September 20, 2004

நீர்நிலையிலிருந்து ஒரு குரல்

(சிறுகதை)

உங்களுக்குக் கல்யாணம். வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. சந்தோஷந்தானே? அதுதானே இல்லை! தொன்றுதொட்டு இருந்து வருகிற களவுமணப் பாரம்பரியத்தின் அசகாய சிறப்பினாலே நீங்கள் காதல் அல்லவா புரிந்தீர்கள். அந்தக் காதலை நட்டுநடு பாலைவனத்தில் தவிக்கவிட்டுவிட்டு உங்கள் தகப்பனாராகப்பட்டவர் உங்களுக்கு கொஞ்சமும் விருப்பமில்லாத ஒருவனைக் கட்டி வைத்துவிடப் பார்க்கிறார். அவனானால் எண்ணெய் வழிகிற தலையோடு காணப்படுகிறான். இந்தக் காலத்தில் தேங்காய் எண்ணெய் விற்கிற விலையில் எந்த நாகரீக யுவாவாவது தலையில் எண்ணெய் வைக்கத் தகுமா? மீசையோ செதுக்கத் தெரியாமல் தொங்குகிறது. அட கண்றாவியே, ஒரு ஜீன்ஸாவது சொந்தமாக வைத்திருப்பானா இந்த பழைய மூஞ்சிக்காரன்? குறைந்த பட்சம் உள்ளாடைகளையாவது சுத்தமாக அணிபவனாக இருப்பானா? அவனது உள்ளாடையில் ஒரு ஓட்டை கூட இல்லை என்று என்ன நிச்சயம்? என் காதல் யுவா இப்படியா இருப்பான்? அவன் தலைமுடி காற்றில் அலையும் அழகென்ன! பல்ஸர் பைக்கில் முன்பக்கமாகக் காலைத் தூக்கிப் போடுகிற அசத்தலென்ன! துடையோடு ஒட்டிய ஜீன்ஸின் பிதுங்கும் மேட்டில் காணும் துடிப்பென்ன? அவனது பாதரேகைக்குச் சமானமாவானா இந்த எண்ணெயுண்ட இருள் நிறை மேனியன்?

அவ்வளவுதானே வி்ஷயம்! கவலையை விடுங்கள். உங்கள் உள்ளத்தில் குமுறும் ஓசைகளெல்லாம் என் காதில் கேட்கின்றன. நீங்கள் நான் சொல்கிறபடி கேட்டால் நிம்மதியான வாழ்க்கையை அடைவீர்கள். நான் சொன்னதை கவனித்தீர்கள் அல்லவா, நிம்மதியான வாழ்க்கை! விருப்பப்பட்ட வாழ்க்கை அல்ல. அதாகப்பட்டது, நீங்கள் இதுவரை உங்களைப் பெற்றவர்களின் வீட்டில் செல்லமாக ஜாலியாகக் காலாட்டிக்கொண்டு டீவி பார்த்துக்கொண்டு வாழ்ந்துவிட்டீர்கள்! பஸ்ஸில் அல்லது டூவீலரில் அல்லது காரில் நீங்கள் இதுகாறும் அப்பன் காசில் அலைந்த போதெல்லாம் உங்கள் அலங்கார பூ்ஷித ரூப செளந்தர்யத்தை பாதசாரிகள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் கவனிக்கிறார்களா என்பதை அக்கறையோடு கவனித்து வந்தீர்கள். அதுவும் எப்படி? கண்ணிலே கடை வைத்திருக்கிற காந்த யுவதி அல்லவா நீங்கள், அப்படியாப்பட்ட கடைக் கண்ணிலே ஒரு வெட்டு. யாருக்கு? கொஞ்சமாவது சுமாராக ஒருவன் தென்படுகிறான் பாருங்கள். அவனைப் பார்த்து! இப்போது அவனுக்கு என்ன போயிற்று? தூக்கம் போயிற்று. அதுதானே உங்களுக்கு வேண்டியது? அதற்காகத்தானே உங்களின் உடம்பு பூரித்துப் பொங்கிப் பொங்கி வழிகிறது! இப்படி போகிறவன் வருகிறவன் எல்லாம் பார்த்து வியந்தோதாது வீட்டிலிருக்கும் அப்பனும் அம்மையும் பெருமூச்சு பெருமூச்சாக விட்டுத் தள்ளுவதற்காகவா இப்படி இயற்கை செழிக்கிறது உடம்பில்! இதெல்லாம் இளமை எனும் துள்ளும் வரம் தந்த கொடை ஸ்வாமி! கொஞ்சம் நஞ்சமாகவா அது வழங்குகிறது? வாரி வாரி அல்லவா வழங்கிக்கொண்டு வருகிறது! சமீபத்திய தனிப்பட்ட பரிசோதனைக்கப்புறம் ஒரு இன்ச் அதிகரித்திருக்கிறதே அதை மற்றவர்கள் கவனிக்க வேண்டாவோ? இல்லாமல் போனால் என்னதான் பலாபலன்?

இப்படித்தானே நீங்கள் பவனி போகையிலே, உள்ளங்கையில் காணப்படுகிற புதன் மேடு சுக்கிரன் மேடு மாதிரி ஒரு ஜீன்ஸ் மேடு கண்ணில் பட்டுத்தொலைக்க, உங்கள் கவனம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்ந்து பட்டது! என்ன ஒரு ஸ்டைல், என்னவொரு ஆட்டம், என்னவொரு நடை, என்னவொரு வேகம், என்னவொரு தீண்டல், என்னவொரு மோப்பம், என்னவொரு ஈரம் என்றெல்லாம் பைசா கிராமத்து கோபுரம் மாதிரி அல்லது காய்த்துத் தொங்கும் பப்பாளி மரம் மாதிரி ஒரு பக்கமாகச் சாய்ந்துவிட்டீர்கள்! இதெல்லாம் உன்னைமாதிரி வயதான கட்டைகளுக்கு எங்கே புரியப்போகிறது என்பதாக நீங்கள் இப்போது முணுமுணுத்தீர்கள்! இப்போது இரண்டு எச்சரிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறேன். ஒன்று: எழுத்தாளன் என்றாலே வயதான கட்டை என்பதாக நீங்கள் தப்பிதமாக நினைத்துக்கொண்டு உங்கள் இளமையைப் பாழ் பண்ணிக் கொள்வதில் எனக்கென்ன அக்கறை? ஆகவே விருப்பப்பட்டு மெயிலனுப்பும்; சகோதரிகளாக இருக்க விருப்பம் இல்லாத உங்களுக்கு அருனால்டு சுவாஸநீகரன் உடலில் என் தலையைப் பொருத்தி ஒரு புகைப்படத்தை அனுப்பி வைக்கிறேன். அதை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்கிற பூர்ண சுதந்திரத்தையும் அளிக்கிறேன். இரண்டு: இதைப் படிக்கும்போது (நீங்கள் பெண்ணாக இருந்தால் மட்டும்) நீங்கள் மனதிற்குள் நினைப்பதெல்லாம் எனக்கு உடனடியாக மெயில் மெயிலாக வந்து சேர்ந்துவிடும் என்பதையும் எச்சரிக்கிறேன். ஜாக்கிரதை!

ஆக, உங்கள் காதலாகப்பட்டது பஞ்சும் பாஸ்பரஸும்போல பற்றிக்கொண்டு எரிந்த எரியில் என்னென்னவெல்லாம் நிகழ்ந்தது என்பது உங்கள் ஏழைத் தகப்பனாருக்கு எப்படித் தெரியும்? பாவம் அந்த முட்டாள். உங்களையோ உங்களின் காதலையோ உங்கள் வீட்டுக்கு வெளியே நீங்கள் நடத்திவரும் life styleஐயோ சற்றும் உணராத அந்த மண்டன் உங்களுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டான். அந்தச் சூழலிலே, பிரேமானந்தாவை நாடிப்போன நாரீமணிகளாட்டம் என்னை நாடிவந்து advise கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

புரு்ஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே என்று புத்திமதிகள் சொல்லக்கூடியவனாக என்னைக் கற்பிதம் செய்துகொள்வதை முதலில் நிறுத்துங்கள். அதோடு நான் உங்கள் தகப்பனாரின் கைக்கூலியல்ல என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனக்கு பைசா பிரயோஜனமில்லாத ஒரு வேலையை நான் செய்துகொண்டிருக்கிறேன் என்பதாக உங்களுக்கு இதன்மூலம் உத்திரவாதமளிக்கிறேன். அதோடு இது ஒரு சிறுகதையல்ல என்பதாகவோ, எதையோ எழுத ஆரம்பித்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதாகவோ நீங்கள் நினைக்கக்கூடும். அதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. ஏனென்றால் இதை எழுதிக்கொண்டிருப்பவன் உங்களுக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருக்கிறான் என்பதாக நீங்கள் அபாண்டமாக நினைக்கிறீர்கள். இந்த சனியனை எதற்காகப் படித்துத் தொலைக்கிறேன் என்று வியக்கிறீர்கள். இதை விட்டு ஏன் வெளியேற முடியவில்லை என்று அஞ்சுகிறீர்கள். இருக்கட்டும் எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். இப்போதுதானே நான் எழுதுவதைப் படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். எல்லாம் போகப்போக சரியாகிவிடும். update செய்து தொலையேண்டா கண்ணா என்று எனக்கு செய்தியனுப்பத்தான் போகிறீர்கள் பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு எழுத்து என்று ஒன்று இருக்கிறது, அது உங்கள் தனிச்சொத்தான கடைக்கண் வீச்சைக் காட்டிலும் வலிமை மிகுந்தது. ஒருசில மேடுகளைக் காட்டிலும் மேலானது என்பதாகவெல்லாம்.

ஒரு அடர்ந்த வனம். அதன் நடுவிலே ஒரு தபோவனம். அதன் மத்தியிலே ஒரு போதிமரம். அதன் நடுவில் ஒரு தேஜஸ் பொருந்திய யுவன் உட்காந்திருக்கிறான். அவன் யார் என்பது உங்களுக்கு இன்னேரம் தெரிந்திருக்கும். நல்லகாலமாக அவன் நிஷ்டையில் இல்லை. அவனது உடல் நம்ம 'ரஜினிசாரின்' நேரடி குருவாகிய பாபாஜியைப்போல ஜொலிக்கிறது. (உருவ வருணனைக்கு an autobiogrophy of a yogi எனும் புத்தகத்தை refer செய்யவும். இல்லையானால் எஸ். ராமகிருஷ்ணனுக்கு மெயிலனுப்பவும்) அவனது கண்கள் சகல உன்னதங்களையும் அறிந்ததாகவும், நேற்று இன்று நாளைக்கு என்பதாக மூன்று காலங்களையும் தெளிதுணர்ந்ததாகவும் காணப்படுகிறது. அவனே சத்தியமும் வழியுமாக இருப்பவன், அவனே மெய்ப்பொருளானவன், அவனே பரமாத்மா என்பதாக அறியப்படுகிற கீதாமொழியன். அவன் யார் என்பதை இதுவரை அறிந்திராத உங்களுக்காக அதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அது வேறு யாருமல்ல, ஆமாம், அது நான்தான்.
அந்தப் பேரழகனைச் சுற்றிலும் மான்களும் குதிரைகளும் நின்றுகொண்டிருக்கின்றன. அவை அவனையே வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவற்றின் கண்களில் தெரிவது அப்பாவித்தனம் மட்டுமல்ல என்பதை அவன் அறிவான். அது ஏன் என்பதையும் நீங்கள் தெளிதுணர்ந்துதான் இருக்கிறீர்கள். ஆமாம் ஏனென்றால் அந்த மான்கள் வேறு யாருமல்ல, அவை நீங்கள்தான்!

அவன் அவற்றைப் பார்த்து சொல்கிறான், "மான்களையொத்த பெண்களே, குதிரைகளையொத்த அழகிகளே... உங்களுக்கு ஒரு எளிய கதையின் வாயிலாகப் பேருண்மையை இப்போது விளக்குவேன். அதற்கு முன்பாக உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். கதை முடிகிற வரைக்கும் நீங்கள் யாரும் அவசியமான காரணங்களில்லாது நிற்குமிடத்தை விட்டு அசையவும் கூடாது. எனக்கு முன்பாகக் குனிவதோ, அநாவசியமாக முந்தானையை நீவிவிட்டுக்கொள்வதோ அறவே கூடாது. உங்கள் பின்புறத்தை எனக்குக் காட்டுவது தடைசெய்யப்படுகிறது. சபரிமலையில் என்னைப் பார்க்க வருகிற ஆண்களேகூட எனக்குத் தங்களின் பின்பக்கத்தைக் காட்டுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். வீட்டு விலக்கான பெண்களின் உதிரக் கசிவு என்னை ஒன்றும் செய்வதில்லை. இருந்தாலும் அதிகப்போக்கு உடைய பெண்கள் நான் சொல்லும் கதையைக் காட்டிலும் அவர்களது வதையையே நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதால் மட்டுமே அவர்களை இப்போது இங்கேயிருந்து அகன்றுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய நிலையில் இருந்தும் விலக மனமில்லாத உங்களில் சிலருக்கு இப்போதே உபாதையை நிறுத்திவிடுவேன். மீதமுள்ள நாட்கள் அடுத்தடுத்த சுழற்சிகளில் ஒவ்வொரு நாளாக சேர்த்துவிடப்படும். சரி, இப்பொழுது கதையைக் கேளுங்கள்.

"பன்னெடுங்காலம் முன்பாக கலியுகம் என்பதாக ஒரு யுகம் இருந்தது. அப்போது உங்களைப் போலத்தான் ஒரு அழகி இருந்தாள். அவள் உங்களைப்போலவே ஒருவனைக் காதலித்து வந்தாள். அவன் வேறு யாருமல்ல, அவளது முறைச்செக்கன்தான். அவளது அம்மாவும் அவனது அப்பாவும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகள். அதேபோல் அவளது அப்பாவும் அவனது அம்மாவும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகள். பெண் கொடுத்துப் பெண் எடுத்த உறவு. அப்புறம் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? பெரும்பாலும் இம்மாதிரியான திருமணங்களில் வெகுசீக்கிரம் பிரச்சனை கிளம்பிவிடுகிறது. எந்தவொரு சிறு மனஸ்தாபமும் இரண்டாகப் பெருகி, பெரும் பிளவை ஏற்படுத்திவிடக் கூடியது. வெறும் சேவல் சண்டைக்கே தாலியறுக்கும் சம்பிரதாயமல்லவா உங்களுடையது. இதனால் இந்தப் பெண்ணும் இந்தப் பையனும் கல்யாணம் செய்துகொள்வது இயலாத வி்ஷயமாகிவிட்டது.

"இந்த அழகிக்கு அப்பனாகப்பட்டவர் மிகவும் ஆழ்ந்த ஞானம் உடையவராக இருந்தார். அவரது தத்துவப்படி, டாக்டருக்குப் படித்த பெண்ணாகில் டாக்டருக்குப் படித்த யுவாவைத்தான் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். வாத்தியச்சியாக இருப்பின் வாத்தியாராகத்தான் மாப்பிள்ளை வந்து வாய்க்கவேண்டும். இந்த அதீத ஞானப் பெருக்கில் கவிஞர்கள் கதாசிரியர்கள் எல்லாம் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று நினைத்துப் பாருங்கள். இரண்டு கவிஞர்கள் கல்யாணம் செய்துகொண்டால் வளர்வது சந்ததியாக இருக்காது என்பதை ஒருதினம் அவர் உறங்கும்போது அவரது மண்டைக்குள் புகுந்து தெரிவித்தேன். இத்தனைக்கும் அன்றைக்கு எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு நாமத்தைக்கூட சற்றும் அளவு மிகாமல் சார்த்திக்கொண்டு ஃபுல் யூனிஃபார்மில்தான் போனேன். அவர்தான் ஏதோ கனவு என்று வாளாவிருந்துவிட்டார். என்ன செய்வது. உனக்கென்ன அவ்வளவு அக்கறை? கடவுளாக லெக்ஷணமாக பாம்பணையில் பாரியாளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கிடக்கவேண்டியதுதானே என்று நீங்கள் கேட்பது கேட்கிறது நாரீமணிகளே! அதற்குக் காரணம் உண்டு என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி, நம்ம சகோதரன் ஒருத்தன் இருக்கிறான், கவிதைகள் எழுதுகிற ஆசாமி. அவன் அந்த மேற்படி ஞானாத்மாவின் இரண்டாவது மகளை ஒரு கந்தர்வன் போல மானசீகமாக நினைத்து மருகிக்கொண்டு வருகிறான். அவனுக்காவது ஆகுமே என்றுதான் நான் பேட்டை எடுத்துக்கொண்டு களத்தில் புகுந்தது. ஆனால் என்ன ஆயிற்று. பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போயிற்று. கிடக்கட்டும், சொல்ல வந்த கதைக்கு வருவோம்.

"நான் முன்பே சொல்ல ஆரம்பித்த அழகிக்கு அவளது தகப்பனாராகப்பட்டவர் பார்த்த மாப்பிள்ளை,தலைநிறைய எண்ணெய் தடவிக்கொண்டு ஒல்லியாக இருந்தான். கிராமத்துத் தனமான முகமும், வண்ணங்கள் ஒவ்வாத உடையும், காலத்துக்கு ஒவ்வாத பெல்பாட்டமும் அணிந்து அவன் காணப்பட்டான். இருந்தாலும் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததன் காரணம் அவனும் அவளைப்போலவே பி.எஸ்ஸி எனும் வகைப் படிப்பையே மேற்கொண்டிருந்தான் என்பதோடு ஒரு நியாயமான வேலையிலும் இருந்தான் என்பதுதான். அவள் அழுதுபார்த்தாள், அடம்பிடித்துப் பார்த்தாள், தான் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாலே தகப்பனார் பணிந்துவிடுவார் என்பதாக அவள் நினைத்திருந்ததெல்லாம் பலிதமாகியிருக்கவில்லை. அத்தை மகனின் ஆசைமுகமோ முன்னால் வந்து வந்து ஆடுகிறது. கடைசியில் அந்த கல்யாணத்தை அவளால் நிறுத்த முடியாமல் போய்விட்டது.

"இப்போது அவள் என்ன செய்திருப்பாள் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பதுபோல அவள், சந்திரபாபுவிடம் அவனது சகதர்மிணி முதலிரவில் முந்தானைக்கு பதிலாக மனதைத் திறந்து தன் காதலன் குறித்து அழுது விலகியதுபோல ஏதும் செய்திருந்தால் இந்தக் கதை பரபரப்பாக இருந்திருக்கலாம்தான். என்ன செய்வது? நம்ம கதாநாயகி (அது நீங்கள்தான் என்பதை மறந்துவிடலாகாது மிரளும் கண்கள் கொண்ட யுவதிகளே!) வேண்டாவிருப்பாய் அவனோடு உறவு கொண்டாள். அவளுக்கு வேறு ஆர்வமும் இருந்தது என்பதை நீங்களே அறிவீர்கள் என்பதால் நான் அதனை விளக்கவில்லை. உறவு கொண்டாளே தவிர பணிந்துவிடவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இந்தக் கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி இதுதான் என்பதால் இந்த மகாவாக்கியத்தை ஆயிரத்தொன்பது தடவை எழுதி உருப்போட்டுக்கொள்ளவும். உடலுறவு பழகும்வரைக்கும்தான் அவளுக்குத் தயக்கமெல்லாம். அப்புறம் எப்போது விலகவேண்டும் எப்போது குறுகவேண்டும் என்பதையெல்லாம் தெளிதுணர்ந்த நமது சுந்தரியானவள் சந்தோ்ஷமாகத்தான் இருக்கிறாளா என்பதை அறிந்துகொள்ளவேண்டிய அவா அவளது தாயாராகப்பட்டவளுக்கு ஏற்பட்டது. இதற்குள் குழந்தைகள் பிறந்து சில வரு்ஷங்களும் கடந்துபோயிருந்தன. அவளோ தன் மனத்தைத் திறந்தாளில்லை. அம்மாக்காரி ஒருசில வெளிப்படையான உண்மைகளை அவளுக்கு போதித்திருந்தாள் என்றபோதும் அவற்றிலெல்லாம் மகள் தேறியிருந்தாளா என்று பார்க்க ஒரு அவா மனத்தின் அடியாழத்தில் அலைந்துகொண்டிருந்தது. ஏறினாள் ரயில்.

"அம்மாவாகப்பட்டவள் பயணம் வருகிறாள் என்று தெரிந்ததும் மகள் ரயில் டிக்கெட் வாங்கி அனுப்பியிருந்தாள் என்பதே உண்மை. அதுவும் தனியாக வருகிறாள் என்கிற காரணம் சுட்டப்பட்டு, குளிரூட்டப்பட்ட முதல்வகுப்புப் பெட்டியாக அது இருந்தது. அம்மா குளிர் தாளாமல் கம்பளி வாங்கிப் போர்த்திக்கொண்டு ஒருவழியாக அடுத்த மாநிலத்தின் தலைநகரின் ஐங்்ஷனில் போய் இறங்கினாள். மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் பெட்டி வந்து நிற்குமிடத்திலேயே நிற்கக் கண்டு அவள் அளவிலா மகிழ்வை எய்திவிட்டாள். வெளியே அவர்களுக்குச் சொந்தமான நான்கு சக்கர சொகுசு ரதம் நின்றுகொண்டிருக்க, அதில் அவளை வாஞ்சையோடு மாப்பிள்ளை கதவைத்திறந்து ஏற்றிவிட்டான். மனசு குளிர்ந்தது அந்த வாகனமும் குளிரூட்டப்பட்டிருந்ததனால் மட்டுமல்ல. மகள் வசிக்கும் அப்பார்ட்மென்ட் மூன்று படுக்கையறைகள் கொண்டதாக உந்துகருவி பொருத்தப்பட்ட உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்தது. அதுவும் குளிராக இருந்தது.
"மாமி மாமி என்று வியந்தோதிக்கொண்டு மாப்பிள்ளை தன் வேலையை நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்தத் தலைநகரம் மற்றும் அருகாமை அற்புதங்கள் எல்லாவற்றையும் குடும்பத்தோடு சுற்றிக்காட்டி மகிழ்ந்தபோது அம்மாக்காரிக்கு பாதி தெளிந்துவிட்டிருந்தது. இருந்தாலும் நாலாம்நாள் கழிந்து மாப்பிள்ளையும் பேரக்குழந்தைகளும் புறப்பட்டுப் போனபின்பாக களைப்பாக கனத்த பெரிய சோபாவில் சாய்ந்த மகளுக்கு அருகாக உட்கார்ந்துகொண்டு சந்தோ்ஷமா இருக்கியா மகளே என்று ஆரம்பித்தபோது மகள் கோபத்தோடு சீறினாள். அம்மா மிகுந்த சந்தோ்ஷத்தை அடைந்தாள்.

"மானே, தேனே, பெண்மானே! இவ்வளவுதான் கதை. ஆனால் கதையின் நீதியை உங்களால் சரியாக அறிந்துகொள்ள முடிந்ததா? முடியவில்லையே. அதற்காக இன்னும் கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. அதையும் கேட்டுவிட்டு நீங்கள் யாரைக் கல்யாணம் செய்துகொள்வது, பல்சர் யுவாவையா, எண்ணெயுண்ட இருள்நிறை மேனியனையா என்பதை முடிவெடுக்கலாம்.

"ஒருகாலத்தில் இளைஞனைக் காதலிப்பதும் கிழவனை மணப்பதுமாக ஒரு அவலம் உங்களையொத்த பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருந்து வந்தது. அதை விளக்க இன்னொரு கதை சொல்ல முடியும். இருந்தாலும் ஓவர்டோசாகிவிடும் என்பதால் இந்தக் கதையை மட்டும் விளக்குவதோடு முடித்துக்கொள்கிறேன். எனக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு பல வேலைகளும் உண்டு. இப்போதே நீர்நிலையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

"அம்மாக்காரியிடம் மகள் சீறினாள் என்று இரண்டு பாராக்களுக்கு முன்னாலுள்ள பாரா முடிகிறபோது வருகிறதே, அந்த சீற்றம் எந்தவிதமாக இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம். மகள் அம்மாவிடம் சொன்னாள். 'சீ போ உனக்கென்ன தெரியும்?' அவ்வளவுதான், அம்மாக்காரிக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. அம்மாவுக்கு தெரிந்துவிட்டது என்பதை மகள் அறிந்திருந்ததால்தான் அவள் அவ்வாறு சீறும்படியாக ஆகிவிட்டது. என்ன செய்வது? அவளோ தன் கணவனை வேண்டாவிருப்பாகக் கல்யாணம் செய்துகொண்டாள். அதன் காரணமாகவே அவளால் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிவைக்க முடிந்தது. தலையில் எண்ணெய் வைக்காமல் கேசத்தைத் திருத்தித் தன் இஷ்டப்படி அமைத்துக்கொள்ள வைக்க முடிந்தது. ஜீன்ஸும் ்ஷூவும் அணிந்துகொள்ள வைக்க முடிந்தது. நாக்கை மடித்து ஆங்கிலம் பேசக் கற்பிக்க முடிந்தது. பார்ட்டிகளில் அளவோடு குடிக்கப் பழக்க முடிந்தது. காரும் அப்பார்ட்மெண்ட்டும் வாங்கவைக்க முடிந்தது. பிள்ளைகளைப் பெரிய பெரிய தொகை கொடுத்து காண்வெண்ட்களில் போட முடிந்தது. பட்டுப் புடவைகளும் பொன்னாபரணங்களுமாகக் குவிக்க முடிந்தது. ஒன்றுக்கு இரண்டு வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு அவர்களை மேய்த்துக்கொண்டிருப்பதில் களைத்து சோபாவில் விழுந்து டீவி பார்த்துக்கொண்டிருக்கவும் அலுத்தால் ்ஷாப்பிங் போகவும் கண்ணாடி பெயிண்டிங் கற்றுக்கொள்ளவும் சிறப்பான பெயிண்டிங்குகளைப் பரம்பரைப் பணக்காரியைப்போல ஏலம்பேசி வாங்கி முகப்பறையில் மாட்டிவைக்கவும் முடிந்தது. இன்னும் எத்தனை எத்தனையோ முடிந்திருக்கையில் அவள் காதலித்த வேலையில்லாத அந்த அத்தைமகன் ஏதோ டிரான்ஃபோர்ட் கம்பெனியில் பகுதிநேர டிரைவராக வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதை அறிய நேரும்போது அப்படியும் மனிதர்கள் உலகில் உண்டுமோ என்று அசிங்க்கத்தைக் கண்டு புலன்களை மூடிக்கொள்ளும் மேல்தட்டு உடம்பாகத் தன்னுடம்பைத் திரித்துக்கொள்ள இப்போது முடிந்துவிட்டது.
"வி்ஷயம் இப்படியிருக்க, இப்படியெல்லாம் நிகழும் என்று முன்கூறிய தன் தாயானவள் எப்படி இருக்கே என்று கேட்க நேரும்போது அவளைக் கொன்றுவிட்டால் என்ன என்று மகளுக்குத் தோன்றியதில் வியப்பென்ன இருக்கிறது?"
கதை முடிந்துவிட்டது. இந்தக் கதையின் சிறப்பு என்ன என்பதையும் நானே சொல்லித் தொலைக்கிறேன் அழகான அகண்ட கண்களையுடைய பெண் மான்களே, நீங்கள் இப்போது இந்தக் கதையிலிருந்து உங்களுக்கு வேண்டிய பதிலைக் கண்டடைந்துவிட்டீர்கள். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் உங்களில் ஒருமான் தேர்ந்தெடுக்கப்போவது பல்சரை. இன்னொரு மான் தேர்ந்தெடுக்கப்போவது இருள்நிறை மேனியனை.

"ஆதிமூலமே!"
"வருகிறேன் கஜேந்திரா! சற்றுப்பொறு!"
"ஆதிமூலமே!!"
"அட வரேன்டா!"

No comments: