July 28, 2009

கோவை போ போ என்கிறது, சென்னை வா வா என்கிறது!

இன்னும் பதினைந்திலிருந்து முப்பது தினங்களுக்குள் சென்னைக்கு புலம் பெயர்வதாக ஒரு திட்டம். இது இன்றைக்கு நேற்றைக்கு போட்ட திட்டமல்ல, கிட்டத்தட்ட பன்னிரெண்டாட்டுத் திட்டம். ஒருவழியாக இப்போதுதான் கோவையோடான ஜென்ம பிராப்தியை முடித்துக்கொண்டு சென்னைப்பக்கம் வந்து காலை வைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உண்மையில் இந்த உலகில் நான் வெறுக்கும் இடங்களில் முக்கியமானது சென்னைதான். என்ன செய்யலாம்? கோவை மாதிரி ஒரு நகரில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் நான் சொல்வதன் அருமை புரியும். நண்பர்கள் பலரும் திரும்பத் திரும்ப கட்டளையிட்டு வந்திருந்தும் இப்போதுதான் இது சாத்தியமாகிறது. எழுத்தாளர்கள் பொதுவாகவே ஏழைகள் என்பதனால் அவர்களை சென்னை ஏளனத்துக்கும் உள்ளாக்கலாம், சீராட்டவும் செய்யலாம் என்பது தொன்றுதொட்டு நாம் பார்த்து வருவதே.

சென்னை எனக்குப் புதிதல்ல என்பதனால் அந்த அச்சமொன்றும் இல்லை. அச்சமெல்லாம் வாடகை வீடுகள் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. நண்பர்கள் யாரேனும் இவ்விஷயத்தில் உதவ முடியுமானால் sudesi@gmail.com என்ற என் ஈமெயில் முகவரிக்கு உங்கள் அழைப்பெண் சகிதம் எழுதலாம். நானே அழைக்கிறேன்.

உதவுவது என்றால் அட்வான்ஸ் தொகையை கொடுத்து உதவுவது, மாதாமாதம் வாடகை கொடுத்து உதவுவது என்று பிச்சைக்கார எழுத்தாளர்களைப்போல உங்களை நான் அச்சுறுத்தவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நல்ல இடத்தில் கையைக் கடிக்காத வாடகையில் ஒரு வீடு! அவ்வளவுதான் தேவையானது! மற்றபடி பக்கத்து வீட்டில் அழகிகள் இருக்கவேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை.

சரி, என் அகராதியில் நல்ல இடம் என்பது எது? கையைக் கடிக்காத வாடகை என்பது எது என்பதாகவெல்லாம் பிரத்யேகமாகத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புபவர்களுக்கும் மேற்கண்ட மெயிலுக்கு முறையிட உரிமை வழங்கப்படுகிறது.

Atleast இதை யாராவது படித்தார்கள் என்கிற நம்பிக்கையையாவது மாதாவைப் போல மடியில் போட்டுக்கொண்டு அது ஊட்டும் என்பதனால் அதையும் நான் விரும்பவே செய்கிறேன்.

-சுதேசமித்திரன்

பி.கு.: இவ்விஷயத்தில் முந்துபவர்களுக்கு, ஆடிமாத ஆஃபராக, அவர்கள் விரும்புமிடத்தில் ஆட்டோகிராஃப் போட சித்தமாயிருக்கிறேன்.

4 comments:

butterfly Surya said...

ஆட்டோகிராப் எனக்கே.. Me the First...

ஜீவா ஓவியக்கூடம் said...

நான் விரும்புமிடம் ரஜினியின் மூக்கு ...அங்கு ஆட்டோகிராப் போட உங்களால் முடியாது என்பதால் நான் முந்த விரும்பவில்லை.

ஜீவா ஓவியக்கூடம் said...

நான் விரும்புமிடம் ரஜினியின் மூக்கு ...அங்கு ஆட்டோகிராப் போட உங்களால் முடியாது என்பதால் நான் முந்த விரும்பவில்லை.

Anonymous said...

//கோவை மாதிரி ஒரு நகரில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் நான் சொல்வதன் அருமை புரியும். //

ம். கோவையில் வாழ்ந்தவர்களுக்கு சென்னை நிச்சயம் பிடிக்காது.