சினிமா என்றாலே கோடிகள் என்பதாக ஆகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையாகவே சினிமாவின் அத்தனை செலவை எவையெவையெல்லாம் தீர்மானிக்கின்றன என்கிற விழிப்புணர்வு சினிமாக்காரர்களுக்காவது இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.
சினிமாவுக்கு வெளியே இருந்து சினிமாவைப் பார்த்து ரசித்துக்கொண்டு அல்லது சபித்துக்கொண்டு இருப்பவர்களாகட்டும், விமர்சித்துக்கொண்டிருப்பவர்களாகட்டும், சினிமாவுக்குள்ளிருந்து அதை இன்ச் இன்ச்சாக உருவாக்குகிற பணியில் இருப்பவர்களின் கருத்துகளோடு நேரதிராக மோதுகிறார்கள். எந்தவொரு தொழிலிலும் உள்ளே நுழைந்து பார்த்திருப்பவர்களின் கருத்து வேறாகவும் வெளியே இருந்து பார்ப்பவர்களின் கருத்து வேறாகவும் இருக்க நேர்வது உலக நியதிதானே! ஞாயிற்றுக்கிழமையானால் மட்டன் எடு என்று புறப்படுகிறவர்களில் எத்தனை பேருக்கு ஆட்டுத்தொட்டிகளில் ஆடு எவ்விதமாகக் கொல்லப்படுகிறது என்பது தெரியும்? ஆடு கொல்லப்படுவதற்கும், மாடு கொல்லப்படுவதற்கும், பன்றி கொல்லப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் எப்படி அறிவார்கள்? அதுமாதிரிதான் கிரிடிக் மற்றும் பார்வையாளர்களின் பார்வையில் உள்ள சினிமா வேறு, சினிமாக்காரர்களின் பார்வையில் உள்ள சினிமா முற்றிலும் வேறு!
ஒரு சினிமாவை மதுரைப்பக்கம் ஒருமாதிரி ரசிக்கிறார்கள், கோயமுத்தூர்ப் பக்கம் வேறுமாதிரி ரசிக்கிறார்கள், ராமநாதபுரத்தில் வேறுவிதமான ரசனை காண்கிறது. ஒருத்தருக்கு அரிவாள் எடுத்தால் பிடிக்கிறது, இன்னொருத்தருக்கு அணைத்துக்கொண்டால் பிடிக்கிறது. தமிழ் சினிமா தொடக்க காலம் தொட்டே மசாலா என்கிற தன்மைக்குள்ளேயே யோசிக்கப்படுவதனால் வந்து சேர்ந்த வன்கொடுமைதான் இப்போதைய எமது சினிமாவுக்கான செலவையெல்லாம் தீர்மானித்துத் தொலைக்கிறது.
உருப்படியாகக் கதைகூட இல்லாமல் பலகோடி செலவில் குப்பையாக ஒரு படத்தை மிகப்பெரிய இயக்குனர் மிகப்பெரிய நடிக நடிகையரை இயக்கிக் கொடுக்கிறார் என்பதற்காகத் தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்பதுதான் சினிமாவால் உயர்ந்து அரசோச்சும் எமது அரசியல்வாதிகளுக்கும் நியாயமாகப் படுகிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிநீக்கம் என்ற அறிவிப்பிலும்கூட, நீக்கப்பட்ட வரிச்சலுகை யாருக்குப் போய்ச் சேருகிறது என்கிற பிரக்ஞையை எழுப்ப ஒரு என்ஜிஜிஓ கூட இல்லாத நிலையில், கஷ்டப்பட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளனுக்கோ, பார்வையாளனுக்கோ இல்லாமல் விவசாயியின் வயிற்றில் வியாபாரி அடிப்பதைப்போல நான்குவேளைக் கொள்ளையாக நடந்துகொண்டிருக்கிறது.
நட்சத்திர அந்தஸ்து என்பது தமிழில் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும்கூட உண்டு. ஆனால் நட்சத்திரத்தை மட்டுமே நம்பி அங்கே படம் எடுக்கப்படுவதில்லை. நட்சத்திரத்திற்குள் ஒரு நடிகன் உண்டு என்பதும் அவர்களது பிரக்ஞையின் இன்னொரு முக்கிய அம்சம். அவனை வேலை வாங்குவதற்கான கதைக்களமும் பார்வையாளனை உட்காரவைப்பதற்கான திரைக்கதை வடிவமும்தான் பிரதானமாக அங்கே கருதப்படுகின்றன. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் ரொமான்சிங் தி ஸ்டோன் என்று ஒரு சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் வெளிவந்தது. அது ஒரு அட்வென்சர் காமெடி வகைப்படம். மைக்கேல் டக்ளஸ் மற்றும் காத்தலீன் டர்னர் நாயகன் மற்றும் நாயகியாக நடித்த ஹாலிவுட் கமர்ஷியல் படம். அருமையான என்டர்டெய்னர். கொலம்பியாவின் மழைக் காடுகளில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாவது பாகம்கூட அதே நடிகர்களோடு ஜ்வெல் ஆஃப் தி நைல் என்று வெளிவந்து சக்கைப்போடு போட்டது. இந்தப்படங்களில் ஒரு காமெடி வில்லன் பாத்திரத்தில் டேனி டீ விட்டோ நடித்திருப்பார். குள்ளமான தோற்றமும் சொட்டைத் தலையும் கொண்ட அவர் அந்தப் பாத்திரத்துக்கு வெகு பொருத்தமாக இருப்பார். ஆனால் இந்தப் படங்களைத் தொடர்ந்து வார் ஆஃப் தி ரோஸஸ் என்று ஒரு படம் அதே மைக்கேல் டக்ளஸ், காத்தலீன் டர்னர், டானி டீ விட்டோ நடித்து வெளிவந்தது. இந்தப்படத்தை இயக்கியது டேனி டீ விட்டோ. இந்தப்படம் ஒரு காதலைச் சொல்லி, அவர்கள் கல்யாணம் செய்துகொள்வதைச் சொல்லி, பிள்ளைகள் பிறந்து வளர்ந்து காலப்போக்கில் அவர்களுக்குள் விரிசல் எழுந்து ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்யவிரும்புகிற வரைக்கும் சென்று முடிகிறது. அட்வென்சர் கிடையாது, கமர்ஷியலாக எதுவும் கிடையாது. நம் ஊரில் இப்படி ஒரு வெற்றிக்கூட்டணி அமைந்தால் திரும்பவும் ஓர் அட்வென்சர் படம் தவிர வேறொன்றை எதிர்பார்க்க முடியுமா? முன்னால் போகிற கழுதை கதைதான்!
ஒரு படத்தின் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களைத்தான் பாதிக்கவேண்டுமே தவிர, ஒட்டுமொத்த திரை உலகத்தையே பாதிப்பது எவ்விதத்தில் நியாயம்? இதற்குக் காரணம் ஒன்றைப் பார்த்தே மற்றது எடுக்கப்படுவதுதான். தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு மாதிரி எடுக்க ஆரம்பித்த வகையில்தான் ராம்கோபால் வர்மா தற்போதைய தன் உயர்ந்த நிலைக்கு வந்து சேர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதேபோல்தான் மணிரத்னமும். என்னதான் அவருக்கென்று ஒரு ஸ்டைல் உள்ளது என்றபோதும், அவரது ஒரு படம் அவரது இன்னொரு படம்போல இல்லாமல் இருப்பதே அவரது வெற்றியின் சூத்திரம். பல்லவி அனுபல்லவி, உணரு, பகல்நிலவு, மௌனராகம், நாயகன், கீதாஞ்சலி, அக்னிநட்சத்திரம், அஞ்சலி என்று அவரது துவக்கத்தைக் கவனித்துப் பாருங்கள். அதே நேரத்தில் இப்போதைய மற்ற இயக்குனர்களின் படங்களையும் பட்டியலிட்டுப் பாருங்கள். வித்தியாசம் தெரியும். செல்வராகவன், அமீர், மிஷ்கின் ஆகியவர்கள் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து மீள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெற்றிகரமாக உள்ள அத்தனை இயக்குனர்களும் அவரவர் ஃபார்முலாவையும் அவ்வப்போது உருவாகும் சினிமாவின் புதிய டிரெண்டையும் மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஃபார்முலாவானாலும் சரி, யாரோ ஒருவர் கொண்டுவந்த ட்ரெண்டாக இருந்தாலும் சரி, அது செலவு வைப்பதுதான். நீரில் பல உயிர்களும் வாழ்கின்றன என்பதற்காக எல்லோரும் தண்ணீருக்குள் வீடு கட்ட முனைந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. நீரிலும் தரையிலும் வாழ முயற்லும்போதோ சொந்த அடையாளம் இழந்து தவளைகளாகிப்போவதே நேர்ந்துவிடுகிறது.
அமீர் பருத்தி வீரன் எடுத்தார். உலகத்தரத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால் அவர் சொல்கிறார், தான் உலகப் படங்களைப் பார்த்ததே இல்லை என்பதாக. மிஷ்கின் அஞ்சாதே என்கிற விறுவிறுப்பான படத்தைக் கொடுக்கிறார். அதில் அகிரா குரோசோவாவின் படத்திலிருந்து தான் கற்றுக்கொண்ட ஷாட்டை உபயோகிக்கிறார். நீங்கள் உலகத்திடமிருந்து கற்றுக்கொள்கிறீர்களா இல்லை உங்களிடம் இருப்பதை உலகுக்குக் கொடுக்கிறீர்களா என்பதல்ல முக்கியம். நீங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் செயல்படுகிறீர்களா இல்லையா என்பதுதான் முக்கியம்! பாட்டு, நடனம், சண்டை என்று பாதிப் படத்தை நிரப்பி, மீதிப்படத்தை எதையாவது வசனத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிற மாயமான சூழல் ரொம்பகாலம் தாங்காது.
ஆஃப்லைன் என்றொரு ஈரானியப்படம். ஃபுட்பால், பேஸ்பால், ஸ்கேட்டிங், ஒலிம்பிக்ஸ் என்று எத்தனையோ படங்கள் விளையாட்டை மையமாகக் கொண்டு உலகெங்கும் வந்திருக்கின்றன. ஹிந்தியில் லகான், தமிழில் சென்னை 600 028, வெண்ணிலா கபடிக்குழு என்று ஒருசில படங்களும் சமீபத்தில் வந்தன. இந்தப் படங்களில் மிகவும் முக்கியமானது ஃபுட்பாலையும் போர்க்கைதிகளையும் கலந்துகட்டி சில்வஸ்டர் ஸ்டாலோன், ஃப்ர்ஸ்ட் ப்ளட் படத்துக்கும் முன்னால் நடித்த படமான எஸ்கேப் டு விக்டரி. அந்தப் படம்கூட இந்த ஆஃப்லைனுக்கு ஈடாகாது. ஏனென்றால் இந்தப்படம் ஒரு ஃபுட்பால் மேட்சை உள்ளடக்கியிருக்கிறது. மேட்ச் ஆரம்பிப்பதிலிருந்து முடிவதோடு படமும் முடிந்துவிடுகிறது. ஆனால் படத்தில் ஃபுட்பால் மேட்ச் மருந்துக்கும் காட்டப்படுவதில்லை.
கிட்டத்தட்ட இதே விதமானதுதான் வெங்கட் பிரபுவின் இரண்டாவது படமும்! ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் கிரிக்கெட் மேட்ச்சைப் பார்க்க நண்பர்கள் போகிறார்கள். வழி தவறுகிறார்கள். வழியில் கார் நின்றுவிடுகிறது. அங்கே ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார்கள் என்று கிரிக்கெட்டைக் காட்டாமலே முடிந்துவிடுகிறது. ஆனால் இந்தப்படத்தின் கதையில் கிரிக்கெட் இல்லை. ஆனால் ஆஃப்லைனில் ஃபுட்பால் இருக்கிறது. ஈரானில் ஈரானியப் பெண்கள் ஓபன் ஸ்டேடியத்தில் ஆண்களோடு சமமாக உட்கார்ந்து விளையாட்டு பார்க்க அனுமதியில்லை. ஆண் வேடமிட்டு உள்ளே நுழைய முயல்கிற பெண்கள் சிலரை போலீஸ் பிடித்து ஸ்டேடியத்திலேயே ஒரு இடத்தில் விளையாட்டைப் பார்க்க இயலாத வகையில் அடைத்துவைக்கிறது. படம் முழுக்க விளையாட்டின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு போலீஸ்காரன் காமென்ட் சொல்கிறான். இந்த அளவு உயிர்த்துடிப்புள்ள ஒரு ஸ்க்ரிப்ட் தமிழில் உருவாகவேண்டுமானால் இன்னும் எனர்ஜி உள்ள தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உருவாகவேண்டும்.
மலையாளத்தில் தன் அம்ம அறியான் படத்தை எடுப்பதற்காக ஜான் ஆபிரகாம் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடை வாங்கினார். அந்தப் பணத்தைக் கொண்டே அவர் அந்தப் படத்தை எடுத்தும் முடித்தார். பணம் கொடுத்தவர்களுக்கு அவர்களின் ஊரில் அதைக் கொண்டுபோய் போட்டுக்காட்டினார். அவர்கள்தான் அதற்கான பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டார்களே! இந்தமாதிரி ஒரு சம்பவத்தை நம்மால் இப்போது கற்பனை செய்ய முடியுமா? இது என்ன ஈரானிலா நடந்தது? நமக்கு அடுத்த மாநிலத்தில், அதுவும் நம் மாநிலத்தில் அதிகம் பயணித்த ஒரு நண்பன் சாதித்துக் காட்டியதல்லவா இந்த அற்புதம்! ஜான் ஆபிரகாம் மட்டும் பட முதலாளிகளின் பின்னால் அலைந்துகொண்டிருந்திருந்தால் ஒன்றேனும் படம் எடுத்திருக்கமாட்டார். அல்லேல் நாலு ஃபைட் ரெண்டு குத்துப்பாட்டு என்று எதையாவது எடுக்கவேண்டிய கட்டாயத்தில் காணாமல் போயிருப்பார்.
ஜான் ஆபிரகாமுக்கு நேரெதிராக இயக்குனர் ஷங்கர் மெகா இயக்குனராக இன்று அறியப்படுகிறார். தமிழின் மிக அதிக செலவாகும் படத்தை இப்போது அவர் இயக்கிவருகிறார். அவரது ஆரம்பப் படங்களில் காதலன் மட்டும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த படமல்ல, அதில் ஒருசில பகுதிகள்! ஒருவிதமான கவித்துவமான காதல் காட்சிகள் அந்தப் படத்தில் காணும். கவர்னர் மகளை கான்ஸ்டபிள் மகன்... என்கிற அவரது கதையை விட்டுத் தள்ளுங்கள், அவளுக்கு அவன் உணவு தயாரித்துத் தரும் இடம் ஒன்று உண்டு. அப்போது நான் நினைத்தேன். இந்த ஷங்கரால் பொருட்செலவில்லாத அழகான காதல் கதை ஒன்றை கட்டாயம் தர முடியும் என்று. ஆனால் அவரது பாதை முற்றிலும் திரும்பிவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்போது அவர் செய்ய முனைவதெல்லாம் அவரது மனத்தில் உள்ள அந்த அழகான ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வேலைதான் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ஷங்கர் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் சீரியசாகவே யோசிக்கலாம். ராம்கோபால் வர்மா வளர்ந்துவரும் காலத்தில் மணிரத்னம்தான் எனது மானசீக குருநாதர் என்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ஷங்கர் மணிரத்னத்தைக் காப்பியடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் கமர்ஷியல் என்பதற்கும் வெளியே ஏன் யோசிக்கக்கூடாது என்பதே எனது கேள்வி! அவரால் முடியாமல் இருந்தால் பரவாயில்லை. அவரால் அது முடியும் என்கிறபோது ஏன் முயலக்கூடாது?
ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்கிறது என்று சொன்னால் ரஜினிகாந்த்தை எத்தனை காஸ்ட்யூமில் காட்டலாம், எத்தனை லொக்கேஷன்களில் காட்டலாம், எத்தனை நாயகிகளுடன் காட்டலாம், எவ்வளவு கிராஃபிக்ஸ் பண்ணலாம் என்பதாக யோசிப்பதை விட்டுவிட்டு, ரஜினிகாந்த்தின் இதுவரை வெளிவராத முகத்தைக் காட்டலாம், இதுவரை வெளிவந்ததை விட அதிகமான நடிப்பாற்றலைக் கோரும் பாத்திரத்தைக் கொடுக்கலாம், ஹாலிவுட் படங்களைப்போல புத்தம்புதிதான விறுவிறுப்பான ஸ்க்ப்ட்டை ரஜினிகாந்த்தின் தலையில் ஏற்றலாம் என்பதாகவெல்லாம் அவர் யோசித்தால், ஒரே காஸ்ட்யூமில் ஒரே லொக்கேஷனில்கூட ரஜினிகாந்த் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்துவிடுவார்.
சுஜாதா மாதிரி ஓர் எழுத்தாளரையும் கையில் கொடுத்து, ஷங்கர் படத்துக்கு ஆகிற பணத்தையும் செலவு செய்ய ஒருத்தர் தயாராக இருந்தால் இப்போது ஷங்கர் இயக்கும் படங்களைப் போன்ற படங்களை சுந்தர்.சி கூட இயக்கிவிடுவார் என்பதே உண்மை. இந்த உண்மையை இன்னுமா யாரும் ஷங்கரிடம் சொல்லவில்லை?
2 comments:
\\ சுஜாதா மாதிரி ஓர் எழுத்தாளரையும் கையில் கொடுத்து, ஷங்கர் படத்துக்கு ஆகிற பணத்தையும் செலவு செய்ய ஒருத்தர் தயாராக இருந்தால் இப்போது ஷங்கர் இயக்கும் படங்களைப் போன்ற படங்களை சுந்தர்.சி கூட இயக்கிவிடுவார் என்பதே உண்மை. இந்த உண்மையை இன்னுமா யாரும் ஷங்கரிடம் சொல்லவில்லை? \\
Arumai.. arumai..
nanraga sonergal...
paratukal....
அருமை...
நிகழ்வுகளின் தொகுப்பு..
நல்ல சினிமாவின் ஆதங்கம்.
வாழ்த்துகள்.
Post a Comment