April 17, 2009

அன்பார்ந்த உதவி இயக்குனர்களே!


அன்பார்ந்த வாசகரே, உங்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருப்பார்கள். ஆனால் அவர்களின் பெயர்களையெல்லாம் எழுதியா வைத்திருக்கிறீர்கள்? கல்வெட்டு வேண்டாம், ஒரு நாற்பது பக்க ரூல்டு நோட்டிலோ பழைய டைரியிலோவாவது எழுதிவைத்திருக்கிறீர்களா? ஏன் எழுதவில்லை? உங்கள் தலை சாய்ந்த பிறகு சொத்தில் பங்குக்கு வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா?

ஆனால் சினிமா உங்களளவு மோசமானதல்ல. நீங்களே பாருங்கள், டைட்டில் கார்டு என்பதாக ஒன்று ஆதியிலும் அந்தத்திலும் அனுசரணையாக அத்தனை படங்களிலும் ஓடுகிறது. அதில் உதவியவர்களுக்கும் ஒரு பட்டியல் உண்டு. நான் சொல்ல வருகிற உதவி, நன்றி என்கிற தலைப்பில், ஊட்டி தாவரவியல் பூங்கா மேலாளர், அமிர்தசரஸ் ஓட்டல் உரிமையாளர், முட்டம் இறைத்தூதராலய போதகர், ஏர்வாடி தர்கா காவல்காரர் என்று எந்தப் பொருத்தமுமில்லாத ஒரு பட்டியல் படத்தின் பெயர் வருமுன்பாக வருகிறதே அதையல்ல! ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர், எடிட்டர், காமிராமேன், இயக்குனர் ஆகியவர்களுக்கு உதவியவர்களின் பட்டியலொன்று காண்கிறதே, அதை உண்மையில் இவர்கள் இல்லையென்றால் சினிமா என்பதாக ஒன்று கிடையாது என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ளுங்கள். வீட்டில் முள்ளங்கி சாம்பார் தயாரிக்க வேண்டுமானால் ஒரே ஆளே நல்ல சிவப்பு முள்ளங்கியாக வாங்கி வந்து, நறுக்கி, வெங்காயத்தை உரித்து, பருப்பையும் தக்காளியையும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, புளியை ஊறவைத்து, மிளகாய் வற்றல், தனியா, அரிசி, மிளகு, தேங்காய் என்று அரைத்து, கடுகையும் வெந்தயத்தையும் தாளித்து, வெங்காயத்தை வதக்கி சாம்பாராக அவற்றை மாற்றிவிட முடியும்.

இப்படி அரைப் பாராவில் உருவாகிற சாம்பார் ஒரு வீட்டுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கும். ஆனால் ஒரு விருந்துக்கு சமைக்க வேண்டுமானால் ஒற்றை ஆள் அதைச் செய்ய முடியுமா? இந்த மாயாபஜார் வித்தை யாராலாகும்! அப்படித்தான் சினிமாவும்!
அதிலும் தமிழ் சினிமாவில் இந்த உதவியாளர்கள் என்கிற பட்டியலில் உதவி இயக்குனர்கள் என்பதாக ஒரு தனி இனமே வாழ்ந்து வருவது வருத்தத்துக்கும் வேதனைக்கும் இடைப்பட்ட செய்தி. நானும் அந்த வேலையைச் செய்தவன் என்கிற சகோதர பாவத்தோடே நல்லது கெட்டது இரண்டையும் முன்வைக்க விரும்புகிறேன். அடிக்க வருவதாயிருந்தால் இரண்டு நாட்கள் முன்னதாகச் சொல்லிவிட்டு வரவும். ஏனென்றால் இந்த நடுவுநிலைமை என்பதெல்லாம் திருவள்ளுவர் காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்கலாம். அப்போதெல்லாம் பெயிலபிள் நான்-பெயிலபிள் என்கிற பதங்கள் கிடையாது பாருங்கள்!

பழைய படங்களின் டைட்டில் கார்டுகளைப் பார்க்கும்போது எனக்குள் ஓராச்சரியம் ஓடும். ஒவ்வொரு படத்திலும் மூன்றிலிருந்து கிட்டத்தட்ட பத்துப் பேர் வரைக்கும் உதவி இயக்குனர்கள் என்பதாகக் காண்கிறார்களே, இவர்களெல்லாம் ஏன் இயக்குனராகவில்லை? இந்தக் கேள்விக்கான பதில், என் பெயரும் அந்தப் பட்டியலில் வந்தபோதுதான் தெரிந்தது.

அதை சற்று விரிவாகப் பார்க்கலாம். ஏனென்றால் எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரே ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. ஒருகோடிப்பேர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் ஓராயிரம் கோடி காரணங்கள் கொட்டிக் கிடக்கக்கூடும்.
முதற்கண், உதவி இயக்குனராக வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் இயக்குனராகவேண்டும் என்கிற கனவோடுதான் சினிமாவுக்கு வந்தார்கள் என்று நாம் நம்புவது நமது அறியாமையையே உலகுக்கு உணர்த்தும். இன்றைக்கு பாலச்சந்தரும் பாரதிராஜாவும் எதற்காக நடிகர்களாக மாறினார்கள் என்பதைக் கூர்ந்து நோக்குங்கள். இத்தனை காலம் அவர்கள் கொடுத்த சினிமாக்கள் எல்லாம் அவர்கள் திருப்தியாக எடுத்த படங்கள் அல்ல என்பது நன்றாகவே விளங்கும். அவர்கள் சினிமாக்களை இயக்கியதெல்லாம் நடிகனாக முடியவில்லையே என்கிற ஆதங்கத்தினால்தான்! உண்மை துவர்க்கும்தான் என்ன செய்வது!

பாக்கியராஜையே எடுத்துக்கொள்ளுங்கள், அவர் ஒரு நல்ல திரைக்கதாசிரியர், அடுத்தபடியாக ஒரு நடிகர். ஆனால் அவர் இயக்குனராகவேண்டிய காலக்கட்டாயம் இருந்தது. இருந்தாலும் அவருக்கு நடிக்கவும் வாய்த்த வகையில் வாய்ப்புகளை அவர் கொண்டாடத் தொடங்கினார். எஸ்யேசந்திரசேகரின் உதவியாளராக இருந்த இயக்குனர் ஷங்கர் எத்தனை படங்களில் காமெடியனாக அபிநயித்திருக்கிறார் என்பதை உங்களில் பலரும் அறிந்திருக்கவே செய்வீர்கள். செல்வி என்பதாக ஒரு படத்தில் அவர் முழுநீள காமெடியன் என்பதாக ஞாபகம்.

இவர்கள் உணர்த்தும் உதாரணம் முதன்மையான வகை. டைட்டில் கார்டில் காணும் உதவி இயக்குனர்கள் என்கிற பட்டியலில் இந்த வகைமையைப் பொருத்திப் பார்த்தால் தொண்ணூறு சதமான பெயர்கள் காணாமல் போய்விடும். இவர்களில் பலரும் குடும்பப் பிரச்சினைகள், காத்திருக்கும் மாமன் மகள் என்கிற அடிப்படைக் காரணங்களுக்காக ஓரிரு படங்களில் அட்மாஸ்ஃபியரில் தலையைக் காட்டிய திருப்தியோடோ, டைட்டிலில் கார்டு வந்தது என்கிற சப்பைக்கட்டோடோ, அல்லது அதுகூட இல்லாமல் ஞாபகங்களில் தேங்கியிருக்கும் பொற்காலத்தை ஒரு மிலிட்டிரிக்காரன் போல வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம் என்கிற வேதனையோடோ விலகிப் போயிருப்பார்கள்.

இந்த வம்பை இளைஞர் மனத்தில் வலியச் செலுத்திய பிழை பாரதிராஜா செய்தது என்பதாகவே நான் நினைக்கிறேன். ஏனென்றால் பாரதிராஜாக்கூட்டத்தில்தான் உதவி இயக்குனர்கள் சிறு காட்சிகளில் தலைகாட்டுவது அதிகமாகக் காணப்பட்டது. அந்தப் பரம்பரையிலிருந்துதான், பாக்கியராஜ், மணிவண்ணன், பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், பார்த்திபன் என்று பெரும் அபிநயப் பட்டியல் புறப்பட்டது.

ஆக, சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தால் நடிகனாகிவிடலாம் என்கிற அபத்தமான காரணம்தான் டைட்டில் கார்டுகளின் பெரும் இடத்தை நிரப்பிவிடுகின்றன. ஏனென்றால் சினிமாவுக்கு வந்த பிறகே சினிமா என்றால் என்ன என்று தெரிந்துகொள்கிற கூட்டம்தான் இங்கே அதிகம்.
அப்படியில்லாமல் உண்மையிலேயே நல்ல சினிமாவுக்கு ஆசைப்பட்டு, தாங்கள் பணியாற்றும் சூழலில் அது சாத்தியமேயில்லை என்கிற நிலைப்பாட்டைத் தெளிந்து வேறு தொழில்கள் தெரிந்த வகையில் இயக்குனர் என்பதாக டைட்டில் கார்டு வராமலே சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டவர்களும் சொற்பம்பேர் உண்டு. இந்தப் பட்டியலில் தற்கொலை செய்துகொண்டவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்களையெல்லாம் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருந்தால் எமது சினிமா எப்போதோ உய்ந்திருக்கும்.

நிதர்சனத்தை உணர்ந்தபோதும் இழந்த இளமையும், பழகிய வறுமையுமாக வேறு வழியில்லாமல், கன்னிமை போன புண்ணியவதி பழக்கத்தின் நிர்ப்பந்தத்தால் பரத்தையாகிப்போவதுபோல குமைந்துகொண்டு சென்னையின் சூட்டையெல்லாம் உடம்பில் வாங்கிக்கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலரும் உண்டு. இவர்களின் நிலைமைதான் உண்மையிலேயே துக்ககரமானது. ஏனென்றால் இவர்களுக்கு வேறு தொழில்களும் தெரியாது. அதோடு சினிமாவில் வேலை பார்த்தவன் என்று சொன்னால் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் என்பதைப்போல இவர்களின் சமூகம் இவர்களைப் பார்க்கக்கூடும். ஜெயிலுக்குக் போவதைவிடவும் சினிமாவுக்குப் போவது கொடுமையானது என்பதாகவும் ஓர் எண்ணப்பெருக்கு உண்டு. ஏனென்றால் ஜெயிலுக்குப் போனவன் திருந்தி வருவான், சினிமாவுக்குப் போனவன் கெட்டு வருவான் என்கிற எண்ணப் பதிவை ஒரு சந்ததியின் அத்தனை மூளைகளிலிருந்தும் அகற்றுவது அத்தனை சுலபமானதல்ல.

இப்போது எம்பியே படித்த மணிரத்தினம் எம்பியே படித்தவர்களை மட்டும்தான் உதவி இயக்குனர்களாக வைத்துக்கொள்கிறார் என்பதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் டாக்டர் ராமதாஸ் இயக்குனரானால் எம்பிபியெஸ் படித்தவர்களை மட்டும்தான் உதவிக்கு வைத்துக்கொள்வார் என்பதாகவே தெரிகிறது. இப்படியெல்லாம் சட்டம் போட்டிருந்தால் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் தனியாளாகத்தான் சாம்பார் தயாரித்திருக்க வேண்டும். எம்பியேவாவது வெறும் பியேவுக்கே அப்போது வகையில்லை. பியே படித்தால் பாங்க்கிலோ, கருவூலத்திலோ வேலை காத்திருக்கும்போது என்னத்துக்கு சினிமாவுக்கு பிள்ளையை அனுப்பவேண்டும் என்கிற நிலைப்பாடே அப்போது இருந்தது. நான் வேலை பார்த்த யூனிட்டில் எனக்கு மட்டும்தான் இங்லீஷ் தெரியும் என்பதாக மொத்த யூனிட்டே முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தது. ஒரு காலேஜ் ட்ராப் அவுட்டுக்கே அவ்வளவு மரியாதை!

இந்த வெகண்டையையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், இப்போது காலம் முற்றிலும் மாறிவிட்டது. இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள் என்றால் கலைப்படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை ஆபாவாணன் முதலானவர்கள் உடைத்துக் காட்டிய பிறகே தமிழ் சினிமாவில் டியெஃப்டி எனும் படிப்பு டைட்டில் கார்டுகளில் தென்படத் தொடங்கியது. ஆனால் அப்போதும் உதவி இயக்குனர்கள் என்கிற பட்டியலில் அந்தப் படிப்புக்கான வாசனையும் இல்லை. இப்போது அந்தச் சூழல் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக கோவையில் எனது நண்பர் ஜீவாவின் மகன் ஆனந்த், விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தார். அடுத்தது சினிமாவுக்குள் இறங்கப்போகிறார் என்று பார்த்தால், சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் ஒளிப்பதிவாளருக்கான படிப்பில் சேர்ந்தார். எனக்கு ஆச்சரியம். அதையும் முடித்துவிட்ட பிறகே, நீரவ்ஷாவிடம் தற்போது உதவி ஒளிப்பதிவாளராக இணைந்திருக்கிறார். என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால், ஜீவாவின் சொந்தத் தம்பி இந்தியில் முன்னணி காமிராமேன்! ஷாரூக்கானின் ஆல்டைம் ஃபேவரிட்டான மணிகண்டன்! என் சித்தப்பாவெல்லாம் இப்படி இருந்திருந்தால் நான் எஸ்ஸெஸ்ஸெல்ஸி கூட தேறியிருக்க மாட்டேன். (வாரிசு நடிகர்களைப் போல!)

ஆக, இந்த மாற்றங்கள் நல்லவையே! சென்னைக்குப் போகிற ரயிலில் ஏறினால் சினிமாவில் சேர்ந்துவிடலாம் என்பதாக இளைஞர்கள் நினைத்த காலம் இப்போது மலையேறிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது. போகிற வழியில் போனால்தான் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர முடியும் என்பதோடு போகிற இடம் என்பதும் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

டூரிஸ்ட் விசாவை வைத்துக்கொண்டு மலேஷியாவில் பதுங்கி, கிடைத்த வேலையைப் பார்த்து காசு சம்பாதிக்கலாம் என்கிற மனோபாவம் போன்றதுதான் சினிமாவில் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமலே சினிமாவுக்குப் போவதும். அப்படிப் போனவர்களில் பலரும்தான் உதவி இயக்குனர் என்கிற மாயமான வலையில் விழுந்து ஊரும் பேரும் சீரும் கெட்டு திசைகளின் நடுவில் திக்கித்து நின்றுகொண்டிருப்பவர்கள்.

சென்னையில் வாழும் பல உதவி இயக்குனர்களைப் பற்றியும் பொதுவாக ஒரே விதமான கருத்தே நிலவுவதும் இதனால்தான். உதாரணமாக என்னுடைய எழுத்தாள நண்பரொருவர் அடிக்கடி சொல்வார், இந்த அசிஸ்டென்ட் டைரக்டர் என்பவன் அதைச் சொன்னான் இதைச் சொன்னான் என்று என் எழுத்தைக் குறை கூறினால் கொன்னேபுடுவேன் என்று! அவர் பெயர் வேண்டாம். ஏனென்றால் இருதய நோயாளிகளை இரும்புக்கம்பியால் தாக்குவது இறையாண்மைக்கு அழகல்ல!

என் திரையுலக நண்பர்களில் பலரும் இவ்விதமான கருத்தாக்கத்தால் தாக்கப்பட்டு வருவதுண்டு. வருத்தமாகத்தான் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய ஸ்க்ரிப்ட்டை இன்றைக்கும் கையில் சுமந்துகொண்டு அலையும் பல நண்பர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு ஒரு ப்ரொட்யூசர் கிடைத்து அதைப் படமாக்கினால் அதோடு முடிந்தது உங்கள் சோலி என்று திரும்பத் திரும்ப அவர்களிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பழித்ததுபோல என்னைப் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியான ராமேஸ்வரம் என்கிற படத்தை அவர்களுக்கு உதாரணமாகத் தருகிறேன். பழைய ஸ்க்ரிப்டுகளை தூசி தட்டினால் அந்தப் படத்துக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும்!

காலம் கடுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களோடு இப்போது நீங்கள் போட்டி போட வேண்டும். துறை சார்ந்த படிப்பு, இளமை என்கிற இரண்டு கண் துப்பாக்கியை அவர்கள் கஸாபைப்போல கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களோடு போட்டி போட உங்களிடம் இருப்பது அனுபவம் என்கிற பீரங்கி. ஆனால் அதனை ம்யூசியத்திலிருந்து நீங்கள் மீட்டுக்கொண்டு வந்தால்தான் காரியம் ஆகும்!

7 comments:

வண்ணத்துபூச்சியார் said...

அருமையான அலசல்.

வலையிலும் தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துகள்.

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நம்ம பதிவும் படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு விவரம் நிங்களே பார்த்துகோங்க
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_17.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

Cable Sankar said...

super அருமையான நிதர்சனமான பதிவு நண்பரே..

கிரி said...

//காலம் கடுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களோடு இப்போது நீங்கள் போட்டி போட வேண்டும். துறை சார்ந்த படிப்பு, இளமை என்கிற இரண்டு கண் துப்பாக்கியை அவர்கள் கஸாபைப்போல கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களோடு போட்டி போட உங்களிடம் இருப்பது அனுபவம் என்கிற பீரங்கி. ஆனால் அதனை ம்யூசியத்திலிருந்து நீங்கள் மீட்டுக்கொண்டு வந்தால்தான் காரியம் ஆகும்!//

அருமையாக கூறி இருக்கிறீர்கள்.

காலத்திற்கு தகுந்தாற் போல் நம்மை மாற்றி கொள்ளவில்லை என்றால் நாம் பின் தங்கியே இருப்போம் என்று தெளிவாக கூறி உள்ளீர்கள், அது மறுக்க முடியாத உண்மையும் ஆகும்.

நம் மீது நம்பிக்கை வைப்பது தவறில்லை ஆனால் அது அர்த்தமுள்ள நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே அதனால் பயன்.

கடும் உழைப்பும் தேடலும் மட்டுமே ஒருவருக்கு வெற்றியை பெற்று தராது, நடைமுறையை உணர்ந்து இருந்தால் மட்டுமே அதை நாம் பெற முடியும்.

நல்ல பதிவு

ஆதவன் said...

nalla arumaiyana katturai..

DaVimciCode said...

nice article

Rajan said...

aiyayyo, just now i read this post. i never knew that u were an assistant director! i wrongly assumed that u are not not involved with films and i had requested u to come to film world. now a correction- 'come back to film world!
i am sure u will get a break.