April 17, 2009

பாட்டெழுத்துப் பாரம்பர்யம்

சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம் உருவாகும் என்று ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடல் ஒரு தமிழ் சினிமாவில் வந்ததுதான் என்றபோதும் பெரும்பாலும் யாருக்கும் நினைவிருக்க வாய்ப்பில்லை. பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் இந்தப் பாடல் வந்தது. ஆயினும் ஞாபகத்தில் தேங்காததற்குக் காரணம் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டு அந்தப் படத்தின் பாடல் தொகுப்பில் இணைக்கப்படாததுதான்.
கதையின் நாயகன் சினிமாப் பாட்டெழுதும் ஆசையில் பட்டணம் வந்து கம்பெனிகம்பெனியாக ஏறி இறங்குகிறான். கடைசியாக அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு தயாரிப்பாளர் அவனை பாடல் சொல்லச் சொல்கிறார். அந்தநேரத்தில் அவனுக்கு ஒரு வரியும் வந்து தொலைய மாட்டேனென்கிறது. சரி, முகத்தை கிகத்தைக் கழுவிக்கொண்டு வா, பதட்டம் தணியும் என்று அவனை குளியலறைக்குள் அனுப்புகிறார்கள். அங்கே ஷவரிலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்துகொண்டிருக்கிறது. அந்தச் சொட்டுக்களிலிருந்து வெள்ளமெனப் புறப்படுகிறது அவன் மனத்தில் கவிதை. ஷவரில் நனைந்த கோலத்தில் அவன் மேற்சொன்ன வரிகளைப் பாடியவனாக அந்த அறைக்குள் பிரவேசிக்கிறான். அவ்விதமாகஅவனது கலைப்பயணம் தொடங்குகிறது.


இது பாரதிராஜாத்தனமான காட்சி விஸ்தரிப்பானாலும், ஒரு பாடல் என்பதன் இன்ஸ்பிரேஷன் எங்கிருந்தெல்லாம் கிடைக்க முடியும், கவிஞனின் எவ்விதமான மனநிலை ஒரு நல்ல பாடலைக் கொடுக்க முடியும் என்பதற்கான ஒரு எளிய உதாரணமாகசொல்லப்பட வேண்டியது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இப்போது ஒரு பாடலைப் பார்க்கலாம், சிறுபொன்மணி அசையும், அதில் தெறிக்கும் புது இசையும். இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்ஙு இந்த வரிகள் எந்த மாதிரியான உன்னதப் பொழுதில் கவிஞனின் மனத்தில் உதித்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இப்படியொரு வரிஎழுதிக்கொண்டிருக்கும்போது கவிஞனிடம் ஒரு கத்தியைக் காட்டினாலும் குத்திவிட்டுப் போ என்றுதான் சொல்வான் என்பதே உண்மை.சும்மாவேணும் மனத்தின் அசைக்கு ஏற்பப் பாடல் எழுதும்போதே மனம் இத்தனை உற்சாகம் கொள்ளும் என்று சொன்னால், இசையின் அசைக்கும் ஏற்ப இந்தமாதிரியானஅற்புதமான வரிகளைப் பிரசவம் செய்ய முடிகிற பொழுதுகள்தானே கவிஞனின்உச்சக்கட்ட வாழ்க்கைப் பொழுதுகளாக இருக்க முடியும்!

சிறுபொன்மணி போன்ற பாடல் இன்றைக்கு ஏன் எழுதப்படுவதில்லை? காலமாற்றம்சினிமாக் கவிக்குள்ளும் நுழைந்து கவித்துவத்தைக் களவாடிக் கொண்டுவிட்டதா?அல்லது கவிஞன் தன் கலையுச்சம் முடிந்து கீழே இறங்க ஆரம்பித்துவிட்டானா?அப்படியானால் இன்னொரு கவிஞன் உச்சநிலையை எட்டுவது ஏன் சாத்தியமற்றுப்போயிருக்கிறது?

சாதாரணமாகவே எல்லோரும் குறிப்பிடும் பாடலான வைரமுத்துவின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே, வைரமுத்துவின் உச்சம் என்றே தோன்றுகிறது. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது என்று சொல்லும்போது அந்த உரசலில்தான் கவிதை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது. பகலும் இரவும் உரசினால்தானே அந்திப்பொழுது, இரவும் பகலும் உரசுவது அதிகாலைப் பொழுதல்லவா என்றெல்லாம் லாஜிக் பேசக்கூடாது. உதாரணமாக என் முந்தைய கட்டுரையில் ஜெயமாலினியின் நடனப் பாடல் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். அன்னை ஓர் ஆலயம் படத்தில் வந்த இரவு நேரம், நிலவு காயும்... என்கிற பாடல். நல்லகாலமாக திரும்பவும் அந்தப் பாடல் பார்க்கக் கிடைத்தது. என் ஞாபகத்தில் உள்ள 'லாஜிக் பேழை"யால் நேர்ந்த பிசகு அப்போதான் தெரியவந்தது.

இரவு நேரம் நிலவு காய்வதில் என்ன கவிதை இருக்கிறது? பாடல் இவ்விதமாக இருக்கிறது, 'நிலவு நேரம், இரவு காயும்.' இதுதானே கவிஞனின் வேலை. இரவு நேரத்தில் நிலாக்காய்கிறது என்கிற லாஜிகல் மனோபாவம் அவ்விதமாகக் கவிதையைத் தவறாக மனத்தில் பதித்திருக்கிறது. கவிஞனுக்கு லாஜிக் தேவையில்லை. அது கதாசிரியனுக்கும் திரைக்கதாசிரியனுக்குமானது. அவர்கள்கூட ஒருசில காட்சிகளின் கவித்துவநிலைக்காக லாஜிக்கை தந்திரமாக மீறுவது உண்டு என்கிறபோது கவிஞனிடம் எதற்கு இந்த விதண்டாவாதம்!

இருந்தாலும் அறிவியல்தான் வளர்ந்துகொண்டே போகிறதே தவிர, கலை தேய்ந்துகொண்டேதான் போகிறது என்கிற உலகியல் நடப்பின்படிக்கு கம்பன்,
இளங்கோ, பாரதி என்று வந்த வம்சம் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய் என்று படிப்படியாகத் தேய்ந்துகொண்டேதான் போவது தவிர்க்க இயலாததுதான். நுகர்வாளனின் ரசனை காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே போகையில் அதன் தரமும் தேய்ந்துகொண்டே போவதுதான் கொடுமை. அதற்குக் கவிஞன் என்ன செய்வான் பாவம்!

கோவையில் வெள்ளியங்காட்டான் என்று ஒரு கவிஞர். அவர் இறந்தபிறகு அவரதுமகளின் முனைப்பால் அவரது கவிதைகளை வெளியிட்ட பணியில் நானும் இருந்தேன்.புத்தக ஆக்கத்துக்காகத்தான் அந்தக் கவிதைகளை வாசித்தேன் என்றபோதும் பாரதியின் சாரம் அப்படியே அதில் இருந்தது கண்டு வியந்து போனேன். சிறுபிரதேசத்தில் வறுமையின் பிடியிலும் வைராக்கியத்தை இழக்காமல் கவிஞன் என்கிற அகம்பாவத்தோடு வாழ்ந்து முடித்த அந்தக் கவிஞன் சினிமாவுக்கு பாட்டெழுதியிருக்க முடியுமா?
சினிமாப் பாடல் என்பது சிலருக்கு மிகவும் சுலபமானது. அதைக்காட்டிலும் பல உன்னதங்களை செய்து காட்டிவிடும் சிலருக்கோ மிகவும் புதிரானது. இன்றைய திரைக் கவிஞர்கள் பொதுவாக நவீன கவிதை குறித்த பிரக்ஞையை புரியாமொழி, அனாவசியமான புதிர்மொழி என்பதாகவெல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தவிர்த்தே வருகிறார்களோ (இதற்கு நாமுத்துக்குமார் விதிவிலக்காக இருக்கக்கூடும்), அதேபோல்தான் நவீன கவிஞர்களும் சினிமாப் பாடல்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.
பாட்டெழுத்து பெரிய வித்தையொன்றும் இல்லை என்றபோதும் பெரும்பாலான நவீனகவிஞர்கள் சந்தம் அசை என்று ஒரு இளவும் தெரியாமல் கவிதை எழுதிக்கொண்டிருப்பதே இதற்கான காரணம். மாடர்ன் ஓவியங்கள் வரைகிற ஓர் ஓவியரை உங்கள் முகத்தை வரைந்துகொடுக்கச் சொல்வதுபோல இது. நல்ல நவீன ஓவியன் ஓவியத்தின் அடிப்படைகளும் தெரிந்தவனாகவே இருக்கிறான் என்பதால் அவனுக்கு அது இடதுகை செய்கிற வேலை. இதேபோல்தான் நவீன நாட்டியங்களை நிகழ்த்தும் கலைஞர்கள் பாரம்பர்ய நாட்டியங்களை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நவீன கவிஞர்கள் வெண்பா எழுத வேண்டாம், குறைந்தபட்சம் சந்தம் என்றால் என்ன என்பதுகூட தெரியாமலா இருப்பது?

சிலவருடங்களுக்கு முன்னால் மரபுக்கவிதை மற்றும் சந்தக் கவிதை மட்டுமே புனையும் நண்பரொருத்தரிடம் எழுத்தாளர் ஜெயமோகன் நவீன எழுத்தார்களை நான் அழைத்து வருகிறேன். அவர்களுக்கு செவ்விலக்கியத்தை அறிமுகம் செய்துவையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டதோடு முடிந்துபோன விஷயம் அது. கட்டுச் சோத்துக்குள் பெருச்சாளியைக் கட்டிவைக்க சந்தக் கவிஞனும் விரும்பமாட்டான், தன் சுதந்திரத்தை இழந்து கட்டுச் சோத்துக்குள் பொதிந்துபோக நவீன கவிஞனும் விரும்பமாட்டான் என்பதைத்தான் காலம் அறியுமே!

மலையாளத்தில் உள்ளதுபோல் நவீன கவிதையும் பாடத்தகுந்த சந்தக் கவிதையாகவேஇருக்க வேண்டும் என்கிற கோஷத்தோடு தமிழகம் முழுக்க வலம் வந்துகொண்டிருந்தகும்பகோணம் சிலிக்குயில் வே மு பொதியவெற்பன்தான் என் நினைவுக்குவருகிறார். ஆரண்யம் வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் அவர் எங்களை வந்துசந்தித்தார். ஒருநாள் எங்களோடு தங்கியிருந்தார் (எங்கள் என்பது நானும் ஸ்ரீபதி பத்மநாபாவும் என்பதை ஒபாமா கூட அறிவார்!). அப்போது அவரது இந்தப் பிரகடனம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. நவீன கவிதை என்பது மிகவும் நுணுக்கமானது மற்றும் மிகவும் சுதந்திரமானது. சந்தக்கவிதை மற்றும் மரபுக் கவிதை என்பது சந்தம் மற்றும் மரபு என்கிற அடைப்புகளின் காரணமாகவே வேண்டாத வார்த்தைகள் நிறைந்தது என்பதாக இருந்தது என்னுடைய வாதம்.
பிற்பாடு சாம்பல் என்று நான் கொண்டுவந்த இதழில் நுண்கவிதை என்பதாகக்கூடஒரு வடிவத்தை முன்வைத்தேன். நேனோட்டரி (நேனோ பொயட்ரி என்பதன் சுருக்கம்)என்பதாக அதற்கொரு ஆங்கிலக் கலைச்சொல் வேறுஙு (உலக அளவில் போகும்போதுஉதவும் பாருங்கள்!) அனந்தஷங்கர், லக்ஷ்மி மணிவண்ணன், பாலைநிலவன்ஆகியவர்களின் சில கவிதைகள், நுண்கவிதைகள் என்றும், யவனிகாஸ்ரீராம்,சிபிச்செல்வன், மகுடேசுவரன் முதலானவர்களின் கவிதைகள், கவிதைகள் என்றும்அதில் வெளிவந்தன. அவற்றை வாசித்துப் பார்க்குங்கால் நான் முன்வைத்தநுண்கவிதை என்பதன் நுட்பம் புரியும். சாம்பல் நின்றதோடு இந்த அடைப்பும்முடிந்துபோய்விட்டது. நவீன கவிதை நவீன கவிதை என்று உயிரை விடுபவர்கள்இதைக்குறித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை என்பதே அவர்கள் கொண்டுள்ளஅக்கறைக்கான நல்லுதாரணம்!

ஆனாலும் இந்த அனுபவங்களின் பிறகே பொதியவெற்பனின் ஆதங்கம் புரிகிற மாதிரிஇருந்தது. இப்போது தபூசங்கர், வைரமுத்து முதலானவர்கள் எழுதுகிற பாணியில் எழுத ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தும் புரியாமலும் நவீன கவிதைகளுக்குள் பிரவேசித்து, பின் மரபுக் கவிதை வெண்பா என்பனவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் தண்டியலங்காரத்தைக் கையில் வைத்துக்கொண்டு வெண்பா, கோமூத்ரி, எட்டாரைச் சக்கரம், நாகபந்தம் என்ற எழுதிப் பார்த்து, சில ஆல்பங்களுக்குப் பாட்டெழுதி, நவீன கவிதைகளின் பல சாத்தியங்களையும் முனைந்து பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது இது சரி இது தவறு என்கிற முடிவுக்குள் என்னால் வந்து சேர்ந்திருக்க முடியவில்லை.

நாவலாசிரியர் நாஞ்சில்நாடனின் ஒரே கவிதைத் தொகுப்பான மண்ணுள்ளிப் பாம்புவெளியீட்டில் அவரது கவிதைகள் அவுட் டேட்டட் என்று குறிப்பிட்ட எனது தைரியம் இப்போது சருக்குகிறது. எது கவிதை எது கவிதையில்லை என்பதை யார் தீர்மானிப்பது? உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று ஆணாயிருக்கிறது இன்னொன்று பெண்ணாயிருக்கிறது. மற்றதுதிருநங்கையாயிருக்கிறது. இதில் எது உசத்தி எது தாழ்த்தி? உங்கள்கண்ணுக்கு மூன்றும் சமானந்தானே!

நாஞ்சில் நாடன் உட்பட சில நவீன எழுத்தார்கள், விரைவில் வெளிவரவிருக்கும் படமொன்றுக்கு இளையராஜா இசையில் தலைக்கொன்றாகப் பாட்டெழுதியிருக்கிறார்கள். என் கணிப்பில் சுலபமாக இந்த வேலையைச்செய்தவர்கள் ஜெயமோகன் மற்றும் எஸ்ராமகிருஷ்ணன் ஆகியவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாஞ்சில்நாடனுக்கு கண்டிப்பாக கண்ணாமுழியெல்லாம் பிதுங்கியிருக்க வேண்டும் என்பதே எனதுஅனுமானம்.
பொதியவெற்பன் இதைத்தான் சொல்கிறார். அவரால் கண்டிப்பாக சினிமாச் சந்தத்துக்கு சிறப்பாக பாடல் எழுதிவிட முடியும் என்பதாகவே நான் நம்புகிறேன். இளையராஜாவுக்கு யாராவது கும்பகோணத்துக்கு டிக்கெட் வாங்கித் தாருங்கள்!

1 comment:

butterfly Surya said...

அருமையான அலசல்.

கடைசி வரி. பன்ச்...