April 17, 2009

குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே!

இந்தக் கட்டுரைத் தொடரின் வெகுமுதல் பாராவை அலங்கரித்த ஒருசில அற்புதங்கள் பின்வருவன...

ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள்...
இந்தப் பட்டியல் இன்னும் நீளக்கூடியது. விஜயலலிதாவின் கபடம், டிஸ்கோ சாந்தியின் ஆண்மை, குயிலியின் கள்ளத்தனமான புன்னகை, பபிதாவின் பின்பக்கம், ஷர்மிலியின் முன்பக்கம், ஷகிலாவின் சதைப்பிளவுகள்...
எத்தனை முறை சொன்னாலும் ஆண்களின் நாக்கில் எச்சிலையும் பெண்களின் வாக்கில் எரிச்சலையும் ஊற வைக்கிற பட்டியல் இது.

ஹெலன் கிலன் என்று இந்திப் படங்களைப் பார்த்துதான் தமிழிலும் இந்த மாதிரியான ஒரு வகைமை உற்பத்தி செய்யப்பட்டது. சாதாரணமாக பார்களில் நடக்கிற காபரே நடனமாகவே இவை ஆதிகாலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பிறகு விவாதக்குழுக்களின் சால்ஜாப்பு வாதங்களில் இவ்வாறு அவை திரிந்திருந்தன. அதாவது பார்கள் அல்லது காபரேக்கள் என்பது ஹீரோக்கள் போகிற இடமல்ல. அது வில்லன்கள் போகிற இடம். அந்த இடங்களில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிற பெண்கள் காணப்படுவது சகஜம். அப்படியானால் வில்லன்கள் இன்னும் கொஞ்சம் வசதியாகிறபோது தங்களுக்கென்று அந்தப்புரம்போல சில இடங்களை நிர்மாணித்துக்கொண்டு அந்தப் பெண்களைத் தங்கள் பங்களாவிலோ அல்லது அண்டர் கிரவுண்ட் ஃப்ளோர்களிலோ ஆட வைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதிலும் அகில உலக கடத்தல் மன்னர்களின் மாநாடு பகிரங்கமாக ஒரு பொதுவான பாரில் எப்படி நடக்க முடியும்? அப்படி ரகசியமாக நடக்கிற மாநாட்டில் மதுவும் மாதுவும் ஆட்டமும் பாட்டமும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இந்த நியாயமான காரணங்களால் வில்லன்களின் இருப்பிடங்களிலேயே கற்பிலாப் பெண்டிர் காலிற் சலங்கைகளும் இல்லாமல் சதிராடுவதில் என்ன தப்பு இருக்க முடியும்?

இப்படியெல்லாம் யோசிக்கப்பட்டு யோசிக்கப்பட்டு காபரே பார்களிலிருந்து மாளிகை செட்டுகளுக்கு வந்து சேர்ந்தார்கள் எங்கள் கவர்ச்சிக் கன்னியராம் கனவுக்கன்னிகள்! அதன் அடுத்த டெவலப்மென்ட்டாக அவர்கள் கதையின் மற்ற பாத்திரங்களின் மீது லைவ் பாம்களாக ஏவப்பட்டார்கள். அவர்களில் ஹீரோக்கள் முதல், பணக்காரர்களான ஹீரோக்களின் அப்பாக்கள், சகோதரர்கள் என்று யாரும் விதிவிலக்கல்ல. அந்தப் பெண்களின் வேலை ஏவப்படுபவனின் உடன் இருந்து, ஆட்டமாடிப் பாட்டுப்பாடிக் காட்டக்கூடாததையெல்லாம் காட்டிக்காட்டி அவனை அப்படியே வசப்படுத்தி, குறிப்பிட்ட இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டிச் சென்று சேர்க்கவோ, பத்திரங்களில் கையெழுத்து வாங்கவோ, அல்லது இன்னும் அடுத்த கட்டமாக, தங்கள் கையாலேயே கொன்றுவிடவோ செய்வதுதான்!

இவர்களுக்கு பிற்பாடு தவறாமல் ஒரு கடமையும் வழங்கப்பட்டது. உச்சக் காட்சியில் வில்லனும் ஹீரோவும் நேராக மோதும்போது இவர்கள் டைட்டாக கால்சராய் அணிந்துகொண்டு ஹீரோயினோடு கட்டிப் புரண்டு சண்டை போட வேண்டும். இந்த விதிக்கு ஆங்கிலப் படங்களும்கூட விலக்கல்ல.
அதுவும் போனால் சில நேரங்களில் இவர்கள் ஒரு அயோக்கியத்தனத்தைச் செய்துவிடுவார்கள். ஹீரோவின் நல்ல மனத்தைப் பார்த்தோ, அல்லது வில்லனிடம் அடிமையாக இருப்பது பிடிக்காமலோ, உள்குத்தாக வில்லன் அவர்களின் உறவினர்கள் யாரையாவது ஒளித்துவைத்து டபுள்கேம் ஆடுகிறான் என்பதாலோ, கடமை தவறி, ஹீரோவுக்கு வில்லன் குறித்த ரகசியங்கள் சிலவற்றைத் தெரியப்படுத்திவிடுவார்கள். இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டால் நாம் உடனே கொஞ்சம் வாய்க்கரிசியும் ரெண்டு லிட்டர் பாலும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அழகு எப்போதுமே ஆபத்தானது என்பதன் அடையாளமாகவே இந்த மாதிரி பெண் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்று சினிமா சப்பைப்கட்டு கட்டக்கூடும் என்று என்னால் எழுத முடிவில்லை. அப்படி எழுதினால் அது உண்மையாகாது. ஆரம்பத்திலிருந்தே நடிகைகளை அவிழ்த்துக் காட்டுகிற ஆசையில்தான் சினிமா குறியாக இருந்தது. சாதாரணமாக வீதியில் முந்தானை விலகினால் அத்தனை கண்களும் அந்தப் பக்கம் திரும்புவதன் அடுத்த பரிமாணமே இது. ஆகவே இது மிகவும் இயல்பானதே! சினிமாக் கலைஞனின் வேலை என்ன, எது பார்வையாளனைக் கவருகிறதோ அதை அவனுக்குக் கொடுக்க வேண்டியது! முலைகள் கவர்ந்தால் முலைகளைக் கொடுத்துவிடவேண்டியதுதான்! தொப்புள் கவர்ந்தால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிடவேண்டியதுதான், அல்குல் சென்சாரால் தடை செய்யப்பட்ட பகுதி என்பதனால் அதன் குறியீடாகவே இந்தத் தொப்புள் பல படங்களிலும் செயல்பட்டு வந்திருக்கிறது.

அதோடு ஒரு கவர்ச்சி நடிகை நடனமாடும்போது வெறும் நடனம் மட்டுமா நடக்கிறது? குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே! என்று ஒரு வசந்த விழாவே அல்லவா நடந்தேறுகிறது! சாதாரணமாக பாட்டுவந்தால் தம்மடிக்கப் போகிற தம்பிகள் யாரையாவது இந்தப் பாடல்களில் வெளியே போகச் சொல்லுங்கள் பார்க்கலாம், தம்முக்கு பதிலாக விரலை வாயில் வைத்துக்கொண்டு விசிலடித்துக்கொண்டிருக்கும் அவர்களின் காதுகளில் உங்கள் வார்த்தைகள் விழுவது சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்.

இதனாலேயே கவர்ச்சி நடிகைகள் என்கிற வம்சமொன்று எமது மொழியிலும் உற்பத்தி செய்யப்பட்டது. அவர்கள் துணிச்சலானவர்கள் என்பதாக பரவலாக ஒரு கருத்து வேறு! இதில் எதிர்பாராத விதமாக அவுட் டோரில் நடக்கிற ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயமாலினியோ சில்க் சுமிதாவோ நடித்துக்கொண்டிருந்தால் அந்த இடத்தில் பெரும் காத்திருப்பு நிகழும். நடிகை ஒரு குடைக்குக் கீழே காணும் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள். அவளது உடம்பை ஒரு போர்வை முழுவதும் போர்த்தியிருக்கிறது. இந்தக் கோலத்திலேயே அவள் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் உட்கார்ந்திருக்கிறாள். மத்த படவாக்கள் எல்லாம் காமிராவைத் தூக்கவும், வைக்கவும், ட்ராக்குகள் போடவும் கீடவும், லைட்டுகளை நிறுத்தவும் கொள்ளவுமாக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகையைக் கூப்பிடுகிற வகையாகவும் இல்லை, அவள் அந்தப் போர்வையை விலக்குவதாகவும் இல்லை. வெய்யிலானால் சுட்டெரிக்கிறது. அதைவிடவும் அதிகமாக உள்ளேயிருந்து ஒன்று சுட்டெரிக்கிறது. போர்வைக்குள் அவள் அணிந்திருக்கும் ஆடை எந்த அளவுக்கு சிறியதாக இருக்கும் என்கிற மனநெருப்பு தகதகவென்று எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சொப்பன உச்சத்திலேயே ஸ்கலிதமாகிவிடும்போல இருக்கிறது. கடைசியாக ஒருவழியாக ரெடி என்று ஒரு ஓசை கேட்கிறது. அதைத் தொடர்ந்து திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்வதுபோல மாபெரும் மனிதக்கூட்டத்தின் கோஷம் வானைப் பிளக்கிறது.

இந்த அவலத்தை பலரும் பலவிதமாகக் கதைத்துக்கொண்டிப்பார்கள். சினிமாவிலேயே அவிழ்த்துப் போட்டு ஆடுகிறாள், நேரில் காட்டினால் என்ன? அந்தப் படுபாவிகளுக்கு அவர்கள் சொல்ல விரும்பும் பதில் இப்படி இருக்கலாம், சினிமாவில் பாம்பு கடிக்கிறது என்பதற்காக உண்மையில் அதைக் கூப்பிட்டு நாகமே நாகமே ஒரு நக்கு நக்கிவிட்டுத் தீண்டு என்று சொல்ல முடியுமாடா முட்டாள் காமுகர்களா!

நீண்ட நெடும்காலம் இருந்துவந்த இந்த நடனப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்தது. டைட்டில் கார்டில் ஹீரோ பெயருக்கப்புறம் கவர்ச்சி நடிகையின் பெயர்தான் கைதட்டல் வாங்கி வந்திருந்த சாதனை ஒருநாள் முறிந்தது. நாயகிகளின் கண்கள் மாரியம்மனின் கண்கள் போல திறந்துகொண்டன. அவர்கள் ஏகாந்தத்திலும் அந்தரங்கப் பொழுதுகளிலும் தங்கள் உடலைத் தாங்கள் பார்க்கவும் மற்றவர்கள் பார்த்துச் சொல்லவும் அறிந்துகொண்டார்கள். இப்படி திண்ணென்று இவ்வுடம்பு இருக்கும்போது இன்னொரு உடம்பு வந்து என்ன, காசையும் ரசிக உள்ளங்களின் மனசையும் கொள்ளை கொண்டு போவது என்று அப்போது அவர்களின் மனங்களில் ஒருவிதமான மயக்கம் தோன்றியது. அது ஒருவழியாக நிலைபெறவும் செய்தது. ஸ்ரீப்ரியா முதலான நாயகிகள் முலைகளின் பிளவுகளை ஜீனத் அமன்களை அடியொற்றி வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். மாதவிப் பொன் மயிலாள் இன்னும் ஒரு படி உயரம் போய் டூபீஸில் ஒரு தோற்றம் கொடுத்தாள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அத்தனை குறைவான துணியில் தைக்கப்பட்ட டூபீஸ் வேறொன்று இருக்க முடியாது. டிக்டிக்டிக் படத்தில் அந்த இளநீல டூபீஸ் உடையில் மாதவியைப் பார்த்தபோது மனந்தடுமாறி விழுந்தெழாதவர்கள் என்பதாக ஒருத்தரும் இருந்திருக்கவில்லை. இன்றைக்குத்தான் எஃப் டீவி கிஃப் டீவியெல்லாம். அன்றைக்கு மாதவிதான் ஒட்டுமொத்த தமிழ் தேயத்தின் ஃபேஷன் சேனலே!

இப்படியாரம்பித்த இந்த திவ்ய தரிசனங்கள் வில்லன்கள் முன்னால் நாயகிகள் ஆடுகிற அளவுக்குக் கொண்டு சேர்த்தது. இது பரிணாமத்தின் தவிர்க்க இயலாத அடுத்த வளர்ச்சி என்பதாக சினிமா சொல்லக்கூடும். ஆனால் அது எப்படி நியாயமாகும்? வில்லன் முன்னால் தன்னுடம்பைக் காட்டிக்கொண்டு நாயகி ஆடினாள் என்றால் அவள் எப்படி கற்புடையவளாகக் கருதப்பட முடியும் என்று ஒரு பெரும் விவாதம் எழுந்த வகையில்தான் இந்த அடுத்த விபத்தும் நேர்ந்திருக்கக்கூடும். நாயகியோடு நாயகனும் ஆடினால் முடிந்தது கதை! அது எப்படி? நாயகனைத்தான் வில்லனுக்கு அடையாளம் தெரியுமே! அதனால் என்ன? ஒட்டு தாடியைத் தாடையில் பொருத்தினால் அடையாளம் தெரியாமல் போய்விட்டுப் போகிறது. சிம்ப்பிள்!

அடப்பாவிகளா!

இந்த அட பாவிகளா என்கிற வியப்பு கவர்ச்சி நடனத்தின் மீதான எனது எதிர்க்குரல் என்று தப்பிதமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். எனக்கு கவர்ச்சி நடனங்கள் ரொம்பவும் பிடித்தமானவை. எனது எதிர்க்குரல் இப்படியெல்லாம் லாஜிக் யோசித்தவர்களின் மீதுதான்!

எனது ஆல்டைம் ஃபேவரிட்டாக உள்ள கவர்ச்சி நடனம், அன்னை ஓர் ஆலயம் படத்தில் ஜெயமாலினி ஆடிய இரவு நேரம், நிலவு காயும் என்கிற பாடலுக்கானதுதான். அதிக விரசமில்லாத அழகான நடனம் அது. பாடலும் மிகவும் சொக்க வைக்கக்கூடியது. ஜெயமாலினியின் ரோஸ்நிற இடுப்பும் அதன் குடுவைத்தனமான அமைப்பும் பார்க்கப் பார்க்கக் கிறங்கடிக்கக்கூடியது. நமது கோவில் சிலைகளில் காணும் சாமுத்திரிகா லட்சணத்தோடு பிறந்த முக்கியமான அழகி ஜெயமாலினி என்பதில் எனக்கு எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. சிம்ரனின் இடுப்பிலும் இந்தக் காலத்திலும் டூபீஸில் நடிக்க அஞ்சும் நயன்தாராவின் பில்லா இடுப்பிலும் மயங்கிக் கிடக்கும் இளம் மனங்கள் தயை கூர்ந்து நான் மேற்சொன்ன பாடலை அடுத்தமுறை உங்களிடம் மைக்கை முன்னால் நீட்டி நீங்கள் விரும்பும் பாடல் எது என்று கேட்கும் டீவிக்குட்டியிடம் கேளுங்கள். அகில உலகமும் உங்களை வாழ்த்திப் பாடும்.
சாதாரணமாக கவர்ச்சி நடிகைகள் அல்லது நடிகைகளின் கவர்ச்சி என்பதாக எழுதப் புகும் புளுகுணி ஆசாமிகள் அவர்கள் வாழ்வின் விளிம்பிற்கு விரட்டப்பட்டவர்கள், தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதாகவெல்லாம் டுபாகூர் கட்டுரைகளாக எழுதி உங்களின் கண்களைப் பனிக்க வைக்க முயன்று வருகிற வன்கொடுமைக்கு எதிராக என்னால் உருப்படியாக ஒரு கட்டுரை எழுத முடிந்ததற்காக பெண்ணுடம்பின் மென்சதைகளை தளதளப்பாகத் தொடர்ந்து படைத்துவரும் இயற்கையின் தன்மையைத் தொழுகிறேன்.

வசந்த விழாக்களும், களவு மணங்களுமாக நமது பாட்டன்களின் பாட்டன்மார்களும் பாட்டிகளின் பாட்டிமார்களும் கும்மாளமிட்ட தேயமிது. காமசூத்திரங்களும், மதனநூல்களுமாக எதிர்ப்பாலின் உடலை எவ்வாறெல்லாம் ரசிக்கலாம் என்பதை அனுபவித்து அனுபவித்து உலகத்திற்குக் கொடுத்த தேயமிது. போகிறவன் வருகிறவனெல்லாம் அடித்த கொள்ளையில் வறுமை என்கிற கொடிய நோய் பீடித்த வகையில்தான் எமக்கு எம்மைக் கட்டிய பெண்களின் நிர்வாணத்தைக்கூட ரசிக்க இயலாத பொறுமையிழப்பு நிகழ்ந்துவிட்டதே தவிர, அது உண்மையில் எமது யதார்த்தமான குணாதிசயமல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

No comments: