அடி உதவுகிற மாதிரி அக்கா தங்கைகூட உதவுவதில்லை என்று பெண்பால் பழமொழி ஒன்று உண்டு. அது யாருக்கு செல்லுபடியாகிறதோ இல்லையோ, சினிமாவுக்கு மட்டும் சரியாகப் பொருந்தி வருகிறது.
ப்ரூஸ்லீ நடித்து வெளியான என்டர் தி டிராகன், ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி ஆகிய ஆங்கிலப் படங்களைத் தமிழ்ப்படங்கள் என்பதாகவே கொள்ளலாம். எம்ஜியார், சிவாஜி படங்களைவிட பிரமாதமாக அவை தமிழ்நாட்டில் ஓடின. அவற்றைப் பார்க்காத இளைஞர்களே அந்த சமயத்தில் இருந்திருக்க முடியாது.
வகைதொகையில்லாமல் அடிப்பதற்கு பதிலாக முறையாக அடிப்பதற்கு, 'வெறும் கரத்தால்' எனும் பொருள்படும் கராத்தே என்கிற கலை மூலமாக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் அது. அப்படி ஒரே அடியில் எதிரியை சாய்த்துவிட முடியுமா என்று கேட்டால் ப்ரூஸ்லீக்கு முந்தைய காலத்தில் முடியாது என்றுதான் யாரும் பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் கூலி எனும் படத்தின் சண்டைக்காட்சிக்காக அமிதாப்பச்சனின் வயிற்றில் புனித் இஸார் குத்திய ஒரு குத்து அமிதாப்பை சாவின் விளிம்பிற்கே கொண்டுபோய் திரும்ப கொண்டு வந்து சேர்த்ததை யாவரும் பின்னாளில் வியக்கவே செய்தார்கள். அந்த அடியை வசதியில்லாத வேறு ஒருவர் வாங்கியிருந்தால் மகாபாரதத்திற்கு வேறு துரியோதனனைத்தான் தேடியிருக்கவேண்டும்.
Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=606
No comments:
Post a Comment