சிறுகதையாளனாகவே நான் இதுகாறும் அறியப்பட்டிருப்பதாலேயே ஒரு சிறுகதையின் வாயிலாக இந்த அர்த்தமண்டபப் பிரவேசம் நிகழ்வது பொருத்தமானதாகவே இருக்கும். நவீன தமிழ்ச் சிறுகதை குறித்த ஓர் எளிய முன்னுரையுடன் ஒரு சிறுகதையும் அர்த்தத்தின் ஆயிரம்கால் மண்டபத்திற்கு அஸ்திவாரமாக அமைகிறது.
எல்லாக் காலமும் கதையாளர்களின் காலமாகவே இருந்துவருகிறது. கேட்பதற்கும் சொல்வதற்குமாக எப்போதும் இருந்துவருகிறது கதைக்கான மனப்பிரதேசம். சொல்வதே கேட்பதும் கேட்பதே சொல்வதுமாக ஒரு கலந்துரையாடல் இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது. எழுதுபவன் கதையின் பரப்பைத் தீர்£மானிக்க வேண்டியதில்லை எனும் விதியை இப்போதுதான் முழுவீச்சோடு எதிர்கொள்கிறது தமிழ் மரபு. ஓர் எழுத்தாளன், சிறுகதை அமைப்பின் பல்வேறு சாத்தியங்களையும் முயன்று பார்க்கக் காலம் பெருவாரியாக அனுமதித்துக் காத்திருக்கும் நேரத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவனாக அடையாளப்படுத்திக் கொள்கிறேன். வெளியில்லாமல் வக்கற்றுப் போய்விடவில்லை இன்றைய சிறுகதையாளன். தளைகளில்லாமல் செய்யப்படும் முயற்சிகள் யாவற்றையும் அதீத உற்சாகத்தோடு வெளியிட எமது சிற்றிதழ்கள் காத்திருக்கின்றன. நாவல்களுக்கும் குறுநாவல்களுக்கும் அத்தகைய விசும்பொன்று நேரடியான வெளியீடுகளின் வாயிலாக தற்போது பெரிதும் நிரப்பப்பட்டு வருகின்றன என்றாலும் சிறுகதையின் கனபரிமானத்தைச் சுமப்பதற்காகவே சுழன்றுகொண்டிருப்பவை தமிழின் அக்கறை நிறைந்த சிற்றிதழ்ச் செல்வங்கள். அவை வாழ்க! அவற்றை வணங்கி இணையத்திற்குள் நுழைகிறேன்.
புத்தம்புதிய உத்திகளையும் வடிவ நேர்த்திகளையும் வண்ணம் பூசிக்கொண்ட முகப்புகளையும் சுமந்த எமது சிறுகதைத் தொகுப்புகளும் பிற நூல்களைப்போலவே அதிகம் விற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்பெருமையும் சிறுகதை எனும் பேரமைப்பையே சாரும்.
சிறுகதை பெரும் வாழ்வின் அகண்ட அனுபவத்தின் ஒரு துளி எனும் ஏற்பாடு எப்போதோ உடைத்தெறியப்பட்டுவிட்டது. இந்த நாளின் சிறுகதை வியாபித்து விரிந்த சுழல்காற்றைப்போன்ற வடிவெடுத்து ஓடுகிறது. அதன் வேகத்துள் உங்களையும் அள்ளிக் கொண்டு விடும்போது, உங்களின் மீது மோதும் ஜடப்பொருட்களின் உருவங்களைக் கண்டுகொள்ள வேண்டுமானால் கண்களில் மண்ணைச் செலுத்திக்கொண்டிருப்பதால் ஆகாது. பேரனுபவங்களும் முழு இதிகாசங்களும்கூட சிறுகதைக் களனாகின்றன. முன்னும் எப்போதும் இல்லாத சிறுகதைக்கான வடிவ இலக்கணம் இப்போது மேலும் கட்டற்றுத் தன் உச்சபட்ச சாத்தியங்களைக் கண்டெத்த அலைகிறது. நீங்கள் அந்தரங்கமாக ஆசைப்படும் வார்த்தைகளில் அவற்றின் தலைப்புகள் வடிக்கப்பட்டிருக்கக் காண்பீர்கள். நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு ரகசியத்தை அது உங்களின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்திவிடக் கூடுகிறது. தன் நுட்பங்களின் நேனோக்களை அது பிளந்து பார்க்கிறது. மாந்த்ரீக உடலாக்கங்களை அது சுவற்றைக் கடந்து பயணிக்கச் செய்கிறது. உங்களை அதிர்த்தி கவனத்தைக் குவித்துறிஞ்சும் ஆசானின் பரம்பாகும்போது யாதா¡த்தத்தை உடைத்துவிடுகிறது. மரபு சார்ந்த கதையாடல்களையும் புராணிகக் கதை சொல்லல்களையும் தேவதைக் கதைகளின் சாத்தியங்களையும் பிதுங்கப் பிதுங்கத் திணித்துக்கொண்டு அலைகிறது. நீதிக்கதைகளின் ஒருமுகத் தன்மையை முற்றிலும் மறுதலித்துவிடுகிறது.
கேட்பாரில்லாத தெருப்பொறுக்கியைப் போன்ற உருவத்தை அது எட்டியிருப்பதாகத் திரித்துக்கூறத் தேவையில்லை. சுயம்புவின் வீர்யத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டிவிட்டால் அவ்விதமாகச் சொல்லத் தேவையிராது. இத்தனைக்கும் இங்கே நான் தரும் முதல் சிறுகதை லத்தீன் அமெரிக்க பாணி முயற்சிகளையோ புதிர்மொழிப் புனைவுகளையோ சார்ந்திப்பதல்ல. இந்தப் பாதையைக் கடந்தபின்தான் அந்தப் பாதையைக் கடக்க வேண்டும். உங்கள் மனவெளியிலாவது அது நிகழ்த்தப்படவேண்டியது அவசியம்.
இணையம் எனும் விரிந்து வியாபித்த மண்டபம் முழுக்க எச்சிலைத் துப்பிக்கொண்டே போகிறவர்களின் மத்தியில் என் எழுத்துக்கள் கண்டிப்பாக இருக்காது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாடகம் என்கிற கலாவடிவம் வெறும் கேலிக்கூத்தாகப் பிறள்ந்துபோய்விட்ட அவலத்தைப்போல வெறும் வெட்டிப் பேச்சும், நகைக்சுவைத் துணுக்குகளுமாக இணையம் சிதைந்துபோய்விடக்கூடாது என்கிற அக்கறை உள்ளவர்கள் இந்த அர்த்த மண்டபத்திற்குள் நுழையலாம்.
No comments:
Post a Comment