June 12, 2009

எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!

சினிமா ஒரு பரிசோதனைக்கூடமா அல்லது அப்படியெந்த அவசியமும் சினிமாவுக்கு இல்லையா என்கிற கேள்வியே இதில் மிகவும் பிரதானமானது. இங்கே பரிசோதனை என்பது எது என்பதை சற்று எளிமையாக விளக்க முயன்றால், அரைத்த மாவையே அரைப்பது என்பதற்கு நேரெதிரான பதம்தான் இந்த 'பரிசோதனை முயற்சிகள்'என்கிற சொல்லாடல் என்கிற நிலையை எட்டலாம்.

தமிழில் ஏதாவது பரிசோதனை முயற்சிகள் நிகழ்ந்துள்ளனவா என்பதே இதில் ஆதாரமான கேள்வி! எஸ்ஸஸ்வாசனின் அவ்வையார் தமிழின் முதல் மிக பிரமாண்டமான படம். யானைகள் கோட்டை கொத்தளங்களை மோதி உடைக்கும் காட்சிகள் வரைக்கும் பல காட்சிகள் ஸ்டாக் காட்சிகளின் துணையில்லாமல் அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்டன. அவ்வையார் ஒரு பரிசோதனை முயற்சியா? பார்க்கலாம்.

எவ்வித முன்யோசனையும் இல்லாமல் அவ்வையார் என்கிற தமிழ்ப் பெண்கவியின் வாழ்வில் நிகழ்ந்ததாக நம்பப்பட்ட அல்லது புனையப்பட்ட காட்சிகளின் அடுக்குகளை இஷ்டத்துக்கு சுட்டுத்தள்ளிய படம். அதாவது படம் தயாரிக்கப்பட்டபோது அதற்கென்று ஸ்க்ரீன்ப்ளே என்பதாகவெல்லாம் எதுவும் இல்லை. இதில் புனையப்பட என்கிற பதம் வேறு ஏன் வருகிறது என்று கேட்டால் அவ்வையாரின் வாழ்வில் நிகழ்ந்ததாக நம் சினிமாக்கள் காட்டிய காட்சிகளின் லக்ஷணத்தைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு சாம்ப்பிள் போதும் என்று நினைக்கிறேன், பூலோகத்தில் வசித்த அவ்வையார் திடீரென்று தேவலோகத்துக்கே நாட்டாமை போல கைலாயத்துக்கே சென்று ஈசனின் இடது தொடையில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் குமரனுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்துவிடுவார் என்கிற புனைவை பின்னே வேறு என்னவென்று சொல்வது? அவ்வையார் என்ன பெண்பால் நாரதரா? திரிலோக சஞ்சாரம் செய்துகொண்டிருப்பதற்கு? அல்லது நாரதர் வைணவர்களின் ஆசாமி என்பதால் சைவர்களுக்கு இவ்விதமானதோர் அம்மையாரின் தேவை நேர்ந்தது என்பதாகக் கொள்ளலாமா? இந்த மாதிரி மீயதார்த்தக் காட்சிகளெல்லாம் நம்மாட்களின் சாதனைகள் என்பதாகத்தான் நமக்குள் நகைத்துக்கொள்ள வேண்டும்!

அவ்வையார் பிரமாண்டப் படங்களின் தோற்றுவாயாக இருந்தது உண்மைதான். பிற்பாடு சந்திரலேகா முதலான படங்கள் இதை அடியொட்டியே பிரமாண்டமாக எடுக்கப்பட்டன. ஆனால் பிரமாண்டமாக முயலப்பட்ட முதல் படங்கள் என்பதனால் இவை பரிசோதனை முயற்சிகளாக ஆகிவிடுமா?

முதற்கண் பரிசோதனை முயற்சி என்பதே சினிமா ஒரு கலை என்பதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதுதான். பரிசோதனைகள் ஆய்வுக்கூடங்களுக்கு மட்டுமல்ல கலைத்துறைக்கும் மிகவும் பொருந்துபவைதான் என்பதைத்தான் நம்மாட்கள் ஒருபோதும் மனதில் போட்டு அலட்டிக்கொள்வதேயில்லையே!

இந்த வழியில் தமிழின் இன்னொரு முக்கியமான பரிசோதனைப் படம் நவராத்திரி. சிவாஜி என்பதாக ஒரு நடிகன் எத்தனை பாத்திரம் கொடுத்தாலும் தாங்கறான்டா, ரொம்ப நல்லவன்டா என்பது மாதிரியான நம்பிக்கையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஒரே ஆள் ஒன்பது பாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்பதே இப்படத்தின் பரிசோதனை முயற்சி. மிகப்பெரிய சாதனையான இதை முறியடிக்க இரண்டு பேர் முயன்றார்கள் ஒருவர் எம்ஜியார் மற்றவர் கமலஹாசன். ஆனால் முந்தைய சாதனையை இவர்கள் இருவரும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. ஏனென்றால் எம்ஜியார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நீ ஒன்பது பாத்திரங்களில்தானே நடித்தாய், நான் ஒன்பது கதாநாயகிகளோடு நடிக்கிறேன் பார் என்று நவரத்தினம் என்று ஒரு அசத்தலான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார். கமலஹாசனோ மேக்கப் மற்றும் கிராஃபிக்ஸ் என்று பலவிதமான லேயர்களை நம்பியே பாத்திரங்களை ஏற்றார். என்னவொரு கலைநுணுக்கம் பாருங்கள்!அதேபோல் தமிழின் இன்னொரு மிக ஆச்சரியமான பரிசோதனை முயற்சி ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம். இந்தக் கதைவிவாதத்தில் அடிப்படையில் ஓர் எழுத்தாளரான சுஜாதாவும் இருந்த வகையில் அந்த விவாத லூட்டிகள் சிலவற்றை அவர் அந்தப் படம் குறித்த தொடர் ஒன்றில் எழுதினார். படம், தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம் தயாரிக்கும் முயற்சியே தவிர வேறில்லை. டிஸ்கஷன் இவ்வாறு இருக்கிறது, வறண்ட பிரதேசம். ஒரு வேலி மட்டும் முடிவில்லாமல் நீண்டு கிடக்கிறது. அதில் ஒரு இரும்பு கேட். அருகில் ஓர் அழுக்கான போர்ட். அதில் அன்னியர் உள்ளே பிரவேசிக்கக்கூடாது என்பதாக வாசகம். அந்த போர்டின் மீது ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது, என்று சுஜாதா ஸ்க்ரீன்ப்ளே எழுதுகிறார். அது எந்த வகைப் பறவையோ அதையே அங்கே உட்கார வைப்பதாக இயக்குனர் ராஜசேகர் உறுதி கூறுகிறார். அடுத்தபடியாக கமலஹாசன் சொல்கிறார், இந்தப் படத்தில் கண்டிப்பாக ஒரு கார் ஆற்றில் விழ வேண்டும் என்று! ஆமாம் ஸ்கை டைவிங்கூட வேண்டும் என்பதாக அடுத்த கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்கப்புறம்தான் சலாமியா, ஆங்கோர் இளவரசி, ஜெய்ப்பூர் எலிக்கோவிலை வேறுதேச மாளிகையாகக் காட்டலாம், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மட்டுமல்ல, ப்ரூஸ்லீ படங்களிலிருந்தும் காட்சிகள் சுடலாம் என்பதாகவெல்லாம் சுஜாதா வெளியிடாத தகவல்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

இதன் உச்சக்கட்டமாக, இந்தப் படம் ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக சுஜாதாவால் எழுதப்படுகிறது. அதில் சுஜாதா ஒரு வசனம் எழுதுகிறார். கம்ப்யூட்டர் நிபுணியான நாயகி, நாயகனிடம் ஆண்கள் செய்கிற எந்தக் காரியத்தையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பதாக சவால் விடுகிறாள். பெண்டாட்டி செத்துப்போன துக்கத்தில் விரக்தியின் விளிம்பில் காணும் ஸ்வாஸ்நெகரின் கமாண்டோ ரக நாயகன் அவளிடம் கேட்கிறான், நாங்கள் சுவரில் ஒன்னுக்கு அடிப்போம், உங்களால் முடியுமா? என்று. படத்தில் இந்த வசனம் இவ்விதமாக இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, புழுக்கமாக இருந்தால் நான் சட்டையை அவிழ்த்துவிட்டு வாக்கிங் போவேன். நீ போவாயா? என்று அது மாற்றப்படுகிறது.

தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம், போர்டில் ஒரு குறிப்பிட்ட வகைக் குருவி, ஆற்றுக்குள் வீழும் கார், ஸ்கை டைவிங், மூத்திரம், ஆத்திரம் என்று எத்தனை எத்தனை பரிசோதனைகள் இந்தப் படத்தில் முயலப்படுகின்றன பாருங்கள்! இதெல்லாம் உங்களால் ஆகுமா, என்னால் ஆகுமா? தமிழன்னைக்குத்தான் எத்தனை பூரிப்பு!

இதேமாதிரிதான் பாலச்சந்தர் ஒரு சோதனை முயற்சியில் ஈடுபடுகிறார். அதுகாறும் சீரியசான நாயகனாகவே நடித்து வந்த ரஜினிகாந்த்தை காமடி நடிகராக நடிக்க வைத்தால் என்ன என்று! அதற்கென்று சொந்தமாக ஸ்க்ரிப்ட் எதையும் முயலாமல் ஹிந்தியில் அமோல் பலேகர் நடித்து வெளியாகியிருந்த கோல்மால் என்கிற படத்தை அப்படியே தமிழில் எடுக்கிறார். இந்த சோதனை முயற்சி பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதாவது ரஜினிக்கு காமெடி பிரமாதமாக வருகிறது என்பது இதன்வாயிலாக மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. இதற்கு பல வருடங்கள் கழித்தே ராஜசேகர் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் காமெடி கலந்த பாத்திரத்தில் ரஜினியைக் கொண்டுவருகிறார். இதைத் தொடர்ந்தே ரஜினி என்றால் கண்டிப்பாக காமெடி பண்ணித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டை அவருக்கான கதாசிரியர்கள் எட்டுகிறார்கள். இந்தச் சூழலில் காமெடியே பண்ணாத ரஜினியை ஏன் திரும்பவும் முயலக்கூடாது என்று சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா என்று ஒரு பரிசோதனை முயற்சி செய்து வெற்றி காண்கிறார்.

தமிழின் இன்னொரு மிக முக்கியமான பரிசோதனை முயற்சி விஜயடீராஜேந்தர் செய்தது. ஒரே ஆள் ஒன்பது வேடத்தில் நடிக்க முடியுமானால் ஒரே ஆள் ஒரு படத்தில் ஒன்பது வேலைகளை ஏன் செய்ய முடியாது என்கிற கேள்வியை அவர் பார்வையாளனை நோக்கி வீசுகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என்று சகலவிதமான பணிகளையும் அவரே செய்து அசத்துகிறார். தாடியை எடுக்க விருப்பமில்லாததால்தான் அவரது பரிசோதனைகள் நீள்கின்றன. சோ ஒருமுறை சொன்னார். உனக்கு எது தெரியாதோ அதில்தான் நீ பெரிய ஆளாக முடியும் என்று. அது இப்போது ஞாபகம் வருவதற்கும் விடிஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவரது அடுத்த அவதாரமாக வருகிறார் எஸ்ஜேசூர்யா! ஆறு வயது பாலகன் வாலிபன் போன்ற தோற்றத்தை அடைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவர் யோசிக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒற்றுமை உண்டு. அடிப்படையில் தங்களை அவர்கள் இயக்குனர்கள் என்பதாக நம்புவதனாலோ என்னவோ, தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், கோர்ட்டில் யுவர்ஆனர் என்று அவ்வப்போது ஜட்ஜைப் பார்த்துக்கொள்ளும் வக்கீல் போல இவர்கள் தவறாமல் கேமராவைப் பார்ப்பார்கள். தங்கள் பரிசோதனை சரியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்கிற ஐயப்பாடோ ஏதோ!

தமிழில் பரிசோதனை முயற்சி என்று ஆரம்பித்துவிட்டு இந்தமாதிரி ரகளை பண்ணிக்கொண்டிருக்கிறாயே என்று உங்கள் ஆன்மா இப்போது ஒரு கேள்வி கேட்குமானால் நான் இதோடு இந்தப் பட்டியலை நிறுத்திக்கொள்கிறேன். என்ன செய்வது? எம் மொழியில் இவைதான் பரிசோதனைகள்!

பாடலே இல்லாத படம் என்பதுகூட ஆபத்தானதொரு பரிசோதனை என்பதாகவே எமது மொழியில் காண்கிறது. ஙே என்று இருக்கும் உதவி இயக்குனரை ஹீரோவாக்கலாம் என்று யோசிப்பதுகூட ஒரு பரிசோதனைதான் எமது இயக்குனர்களுக்கு! பாவாடையின் உயரத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பதாகக்கூட இங்கே பரிசோதனைகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. கவர்ச்சி நடிகையை கண்ணியமான அண்ணியாக நடிக்க வைப்பதோ மிகப்பெரிய பரிசோதனையாகப் புகழப்படுகிறது. இப்படித்தான் கமலஹாசன்கூட மைக்கேல் மதனகாமராசன் படத்தில் மலையாள ஜெயபாரதியை அம்மாவாக நடிக்க வைத்து ஒரு பரிசோதனை செய்து பார்த்தார். பயங்கரமான ஃபெய்லியராக அது முடிந்துவிட்டது. ஏனென்றால் பார்வையாளனுக்கு ஜெயபாரதியை அம்மா வேஷத்தில் பார்த்தால்கூட ஆசையாகத்தான் இருக்கிறது. அவரது வாளிப்பான உடலமைப்பு அத்தனை அலாதியானது. இதனால்தான் அவர் பிற்பாடு வந்த எந்தத் தமிழ்ப்படத்திலும் அம்மாவாக அகப்படவேயில்லை.

பரிசோதனை என்றால் உண்மையில் என்ன? இந்தத் தொடரில் முன்பே ஒருமுறை சொன்னதுபோல எம்மெஃப் உசேனின் கஜகாமினி ஒரு பரிசோதனை முயற்சி. கன்னடத்தில் கிரீஷ் கார்னாட்டின் நாகமண்டலம் ஒரு பரிசோதனை முயற்சி.

கிராமப்புற பழமரபுக்கதையிலிருந்து உருவான நாகமண்டலம் மிக ஆச்சரியமான பரிசோதனை. திருமணம் செய்து கொண்டு வந்த பெண்ணை வீட்டிலேயே அடைத்து வைக்கிறான் கணவன். அவள் நாக தெய்வத்தை வேண்டுகிறாள். நாகமோ அவளது கணவனது ரூபத்தை எடுத்து அவளை ஆட்கொள்கிறது என்று போகிறது கதை. இந்தமாதிரி நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்தனையெத்தனை கதைகள் காண்கின்றன! புதிதாக ஒன்றை யோசிக்க வேண்டாம். இருக்கிற பொக்கிஷத்திலிருந்து ஒன்றை எடுக்கக்கூடவா தெரியவில்லை உங்களுக்கு? அடப்பாவிகளா.

மலையாள இயக்குனர்களில் நான் பெரிதும் மதிக்கும் பத்மராஜனின் கடைசிப்படம் ‘ஞான் கந்தர்வன்’. நான் கந்தர்வன் என்பது அர்த்தம். கந்தர்வர்கள் குறித்த புராண நம்பிக்கையிலிருந்து இந்தப் படத்தை அவர் எழுதுகிறார். கந்தர்வர்கள் கல்யாணமாகாத கன்னிப் பெண்களை மயக்கி முயங்கிவிட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பது பாட்டிகள் பேத்திகளுக்குச் சொல்லும் பொதுவான எச்சரிக்கைக் கதை. கன்னிப்பெண்கள் தனியாக இருக்கக்கூடாது. இரவில் வெளியே போகக்கூடாது என்பதாகவெல்லாம் கந்தவர்களைக் காட்டியே எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த மாதிரி கதைகள் கேட்டு வாழும் ஒரு தற்கால இளம்பெண்ணின் வாழ்வில் கந்தர்வன் நுழைகிறான். அவளைக் காதலித்து அவளைப் புணர்ந்துவிட்டு சென்றுவிடுகிறான். இவ்வாறு நிகழ்ந்ததெல்லாம் அந்தப்பெண்களுக்கு அப்புறம் நினைவிராது என்பதே பாட்டி கதையின் சூத்திரமும்.

உண்மையில் கந்தர்வர்கள் என்றால் யார்? கந்தர்வர்கள் தேவலோகத்தின் அடிமைகள். இசை நாட்டியம் என்று தேவர்களை மகிழ்விப்பதே அவர்களின் வேலை. தேவர்களுக்கு எதிராக இவர்கள் ஏதேனும் செய்ய முற்பட்டால் இவர்கள் சபிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுவார்கள். சாபம் விமோசனமாகவேண்டுமானால் அவர்கள் ஒரு பூலோகத்துக் கன்னிப் பெண்ணை மயக்கி வசப்படுத்தவேண்டும். இது கந்தர்வனின் பிரச்சினை. இந்தப் படத்தில் கந்தர்வன் வேடத்துக்கு பத்மராஜன் தேர்ந்தெடுத்தது, தூர்தர்ஷனில் வந்த மகாபாரதத்தில் கிருஷ்ணனாக வந்த நிதீஷ் பரத்வாஜை!

நவயுகத்தில் கந்தர்வனின் விசிட் எவ்விதமாக இருக்கும் என்கிற அவரது கற்பனைமிக நுட்பமான ஒரு பரிசோதனை. அந்த மாதிரி மேதைகளை எமது மொழியில் எங்கேபோய்த் தேட?

1 comment:

Rajan said...

without spending even a minute, one can recall Balu Mahendra's sandhya ragam, Veedu are experiments. if u spare a moment , kamal's Rajapaarvai can also be termed as an experiment. for some one of your experience and in depth knowledge, i am sure u can substantiate many other tamil films like Vannak kanavugal-AmeerJan, and some off beat films like Udhirip pookkal, Azhiyadha Kolangal,Azhagi, 9 roopai nottu, Abhiyum naanum, Mozhi,... But i think u have made up ur mind to ridicule tamil films and so rubbish the entire history of tamil films at one go as lack of experimentation. just my view.

any way, i can realise u have vast knowledge on tamil , in fact malayalam and may be world films. i do appreciate it.just a request. try to be more positive.dont be so negative.

by the way, i am sure u r well read by cine industry people and well known by technecians/directors. ur novels (hospital, cocktail)are considered as racy and unputdownable by many bloggers/senior writers. there is nothing wrong in seeking opportunities in film making.

instead of waiting for an invitation, i suggest u utilise ur wide contacts and meet Producers with your storylines. i am sure there would be quite a few who would be ready to make good films.