய பாரம் ஏற்றப்படுவது இவ்விதமாகத்தான். அவன் தயாரிப்பாளரைத் திருப்திபடுத்த வேண்டும், நடிகரைத் திருப்திபடுத்த வேண்டும், ஃபைனான்சியரைத் திருப்திபடுத்த வேண்டும், டிஸ்ட்ரிபியூட்டரைத் திருப்திபடுத்தவேண்டும், இந்த தியேட்டர் உரிமையாளர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்றால் பார்வையாளனை எங்கிருந்து அவனால் திருப்திபடுத்த இயலும்?

இதையும் மீறி நல்ல சினிமாக்கள் வருகின்றன என்று சொன்னால் எமது சினிமாக்காரர்கள் எத்தனை கில்லாடிகள் என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

சமுத்திரகனியின் நாடோடிகள் படத்தின் இன்டர்வெல் மிகவும் முக்கியமானது. அது உண்மையில் இதுவரை வந்த தமிழ்ப்படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளை மெல்லிய அங்கதத்தால் தாக்குவது. ஏனென்றால் இரண்டொரு சண்டைக் காட்சிகள், டூயட்கள், காமெடி ட்ராக் ஆகியவற்றைச் சேர்த்திருந்தால் அந்தப்படம் இன்ட்டர்வெல்லோடு முடிந்துபோய்விடும். பார்வையாளனும் வழக்கம்போல திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்துவிடுவான். ஆனால் சமுத்திரகனி வழக்கமாக காதல் கல்யாணம் செய்துகொள்கிற சினிமாக்களில் கல்யாணத்தோடு கதை முடிந்துவிடுவதை நையாண்டி செய்கிறார். சரி, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கல்யாணம் செய்துவைத்துவிடுகிறீர்கள், அப்புறம் அவர்கள் யோனிப்பொருத்தம், கீனிப்பொருத்தம் எல்லாம் சேர்ந்து ஒழுங்காக வாழ்ந்தார்களா? இந்தக் கேள்வியையே இரண்டாவது பாதிக்குக் கொண்டு செல்கிறார்.

இதனால் இந்தப் படத்தின் இடைவேளை பார்வையாளனுக்கு ஏற்படுத்திய எதிர்பார்ப்பு முற்றிலும் புதிதானது. இதனாலேயே இந்தப்படத்தின் இன்டர்வல் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் போலவே விறுவிறுப்பானதாக அமைந்துவிட்டது. ஏனென்றால் மற்றப் படங்கள் அதுவரைக்கும்தான் யோசிக்கின்றன என்பதனால் அதுதான் க்ளைமாக்ஸ். நாடோடிகள் படத்தின் க்ளைமாக்ஸ், இன்டர்வெல் அளவு விறுவிறுப்பானதல்ல. சமுத்திரகனி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இதனாலேயே அவர் ஒரு சிறந்த கலைஞராகத் தென்படுகிறார். இந்தப்படம், சுப்ரமணியபுரத்திலும் அவரது பங்களிப்பு எத்தனைதூரம் இருந்திருக்கும் என்பதையே பார்வையாளனுக்கு விளக்குகிறது.

தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் காதலி சொல்கிறாள், அம்மாவைக் கொன்ற வில்லனைப் பழிவாங்குவதாக ஹீரோ சபதமேற்கிறான், ஹீரோவுக்குத் தெரியாமல் அவனுக்கு எதிராக ஒரு சதி தீட்டப்படுகிறது, ஹீரோவைக் கொல்வதற்காக வில்லன் வாடகைக்கமர்த்திய கொலைகாரன் புறப்படுகிறான், ஜனசந்தடியுள்ள முக்கிய இடங்களில் பாம் வைக்கப்படுகிறது என்று இன்டர்வெல்லுக்கான ஆலோசனைகள் ஒரேவிதமாகவே நெடுங்காலம் இருந்து வருகிற சூழலில் மற்றவர்களெல்லாம் க்ளைமாக்ஸ் என்று யோசிக்கிற விஷயத்தையே இன்டர்வெல்லாக வைக்கலாம் என்று யோசித்த பெருமை சமுத்திரகனியையே சாரும் என்றாலும், இப்படி ஏதாவதொரு காரணத்துக்காக இன்டர்வெல் என்பதற்காக மெனக்கெடவேண்டிய சூழலில்தானே அவரும் ஆழ்ந்திருக்கிறார்!

பாலச்சந்தரின் ஒருவீடு இரு வாசல் படத்தில் இன்டர்வெல் வரை ஒரு கதையும் இன்டர்வெல்லுக்குப் பிறகு மற்றொரு கதையும் இருந்தன. இது தமிழுக்குப் புதிதொன்றுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஃபிலிம் அல்லது புட்டேஜுக்கு ரேஷன் இருந்த வகையில் சிறிய படங்களாக பல எடுக்கப்பட்டன. ஹரிதாஸ்கூட அவ்விதமாக எடுக்கப்பட்ட படம்தான். இதனால் பல படங்கள் இவ்விதமாக இரண்டு படங்களை இணைத்துக் காட்டப்பட்ட வகையில் இன்டர்வெல் என்பதன் அவசியம் ஏற்பட்டது. ஒருவேளை இதுகூட இன்டர்வெல்லுக்கான துவக்கமாக இருந்திருக்கலாம் என்பதாகவே தோன்றுகிறது.

எல்லா விஷயங்களிலிலும் மேற்கத்தியமயம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது சினிமா மட்டும் ஏன் இன்னும் பத்தாம்பசலியாகவே இருந்துகொண்டிருக்கிறது என்பதுதான் விளங்கவேயில்லை. சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கச்சிதமான திரைக்கதைகளில் இன்டர்வெல் கின்டர்வெல் எல்லாம் இல்லாமல் ஒன்றரை மணிநேரத்தில் சொல்லக்கூடிய படங்களுக்காக தமிழன் இன்னும் எத்தனை காலம்தான் காத்துக்கொண்டிருக்கப் போகிறானோ தெரியவில்லை.

5 comments:

வண்ணத்துபூச்சியார் said...

தங்கள் வித்தியாசமான பார்வைகளும் பதிவுகளும் என்றும் அருமை..

ஆனால் ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் "இடைவேளை" சற்று அதிகம் தான்.

வாழ்த்துகள் தோழரே...

Anonymous said...

சார் அமீரின் ராம் படம் ஒன்னே முக்கால் மணி நேரம் தான் என்று நினைக்கிறேன். அதுக்கே இண்டர்வல் விட்டுட்டாங்க...

அனால் நீங்கள் கடைசியில் சொன்ன வரிகளை எனக்கு இந்தப் படம் ஓரளவு நிவர்த்தி செய்து விட்டது என நான் நினைக்கிறேன்.

ஜெட்லி said...

அண்ணே கொஞ்சம் font சைஸ் பெருசு ஆக்குங்க
படிக்க கடினமா இருக்கு. அல்லது என் i.e யில்
தப்பா என்று தெரியவில்லை.

ஜெட்லி said...

அண்ணே கொஞ்சம் font சைஸ் பெருசு ஆக்குங்க
படிக்க கடினமா இருக்கு. அல்லது என் i.e யில்
தப்பா என்று தெரியவில்லை.

Majid said...

Excellent Analysis with lovely style of writing.

Regards