December 27, 2005

ஆஸ்பத்திரி

எனது அடுத்த நாவலை எழுதி முடித்துவிட்டேன். வரிசைக்கிரமப்படி நான் எழுத நினைத்திருந்த வேறொரு நாவலை முந்திக்கொண்ட இந்த நாவலின் பெயர் 'ஆஸ்பத்திரி'. அந்த வகையில் இதை ஒரு Quicky என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரே வருடத்தில் இரண்டு நாவல்கள் எழுதி முடிப்பதற்கு நானொன்றும் நாவல் எழுதும் இயந்திரம் அல்ல என்பதனால் இப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. பரவாயில்லை. இந்த நாவல் அடுத்த வருடம்தான் வெளிவரும் என்பதாகத் தெரிய வருவதால் பாரெங்கும் பரந்து விரிந்து காணப்படும் எனது ஏராளமான ரசிகர்கள் இதற்காக டிக்கெட் போட்டுக்கொண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வந்து தேட வேண்டாம்.

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அதற்காக ஒரு முன்னுரை எழுதிக்கொண்டிருக்கிறார். (நாஞ்சில்நாடன் இந்த வருடம் தன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்கிற கிசுகிசு ஒன்றையும் இந்த இடத்தில் நான் வெளியிட்டு விடுகிறேன். புவனமெங்கும் நீங்கள் பரப்பலாம்.) நாஞ்சில் முன்னுரை தந்ததும் நாவல் அச்சுக்குப் போகும். யார் வெளியிடப்போகிறார்கள் என்பது இன்னும் தீர்மானமாகாத நிலையில் இவ்வளவு சொல்வதே அதிகம்.

இருந்தாலும் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார். அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார். 'அப்பா'வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.

No comments: