1. இசக்கிப்பிடி
இம்மாதத் துவக்கத்தில் குற்றாலம் போயிருந்தேன். போயிருந்தேன் என்பது ஏமாற்று வேலை. போயிருந்தோம் என்பதே உண்மை. குற்றாலத்திற்கு பால்யத்தில் போன ஞாபகம் உண்டு. அப்புறம் நம் திரிகூட ராசப்பக் கவிராயர் மற்றும் கோவை குற்றாலம் என்று அதற்கு கால்தூசு பெறாத (கோயமுத்தூரை அடுத்து இருக்கும்) ஒரு மலைப்பாறை வழிசல் ஆகியவை குற்றாலத்தை நினைவுபடுத்திக்கொண்டிருந்தன என்பது மட்டுமே நிகழ்வாயிருந்தது.
நாங்கள் குற்றாலம் போனது கிட்டத்தட்ட ஒரு இலக்கியச் சந்தப்பிற்கு என்றால் மிகையாகாது. ஆனால் கவிஞர் கலாப்ரியா நடத்தி வந்த கவிதைப் பட்டறை என்றெல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு நான்கு நாட்கள். நாலாவது நாள் ரசனை எனும் மாத இதழின் வெளியீடும் உண்டு. இதனால் ரசனை இதழின் ஆசிரியர் மரபின்மைந்தன் மற்றும் இதழின் ஆலோசகர் ரவீந்திரன் ஆகியோரின் ஏற்பாடு இந்தப் பயணம். இவர்கள் இருவரோடும் நானும் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் சூத்ரதாரி எனும் எம். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ரவீந்திரனின் சான்ட்ரோ காரில் கோவையிலிருந்து புறப்பட்டோம். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மைவாடிப் பிரிவு, மடத்துக்குளம், பழனி, மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி.
தென்காசியில் ரசிகமணி டிகேசியின் இல்லத்தில் அன்பான வரவேற்பைத் தொடர்ந்து, குற்றாலத்தை அடைந்தோம். (டிகேசி இல்லத்தைப் பற்றியோ அவரது வாரிசுகளின் அன்பு நிறைந்த மனம் தென்காசியில் கொட்டும் அருவி என்பதைப் பற்றியோ நான் ஏதும் எழுதப்போவதில்லை. அந்த வி்ஷயங்களை கோபால் ரசனை இதழுக்காக எழுதியிருப்பதால் நான் அவற்றை இங்கே தவிர்த்துவிடலாம் என்று இருக்கிறேன்.) குற்றாலத்தில் இருளில் மறைந்தும் மறையாமலும் தெரிந்த மலையின் வனப்பின் பின்னால் வேறு சில எண்ணங்களும் எழுந்துகொண்டிருந்தன. முக்கியமாக செண்பகாடவி அருவி. கவிஞர் விக்ரமாதித்யனைத் தெரிந்தவர்கள் இந்த அருவியையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலையும் அது தூண்டிக்கொண்டேயிருக்கும். இந்தக் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி விக்ரமாதித்யனைக் குறித்ததாக இருக்கும் என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும்.
இருந்தாலும் இசக்கி எனும் காவல் தெய்வத்தைக் குறித்து ஒரு சில கற்பிதங்களை ஏற்கனவே நான் எட்டியிருந்தேன். அவை முழுக்க முழுக்க கற்பிதங்கள் மட்டுமே என்பதாகவே நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் இசக்கி என்பது ஒரு தெய்வம். தெய்வம் என்றால் நம்ம வெங்கிடாசலபதி பரமசிவன் மாதிரியெல்லாம் தொன்றுதொட்டு இருந்து வருகிற கற்பிதங்கள் அல்ல. வழக்கம்போல இது ஒரு வட்டார தெய்வமாக இருக்கையில் உங்களின் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் இது முக்கியத்துவம் பெறுவதை நீங்கள் தவிர்த்துவிட முடியாது. ஏனென்றால் பெருமாளும் ஈஸ்வரனும் உயிரும் சதையுமாக வாழ்ந்தார்களா? நம் இசக்கி வாழ்ந்தாளே.
இசக்கியைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்த கதையை வளர்த்துச் சொல்ல முடியாது. அதற்கு நாவல்தான் எழுதவேண்டும் இந்த blog எல்லாம் அதற்கு சரிப்பட்டு வராது. ஆகவே அதை ஓரிரு வாக்கியங்களில் அடக்கிவிட முயல்கிறேன். இசக்கி இந்தத் திரிகூடமலையில் வாழ்ந்த ஒரு மலைஜாதிப் பெண். அவள் சில அபூர்வ ஆற்றல்கள் உடையவளாக இருந்தாள். அவளது கூந்தலின் அழகுக்கு இந்தத் திரிகூட மலையின் அருவிகளில் ஒன்றும் இணையாகாது. அவளைப் பார்வதியின் அம்சம் என்பதாக மலைஜாதியினர் அஞ்சினார்கள். அவளைத் தீண்டவும் ஆண்கள் நடுங்கினார்கள். ஆனால் அவளை வீழ்த்திவிட்டதாய்க் கனவுகண்டு சொப்பனங்களில் வழிந்துகொண்டிருப்பதையும் அவர்களால் தவிர்க்க இயலாது இருந்து வந்தது. அவள் பிறந்தபோது அவர்கள் வழிபட்டு வந்த குவிந்த நடுகல்லின் மீது ரத்தம் பிசுபிசுத்திருந்தது. அதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு அச்சம் பரவியிருந்தபோதும் அது அவளது ருதுவின்போது மெய்ப்பட்டிருந்தது. அந்த வனத்தின் வம்சாவளி, பெண்களைக் கொண்டு கருதப்பட்டு வந்திருந்ததனால் ஒரு பெண் ருதுவாகும்போது புதிதாக ஒரு குடும்பம் வனத்தோடு இணைவதாகக் கருதப்படும் சடங்கொன்று நடுகல்லின் மீது நிகழ்த்தப்படவேண்டும். அந்தச் சடங்கைக் குறித்து எழுத இரண்டு அத்தியாயங்கள்கூட போதாது என்பதால் அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன். அந்தச் சடங்கின் முடிவில் அதுவரை வரண்டு கிடக்கும் நடுகல்லின்மீது அன்றைக்குத்தான் இறக்கப்பட்ட தேனடை ஒன்றைப் பிழிந்து அதைநோக்கி ஒரு எறும்புச்சாரி வந்து சேரும்வரைக்கும் உபவாசம் இருக்கவேண்டும்.
அன்றைக்கும் அவர்கள் ஒரு தேனடையோடு நடுகல்லை நெருங்கியபோது அதிர்ச்சியடைந்து பின்வாங்கினார்கள். நடுகல்லிலிருந்து வெண்ணிறக் குழம்பொன்று பொங்கி வழிந்திருந்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து இசக்கி கருவுற்றாள். தனிக்குடும்பமாகக் கருதப்பட்டதும் ஒரு பெண் கருவுறத் தகுதியடைந்துவிடுகிறாள் என்பதுதான் அவர்களது வழக்கமாக இருந்தபோதும் இரண்டு காரணங்களுக்காக அவர்கள் இசக்கியையைக் கண்டு அஞ்சினார்கள். இசக்கியின் வாழ்வோடு நடுகல் கொண்டிருந்த உறவு ஒரு காரணமாக இருந்தபோது மற்றொரு காரணம், இசக்கியோ அந்தக் காட்டைச் சார்ந்த ஆண்களில் யாருமோ அந்தக் கருவின் இரகசியத்தை அறிந்திருக்கவில்லை என்பதுதான்.
அவர்கள் அமாவாசைக்கு நான்காம் நாள் பிறை தென்பட்டதும் அவளை அந்த நடுகல்லோடு சேர்த்துக் கட்டினார்கள். கல்லையும் அவளையும் பெயர்த்தெடுத்துக்கொண்டுபோய் பொங்குமாக்கடலில் வீசியெறிந்தார்கள். பொங்குமாக்கடல் என்பது இப்போது நீங்கள் குற்றாலம் போனால் குளிக்க நேர்கிற மெயின் அருவிக்கு மேலே தேங்கும் குளம் போன்ற நீர்ப்பகுதி. அந்த இடம் அவர்களின் எல்லையாக இருந்ததனால் அதற்குமேல் அவர்கள் மலையிறங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து மூன்றாம் நாள் முதல் அந்த வனப்பகுதியின் ஆண்மக்கள் அனைவரும் தங்களது பிறப்புறுப்பு உள்வாங்கிக் கொள்வதை உணர்ந்தார்கள். அடுத்தடுத்த நாட்களில் பெண்களும் அவர்களின் அந்தக் குறைபாட்டை வெளிப்டையாகப் பேசத் தலைப்பட்டார்கள். அந்த வம்சம் முற்றிலும் அழிந்து பட்டது இப்படியாகத்தான்.
அதைத் தொடர்ந்து வெகுகாலம் வரைக்கும் அந்த வழியாகப் பயணம் போக நேர்ந்த பலரும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அடைந்தார்கள். திரும்பத் திரும்ப யாரோ அவர்களின் தோளைப் பற்றி இழுப்பதைப்போல அவர்கள் உணர்ந்தார்கள். அந்த இடங்களிலெல்லாம் தேன்கூடுகள் நிறைந்திருந்தன. அந்தத் தேன்கூடுகளை சீந்துவார் யாருமில்லாதிருந்தது அந்த அமானுடமான தோளைப்பற்றும் அனுபவத்தால்தான். இதனால் அருவியின் வனப்பை அறிந்த அருகாமை கிராமத்தினர், அந்த இடத்தையும் அந்தத் தேனடைகளையும் ஏதோ ஒரு சக்தி காத்து வருவதை அறிந்து அதைச் சாந்தி செய்யும் பொருட்டு வருடாவருடம் ஆடு கோழி ஆகியவற்றை அந்த அருவிக்கு முன்பாகப் படையலிடுவதை வழக்கமாகக் கொண்டார்கள். அதன்பிறகு அந்த தோளைப்பற்றும் அனுபவம் குறையவாரம்பித்தது. இதனால் தங்கள் படையலுக்கு இயைந்து வந்ததனால் இயக்கி என்று அந்த சக்திக்கு அவர்கள் பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தார்கள். காலமருவலில் அது இசக்கி என்று ஆயிற்று. உண்மையில் இசக்கியின் அழிந்து பட்ட வம்சாவளியினர் பெயர் வைப்பது குறித்த பிரக்ஞையெல்லாம் இல்லதவர்கள் என்பதால் அவளுக்கு அவர்கள் எந்தப் பெயரும் வைத்திருக்கவில்லை. அதோடு அந்த வம்சத்தில் பெயர் வைக்கப்பட்ட முதல் மனு்ஷியும் இந்தக் காரணத்தாலேயே இசக்கிதான். இதனாலேயே இப்போதும் பல மலைஜாதியினரும் இசக்கி என்பது ஆணா பெண்ணா என்பதையே அறியாமல் இருபாலாருக்கும் இந்தப் பெயரை வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
குற்றாலத்தில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பங்களா ஏதோ சிறு communication gapல் ஆளில்லாமல் பூட்டியிருந்ததால் ஓரிரவு மிகப்பழைய தோற்றத்தை உடைய ஒரு விடுதியில் தங்கினோம். இருளில் ஒரு மர்ம பங்களாவைப்போலத் தோற்றமளித்த அந்த லாட்ஜின் மாடிப்படிகளில் ரசம்போன பெரிய கண்ணாடிகள் வேறு புராதனச் சின்னங்கள் போலக் காணப்பட்டன. குரங்குகள் அந்த நேரத்திலும் எங்கள் கையிலிருந்த பெட்டிகளையும் ஏர்பேகுகளையும் ஏதோ அவர்களுக்குச் சொந்தம்போலப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. முதல் பார்வையிலேயே எனக்கு அந்தச் சூழல் பிடித்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
ஆனால் அறைகள் அத்தனை மோசமில்லை என்பதோடு டைல்ஸ் எல்லாம் ஒட்டி நவீனப்படுத்தப்பட்டிருந்தது ஆறுதலாயிருந்தது. அப்புறம் ஆளுக்கொரு ஜட்டியையும் துண்டையும் எடுத்துக்கொண்டு தண்ணீர் வழிந்தால் குளிக்கலாம் என்று மெயின் அருவிக்குப் போனோம். பொங்குமாக்கடலிலிருந்து பெயருக்கு ஏதோ வழிந்துகொண்டிருந்தது. அதற்கும் நாலுபேர் தடியன் தடியன்களாக நின்றுகொண்டு போட்டி. ஏதோ சுமாராக விழுகிற இடத்தில் அவர்கள் பட்டா போட்டு நின்றுகொண்டிருந்ததால் கையாலாகாத நாங்கள், அவர்களின் தோள்களையெல்லாம் அந்த இசக்கி பிடித்து இழுக்க மாட்டாளா என்று வியந்தவர்களாகப் பெயருக்கு நனைந்துவிட்டு, வழக்கமாக நனையும் காரியத்துக்காக அறைக்கு வந்துவிட்டோம். நானும் நாஞ்சில்நாடனும் மட்டுமே குடிப்பவர்கள் என்பதால் மெக்டவல் செலிபரே்ஷன் ரம்மை உடைத்து செ்ஷனை ஆரம்பித்தோம். எனக்கு முதல் வியப்பாக இருந்தது, ஐந்துபேர் இருக்கக்கூடிய இடத்தில் மெஜாரிட்டி பேர்கள் குடிகாரர்களாக இல்லாமல் இருக்க நேர்வது. இவ்வாறு நேர்வது என் வாழ்விலேயே இதுதான் முதல் தடவை. அதுவும் தற்போதைய டாஸ்மாக் யுகத்தில் தமிழ்நாட்டில் குடிக்காத ஆண்கள் என்பதாக ஒருசில தெய்வீகப் பிறவிகள்கூட வாழ்ந்து வருவதை வியக்காமல் இருக்கவே முடியாது.
அன்றைக்கு இரவு பேச்சு முழுக்க முழுக்க சாம்பலைப் பற்றி இருந்தது. சாம்பல் என்பது நான் நிகழ்த்திக்கொண்டு வரும், தற்போது பதிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிற்றிதழ். அது முழுக்க முழுக்க தீவிர இலக்கியத்துக்கானது. சாம்பலின் அவசியம், அதன் விநியோக முறையில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள், இதுவரை ஏற்பட்ட நஷ்டம், விளம்பரங்கள் அல்லது ஆயுள் சந்தாக்களை எப்படி பெருக்கலாம் என்பதாகவெல்லாம் எல்லோரும் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு நேர்ந்த இரண்டாவது வியப்பு. ஏனென்றால் தமிழில் சிற்றிதழ் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் எல்லோரும் முதலில் கேட்பது எதற்கு இந்த வீண் வேலை என்பதாகத்தான். அப்புறம் தொடர்ந்து கொண்டுவந்து கொண்டிருந்தால் அவர்கள் கேட்பார்கள், ''இதுவரைக்கும் எவ்வளவு சாப்பிட்டது?''. அதையும் மீறி நடத்திவிட முடியும்போது முன்னதாக உங்களிடம் 'சிற்றிதழ்களுக்கு சந்தா கட்டுவதில்லை என்பதே எனது கொள்கை' என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்த நண்பர்கள் மெதுவாக கேட்பார்கள், ''சந்தா எவ்வளவு?''. அப்புறம் பத்திரிகையை நடத்த முடியாமல் நிறுத்த வேண்டிவரும். அல்லது, பிரஸ்ஸுக்குக் கொடுக்க காசில்லாமல் அடுத்த இதழைத் தாமதிக்க வேண்டி வரும். அப்போது அவர்கள் வந்து கோபித்துக் கொள்வார்கள், 'ஏதாவது செய்து கொண்டுவாருங்கள், அது ஒரு முக்கியமான பத்திரிகை' என்று. உருட்டிப் பிரட்டி உள்ளதையெல்லாம் கொட்டி, கடன்பட்டு உடன்பட்டு நாம் கொண்டுவர முயன்றும் முடியாமல் போகும்போது அவர்கள் சொல்லுவார்கள், ''இதைத்தான் நான் ஆரம்பத்துலேயே சொன்னேன்''. ஆக, இதுதான் ஒரு சிற்றிதழின் பரிணாம சுழற்சி.
ஆகையினால், நண்பர்கள் மிகுந்த அக்கறையோடு சாம்பலின் எதிர்காலம் குறித்து பேச ஆரம்பித்தபோது அது கிட்டத்தட்ட கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது என்பதாக எனக்குத் தோன்றிவிட்டது. தொண்டைக்குழியிலிருந்து ஹக் ஹக் என்று ஒரு வினோதமான ஒலி கேட்கிறதா உங்களுக்கு? எனக்கு கேட்கிறது. இருந்தாலும் தக்க மாற்றங்களோடு சாம்பலை தொடர்ந்து கொண்டு வருவதாக எனக்கு ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கலாம்...
இரவில் தேவையான அளவு குடித்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எனக்குள் ஒரு அலாரம் அடித்து எழுப்பிவிட்டுவிடும். அதுவும் ரம் என்றால் hang over பிரச்சனைகள்கூட ஏதுமில்லாமல் பளிச்சென்று விழித்துக்கொண்டுவிடமுடியும் என்பதால் வழக்கம்போல நான்தான் முதலில் எழுந்து சற்று காற்று பிரிவதற்காக வராண்டாவில் உலாத்திக்கொண்டிருந்தேன். குரங்குகள் சான்ட்ரோ காரின் முன் கண்ணாடியின்மீது உட்கார்ந்து சல்லாபித்துக் கொண்டிருந்தன.
அதை கவனித்தும் கவனியாமல் நான் என் பார்வையைத் திருப்பியபோது அந்த வராண்டாவின் ஆர்ச் ஆர்ச்சான முகப்பு வளையங்களில் ஒன்றில் அதை கவனித்தேன். அது ஒரு மிகப்பெரிய தேன்கூடு. தேன் நிரம்பிய அதன் உடம்பு உயிருள்ள ஒன்றைப்போல மெதுவாக அசைந்துகொண்டிருந்தது. அடர்ந்த ரோமம்போல அதன் மீது தேனீக்கள் நிரம்பியிருந்தன. ஒரு கிர்ணி கோழியைப் போன்ற அந்த தேன்கூடு என்னை அச்சத்திலாழ்த்தியது உண்மை. அதைத் தொடர்ந்து நான் அதற்கு எதிர்த் திசையில் நடந்து, சாலையைப் பார்க்கும் பால்கனியின் முகப்பினருகில் சென்றேன். லாட்ஜின் எதிரே இருந்த கட்டிடங்களுக்குப் பின்னணியாக உயந்து எழுந்திருந்தது திரிகூட மலை. அதை வியந்து கொண்டிருந்த போது திடீரென்று என் இடது தோளில் ஏதோ கவ்விப் பிடித்த மாதிரி இருந்தது. ஒரு அச்சம் படரத் திரும்பிப் பார்த்தபோது அருகில் ஒரு கட்டை குட்டையான உருவம் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.
திடீரென்று அது என்னோடு பேசியதை நான் உணர்ந்தேன். அது சொன்னது இதுதான், ''நான்தான் இசக்கி!''
No comments:
Post a Comment