February 05, 2009

காமடியாட்டம்


சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக அறிமுகமானார் நாகேஷ். அதற்குமுன் சிலகாலம் அங்ஞாதவாசத்தில் இருந்தவர் திரும்பவும் நடிக்க வந்தபோது வில்லனாகப் போய் அறிமுகமாகிறாரே என்று பலருக்கும் ஆச்சர்யம். நாகேஷால் எப்படி வில்லனாக நடிக்க முடியும்? அதுவும் டிபிகல் தெலுங்கு வில்லன் கணக்காக ஒற்றைக் கண்ணை மறைக்கும் விக்கெல்லாம் வைத்துக்கொண்டு கூசாமல் கொலை செய்யும் கொடூரமான வில்லனாக!

காமெடி உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய ஒரு நடிகர் வில்லனாக நடிக்க நேர்ந்தபோது அந்தப் படத்தின் வாயிலாக நமக்குக் கிடைத்தது புத்தம் புதிய பரிமாணம்ஙு கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்படும் பாத்திரத்துக்கு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இருக்கக்கூடாதா என்ன? படத்தில் ஒரு பார்ட்டி நடக்கிறது. அப்போது நாகேஷுக்கு கொலை மிரட்டல் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதை வேறொருவர் எடுக்கிறார். ரிசீவரை டேபிளில் வைத்துவிட்டு வந்து நாகேஷிடம் அவர் சொல்கிறார், ''போன் வந்திருக்கு!'' அதற்கு நாகேஷ் சொல்கிறார், ''யார் வந்தா என்னப்பா, சாப்பிட்டுட்டு போகச் சொல்லு!''

அதுதான் நாகேஷ்!

இந்த அதுதான் நாகேஷ் என்கிற வசனம்கூட நாகேஷாலேயே தில்லுமுல்லு படத்தில் சொல்லப்படுகிறது. அவர் அதில் நடிகர் நாகேஷாகவே வருகிறார். படத்தில் ரஜினிகாந்த் அவரை ஒருமையில் அழைத்தபோது ஒருமாதிரி இருந்தது. நாகேஷ் நாகேஷாகவே நடிக்கும்போது அவரது வயது நமது மனத்தில் நெருடாதா? இதையெல்லாம் லாஜிக் பிழை என்று நினைத்து அலட்டிக்கொள்ளாத இயக்குனரின் உதாசீனத்தைத்தான் இது காட்டுகிறது. அதேபோலத்தான் பாமா ருக்மணி என்று பாக்கியராஜின் ஒரு படம்! நாகேஷை தவறாக உபயோகித்த படங்களில் அதுவும் ஒன்று. நம்பியாருக்கு ரீ என்ட்ரி கொடுத்த பாக்கியராஜ் நாகேஷ் விஷயத்தில் மட்டும் பிழை செய்துவிட்டார் என்பதாகவே தோன்றுகிறது.

கவுண்டமணி கூடத்தான் தள்ளாடும் வயதில் இளமை ததும்ப, நாயகனால் போ வா என்று அழைக்கப்படும் நண்பனாக பல படங்களில் நடித்தார். இருந்தாலும் நாகேஷுக்கு மட்டும் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், நாகேஷ் வெறும் காமடியனாக மட்டுமில்லாமல் மரியாதைக்குரிய ஒரு மனிதராகவும் காணப்பட்டதனால்தான்.

சாதாரணமாகவே அம்மைத் தழும்பும் அதுவுமாக அழகில்லாத முகம் கொண்டவர் என்பதாகவே நாகேஷ் திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது வழக்கம். இந்தப் போக்கின் நீட்சியாக நம்மவர் படத்தில் அசப்பில் அவரது முகச்சாயல் கொண்ட நடன இயக்குனர் பிருந்தா அவரது மகளாக வந்தபோது இந்தப் பிரச்சனை பிருந்தாவுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. நாகேஷின் அதி உன்னத பர்ஃபார்மென்ஸ் அந்தப் படத்தில் நமக்குக் காணக் கிடைத்தது. மகள் இறந்ததை அறிந்ததும் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, நாயகனில் மகன் இறந்ததை அறிந்ததும் கமலஹாசன் நடித்த காட்சியோடு நேரடியாக ஒப்பிடப்பட வேண்டியது. கமலஹாசனே கண்டிப்பாக ஒப்புக்கொள்வார் வென்றது நாகேஷ்தான் என்பதை.

வயதாக வயதாக நாகேஷ் மிகவும் அழகாக ஆகிக்கொண்டே வந்தார் என்று எனக்குத் தோன்றும். வயதான சிவாஜி கணேசனை விட வயதான நாகேஷ் மிகவும் அழகானவர் என்பதே எனது கருத்து. சுரேஷ் கிருஷ்ணாவின் ராஜா கைய வெச்சா படத்தில் கௌதமியின் அப்பாவாக வந்து அவர் அடிக்கிற லூட்டியை சொல்லி மாளாது. அவரது ஆற்றல் அப்படியேதான் இருந்தது. அதை உபயோகித்துக்கொள்ளத்தான் நமக்கு புத்தியில்லாது போய்விட்டது.

இந்த வில்லன் விஷயத்துக்கு மீண்டும் வரலாம், நாகேஷ் இதற்குமுன் வில்லனாக நடித்ததேயில்லையா? மைக்கேல் மதன காமராஜன் படத்தில்கூட நாகேஷ் ஒரு குட்டி வில்லன்தான். அவரது அபிமானியான கமலஹாசனுக்குத்தான் அவரை அப்படியெல்லாம் விதம் விதமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும். இருந்தாலும் இந்தப் படங்களில் வரும் வில்லன்கள் சினிமாத்தனமானவர்கள். ஆனால் யதார்த்தமான வில்லன் ஒருவர் தில்லானா மோகனாம்பாளில் உண்டு. அந்தப் படத்தில் அடுக்கடுக்காக வில்லன்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். நாயகிக்கு வில்லன்களால் தொல்லைகள் ஏற்படும்போதெல்லாம் அதற்குப் பின்னணியாய் செயல்பட்டுக்கொண்டேயிருப்பார் வைத்தி என்கிற பாத்திரத்தில் வரும் நாகேஷ்! வைத்தியின் நெளிவுகள், சுழிவுகள், வளைவுகள் இதுவரை வேறெந்த நடிகராலும் தீண்டிப்பார்க்க முடிந்திராத சாதனை. படம் முழுக்க அவரது காமடியாட்டம் கொடிகட்டிப் பறக்கும். ஆனால் முடிவில் நம்பியார் வரைக்கும் படத்தில் வரும் அத்தனை வில்லன்களும் திருந்திவிட, ஒரே ஒருவர்தான் போலீசுக்கு பாக்கியிருப்பார். அவர் நாகேஷ்! அப்போதுதான் பார்வையாளர்கள் யார் அந்தப் படத்தின் உண்மையான வில்லன் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.

இப்படி பாத்திரத்தை உணர்ந்து பொருந்துவதில் அவருக்கு அவர்தான் நிகர். திருவிளையாடல் தருமி என்றால் ஏழ்மையின் பிரதியாக்கம், எதிர் நீச்சல் மாது என்றால் அநாதையின் அவலம், காதலிக்க நேரமில்லை செல்லப்பா என்றால் ஆர்வக்கோளாறின் அவசரம், அன்பே வா ராமையா என்றால் துடிப்பு மிக்க காதலனின் தவிப்பு என்று பாத்திரமாகவே மாறி நம் ஞாபகத்தில் நிலைத்து நிற்கிறார் நாகேஷ்.

நாகேஷிடம் ஒற்றைப் பார்வையிலேயே தென்படுவது அவரது எனர்ஜி. சாதாரணமாக சர்க்கஸில் எல்லா வித்தைகளும் தெரிந்தவர் ஜோக்கர்தான் என்பதுபோல மிக ஆச்சர்யமான ஆற்றல் கொண்டவர் நாகேஷ். குறிப்பாக அவரது வேகம்! எம்ஜியாரும் மிகவும் துறுதுறுப்பான நடிகர். அவரோடு நாகேஷ் இணையும்போது காட்சி படு வேகமாக நகர்வது இந்த இயல்பால்தான். சிவாஜி முதலான பெரும்பாலான நடிகர்கள் மிகவும் மிதமான லயத்தில் நடிக்கக்கூடியவர்கள். பெரும்பாலும் டப்பிங் பேசும்போது உபயோகமாக இருக்கும் என்பதற்காக ஒருவிதமான தாமத லயத்தை நடிக்கும்போது மேற்கொள்வார்கள். நாகேஷ் வசம் இந்தக் கணக்கெல்லாம் கிடையாது. அவரது தனித்தன்மையே டைமிங்தான். நாய் செத்துப்போச்சுண்ணே, டாமின்னு பேருகூட வெச்சிருந்தேன் என்று சொல்லி முடிக்குமுன், பேரு வெச்சியே, சோறு வெச்சியா? என்று பதில் வந்துவிடும் அவரிடமிருந்து.

இப்போது போலல்லாமல், நாகேஷ் நடிக்க வந்தபோது எம்டன்கள் எல்லாம் உயரத்தில் இருந்தார்கள். எம்மார் ராதா, டீயெஸ் பாலையா, கேயே தங்கவேலு என்று அந்தப் பட்டியல் மிகவும் ஆணித்தரமானது. அவர்களுக்கு மத்தியில் புதிதாக ஒருவர் நுழைந்து உயரங்களை எட்டவேண்டுமானால் அது எவ்வளவு கடினமான பணியாக இருந்திருக்கும்ஙு

அந்த வகையில் பாலச்சந்தரின் துணிச்சல் அடிப்படை உதவியாக இருந்தது என்றாலும் நாகேஷின் ஆற்றல்தான் அவரை உச்சங்களுக்குக் கொண்டு சென்றது. முக்கியமாக எம்ஜியார் நாகேஷ் காம்பினேஷனைப் பொருத்தவரைக்கும் இப்போதும் கவனித்துப் பாருங்கள், நாகேஷின் பர்ஃபார்மென்ûஸ எம்ஜியார் ரசிப்பதை திரையிலேயே நாம் கண்டுபிடித்துவிடமுடியும். எம்ஜியார் என்றில்லை, மனோரமா முதலான அவருக்கு இணையான காமெடியன்கள்கூட அவரது நடிப்புத் திறமையை உள்ளூர ரசித்து, சீரியஸôன காட்சிகளில்கூட சிரிப்பை அடக்கப் படாத பாடுபடுவதை பல படங்களில் கண்டுபிடிக்கலாம்.
அவரது சேஷ்டைகள் அவ்வளவு பிரசித்தம். ஒரு காமடியன் அடிப்படையில் கொண்டிருக்க வேண்டியது அங்க சேஷ்டைகள்தான் என்பதை அவருக்கு முன்னால் நிரூபித்தவர் ஜேபி சந்திரபாபு. ஸ்ப்ரிங் மாதிரியான உடம்பை வைத்துக்கொண்டு அவர் செய்த சேஷ்டைகள் எவ்வளவு ரசிக்கப்பட்டனவோ அதே அளவுக்கு நாகேஷ் தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்துக்கொண்டு அடித்த லூட்டிகள் இருக்கிறதே! இதில் ஒரு irony பாருங்கள், அவரது ஒரிஜினல் பெயர் குண்டுராவ்!

'குண்டு'ராவ் என்கிற பெயரை உடைய ஒருவர் ஒல்லியாக இருப்பதே அடிப்படைக் காமடிதானே! இப்படி அவரது வாழ்க்கையே ஒரு காமடிச்சரமாக நீண்டுகிடந்ததோ என்னவோ!

வாழும்காலத்தில் இம்மியும் கௌரவிக்கப்படாத நடிகர்களின் நீண்ட பட்டியலில் நாகேஷும் சேர்கிறார். அவரே ஒருமுறை சிவாஜிகணேசன் வட இந்தியாவில் பிறந்திருந்திருந்தால் எப்போதோ சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருப்பார் என்று குறிப்பிடது அவருக்கும் அப்படியே பொருந்தும். அவர் கர்னாடகத்திலிருந்து இருந்திருந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்ததற்கு பதிலாக மும்பைக்குப் போகிற ரயிலைப் பிடித்திருந்தாரேயானால் உலக அளவுக்கு அவரைக் கொண்டுபோயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

கட்டிக்கரும்பே கண்ணம்மா!

அயாம் ச்செலபா! சன் ஆஃப் கண்ணபா!

ஒரு காசா ரெண்டு காசா? ஆயிரம் பொன்னாச்சே! ஆயிரம் பொன்னாச்சே!

லோகத்துல இந்த வைத்தி மட்டும் இல்லேன்னா...

எப்போதும் மனத்திரையில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வசனங்கள் நாகேஷின் உச்சரிப்பின் வாயிலாகத்தான் சாகாவரம் பெற்றனவே தவிர சும்மானாச்சுக்கும் நீங்கள் சொல்லிப்பாருங்கள் அப்போதுதான் தெரியும் அவரது அருமை!

சமீபத்தில் ஒரு திரைக்கதை விவாதத்தில் கதையின் பிரதான பாத்திரத்திற்கு நான் முன்மொழிந்தது நாகேஷைத்தான். மிகவும் அழுத்தமான அந்தப் பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்பதாக நான் உணர்திருந்தேன். அதைத் தொடர்ந்து அவர்களது ப்ரொடக்ஷன் மேனேஜர் நாகேஷைத் தொடர்பு கொள்ள முயன்ற வகையில் அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக அறிந்துகொள்ள நேர்ந்தது. அப்போதே மனதிற்குள் ஒரு பதைபதைப்பு எழுந்திருந்தது.

அண்மையில்தான் நம்பியார் மறைந்தார். அதற்குள் இப்போது நாகேஷ்! பிதாமகன்களைக் கொண்டுபோகிற காலமாகத்தான் விடிந்துவிட்டது போலிருக்கிறது. தொலைக்காட்சியில் அவரது கடைசிக் காட்சிகளைப் பார்த்தபோது உண்மையிலேயே என் கண்கள் பனித்தன. வேறெந்தக் கலைஞரின் மரணக்கோலமும் என் நெஞ்சை இவ்வளவு உலுக்கியதில்லை என்பதே உண்மை. அவரை ஒரே ஒரு முறைதான் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரது மகன் ஆனந்த் பாபுவோடு பணியாற்றியிருக்கிறேன். அவரது வாழ்வும் எனது வாழ்வும் வேறு வேறு திக்குகளில் இருந்துவந்தபோதும் இழப்பு என்று வரும்போதுதானே அணுக்கத்தின் பிரக்ஞை விழிக்கிறது.

6 comments:

Jayaprakash Sampath said...

இந்த மாதிரி பதிவுக்கு 0 comments என்று இருப்பது அநியாயம் என்பதற்காகவே இந்தப் பின்னூட்டம்.

enRenRum-anbudan.BALA said...

இந்த அற்புதமான நினைவு கூரலுக்கும், அஞ்சலிக்கும் மிக்க நன்றி.

வாசிக்க வாசிக்க, நிஜமாகவே கண்ணீர் வந்தது.

நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அதனால், அந்த மகா நடிகன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அவரது நடிப்பின் பரிமாணங்களை நம்மால் அனுபவிக்க முடிந்தது.

மண்குதிரை said...

ஒரு இரவு வேளையில் பத்ம விருதுஸ்ரீ குறித்தும் அது கெளரவிக்காமல் இருக்கும் ஆளுமைகள் குறித்தும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த செய்தியை ஒரு நண்பர் கொண்டுவந்தார்.

அவர் நடித்த படத்தில் வசூல் ராஜா மட்டுமே என்னிடம் இருந்தது. ஒரு சில காட்சிகள் என்றாலும் நிறைவாக செய்திருப்பார். திரும்ப திரும்ப ரிவைண்ட் செய்து பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த கட்டுரையைப் போல்.

அருமையான கட்டுரை !

மண்குதிரை said...

ஒரு இரவு வேளையில் பத்மஸ்ரீ விருது குறித்தும் அது கெளரவிக்காமல் இருக்கும் ஆளுமைகள் குறித்தும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த செய்தியை ஒரு நண்பர் கொண்டுவந்தார்.

அவர் நடித்த படத்தில் வசூல் ராஜா மட்டுமே என்னிடம் இருந்தது. ஒரு சில காட்சிகள் என்றாலும் நிறைவாக செய்திருப்பார். திரும்ப திரும்ப ரிவைண்ட் செய்து பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த கட்டுரையைப் போல்.

அருமையான கட்டுரை !

govind said...

"Words are cheap. The biggest thing you can say is "elephant".

I had no idea of the character. But the moment I was dressed, the clothes and the make-up made me feel the person he was. I began to know him, and by the time I walked onto the stage he was fully born."....
These are the words spoken by charlie chaplin...miracle is that the word exactly goes to our legend nagesh also...thankyou sudhesamithran for reminding to pay our respects to the great man...

basu said...

நாகேஷுக்கும் கர்நாடகாவிற்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது. அவர் கன்னடம்
பேசும் மாத்வர் என்பதால் கர்நாடகா
ஆகி விட மாட்டார். நாகேஷ் பற்றி அருமையாக எழுதப்பட்டுள்ளது.