June 27, 2009

கதை கேளு! திரைக் கதை கேளு!!

எமது சினிமாவில் சாதாரணமாகவே இந்தக் கதை கேட்டல் வைபவம் என்பது, அதன் அந்தராத்மாவை ரம்பம் கொண்டு அறுக்கிற வேலையாகவே பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

அதாகப்பட்டது, ஒரு சினிமா, ஷூட்டிங் வரைக்கும் வந்துவிட்டதென்றால் (அது ரிலீஸ் ஆகவேண்டும் என்பதாக எவ்விதமான உத்திரவாதமும் தேவையில்லை) அதற்கு முன்பாகக் கதை கேட்டல் என்கிற நிலைப்பாடு ஒன்று நிகழ்ந்தேயிருக்க வேண்டும். படத்துக்கு முதல் போடுகிறவரோ, நடிப்பவரோ, தயாரிப்பவரோ என யார் யாரோ கதையைக் கேட்கிறார்கள். நியாயப்படி தனக்கு எவ்விதமான கொள்வினையும் இல்லாத ஏரியாவாகிய கதை உருவாக்கத்தை மிகக் கஷ்டப்பட்டு அல்லது களவாடி இயக்குனர் அல்லது இயக்குனராக விரும்புபவர் செய்து வைத்திருக்கிறார். அது ஒரு ஹீரோவுக்குப் பிடித்தால் அவருக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிடுவார். தயாரிப்பாளருக்குப் பிடித்தால் ஹீரோகூட முக்கியமில்லை. படம் வெளிவந்துவிடும். இதனால் கதையைச் சுமப்பதும் அதை சரியானவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஒரு தேர்ந்த கலையைப் போல பயில வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் கலையை திரைப்படக் கல்லூரி சொல்லித் தருவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, நமது ஹீரோக்கள் எந்த அடிப்படையில் கதை கேட்கிறார்கள் என்கிற வாதத்துக்குள் நுழையலாம். ஏனெனில் அதுவே இதன் ஆதாரக் காரணமாக இருக்க முடியும். ஏனென்றால் எமது ஹீரோக்கள் கேட்பது கதையை அல்ல. தங்களின் பாத்திரம் என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள். ஹீரோவின் பாத்திரம் மையமானது அதைச் சுற்றி நிகழ்வதுவே கதை என்பதைப்போன்ற மாயத் தோற்றமே அவர்களின் மனத்தில் காண்கிறது.

இதனாலேயே சினிமாவுக்கான கதை என்பது ஹீரோவை மையப்படுத்தியே எழுதப்படுவதாக ஆகிவிடுகிறது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் அதுவும்கூட இரண்டே இரண்டு வகையில் அடங்கிவிடுகிறது என்பதாகவே தோன்றுகிறது. ஒன்று ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதை, மற்றது கமலஹாசனுக்குப் பொருந்தும் கதை!

ரஜினிகாந்த்துக்கு கதை சொல்வதற்கும் கமலஹாசனுக்குக் கதை சொல்வதற்கும் நேரெதிரான வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். முன்பொரு காலத்தில் இருவரும் ஒரேவிதமான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம். அவர்கள் தங்கள் பாதைகளைத் தீர்மானிக்கும் வரைக்கும் நிகழ்ந்து வந்த விபத்துக்களே அவை! இப்போது அப்படியா?

இதனால்தான் இன்றைக்கும் இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கக்கூடிய கதை என்பதான இரண்டே வகைப்பட்ட கதைகளில் ஒன்றையே ஒவ்வொருவரும் உருவாக்குகிற நிலைமையே காண்கிறது. அதாவது, நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகர் என்பதாகப்பெயர் வாங்கும் ஒருவருக்கு கமலஹாசனுக்குப் பொருந்தும் கதைகளையும், பெரியமாஸ் ஹீரோ அல்லது மாஸ் ஹீரோவாக ஆகக்கூடியவர் என்கிற நிலைப்பாட்டில்காணும் ஒருவருக்கு ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதைகளையும் கதாசிரியர்கள் என்கிற இயக்குனர்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இதையே செய்து வருகிறார்கள்.

இதில் கமலஹாசன் பட்டியலில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ஜீவா! சிக்கிக்கொண்டிருப்பவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அது வெற்றிக்கான உத்திரவாதமில்லாத பாதை என்பதனால்தான். சமீபத்தில் நடிகர் ஜீவாகூட ஒரு பேட்டியில் இதையேதான் சொல்லியிருக்கிறார். நாலு படங்களுக்கு ஒரு படம் பரீட்சார்த்தமாக முயல்வதாக இருக்கிறேன் என்று. கொஞ்சம் நல்ல மெமரி உள்ளவர்கள் இதையேதான் பன்னெடுங்காலமாக கமலஹாசன் செய்துவருகிறார் என்பதை நினைவுகூர்வார்கள். வெற்றிக்கு உத்திரவாதமாக கமலஹாசன் கைக்கொள்வது காமெடியை. மற்றவர்கள் அதோடு ஆக்ஷனையும் சேர்த்துக்கொள்ளும்போது அது கமலஹாசனையும்கூட பாதித்துவிடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சரி, வித்தியாசமான முயற்சிகளை விடுவோம். உத்திரவாதமாக ஜெயிக்கும் என்று மாஸ் ஹீரோக்கள் நம்புகிற கதைகள் உண்மையில் எவ்விதமாக இருக்கின்றன? அதாவது ரஜினி டைப் கதைகள் எவ்விதமாக உருவாகின்றன, அவற்றில் எந்ததெந்த அம்சங்கள் ஹீரோக்களைக் கவர்கின்றன என்கிற கேள்விக்கு பதில் சொல்வது அத்தனை கஷ்டமானதல்ல.

எடுத்த எடுப்பிலேயே ஏதாவதொரு அநியாயம் நிகழ வேண்டும். அப்போது ஹீரோ பாய்ந்து வந்து பாகம் பாகமாகக் காட்டப்பட்டு ஒரு கணத்தில் முகம் ஃப்ரீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த விசில்களுக்கு இடம்விட்டு பிறகு பிழையாளர்களைப் பின்னியெடுக்க வேண்டும். அல்லது மிகப்பெரிய சாதனையாளனாக அவன் முன்வைக்கப்பட, அவனோ தன்னடக்கத்தோடு காட்சியளிக்க வேண்டும். இல்லையா, நூறுபேர் சூழ நடுத்தெருவில் ஒரு ஃபாஸ்ட் பீட்டுக்கு நடனமாட வேண்டும். இவற்றின் வாயிலாக தலைவன் வந்துவிட்டான் என்கிற நம்பிக்கையைப் பார்வையாளனுக்கு ஊட்டவேண்டும். அந்த ஊட்டமே படத்தின் வெற்றிக்கான அஸ்திவாரமாக அமைய முடியும் என்பதே தொன்றுதொட்ட நம்பிக்கை. இதனால்தான் கதை கேட்கப்படும்போது ஹீரோ இன்ட்ரொடக்ஷன் என்பது முக்கியமான அம்சமாகக் கோரப்பட்டு வருகிறது.

வித்தியாசமாக ஹீரோவை எப்படி இன்ட்ரொட்யூஸ் செய்வது என்கிற போதமே பிற்பாடு உள்ள கதை என்கிற அம்சத்தைக் குலைக்கும் ஆதாரமாகிறது என்பதை நான் ஏற்கனவே எழுதிய ஞாபகம் இருக்கிறது. வில்லு படத்தில் ஹீரோ இன்ட்ரொடக்ஷன்
மேற்சொன்னவற்றில் முதல் விதமாக நிகழ்கிறது. எனக்கு எம்ஜியாரைத்தான் பிடிக்கும் என்று சொல்கிற ஒரு பூக்காரக் கிழவி இன்னொருத்தனையும் பிடிக்கும் என்று ஹீரோவின் சாதனையொன்றை விவரிக்கும் விதமாக (பெரிய விக்ரமாதித்யன் கதை பாருங்கள்) சொல்கிறார். பாட்டியின் பேத்தியை கயவர்கள் கற்பழிக்க விரும்பி கடத்த முயல்கிறார்கள். அந்தப் பிரதேசத்தில் நிறைய வண்ண வண்ணப் புடவைகள் கொடிகளில் காய்கின்றன. ஹீரோ சூப்பர்மேன் போல புடவைகளினூடாகப் பறந்து வருகிறார். ஓடுகிற ரயிலின் மீது பேலன்ஸ் செய்து நிற்பதுபோல ஜம்மென்று நிற்கிறார். ஆடி மாசம் போலிருக்கிறது. செம காத்து அடிக்கிறது. புடவைகள் பதாகைகள் போலப் பறக்கின்றன. உடல் முழுக்க வண்ணப் புடவைகள் சுற்றிய கோலத்தில் அவரது முகம்கூட நமக்குத் தெரியவில்லை. அடியாள் ஒருவன் அவரை சீண்ட, ஆகாயத்தில் தட்டாமாலை சுற்றி புடவை அவிழ்ந்து பூமியில் வந்து நிற்கிறார். அப்போது அடியாள் ஒருவன் கேட்கிறான், யார்ரா இவன், புரூஸ்லியா, ஜெட்லியா என்று, ஹீரோவான விஜய் சொல்கிறார், "கில்லிடா!"

எப்படி?

அதாவது இப்படி ஒரு இன்ட்ரொடக்ஷன் சொன்னால் விஜய் கால்ஷீட் கிடைத்துவிடும் போலிருக்கிறது. அடுத்த தலைமுறையின் முன்னோடியாக இவர்தான் அறியப்படுகிறார் என்பதனால் பின்னால் வருகிற அத்தனை நடிகர்களும் இதே பாணியையே பின்பற்றுவதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஏனென்றால் வில்லு என்கிற இந்தப் படத்தில் கதை என்பதாக ஒரு சுக்கும் கிடையாது. பிரபுதேவா இயக்குனர் என்பதனால் ரீலுக்கு ரீல் பாட்டு. நயன்தாராவை ஜாடியில் போட்டு குலுக்காத குலுக்காக நடனங்கள், ஓட்டங்கள். பனிமலைகள், ஹெலிகாப்டர்கள் லாஞ்ச்சுகள் என்று பிரம்மாண்டச் சூழல்கள். சரி கதை? கதை என்பதாக எதுவும் இல்லை. ஆனால் தேசபக்தி என்பதாக ஒரு ஆதாரம் கதைக்குள் இருக்கிறது. அது போதாதா?

கொலையுண்ட நிரபராதியின் மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்துகிறார்கள், மணல் புயல் வீசி புதைகிறது சடலம். அதைக் கண்டுபிடிக்கவேறு முடியவில்லை, சர்வ தேசக் குற்றவாளிகளை தான் போய் பிடிக்காமல் ஒரு சாதாரண இளைஞனின் பகை தீர்க்க உதவுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி என்று இத்தனை இத்தனை அபத்தங்களை ஒன்று சேர்த்து ஒரு கதை பண்ண முடியுமா என்று உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இது ஒரு ஹீரோவுக்கு பிடிக்கிறது என்று சொன்னால் தமிழ் சினிமாவின் விதியை எங்கே போய் நொந்துகொள்வது?

பிரபுதேவா நல்ல நாட்டியக்காரர். நல்ல நாட்டிய ஆசானும்கூட. அவருக்கு எதற்கு இந்த வீண் பழி என்றே தோன்றுகிறது. சரி, கதையை அவர் செய்யவில்லை, தெலுங்கிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கிறீர்களா? உங்கள் வாக்கிலேயே அதற்கான விடையும் இருக்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் தெலுங்குக்கு ஒருவேளை இப்போதும் சரிப்பட்டு வரலாம், அதைத் தமிழ் நாட்டுக்குப் பொருத்தமாக மாற்ற ஒரு கதையறிவு உள்ள மனிதன் வேண்டாமா? அப்படியே காப்பியடித்தால் அப்புறம் இப்படித்தானே இருக்கும்!

விஜய்யின் கில்லியும் இவ்விதமாக தெலுங்கிலிருந்தே தமிழுக்கு வந்தது. ஆனால் அந்தக் கதையில் ஒரு உயிர் இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்தைப்போய் உயிர் கியிர் என்று சொல்லலாமா என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் ஆர்த்தடாக்ஸ் அல்ல என்று நம்புகிறேன். கொடூரமான ஒரு கிராமத்து பணக்காரன், தன் முறைப்பெண்ணின் மீது உயிரையே வைத்திருக்கிறான். அவளைக் கதாநாயகன் அவனிடமிருந்து காப்பாற்றுகிறான். இது கதை. ஆனால் இந்தக் கதை மட்டும் போதுமா? அருமையான ஒரு திரைக்கதையும் இருந்தால்தானே கதை சினிமாவாக மாறும்! அந்த வித்தை அந்தப் படத்தில் மிக அருமையாக செய்யப்பட்டிருந்தது என்பதை பார்த்தவர்கள் அறிவீர்கள்.

கதை என்பது வில்லு படத்தில் போல இல்லாமல் அடிப்படை லாஜிக் உள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைவிடவும் முக்கியமானது திரைக்கதைதான். ஏனென்றால் திரைக்கதை என்பது லாஜிக் இல்லாத கதையைக்கூட ஓடவைக்கக்கூடிய வல்லமை உடையது. இரண்டு விஷயங்களிலும் ஜெயித்தது கில்லி. அப்படியொரு படத்தில் நடித்துவிட்டு வில்லு மாதிரி ஒரு படத்தின் கதையை எப்படி விஜய் தேர்ந்தெடுக்கிறார் என்பதைத்தான் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்பதாகச் சொல்கிறேன்.

இதேபோலத்தான் தமிழில் ஹரி இயக்கிய ஐயா என்கிற திரைப்படமும்! அருமையான கதை, அற்புதமான திரைக்கதை. இந்த இரண்டுமே அந்தப் படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் ஆதாரமாக அமைந்தன. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஐயா ரஜினிக்காக உருவாக்கப்பட்டு சொல்லப்பட்ட கதை என்பதாக இன்டஸ்டரியில் ஒரு பேச்சு உண்டு. அது உண்மை என்று பார்த்தால் ஒரு நல்ல படத்தை இழந்த வகையில் ரஜினி செய்த தவறு என்ன? அவருக்கு கதை பிடிக்கவில்லையா, திரைக்கதை பிடிக்கவில்லையா? அவை சிறப்பாக இருப்பதை அவர் கவனிக்காமல் போனதற்கான ஆதாரமான காரணம் என்ன? தமிழகத்தின் முதல்வராக வருவார் என எதிர்பாக்கப்படுகிற ஒருவர் வெறும் எம்மெல்லே பாத்திரத்தில் நடிப்பதா என்பதாக அவர் நினைத்தாரா? இதை ஹரிதான் சொல்ல வேண்டும்.

இதே ரஜினிகாந்த்துக்காக பாரதிராஜா ஒரு கதையை உருவாக்கினார். அது கடலோரக் கவிதை. ரஜினி மறுத்த வகையில்தான் சத்தியராஜ் உள்ளே நுழைகிறார். அவரை ஒரு ஸ்டாராக அந்தப் படமே உருவாக்குகிறது. முட்டம் சின்னப்பதாஸாக ரஜினி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை அவரது கேரியரில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழ்ந்திருக்கும். ஆனால் அவரோ அதே பாரதிராஜாவின் கொடி பறக்குது என்று லாஜிக் பறக்கிற கதையொன்றில் நடித்து தன் பட்டியலில் இன்னொரு தோல்விப்படத்தைத் தாங்குகிறார். இந்த அபத்தம் எதனால் நடிகர்களுக்கு நிகழ்கிறது என்பதைத்தான் அவர்கள் ஆராயவேண்டும் என்று சொல்கிறேன்.

அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது மிகவும் சுலபமான காரியம்தான். தாங்கள் இப்போது எந்த அடிப்படையில் கதை கேட்கிற வைபவத்தை எதிர்கொள்கிறார்களோ, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை அவர்கள் எட்ட வேண்டும். இது உண்மையிலேயே சுலபமானதுதானா என்று கேட்கிறீர்களா?

வெற்றி உத்திரவாதமென்கிற போதமிருந்தால் ஏன் இது சுலப சாத்தியமாகாது? அவர்கள் யோசிக்க வேண்டியது இதைத்தான், படத்தில் அவர்கள் எவ்விதமாக இன்ட்ரொடியூஸ் செய்யப்பட்டாலும் சரி, எத்தனை சண்டைக்காட்சிகளில் நடித்தாலும் சரி, எத்தனை கதாநாயகியை அல்லது சென்ட்டிமென்ட்டைப் பிழிந்தாலும் சரி, அவை அந்தப் படத்தின் வெற்றிக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை. படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பவை முதலில் திரைக்கதை, அடுத்தது கதை, மூன்றாவதாக மேக்கிங். இந்த மூன்று விஷயங்களில் அக்கறை செலுத்திய படங்கள் தோல்வியைத் தழுவுவது கடின சாத்தியமே!

இதனால்தான் சொல்கிறேன், நடிகர்கள் தங்கள் பாத்திரத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு பணத்தையும் புகழையும் வாரிவாரிக் கொடுக்கலாம், ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஊற்றிக்கொண்டால் அவர்கள் பெற்ற அனைத்தும் வந்த வழி தெரியாமலே ஒழுகியோடிவிடவும் செய்யும். இதை நடிகர்கள் உணர்ந்துகொண்டால், வெற்றி என்பதன் அவசியம் உணர்ந்து, ஹீரோயிசம் என்கிற அடைப்புக்குள்ளிருந்து அவர்கள் வெளிவந்துவிட வாய்ப்பாக அமையாதா?

இதை மனதில் நிறுத்தி இனிமேலாவது தன் பாத்திரம் என்ன என்று பார்ப்பதை நிறுத்தி, கதையையும் திரைக்கதையையும் அளந்துபார்க்கும் மனநிலையை எட்டுங்கள் நண்பர்களே என்று நான் சொல்லலாம், அவர்கள் கேட்க வேண்டுமே!

2 comments:

Cable சங்கர் said...

கேட்டுர கீட்டுற் போறாங்க..

Toto said...

உண்மைங்க‌.. ஆனா அவ‌ருக்கு அஞ்சு வில்லு .. ஒரு கில்லி.. இப்ப‌டியே இவ‌ங்க‌ கால‌ம் ஒடிடும் ஸார்..