July 16, 2009

அழகர் உலகம்


அழகர் உலகம் என்பது பல வருடங்களுக்கு முன்னால் நான் வானொலிக்காக எழுதிய நாடகத்தின் தலைப்பு. அழகான நடிகன் ஒருவனை அவலட்சணமான நிருபன் ஒருவன் பேட்டியெடுக்கிறான். பேட்டியின் முடிவில் அழகற்றவன் அழகனாகவும் அழகானவன் அவலட்சணமாகவும் தோற்றமளிக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு பாத்திரங்கள் நாடகத்தில் கிடையாது. கதாபாத்திரங்களுக்கு சொந்தமாக வசனம் பேசுகிற சுதந்திரம் அந்த நாடகத்தில் இருந்தது. அதாவது தாங்கள் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம் என்றுகூட கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வார்கள். என்னைவிட உனக்குத்தான் நல்ல வசனம் எழுதியிருக்கிறான் சுதேசமித்திரன் என்றுகூட ஒரு வசனம் வரும். இப்படியெல்லாம் எழுதினால் ஒலிபரப்புவதற்கு நம் வானொலி என்ன அகில உலக வானொலியா? இதனால் அந்த நாடகம் வானொலியில் வெளிவரவே இல்லை. இருந்தாலும் அந்த நாடகம் சொல்ல வந்த விஷயத்தை ஒரு கட்டுரையின் வாயிலாக இங்கே சொல்லிவிட முடியும். தலைப்பாவது வீணாகாது பாருங்கள்!


சமீபத்தில் என் எதிர்வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. சாதாரணமாக ஓரளவு அழகான பெண்தான் அவள். ஆனால் கல்யாணத்திற்காக மேக்கப் என்பதாகவோர் அயோக்கியத்தனம் செய்யப்பட்டு, மணப்பந்தலில் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. இதில் மூன்று காமிராக்களை வைத்து க்ளோஸப் வேறு யெல்ஸீடி திரைகளில் விரிக்கப்பட்டது. இந்தக் கொடுமைகள் இப்போது பொதுவாக எல்லா கல்யாணங்களிலும் நடந்தேறுகின்றன. இதற்கு ஆதார காரணம் என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

உண்மையில் மேக்கப் என்கிற ஒப்பனை ஒரு சில முகங்களை அழகாக மாற்றிவிடுகிறது. ஒருசில முகங்களை விகாரமாக மாற்றிவிடுகிறது என்பதே உண்மை. மேக்கப் டெஸ்ட் என்பது ஒருவர் ஃபோட்டோஜினிக் முகம் கொண்டவரா இல்லையா என்பதைத்தான் தீர்மானிக்கிறதே தவிர, மேக்கப் செய்தால் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில்லை. ஃபோட்டோஜினிக் என்பது காமிரா லென்சுக்கு ஒரு முகத்தைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிய சமாச்சாரம்.

உதாரணமாக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நல்ல போட்டோஜினிக் முகம் கொண்டவர். ஆனால் அவரின் பேத்தியான நடிகை வைஷ்ணவி போட்டோஜினிக் முகம் இல்லாதவர். வைஷ்ணவியோடு நான் பணியாற்றியிருக்கிறேன். முதல் நாள், டாப்ஸும் இறுக்கமான முக்கால் பேன்ட்டும் அணிந்து மேக்கப் கீக்கப் ஏதும் இல்லாமல் அவர் வந்து நின்றபோது, யார் இந்த சூப்பர் பிகர் என்றுதான் முதலில் நினைத்தேன். உண்மையிலேயே மிக அழகான பெண் அவர். ஆனால் லென்ஸுக்குத்தான் ஏனோ அவர் முகத்தைப் பிடிப்பதேயில்லை. திரைப்படத்தில் பார்க்கும்போது முகம் விரிந்து ஒருமாதிரியாகத் தெரியும். பெரும்பாலும் அழுகைக் கதாபாத்திரங்களையே வேறு அவர் தாங்கி வந்த வகையிலும் அவர் உண்மையிலேயே நல்ல அழகி என்பது பலருக்கும் தெரியாமலே போய்விட்டது.

சார்லி சாப்ளின் என்கிற நடிகனின் முகம் அவனது சொந்த முகத்திலிருந்து முற்றிலும் வேறானது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஹிட்லர் மீசையும் கண்களைச் சுற்றிலும் அப்பிய மையும் உயர்த்திய புருவமுமே அந்த வேறொரு முகத்தை அவருக்கு வழங்கின. பழைய தமிழ்ப்படங்களைப் பாருங்கள், எம்ஜியார் முதற்கொண்டு விதிவிலக்கேயில்லாமல் நடிகர்கள் கண்ணுக்கு மையிட்டிருப்பார்கள். மையிட்ட கண் ஹைலைட் ஆகிறது. ஓவியத்தில் தேவைப்படுமிடங்களில் வைக்கப்படும் கறுப்புதான் ஓவியத்தின் டெப்த்தைத் தீர்மானிக்கிறது. இதே வேலையைத்தான் முகத்தில் மை செய்கிறது.
இதனால்தான் மேக்கப் இல்லாத நடிகையின் முகம் விகாரமானது என்பதுபோன்ற விகடங்கள் எழுந்து தொலைத்திருக்கின்றன. மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட முகம் அந்த அலங்காரங்களைக் கலைத்துவிட்டுப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது!

சரி, அழகு என்பது என்ன என்பதற்கு வருவோம். வசீகரமானது அழகு. சினிமாவில் இவ்விதமான வசீகரம் எல்லா தரப்பிலும் தேவைப்படுவதை நம்மால் தவிர்க்க முடிவதேயில்லை. சத்யஜித்ரேகூட தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகனோ நடிகையோ கண்டிப்பாக அழகாக இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.

அழகு என்கிற வசீகரம் ஆளாளுக்கு மாறுகிற காரணத்தாலேயே பலவிதமான ஆளுமைகள் சினிமாவில் நமக்குக் கிடைக்கின்றனர். ரஜினிகாந்த்தின் கண்கள் வசீகரமானவை, கமலஹாசனின் ஒயில் வசீகரமானது, அஜீத்தின் புன்னகை வசீகரமானது, விஜய்யின் முகம் வசீகரமானது, பிரபுதேவாவின் நடனம் வசீகரமானது, ஜேகேரித்தீஷின் பர்ஸ் வசீகரமானது என்று வசீகரத்தின் தன்மைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.

அழகு அவசியமானதுதான். சாலையில் நடந்து போகிறவர்களில்கூட அழகானவர்கள்தான் திரும்பிப் பார்க்கப்படுகிறார்கள். இப்படியிருக்க, சினிமாவோ பார்வையாளனை மனதிற்கொண்டே படமாக்கப்படுவது. ஏதோவொரு விதத்தில் பார்வையாளனைக் கவர வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. அழகானவர் என்பதாக அறியப்படும் கமலஹாசன் தன் குணா படத்தில் கறுப்பாக மாறியபோது களையில்லாத அவரது முகத்தோற்றத்தைப் பார்த்து நாவிதராக வரும் சிவாஜி (கணேசன் அல்ல), நம்ம மாதிரி வித்தியாசமான முகம் இருந்தாலே அப்படித்தான் பாப்பாங்க என்று சொல்வார்.

இந்த இடத்தில்தான் சினிமா சறுக்குகிறது. உண்மையிலேயே வசீகரம் இல்லாத ஒரு நடிகனை வசீகரம் இல்லாத ஒரு கதாநாயகப் பாத்திரத்துக்குப் பொருத்திப் பார்க்க எமது சினிமா தயாராக இல்லை. நாயகன் அழகற்றவன் என்றால் அழகான நாயகன் ஒருவன் அழகற்றவனாக மேக்கப் செய்யப்படுவானே தவிர, வேறு ஒன்றும் நிகழாது. குணாவாக மட்டுமல்ல, சப்பாணியாகவும்கூட ஒரிஜினல் சப்பாணி ஒருவர் நடிக்க முடியாது.

இந்த விஷயத்தில் கேரளா ஓரளவு தேவலாம். இத்தனைக்கும் மலையாளிகள் பொதுவாகவே தமிழர்களை விடவும் அழகானவர்கள் என்பதே எனது பர்சனல் கருத்து. என்ன இருந்தாலும் தெய்வத்தின்டெ ஸ்வந்தம் மாந்தரல்லவா அவர்கள்! மலையாளத்தில் ஸாந்தம் என்ற படத்தில் இயக்குனர் ஜெயராஜ், ஐயெம் விஜயன் என்கிற நடிகரைக் கதாநாயனாக அறிமுகப்படுத்தினார். அவர் இந்திய கால்பந்து அணியின் வீரர். அவரது தோற்றம் தமிழில் திமிரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாயகர்களை விடுங்கள், நாயகியரைப் பொறுத்தவரைக்கும் இயக்குனர்கள் சின்ன வயசில் காதலித்துத் தோற்றுப்போன முகங்களுக்கே இங்கே முன்னுரிமை தரப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள், பாரதிராஜா பெரும்பாலும் ஒருவிதமான முகத்தால் வசீகரிக்கப்பட்டு வந்திருக்கிறார். என்னுயிர்த் தோழன் ரமா, கருத்தம்மா ராஜஸ்ரீ, அலைகள் ஓய்வதில்லை ராதா, முதல் மரியாதை ரஞ்சனி, கல்லுக்குள் ஈரம் அருணா முதலான முகங்கள் அவருக்குப் பிடித்தமானவை. மணிரத்னம் சரண்யா, மதுபாலா ஆகியவர்களின் எளிய முகங்களால் வசீகரிக்கப்படுகிறார். பாலச்சந்தருக்கு கண்கள் பெரிதாகவும் கன்னம் பம்மென்றும் இருந்தாகவேண்டும். பாலுமகேந்திராவையோ கேட்கவே வேண்டாம், டிபிகல் தமிழ் முகம் அவரை வசீகரித்துவிடுகிறது. ஷோபா, அர்ச்சனா, மவுனிகா என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதனாலேயே இயக்குனர்களின் பர்சனல் காதல் தோல்விகள்தான் முகங்கள் குறித்த அவர்களின் வசீகரத்தைத் தீர்மானிக்கின்றன என்று சொல்லவும் ஏதுவாகிறது.
அவர்களுக்கு எது அழகு என்று தோன்றுகிறதோ, அந்த முகங்களைத் தமிழன் பார்த்துத் தொலைய வேண்டியதிருக்கிறது. அவர்களில், நெளிவுகள் சுளிவுகள் பிணைந்த ஆற்றல் உடையவர்கள் நிலைத்து நின்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் நம்மை அதிகம் இம்சைப்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டுவிடுகிறார்கள்.

அழகானவர்கள் என்பதாகக் குறிப்பிட முடியாத சிலரும் சினிமாவில் உயரங்களை எட்டியிருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹீரோவாக நடித்த இயக்குனர்களாகவே இருப்பார்கள். நடிகர் ராபார்த்திபனின் முகம் எவ்வளவு கரடு முரடானது! ஆனால் அவரிடம் இருக்கும் நக்கல் அவரது வசீகரமாகிறது. அதுவே அவரது அழகாக ஒப்புக்கொள்ளப்பட்டு அவர் ரசிக்கப்படுகிறார். பாக்கியராஜ், பாண்டியராஜன் ஆகியோரின் காமெடி சென்ஸ் அவர்களின் அழகு. நாசரின் வித்தியாசமான மூக்கு அவருக்கான அழகாக நினைவுகொள்ளப்படுகிறது. பிரகாஷ்ராஜின் ஆளுமை அவரது அழகாகிறது.

இந்த உதாரணங்கள் சினிமாவில் பொதுவாக அழகு என்பதாக அறியப்படும் கருத்துக்கு மாற்று தேவை என்பதையே உணர்த்துகின்றன. ஒரு நடிகராக சேரனிடம் ஒரு வசீகரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஓர் இயக்குனராகவே அவரை நான் மதிக்கிறேன். இருந்தாலும் அவரும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். சொல்ல மறந்த கதைக்கு அவர் சரிதான். ஆனால் ஆட்டோகிராஃபுக்கு அவர் தேவையில்லை என்பதே எனது கருத்து. ஏனென்றால் காமிராவுக்கு முன்னால் புதிதாக அவர் எதையும் செய்துவிடுவதேயில்லை. ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உதாரணம் எதைக் காட்டுகிறது? ஒருவர் கதாநாயகனாக நிலைக்க வேண்டுமானால் அதற்கு அவர் நடித்த படங்கள் ஓடினால் மட்டுமே போதும் என்கிற நிலைமையையே காட்டுகிறது. அப்படியானால் ஒருவர் அழகாய் இருப்பதால் புதிதாக என்ன ஆகிவிடப்போகிறது?

ஆகச்சிறந்த நடிப்புத் திறமை உள்ள ஒருவர் மிகுந்த விகாரமான தோற்றம் கொண்டவர் என்கிற காரணத்தினால் மட்டுமே நாயகனாக நடிக்க முடியாமல் போவது உண்மையிலேயே துன்பகரமானது என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. மிக அற்புதமான நடிப்பாற்றல் உள்ள ஒரு நடிகை களையில்லாத முகத்தோற்றம் கொண்டிருப்பதனால் இரண்டாம் கதாநாயகி, தோழி, தங்கை என்று பின்னுக்குத் தள்ளப்படுவது எவ்விகிதத்தில் சரி என்பதும் எனக்கு விளங்கவேயில்லை.

யாருக்கு பயந்து இவ்விதமான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன? பார்வையாளர்களுக்கு பயந்தா? பார்வையாளர்கள் அழகை மட்டுமே பார்க்கக்கூடிய அரைக் குருட்டுத்தனம் கொண்டவர்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்களா? தேவலோகத்தில் அப்சரஸ்கள் அழகாக இருப்பார்கள் என்றால் அழகிகளை அப்சரஸ்களாகக் காட்டுங்கள், மெக்கானிக் பையன் அழுக்காக மட்டுமல்ல, அதிக வசீகரமும் இல்லாதவனாகத்தானே இருப்பான், அதற்கு எதற்கு பரத் மாதிரி ஒரு நடிகரின் அவசியம் வருகிறது?

கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான், வசீகரம் இல்லாத முகம் என்பதாக ஒன்று இல்லவே இல்லை. அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்பதைத் தவிர வேறு குறையேதும் இல்லை. மிகச் சாதாரணமான முகம் கொண்டவர்கள் பழகப்பழக மிக அழகானவர்களாகத் தோன்ற ஆரம்பிப்பதே இயற்கையானது. மிக அழகாக இருப்பவர்கள் தங்கள் குணத்தால் மிகக் குரூரமானவர்களாகத் தோன்றுவதும் நிகழ்ந்தே வருவது. பழக்கமே அழகைத் தீர்மானிக்கிறது. திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் முகம் மனத்தில் பதிந்து நம் சொந்த முகத்தைப்போல மாறிவிடுகிறது.
தான் அழகற்றவன்/அழகற்றவள் என்பதை ஒப்புக்கொள்ள ஒருத்தரும் இங்கே தயாராக இல்லை. தான் என்பது தோற்றமும் மனமும் ஒருங்கிணைந்த ஒன்று. முகம் எப்படி ஒரு அடையாளமோ, அதேமாதிரிதான் செய்கைகளும் அடையாளமாகின்றன. அதேமாதிரிதான் திறமைகளும் அடையாளமாகின்றன. மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் ஒருவன் அழகாக இல்லை என்பதற்காக டீமில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுவதில்லை. மிக இனிமையாகப் பாட்டுப் பாடும் ஒருத்தி அழகாக இல்லை என்பதற்காக மேடையில் மறுக்கப்படுவதில்லை.
சினிமாவில் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்? அதுவும் முழுக்க முழுக்க திறமைக்கே முக்கியத்துவம் தரப்படவேண்டிய அந்த உலகில் திறமை என்பதை அழகு என்பது தன் காலால் மிதித்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறதோ விளங்கவேயில்லை.

3 comments:

பாலா said...

அய்யா நல்லா எதையோ கழற்றி அடிச்ச மாதிரி சொன்னீங்க

Toto said...

Sir.. Nicely analysed article. However, we have Kalloori, Kadhal konden, veyil as exceptional cases. I admire your writing flow, as usual. Great.

Film4thwall.bogspot.com

Rajan said...

cinema mattum illai, advertisements are much worse. dark skinned persons are not featured in films at all.they completely ban dark complexioned persons.the Fair and lovely type of advts. shud be banned. we are probably the only country which respects/admires fair complexion and discourage/neglect dark complexion.